வங்கக்கடலில் புயல் சின்னம் உருவாகிறது - தமிழ்நாட்டில் எங்கெல்லாம் மழை பெய்யும்?

தமிழ்நாடு, மழை, வானிலை
படக்குறிப்பு, மழையால் புதுச்சேரி தெருக்களில் தண்ணீர் தேங்கி நிற்கிறது

தமிழ்நாடு முழுவதும் பல மாவட்டங்களில் கனத்த மழை தொடர்ந்து பெய்து வருகிறது. வட கிழக்குப் பருவமழை தீவிரமடைந்திருக்கும் நிலையில், வங்கக் கடல் பகுதியில் புதிதாக காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகியிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.

எத்தனை நாட்களுக்கு மழை நீடிக்கும்?

வங்கக்கடலில் புயல் சின்னம் உருவாகிறது

தமிழ்நாடு, மழை, வானிலை

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வுமையம் வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பில், 'அந்தமான் - நிகோபார் தீவுகளின் மேலேயும் அருகில் உள்ள அந்தமான் கடற்பகுதியிலும் தென்கிழக்கு வங்கக் கடலிலும் காற்றுச் சுழற்சி ஏற்பட்டிருப்பதால் தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியிலும் அதனை ஒட்டிய அந்தமான் கடல் பகுதியிலும் ஒரு காற்றழுத்தத் தாழ்வு நிலை உருவாகியுள்ளது,' என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

மேலும், 'இது மேற்கு - வட மேற்கு திசையில் நகர்ந்து, மேற்கு மத்திய வங்கக் கடல் பகுதியில் நவம்பர் 16ஆம் தேதி வாக்கில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறும்" என்று கூறப்பட்டிருக்கிறது,' என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

பருவ மழையைப் பொறுத்தவரை, வடகிழக்குப் பருவமழை மூலமாகவே தமிழ்நாட்டிற்கு அதிக அளவிற்கு மழைப் பொழிவு கிடைக்கிறது. வடகிழக்குப் பருவமழை பொதுவாக ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 20ஆம் தேதி வாக்கில் துவங்கும். ஆனால், இந்த ஆண்டு குறிப்பிட்ட தேதியில் பருவமழை துவங்கவில்லை. பருவமழை துவங்கிய பிறகும் மிகக் குறைவாகவே பெய்தது.

தமிழ்நாடு, மழை, வானிலை
படக்குறிப்பு, மழையால் புதுச்சேரி தெருக்களில் தண்ணீர் தேங்கி நிற்கிறது

இன்று எங்கெல்லாம் மழை பெய்யும்?

இன்று (செவ்வாய், நவம்பர் 14) சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், அரியலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டனம், திருவாரூர், தஞ்சாவூர் மாவட்டங்களில் பரவலாக மழை பெய்யும் என வானிலை ஆய்வுமையம் கூறியுள்ளது.

தருமபுரி, கிருஷ்ணகிரி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் அவ்வப்போது மழை பெய்யலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.

சென்னை நகரில் இரவில் இருந்தே விட்டுவிட்டு மழை தொடர்ந்து பெய்துவருகிறது. இன்றும் மழை நீடிக்கும் எனக் கூறப்பட்டிருக்கிறது.

கடலூர், விழுப்புரம், புதுச்சேரி மாவட்டங்களில் மீனவர்கள் கடலுக்குச் செல்லவேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

கடந்த இரு நாட்களாக தமிழ்நாட்டில் மழை நிலவரம்

கடந்த இரு நாட்களாக தமிழ்நாடு முழுவதும் பல இடங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. நேற்றிலிருந்தே (திங்கள், நவம்பர் 13) டெல்டா மாவட்டங்களிலும் அதனை ஒட்டிய மாவட்டங்களிலும் தொடர்ந்து மழை பெய்து வந்தது. குறிப்பாக கடலூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் கனமழை பெய்தது.

கடந்த 24 மணி நேரத்தில் நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணியிலும் நாகப்பட்டினத்திலும் தலா 17 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. நன்னிலம், கடலூர், பரங்கிப்பேட்டை, புதுச்சேரியில் தலா 12 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

தமிழ்நாட்டில் கனமழை
படக்குறிப்பு, நாகப்பட்டினம்
தமிழ்நாடு, மழை, வானிலை
படக்குறிப்பு, கள்ளக்குறிச்சியில், உலரவைத்த தானியங்களை மழையிலிருந்து பாதுகாப்பாகப் போர்த்திவைக்கும் விவசாயிகள்

மழை காரணமாக விடுமுறை

இன்றும் டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்யும் எனக் கூறப்பட்டிருப்பதால் கடலூர், விழுப்புரம், மயிலாடுறை, நாகப்பட்டனம், அரியலூர், திருவாரூர், தஞ்சாவூர் ஆகிய ஏழு மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கும் கல்லூரிகளுக்கும் செவ்வாய்க்கிழமையன்று விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கிறது.

புதுச்சேரி, காரைக்காலிலும் கல்வி நிலையங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கிறது. திருவண்ணாமலை மாவட்டத்தில் பள்ளிக்கூடங்களுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் கந்தர்வக்கோட்டை, கறம்பக்குடி ஆகிய இரு தாலுக்காக்களில் மட்டும் பள்ளிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் கொடைக்கானல் வட்டத்துக்கு உட்பட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டிலும் புதுச்சேரியிலும் இன்று நடப்பதாக இருந்த டிப்ளமோ படிப்புகளுக்கான தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

மழைக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்

தமிழ்நாடு முழுவதும் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்கு ஆயத்தமாக இருக்கும்படி 27 மாவட்ட ஆட்சியர்களுக்கு வருவாய்த் துறை நிர்வாக ஆணையர் கடிதம் எழுதியுள்ளார்.

சென்னையில் மழை காரணமாக ஏற்படும் பாதிப்புகள் குறித்து புகார் தெரிவிக்க 1913 என்ற எண்ணை சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.

மழையின் காரணமாக, தூத்துக்குடி, திருநெல்வேலி, நாகப்பட்டனம் ஆகிய இடங்களில் சில வீடுகள் சேதமடைந்துள்ளன. மழையின் காரணமாக வீடுகளில் பாதிப்பு ஏற்பட்டால், அங்கு வசிப்பவர்களைத் தங்க வைக்க கடற்கரையோர மாவட்டங்களில் 121 பல்நோக்கு பாதுகாப்பு மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மாநிலம் முழுவதும் 4,967 நிவாரண முகாம்கள் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன.

மழையால் பேரிடர் ஏற்பட்டால், மீட்புப் பணியில் ஈடுபட அரக்கோணத்தில் உள்ள தேசிய பேரிடர் மீட்புக் குழுக்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. இந்தப் பணிக்காக தலா 25 பேரைக் கொண்ட பத்துக் குழுக்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)