இந்தியா - சீனா கல்வான் மோதலுக்கு பின் முதல் இந்திய ராஜீய அதிகாரி சீனா பயணம்: என்ன ஆகும்?

இந்தியா சீனா

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், கீர்த்தி துபே
    • பதவி, பிபிசி செய்தியாளர்

2020 ஆம் ஆண்டிலிருந்து இந்திய சீன எல்லையில் இழுபறி நிலவுகிறது. இரு நாடுகளுக்கும் இடையிலான சமீபத்திய எல்லைத்தகராறு லடாக்கின் டோக்லாம், கல்வான் பள்ளத்தாக்கில் தொடங்கி இப்போது அருணாச்சல பிரதேசத்தின் தவாங் செக்டாரை அடைந்துள்ளது.

இரு நாடுகளுக்கும் இடையேயான உறவுகள் மற்றும் எல்லையில் நிலவும் பதற்றம் அனைவரும் அறிந்ததே. தற்போது மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் மூத்த அதிகாரி எல்லைப் பிரச்சனை தொடர்பாக சீனாவுடன் பேச்சுவார்த்தை நடத்த பெய்ஜிங் சென்றுள்ளார்.

இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் இணைச் செயலர் (கிழக்கு ஆசியா) ஷில்பக் அம்புலே, 'இந்தியா-சீனா எல்லை விவகாரம் தொடர்பான ஆலோசனை மற்றும் ஒருங்கிணைப்புக்கான வழிமுறை' அதாவது WMCC சந்திப்பில் கலந்துகொள்வதற்காக பெய்ஜிங் சென்றடைந்தார்.

2019 ஜூலைக்குப்பிறகு இரு நாட்டுப் பிரதிநிதிகளும் WMCC கூட்டத்தில் நேருக்கு நேர் சந்திப்பது இதுவே முதல் முறை. 2020 மே மாதம் லடாக்கில் நடந்த சம்பவத்திற்குப் பிறகு, இரு நாடுகளுக்கும் இடையே 11 WMCC கூட்டங்கள் நடத்தப்பட்டன. ஆனால் இவை காணொளி வீடியோ கான்ஃபரன்சிங் முறையிலேயே நடந்தன. இந்தக் கூட்டங்களில் இந்தியாவுக்கு பெரிய அளவில் வெற்றி ஏதும் கிடைக்கவில்லை.

இந்தியா சீனா

பட மூலாதாரம், Getty Images

இந்த முறை இந்தியாவின் மூத்த அதிகாரி ஷில்பக் அம்புலே பெய்ஜிங் சென்றுள்ளார். வெளியுறவு அமைச்சகத்தில் கிழக்கு ஆசிய பிராந்தியத்திற்கான இணைச் செயலரான அவர், இந்தியாவுடனான சீனா, ஜப்பான் மற்றும் கொரியாவின் உறவுகளை கவனிக்கிறார்.

அம்புலே புதன்கிழமையன்று சீனாவின் உதவி வெளியுறவு அமைச்சர் ஹுவா சுன்யிங்கை சந்தித்தார். அவர்கள் இருதரப்பு உறவுகள் மற்றும் எல்லையில் உள்ள நிலைமை குறித்து விவாதித்ததாக ஒரு சுருக்கமான சீன வெளியுறவு அமைச்சக அறிக்கை கூறியது.

சீனாவின் மாண்டரின் மொழியை நன்கு அறிந்தவரான அம்புலே, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் பிரதமர் நரேந்திர மோதியுடனான சீனத் தலைவர்களின் சந்திப்பின் போது அதிகாரபூர்வ மொழிபெயர்ப்பாளராகவும் பணியாற்றியுள்ளார்.

எல்லையில் நிலவும் பதற்றம்தான் இந்த சந்திப்பின் முக்கிய நிகழ்ச்சி நிரல் என்று இந்தக் கூட்டத்தின் பெயரிலிருந்தே தெளிவாகிறது.

இந்தியாவும் சீனாவும் லடாக் செக்டாரில் தங்கள் தரப்பில் 50,000 துருப்புக்களை நிறுத்தியுள்ளன. கடந்த டிசம்பரில் அருணாச்சல பிரதேசத்தின் தவாங் அருகே யாங்ட்சேயில் துருப்புக்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் இரு தரப்பிலும் பல படையினர் காயமடைந்ததைத் தொடர்ந்து பதற்றம் மேலும் அதிகரித்துள்ளது.

இந்த சம்பவம் குறித்து நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம் அளித்து, எல்லையில் எந்த நடவடிக்கைக்கும் பதிலடி கொடுக்க இந்தியா தயாராக உள்ளது என்று கூறினார்.

மோதி ஷி ஜின்பிங்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, மோதி ஷி ஜின்பிங்

“இந்திய-சீன எல்லையின் மேற்குப் பகுதியில் உள்ள நடைமுறைக் கட்டுப்பாட்டுக் கோட்டின் (எல்ஏசி) நிலவரத்தை இரு தரப்பினரும் மதிப்பாய்வு செய்தனர். மற்ற எல்லைப் பகுதிகளில் இருந்து பின் நகர்த்துவதற்கான வழிமுறைகள் குறித்து ஆக்கப்பூர்வமாக விவாதித்தனர்” என்று இந்த சந்திப்பு குறித்து வெளியுறவுத்துறை வெளியிட்டுள்ள அதிகாரபூர்வ அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

"இது மேற்குப்பகுதி நடைமுறை கட்டுப்பாட்டுக் கோட்டில் அமைதியை மீட்டெடுக்க உதவும். அத்துடன், இருதரப்பு உறவுகளில் இயல்புநிலையை மீட்டெடுப்பதற்கான நிலைமைகளை உருவாக்கும்."

"இந்த நோக்கத்தை அடைய தற்போதுள்ள இருதரப்பு ஒப்பந்தங்கள் மற்றும் நெறிமுறைகளின்படி இரு நாடுகளும், மூத்த கமாண்டர்களின் அடுத்த (18வது) சுற்றுக்கூட்டத்தை நடத்த ஒப்புக் கொண்டுள்ளன."

லடாக்கில் உள்ள கோக்ரா-ஹாட் ஸ்பிரிங்ஸில் துருப்புக்களின் பின் நகர்வு நடந்த ஒரு மாதத்திற்குப் பிறகு WMCC இன் கடைசி கூட்டம் கடந்த ஆண்டு அக்டோபரில் நடைபெற்றது.

கடந்த ஆண்டு செப்டம்பரில், கோக்ரா-ஹாட்ஸ்பிரிங்கில் உள்ள பேட்ரோலிங்க் பில்லர் 15 இல் இந்திய மற்றும் சீனப் படைகளின் பின் நகர்வு நடந்தது. அதன் பிறகு அப்பகுதியில் உள்ள மற்ற பேட்ரோலிங் பில்லர்களிலும் பின் நகர்வு நடைபெற்றது. இருப்பினும், டெப்சாங் மற்றும் சாரிங் நாலா பகுதிகளில் உள்ள நடைமுறைக் கட்டுப்பாட்டுக் கோட்டில், இந்திய ராணுவத்தின் பாரம்பரிய ரோந்துப் பகுதிகளுக்கான அணுகலை சீன ராணுவம் இப்போதும் தடுத்து வைத்துள்ளது என்று இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளேடு தெரிவிக்கிறது.

" சீனா மிகப்பெரிய அளவில் உள்கட்டமைப்பை உருவாக்கியுள்ள நிலையில் நாம் எல்லையில் உள்கட்டமைப்பை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளோம். இதை 25 ஆண்டுகளுக்கு முன்பே நாம் செய்திருக்க வேண்டும்" என்று இந்த வாரம் ஒரு செய்தி முகமைக்கு அளித்த பேட்டியில், வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ் ஜெய்சங்கர், கூறியிருந்தார்.

"சீனா ஒரு பெரிய பொருளாதாரம். நடைமுறைக் கட்டுப்பாட்டு கோடு ஒப்பந்தத்தை உடைத்து சீனா உருவாக்கிய சூழ்நிலைக்கு இந்தியா பதிலடி கொடுத்தது. சீனாவின் பொருளாதாரம் பெரியது, இந்தியாவின் பொருளதாரம் சிறியது. நாம் பெரிய பொருளாதாரத்துடன் சண்டையிட வேண்டுமா?"

இந்த சந்திப்பின் முடிவு என்னவாக இருக்கும்?

கல்வான்

பட மூலாதாரம், Getty Images

மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெறும் இந்த நேருக்கு நேர் சந்திப்பால் இந்தியா எந்த அளவுக்குப் பயனடையும், அதன் முக்கியத்துவம் என்ன?

"WMCC ஒரு நீண்ட செயல்முறை. இந்த வழிமுறை உடனடி முடிவுகளுக்கு வழிவகுக்காது. ஆனால் ஒரு 'ஆழமான' முடிவு நிச்சயமாக வெளிப்படும்," என்று டெல்லியில் சீன விவகார வல்லுநர் டாக்டர் ஃபைசல் அகமது கூறுகிறார்.

"2020 ஆம் ஆண்டிலிருந்து 11 WMCC கூட்டங்கள் நடந்துள்ளன. ஆனால் மெய்நிகர் சந்திப்புகளுக்குப் பதிலாக நேருக்கு நேர் உட்கார்ந்தால் தகவல் தொடர்பு சிறப்பாக இருக்கும். கூடவே வருங்கால சந்திப்புகளுக்கு சிறந்த சூழ்நிலையும் உருவாகும்," என்று அவர் தெரிவித்தார்.

"சீனாவுடனான இந்தியாவின் அணுகுமுறை மேலிருந்து கீழாக இருக்கக்கூடாது, கீழே இருந்து மேல் நோக்கி இருக்க வேண்டும். இரு நாடுகளின் தூதாண்மை அதிகாரிகளும் முதன்முறையாக நேருக்கு நேர் சந்திப்பது முக்கியமானது. ஆயினும் நிரந்தரமான நேர்மறையான முடிவு எட்டப்பட வேண்டும் என்றால் இத்தகைய 20-30 சந்திப்புகள் கண்டிப்பாகத் தேவை," என்றார் ஃபைசல் அகமது.

2005, 2012 மற்றும் 2013 ஆம் ஆண்டுகளில் இந்தியாவுடன் கையெழுத்திட்ட எல்லை ஒப்பந்தங்களை 2020 ஆம் ஆண்டில் சீனா கிட்டத்தட்ட ரத்து செய்தது. இரு நாடுகளுக்கும் இடையே கல்வானில் ரத்தக்களரி மோதல் வெடித்தது. இதில் 20 இந்திய வீரர்கள், குறைந்தது நான்கு சீன வீரர்கள் கொல்லப்பட்டனர்.

'புதிய ஒப்பந்தங்கள் தேவை'

வெளியுறவு அமைச்சர் ஜெயசங்கர்.

பட மூலாதாரம், Getty Images

டோக்லாமில் மோதல் ஏற்பட்டபோது அது மும்முனை விஷயமாக இருந்தது. அதாவது மூன்று நாடுகளின் எல்லைகள் சந்திக்கும் பகுதி அது. இந்தியா-சீனா-பூடான் ஆகிய மூன்று நாடுகளின் எல்லைகளும் இந்தப் பகுதியில் சந்தித்தன.

இந்த சர்ச்சையில் சீனாவும் இந்தியாவும் பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் 1890 ஆம் ஆண்டு போடப்பட்ட ஒப்பந்தத்தை மேற்கோள் காட்டி உரிமை கோருகின்றன. இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் வெவ்வேறு விளக்கங்களை வழங்குகின்றன.

"இரு நாடுகளுக்கும் இடையில் பல ஒப்பந்தங்கள் செய்யப்பட்டுள்ளன. அவற்றில் சில, பிரிட்டிஷ் இந்திய நிர்வாகத்தின் காலத்தை சேர்ந்தவை. சீனா இந்த ஒப்பந்தங்களை வேறுவிதமாக விளக்குகிறது, பிராந்திய உரிமை கோருகிறது. இந்தியாவின் விளக்கம் வேறு மாதிரியாக உள்ளது,” என்று டாக்டர் ஃபைசல் கூறுகிறார்.

"இரு நாடுகளுக்கும் இடையே புதிய பேச்சுவார்த்தைகள் நடைபெறுவது அவசியம். பரஸ்பர ஒப்புதலுடன் புதிய ஒப்பந்தங்கள் செய்யப்பட வேண்டும். இது நடக்க கால அவகாசம் தேவைப்படும்."

ஆனால்,’சீனா சர்வதேச எல்லை விதிகளை மீறிவிட்டது’ என்று உலக அரங்கில் இருந்து உள்நாட்டு கூட்டங்கள் வரை இந்திய வெளியுறவு அமைச்சர் திரும்பத் திரும்பக் கூறுவதை பார்க்கமுடிகிறது. இதுபோன்ற பேச்சுக்கள் இந்த சந்திப்பின் மீது ஏதேனும் விளைவை ஏற்படுத்துமா?

தூதாண்மை மட்டத்தில் நடக்கும் பேச்சுவார்த்தைகள் மீது வெளியுறவு அமைச்சரின் அறிக்கைகள் பெரிய பங்கு வகிக்காது என்று டாக்டர் அகமது கூறுகிறார்.

"தற்போதைய புவிசார் அரசியலைக் கருத்தில் கொண்டு அறிக்கைகள் வெளியிடப்படுகின்றன. அவை மக்களிடையே ஒரு பொதுவான கருத்தை உருவாக்குகின்றன. ஆனால் தெளிவான கவனம், நிகழ்ச்சி நிரலைக் கொண்ட இத்தகைய வழிமுறைகள் இருக்கும்போது, எதற்காக சந்திப்பு நடக்கிறதோ அதுபற்றி மட்டுமே பேச்சுக்கள் நடைபெறும்,” என்று அவர் குறிப்பிட்டார்.

"இருதரப்பு பேச்சுவார்த்தையை இந்தியா வலியுறுத்த வேண்டும். இதுதான் சிறந்த பலனை அளிக்கும். ரஷ்யா, சீனா தொடர்பான அமெரிக்காவின் பிரிக்கும் கொள்கை பெரிய பலன்களை அளிக்கவில்லை. எனவே இதுபோன்ற சூழ்நிலையில், நேருக்கு நேர் சந்திப்பில் நடக்கும் பேச்சுவார்த்தை அடிப்படையிலான தீர்வுதான், சீனா விஷயத்தில் இந்தியாவின் சிறந்த அணுகுமுறையாக நிரூபணமாகும்,” என்று அவர் குறிப்பிட்டார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: