U19 உலக சாம்பியன்: இந்திய மகளிர் கிரிக்கெட்டின் '83' தருணம்

பட மூலாதாரம், ANI
- எழுதியவர், சஞ்சய் கிஷோர்
- பதவி, மூத்த விளையாட்டுச் செய்தியாளர், பிபிசி இந்தி
ஒருவேளை இது இந்திய மகளிர் கிரிக்கெட்டுக்கு 1983 போன்ற தருணமாக இருக்கலாம். கபில்தேவ் தலைமையில் இந்திய ஆடவர் அணி அந்த ஆண்டு உலக கோப்பையை வென்றது. அதன் பிறகு இந்திய கிரிக்கெட்டின் முகமே ஒட்டுமொத்தமாக மாறிப் போனது. அதேப்போல் இதுவும் மகளிர் கிரிக்கெட்டின் திருப்புமுனையா?
ஆம். அந்த நீண்ட காத்திருப்பு முடிவுக்கு வந்தது.
இந்திய மகளிர் கிரிக்கெட்டுக்கு ஜனவரி 29ம் தேதி சிறப்பானதாக அமைந்தது. சச்சின் டெண்டுல்கர் படைத்த சாதனையுடன் தனது பெயரையும் இணைத்துக் கொண்ட ஷெஃபாலி வர்மா, தனது அணியை உலக சாம்பியனாக்கினார்.
பயிற்சியாளர் நௌஷின்-அல்-கதிர், 18 ஆண்டுகளுக்கு முன்பு இறுதிப் போட்டிக்கு வந்து பட்டத்தை வெல்ல முடியாத அணியில் இடம்பெற்றிருந்தார். அந்த ஏமாற்றம் இப்போது புன்னகையாக மாறியுள்ளது.
இந்திய மகளிர் கிரிக்கெட் அணி முதல் முறையாக உலக சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. இதற்கு முன்பாக பலமுறை பட்டம் கைநழுவியிருந்தது குறிப்பிடத்தக்கது.
2005 இல், ஒருநாள் உலகக் கோப்பையின் இறுதிப் போட்டியை இந்தியா எட்டியது, ஆனால் ஆஸ்திரேலியாவிடம் 98 ரன் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
2017ஆம் ஆண்டு ஒருநாள் உலகக் கோப்பையின் இறுதிப் போட்டியில் இந்தியாவை இங்கிலாந்து அணி தோற்கடித்தது. 2020 டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்தியா 85 ரன் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
கடந்த ஆண்டு காமன்வெல்த் போட்டியில் கூட இந்திய மகளிர் அணியால் சாம்பியன் பட்டம் வெல்ல முடியவில்லை. இறுதிப்போட்டிகளில் தொடர்ந்து வந்த சோகத்திற்கு கடந்த ஞாயிறன்று இந்திய ஜூனியர் மகளிர் அணி முற்றுப்புள்ளி வைத்துள்ளது. எதிரணியை வீழ்த்தி பட்டத்தை வென்று முந்தைய ஏமாற்றங்களுக்கு இந்திய அணி பழிதீர்த்துக்கொண்டது.

பட மூலாதாரம், ANI
சிறந்த பந்துவீச்சு, அட்டகாசமான ஃபீல்டிங்
இது 19 வயதுக்குட்பட்டோருக்கான முதலாவது மகளிர் உலகக் கோப்பை போட்டியாகும். இதில் இந்திய வீராங்கனைகள் அதிசயத்தை நிகழ்த்திக் காட்டினர். இதற்காக ஷெஃபாலி வர்மாவும், 19 வயதுக்குட்பட்ட இந்த பெண்கள் கிரிக்கெட் அணியும் பாராட்டப்பட வேண்டும்.
தென்னாப்பிரிக்காவின் போட்செஃப்ஸ்ட்ரோமில் நடைபெற்ற 19 வயதுக்குட்பட்டோருக்கான முதலாவது மகளிர் உலகக் கோப்பையை இந்தியா கைப்பற்றியது. முன்னதாக இந்த தொடரில் ஒரு போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்திய அணி தோல்வியடைந்திருந்தது. இங்கிலாந்து அணி ஒரு தோல்வியைக் கூட சந்திக்காத அணியாக திகழ்ந்தது.
வரலாறும், இந்தியாவுக்கு எதிரான செயல்பாடுகளும் இங்கிலாந்திற்கே சாதகமாக இருந்தன. ஆனால் இந்தியாவின் அபார பந்துவீச்சு மற்றும் அட்டகாசமான பீல்டிங்கிற்கு முன்னால் இங்கிலாந்தின் திட்டங்கள் தவிடுபொடியாகின.
இறுதிப் போட்டியில் இரு அணிகளும் எந்தவொரு மாற்றத்தையும் செய்யவில்லை. அரையிறுதியில் ஆஸ்திரேலியாவை இங்கிலாந்து வென்றது. மற்றொரு அரையிறுதியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா, நியூஸிலாந்தை வீழ்த்தியது.
இரு அணிகளும் அரையிறுதியில் விளையாடிய அதே ஆடுகளத்தில்தான் இறுதிப் போட்டியும் நடைபெற்றது. இந்திய அணி டாஸ் வென்று பந்துவீச முடிவு செய்தது.
இந்திய பந்துவீச்சாளர்கள் ஆடுகளத்தை அதிர வைத்தனர். வேகப்பந்து வீச்சாளர் தித்தாஸ் சாது, ஆஃப் ஸ்பின்னர் அர்ச்சனா தேவி மற்றும் லெக் ஸ்பின்னர் பார்ஷ்வி சோப்ரா ஆகியோரிடம் இங்கிலாந்து மண்டியிட்டது.

பட மூலாதாரம், ANI
இங்கிலாந்துக்கு ஏமாற்றம்
தொடர்ந்து இரண்டாவது போட்டியிலும் இங்கிலாந்தின் பேட்டிங் மோசமாக அமைந்தது. 18வது ஓவரின் முதல் பந்தில் இங்கிலாந்து அணி 68 ரன்களுக்கு சுருண்டது.
இந்தியா சார்பில் தித்தாஸ் சாது, அர்ச்சனா தேவி, பார்ஷ்வி சோப்ரா ஆகியோர் முறையே 6, 17 மற்றும் 13 ரன்கள் கொடுத்து தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
கேப்டன் ஷெஃபாலி வர்மா, மன்னத் காஷ்யப், சோனம் யாதவ் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர். பார்ஷ்வி சோப்ராவின் பந்துவீச்சில் ஒரு அட்டகாசமான கேட்ச் பிடித்து கிரிக்கெட் ரசிகர்களின் இதயங்களை வென்றார் அர்ச்சனா தேவி.
இங்கிலாந்தின் ஹாலந்து, ராயன்னா மெக்டொனால்ட்-கே, அலெக்சா ஸ்டோன்ஹவுஸ் மற்றும் சோஃபியா ஸ்மேல் ஆகிய மூன்று வீரர்கள் மட்டுமே இரட்டை இலக்கத்தைத் தொட்டனர்.
இந்திய அணியின் இன்னிங்ஸை ஷெஃபாலி வர்மா மற்றும் ஸ்வேதா செஹ்ராவத் தொடங்கினர். ஷெஃபாலி 11 பந்துகளில் 15 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
மற்றொரு தொடக்க வீராங்கனை ஸ்வேதா செஹ்ராவத் 6 பந்துகளில் 5 ரன்கள் எடுத்த நிலையில் பெவிலியன் திரும்பினார். இந்தியா 14-வது ஓவரில் வெற்றி இலக்கை எட்டியது.
சீனியர் மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் பிப்ரவரி 10ஆம் தேதி தொடங்குகிறது.
ஒருவேளை அதனால்தான் இங்கிலாந்தின் மூன்று மூத்த வீரர்கள் பிரத்யேகமாக இந்தப் போட்டியைக் காண வந்திருப்பார்கள் என்று தோன்றுகிறது.

பட மூலாதாரம், ANI
டெண்டுல்கர் சாதனையை முறியடித்த ஷெஃபாலி வர்மா
இந்த தொடர் பல வகைகளில் சுவாரசியமாக இருந்தது. முதல் போட்டியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி வங்கதேசம் பீதியை கிளப்பியது. ருவாண்டா அணி முதல் முறையாக உலகக் கோப்பையில் விளையாடி அனைவரையும் கவர்ந்தது.
ருவாண்டாவின் ஹென்ரிட் இஷிமவே 2 முறையும், தென்னாப்பிரிக்காவின் மேடிசன் லாண்டஸ்மேன் ஒரு முறையும் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தினர்.
19 வயதுக்குட்பட்ட இந்திய மகளிர் கிரிக்கெட் குழுவில் வறுமையில் இருந்து புகழின் உச்சம் தொட்ட பலரது கதைகள் உள்ளன.
”சுமார் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு டெல்லியில் இருந்து 70 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ரோஹ்தக் சென்றிருந்தேன். மகளிர் கிரிக்கெட்டின் அடுத்த சூப்பர் ஸ்டார் என்று கூறப்பட்ட பதினைந்து வயது வீராங்கனையை சந்தித்தேன்.
கிரிக்கெட் மீது அவருக்கு மிகுந்த நாட்டம் இருந்தது. பல முறை சிறுவர்களுக்கான போட்டிகளில் கிரிக்கெட் விளையாட்டு வீரரை போல உடையணிந்து இவர் விளையாடியுள்ளார்.

பட மூலாதாரம், BCCI
இதனால்தான் தனது மகளின் தலைமுடியை தந்தை குட்டையாக வெட்டியிருந்தார். பொருளாதார நெருக்கடியில் இருந்த பொற்கொல்லரான அவரது தந்தை தனது கனவை மகள் மூலம் நிறைவேற்ற விரும்பினார். அதனால்தான் அவர் மகளுக்கு பக்கபலமாக இருந்தார். அந்த பெண்ணின் பெயர் ஷெஃபாலி வர்மா.
அப்போது இந்த சிறுமி வெஸ்ட் இண்டீஸில் தூள் கிளப்பிவிட்டு திரும்பியிருந்தார். இளம் வயதில் அரைசதம் அடித்த சச்சின் டெண்டுல்கரின் 30 ஆண்டுகால சாதனையை அவர் முறியடித்தார்.
14-15 வயதில் ஆண்களால் ஸ்ட்ரோக் மேக்கிங் செய்ய முடியும் என்று கூறுவார்கள். ஆனால் ஷெஃபாலி 11-12 வயதில் இருந்து ஸ்ட்ரோக் மேக்கிங் செய்யத் தொடங்கினார் என்று அவரது பயிற்சியாளர் அஷ்வினி குமார் கூறினார். இதை கடவுளின் பரிசு என்று கூறுகிறார் அவர்.
ஷெஃபாலியின் ஆட்டத்தைப் பார்த்த பயிற்சியாளர், சிறுவர்களுடன் சேர்ந்து அவரை விளையாட வைத்தார். அதன்பிறகு நடந்தது வரலாறானது. இரண்டு உலகக் கோப்பைகளைத் தவிர, கடந்த ஆண்டு பர்மிங்காம் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற அணியிலும் ஷெஃபாலி வர்மா ஒரு அங்கமாக இருந்தார்”.

பட மூலாதாரம், Getty Images
அர்ச்சனா தேவி மற்றும் சோனத்தின் தீராத வேட்கை
அதே சமயம் இறுதிப்போட்டியில் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தி, ஒரு அபாரமான கேட்ச் பிடித்த அர்ச்சனா தேவியின் கதையும் போராட்டம் நிறைந்தது.
உத்தரபிரதேச மாநிலம் உன்னாவ் மாவட்டத்தில் ரதாய் பூர்வா கிராமத்தைச் சேர்ந்த அர்ச்சனா தேவியின் இந்த வெற்றிக்குப் பின்னால், எல்லா கிண்டல், கேலிகளுக்கும் மத்தியில் தன் மகளை கிரிக்கெட் வீராங்கனையாக்குவதில் உறுதியாக இருந்த அவரது தாய் சாவித்ரி தேவியின் கதையும் இருக்கிறது.
அவரது கணவர் புற்றுநோயால் காலமானார். மகன் பாம்பு கடித்து இறந்தபோது அவர் சூனியக்காரி என்று கூட அழைக்கப்பட்டார்.
ஆனால் இப்போது ஷெஃபாலி மற்றும் அர்ச்சனா வீட்டில் கொண்டாட்டங்கள் களை கட்டியுள்ளன. ஒரு காலத்தில் கிண்டல் செய்தவர்களும் இந்த கொண்டாட்டத்தில் இணைந்துள்ளனர்.
ஃபிரோசாபாத்தைச் சேர்ந்த ஆல்-ரவுண்டரான சோனம், இடது கை சுழற்பந்து வீச்சாளர். அவர் வலது கையால் பேட் செய்கிறார்.
சோனம் ஐந்து சகோதரிகளில் இளையவர். தந்தை தொழிற்சாலையில் கூலி வேலை செய்கிறார். சோனத்தின் கிரிக்கெட் மீதான ஆர்வத்தைப் பார்த்த அவரது தந்தை இரண்டு ஷிஃப்ட் கூலி வேலை செய்து குடும்பத்திற்கு தேவையானவற்றை கவனித்து வந்தார்.
இந்தியாவில் மகளிர் கிரிக்கெட் நிஜமாகவே மாறிவருகிறது என்பதை இந்த இளம் வீராங்கனைகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
மகளிர் ஐபிஎல் தொடருக்கு பிறகு இன்னும் நிறைய மாற்றங்கள் வரும் என்று எதிர்பார்க்கலாம்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












