You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
உத்தரகாசியில் மசூதிக்கு எதிரான பேரணியில் கல் வீச்சு, தடியடி - என்ன நடந்தது?
- எழுதியவர், ஆசிப் அலி
- பதவி, பிபிசி ஹிந்திக்காக
உத்தரகாண்ட் மாநிலம் உத்தரகாசியில் ஒரு மசூதிக்கு எதிராக "ஜன் ஆக்ரோஷ்" என்னும் பேரணி நடத்தப்பட்டது. அதில் கல் வீசி தாக்குதல் நடத்தப்பட்ட விவகாரத்தில் 8 பேர் மற்றும் அடையாளம் தெரியாத 200 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
பேரணியில் வன்முறை வெடித்ததால் போலீசார் மற்றும் போராட்டக்காரர்கள் பலர் காயமடைந்தனர்.
உத்தரகாசியில், மசூதி ஒன்று அரசு நிலத்தில் கட்டப்பட்டுள்ளது என்றும், சட்டவிரோதமானது என்றும் சில இந்து அமைப்புகள் அக்டோபர் 24ஆம் தேதி பேரணி நடத்தி எதிர்ப்பு தெரிவித்தன.
மசூதி அமைந்திருக்கும் இடத்திற்கான சரியான ஆவணங்கள் தங்களிடம் இருப்பதாக பள்ளிவாசல் கமிட்டி கூறுகிறது. பேரணியின் போது ஏற்பட்ட வன்முறைக்குப் பிறகு, பேரணி நடந்த அன்று நள்ளிரவில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இதனிடையே, மாநில அரசு வகுப்புவாத பதற்றத்தை அதிகரித்து வருவதாக காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது. ஆனால், பாஜக தரப்பு இது சட்டவிரோத ஆக்கிரமிப்புகளுக்கு எதிரான போராட்டம் என்று விவரிக்கிறது.
சூழலை கட்டுக்குள் கொண்டு வர போலீசார் அப்பகுதியில் கொடி அணிவகுப்பு நடத்தியுள்ளனர்.
பேரணியில் வன்முறை ஏற்பட்டது எப்படி?
வியாழனன்று, உத்தரகாண்ட் மாநிலம் உத்தரகாசி மாவட்டத்தில் இருக்கும் சில இந்து அமைப்புகள் 'ஜன் ஆக்ரோஷ்' என்னும் பேரணியை ஏற்பாடு செய்தன. ஜமா மசூதி அமைந்திருக்கும் இடத்தை கேள்விக்குள்ளாக்கும் நோக்கத்தில் இது நடத்தப்பட்டது.
இந்த பேரணியில் 'ஐக்கிய சனாதன் தர்ம ரக்ஷக் தளம்' ( United Sanatan Dharma Rakshak Dal) மற்றும் பிற இந்து அமைப்புகள் கலந்து கொண்டன. இந்த பேரணிக்கு உள்ளூர் வியாபாரிகளும் தங்கள் கடைகளை மூடி ஆதரவு தெரிவித்தனர்.
மசூதிக்கு செல்லும் சாலைகளில் பேரிகார்டுகள் வைக்கப்பட்டன. பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டது. அந்த பேரணி பிரதான மார்க்கெட் வழியாக பத்வாடி சாலையை வந்தடைந்தவுடன், போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர்.
அப்போது, போராட்டக்காரர்களுக்கும், போலீசாருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டு, பின்னர் அது வன்முறையாக மாறியது.
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் போலீசார் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தியதில் ஏராளமான போலீசார் காயமடைந்தனர். இதையடுத்து, வன்முறையைக் கட்டுப்படுத்த போலீஸாரும் தடியடி நடத்தினர்.
இந்த சம்பவத்திற்குப் பிறகு, கர்வால் ஐஜி கரண் சிங் நக்ன்யால் இந்த சம்பவம் பற்றி பேசுகையில், "மசூதி சட்டவிரோதமாக கட்டப்பட்டுள்ளது என்று சில அமைப்புகள் கூறின, ஆனால் விசாரணையில் மசூதி தனியார் நிலத்தில் கட்டப்பட்டது தெரிய வந்தது. மசூதி இருக்கும் இடத்தில் சட்டப்பூர்வமாக எந்த சிக்கலும் இல்லை என்று கண்டறியப்பட்டது. இது மிகவும் பழமையானது” என்றார்.
தேவ்பூமி ரக்க்ஷா அபியான்' நிறுவனர் சுவாமி தர்ஷன் பார்தி மற்றும் ஸ்ரீ ராம் சேனா அமைப்பை சேர்ந்த ஜிதேந்திர சவுகான் ஆகியோர் பேரணிக்கு அனுமதி பெற்று, நிர்ணயிக்கப்பட்ட பாதையில் பேரணியை நடத்தியதாக ஐஜி கூறினார்.
இரு தரப்பும் கொடுக்கும் விளக்கம் என்ன?
உத்தரகாசி மசூதி கமிட்டியின் உறுப்பினர் இஷ்தியாக் அகமதுகூறுகையில், "ஒன்றரை மாதங்களுக்கு முன்பு சில அமைப்புகள் ஆர்டிஐயின் கீழ் மசூதி பற்றிய தகவல்களைக் கேட்டன. ஒருவேளை அந்த நேரத்தில் அவர்களுக்கு முழுமையான தகவல்களை பொதுத் தகவல் அதிகாரி வழங்காமல் இருந்திருக்கலாம். அதன் பிறகு, மசூதி அரசு நிலத்தில் கட்டப்பட்டிருப்பதாக ஒரு பிம்பம் உருவாக்கப்பட்டது." என்று விவரித்தார்.
இஷ்தியாக் மேலும் கூறுகையில் “செப்டம்பர் 12 அன்று, நாங்கள் அனைத்து ஆவணங்களுடன் மாவட்ட ஆட்சியரிடம் சென்று, அவற்றைச் சரிபார்த்தோம், அதில் மசூதி சட்டப்பூர்வமானது என்று கண்டறியப்பட்டது. மறுநாள் செய்தித்தாள்களில் மசூதி அமைந்திருக்கும் இடம் தனியார் நிலம் என்று செய்திதாள்களில் செய்தி வெளியானது” என்றார்.
இதனையடுத்து பேரணி நடந்தால் சூழல் மோசமடையலாம் என்ற அச்சத்தில் பேரணியை நிறுத்துமாறு கோரிக்கை விடுத்ததாகவும், ஆனால் அக்டோபர் 24 ஆம் தேதி பேரணி நடந்ததாகவும் அவர் கூறினார். போராட்டத்தின் போது பேரணி கூட்டத்தை மசூதியை நோக்கி செல்லவிடாமல் போலீசார் தடுத்தனர்.
இஷ்தியாக் அகமது கூறுகையில், "மசூதி முற்றிலும் சட்டப்பூர்வமானது, இதற்கான ஆதாரம் என்னிடம் உள்ளது. 1969 ஆம் ஆண்டு இந்த மசூதி ரம்ஜான் அலி, ஹமீத் பேக், யாசின் பேக், அலி அகமது மற்றும் இலாஹி பக்ஷ் ஆகிய 5 பேரின் பெயரில் பதிவு செய்யப்பட்டது" என்றார்.
கல் வீச்சு மற்றும் தடியடி ஆகியவற்றில் காயமடைந்தவர்களில் 'தேவ்பூமி ரக்ஷா அபியான்' அமைப்பை சேர்ந்த சுவாமி தர்ஷன் பார்தியும் ஒருவர். அவர் தனது ஆக்ரோஷமான பேச்சுகளால் பிரபலமானவர்.
அக்டோபர் 24 அன்று பேரணி நடத்திய இந்து அமைப்புகளின் முக்கிய நோக்கம் மசூதியை சட்டவிரோதம் என்று கூறி எதிர்ப்பு தெரிவிப்பது தான் என்று பார்தி கூறுகிறார்.
அவர் கூறுகையில் "அந்த மசூதி அரசு நிலத்தில் உள்ளது. மாவட்ட நிர்வாகம் அந்த நிலத்தில் பிரச்னை இல்லை என்கிறது. ஆனால் நாங்கள் அந்த நிலம் சட்டவிரோதமானது என்று சொல்கிறோம். தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் மாவட்ட நிர்வாகம் அளித்த தகவலின்படி, அந்த நிலத்தில் எந்த மசூதியும் கட்டுவதற்கு பதிவு செய்யப்படவில்லை." என்றார்.
பேரணியின் போது போலீசாரை நோக்கி ஒரு பாட்டில் வீசப்பட்டதாகவும், அதன் பிறகு தடியடி நடந்ததாகவும் பார்தி கூறுகிறார்.
"முஸ்லிம்கள் வாழும் இடங்களில் இருந்து கற்கள் வீசப்பட்டதையும் சில காணொளிகள் மூலம் தெரிந்து கொண்டோம். இந்தச் சம்பவத்தில் எனது பாதுகாப்புப் பணியாளர்கள் 4 பேர் காயமடைந்தனர், எங்கள் தரப்பில் ஐந்து சிறுவர்களுக்கு தலையில் காயம் ஏற்பட்டது. அதன் பிறகு அங்கிருந்தவர்கள் போலீஸாரை துரத்த முயன்றனர். இதில் போலீஸாரும் காயமடைந்தனர்.” என்று அவர் கூறினார்.
தீபாவளிக்குப் பிறகு நவம்பர் 4 ஆம் தேதி மற்றொரு பெரிய ஆர்ப்பாட்டம் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளதாக பார்தி கூறுகிறார்.
காவல்துறை நிர்வாகம் சொல்வது என்ன?
உத்தரகாசியில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. சமீப காலமாக அங்கு வகுப்புவாத சம்பவங்கள் நடப்பது தெரிந்தும் பேரணிக்கு அனுமதி அளித்தது எந்த அளவுக்கு சரியானது என்ற கேள்வி எழுந்துள்ளது.
உத்தரகாசி எஸ்.பி. அமித் ஸ்ரீவஸ்தவா கூறுகையில், சன்யுக்த் சனாதன் தர்ம ரக்ஷக் தளம் அக்டோபர் 24-ம் தேதி பேரணிக்கு அழைப்பு விடுத்தது. இது குறித்து அவர்கள் ஒரு மாதத்திற்கு முன்பே தகவல் கொடுத்தனர்” என்று கூறினார்.
அப்போது சில இந்து அமைப்புகள் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் சில ஆவணங்களைக் கேட்டதாகவும், ஆனால் கொடுத்த ஆவணங்களில் அவர்கள் திருப்தி அடையவில்லை என்றும் எஸ்பி ஸ்ரீவத்சவா கூறினார். அதனால்தான் பேரணிக்கு அனுமதி கேட்டனர், மாவட்ட நிர்வாகம் சில நிபந்தனையுடன் அனுமதி வழங்கியது என்று, அவர் கூறினார்.
பேரணியில் கலந்து கொள்ளும் மக்கள் ஒரு குறிப்பிட்ட பாதையில் நடந்து செல்ல அனுமதிக்கப்பட்டது. ஆனால் அவர்கள் அந்த வழியை விட்டு வேறு பாதையில் செல்ல முயன்றதாக எஸ்பி கூறினார்.
அவர் மேலும் கூறுகையில், "அவர்கள் நாங்கள் ஒதுக்கிய வழியை விட்டு வேறு பாதையில் செல்ல முயன்றனர். அவர்களை தடுத்து நிறுத்திய போது போலீசாருடன் கைகலப்பு ஏற்பட்டது, அதைத் தொடர்ந்து போராட்டக்காரர்கள் போலீசார் மீது கற்களை வீசத் தொடங்கினர், இதில் போலீசார் காயமடைந்தனர்." என்றார்.
காயமடைந்த 8 காவலர்களில் இன்ஸ்பெக்டர் அசுதோஷ் மற்றும் கான்ஸ்டபிள் அனில் ஆகியோர் ஆபத்தான நிலையில் உள்ளனர்.
பின்னர், போலீசார் லேசான தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். அமைதியை நிலைநாட்ட, மாவட்டத்தில் 163வது பிரிவின் கீழ் அனைத்து தர்ணா, ஆர்ப்பாட்டங்கள், பேரணிகள் மற்றும் போராட்டங்களுக்கு தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பதற்றமான பகுதிகளில் கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். காவல்துறை அதன் பின்னர் நகரில் கொடி அணிவகுப்பு நடத்தியது. பதற்றமான இடங்களில் காவல்துறையினரின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டது.
`இதுபோன்ற சம்பவங்களுக்கு அரசுதான் பொறுப்பு'
இதற்கிடையில், மாநில காங்கிரஸ் துணைத் தலைவர் சூர்யகாந்த் தஸ்மனா, மாநிலத்தில் சமீபத்திய வகுப்புவாத சம்பவங்கள் மற்றும் உத்தரகாசி சம்பவத்துக்கு மாநில அரசு தான் பொறுப்பு என்று கூறியுள்ளார்.
தஸ்மனா கூறுகையில், "உத்தரகாண்ட் அமைதியான மாநிலமாக இருக்கிறது. இங்கு பெரும்பான்மை மற்றும் சிறுபான்மை சமூகங்களுக்கு இடையே எந்தப் பதற்றமும் இல்லை. ஆனால் தற்போதைய மாநில அரசு, உண்மையான பிரச்னைகளில் இருந்து மக்களை திசை திருப்பவே இதுபோன்ற பிரச்னைகளை எழுப்புகிறது" என்று குற்றம் சாட்டினார்.
மசூதி சட்டப்பூர்வமானது என மாவட்ட ஆட்சியர் அறிவித்த பிறகும் கலவரத்தைத் தூண்டும் நபர்கள் யார்? என்று தஸ்மானா கேள்வி எழுப்பினார்.
'சட்டவிரோத செயல்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும்'
பாஜக செய்தித் தொடர்பாளர் கவுரவ் பாண்டே கூறுகையில், “சில வெளியாட்கள் இந்த தேவபூமிக்கு வந்து அமைதியான சூழலைக் கெடுக்கிறார்கள்” என்று கூறுகிறார்.
"கடந்த சில ஆண்டுகளாக மலைப்பகுதிகளில் பெண்களிடம் தவறாக நடந்து கொள்வது அதிகரித்துள்ளதால், அப்பகுதி மக்களிடையே கோபம் நிலவுகிறது” என்று பாண்டே கூறினார்.
"மாநிலத்தின் பல பகுதிகளில் அரசு நிலத்தில் சட்டவிரோத ஆக்கிரமிப்பு மற்றும் கட்டுமானங்கள் நடைபெற்று வருகிறது. இது குறித்து அப்பகுதி மக்கள் புகார் கூறினர். இதனை அரசு கவனத்தில் எடுத்து பல ஹெக்டேர் நிலங்களை ஆக்கிரமிப்பில் இருந்து விடுவித்துள்ளது” என்று பாண்டே குற்றம் சாட்டினார்.
“மாநில முதல்வர் புஷ்கர் சிங் தாமி நிர்வாகத்தின் கீழ், யாரும் சட்டத்தை கையில் எடுக்க அனுமதிக்கப்பட மாட்டார்கள். குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” என்றும் அவர் கூறினார்.
எந்த மதமாக இருந்தாலும் சரி, எந்த சமூகமாக இருந்தாலும் சரி, யாரேனும் சட்டத்துக்கு புறம்பாக நடந்தால் , அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்கிறார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்