You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
மும்பை ரயிலில் முஸ்லிம் முதியவரை தாக்கிய இளைஞர்கள் - என்ன நடந்தது?அவர் கொண்டு சென்றது என்ன?
- எழுதியவர், சந்தன்குமார் ஜாஜ்வாடே
- பதவி, பிபிசி செய்தியாளர், டெல்லி
மகாராஷ்டிரா மாநிலம் நாசிக் மாவட்டத்தில் உள்ள இகத்புரி அருகே எக்ஸ்பிரஸ் ரயிலில் மாட்டிறைச்சி கொண்டு சென்றதாக சந்தேகத்தின் பேரில் முஸ்லிம் முதியவர் ஒருவர் சக பயணிகளால் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவத்தின் வீடியோ சமூக ஊடகங்களில் வெளியானதை அடுத்து, ரயில்வே காவல்துறை(ஜிஆர்பி) இது குறித்து விசாரணையை தொடங்கியுள்ளது. இந்த சம்பவம் நடந்ததை ரயில்வே காவல்துறை உறுதி செய்துள்ளது.
வைரலான வீடியோவில், ஐந்துக்கும் மேற்பட்டோர் ரயில் பெட்டிக்குள் ஒரு நபரை கொடூரமாக தாக்குவதும், திட்டுவதும் பதிவாகியுள்ளது.
ரயில்வே காவல்துறை கூற்றுபடி, ஜல்கான் மாவட்டத்தைச் சேர்ந்த ஹாஜி அஷ்ரப் என்பவர் கல்யாண் நகரில் உள்ள தனது மகள் வீட்டுக்குச் சென்று கொண்டிருந்தார். இகத்புரி அருகே ரயில் சென்ற ோது, அவர் மாட்டிறைச்சி கொண்டு சென்றதாக சந்தேகத்தின் பேரில், உடன் பயணித்தவர்கள் அவரை கடுமையாக அடித்து உதைத்தனர்.
பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
தாக்கப்பட்ட 72 வயது முதியவர்
சமூக வலைதளங்களில் பரவிய காணொளியில், ஹாஜி அஷ்ரப் இருக்கைக்கு அருகில் அமர்ந்திருந்த பல இளைஞர்கள் அவரை சுற்றிவளைத்து தாக்குகின்றனர்.
முதியவரை தாக்கிய பயணிகள், தங்கள் அலைபேசியில் வீடியோ எடுப்பதுடன், முதியவருக்கு அச்சுறுத்தல்களையும் விடுக்கின்றனர்.
"இகத்புரி அருகே ரயிலில் ஹாஜி அஷ்ரப் மணி பல இளைஞர்களால் தாக்கப்பட்டார்" என்று ஆகஸ்ட் 31 அன்று புகார் வந்ததாக ரயில்வே காவல்துறை பிபிசியிடம் தெரிவித்தது. ஆகஸ்ட் 28 அன்று ஹாஜி அஷ்ரப் தனது மகளை சந்திக்க ரயிலில் கல்யாண் நகர் செல்லும் போது இந்த சம்பவம் நடந்தது.
ஜல்கானில் வசிக்கும் 72 வயதான அஷ்ரஃப்,ஆகஸ்ட் 28 அன்று, துலே-சத்ரபதி சிவாஜி டெர்மினஸ் எக்ஸ்பிரஸ் ரயிலில் கல்யாணில் வசிக்கும் தனது மகள் வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார்.
அவருக்கும் ரயிலில் அவருடன் பயணித்த மற்ற சக பயணிகளுக்கும் இடையே இருக்கை தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டதாக ரயில்வே போலீஸின் ஆதாரங்களில் இருந்து தெரியவந்துள்ளது. இதை சக பயணிகள் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வைரலாக்கி உள்ளனர்.
பாதிக்கப்பட்ட முதியவர் சொன்னது என்ன?
ஹாஜி அஷ்ரப் மற்றும் அவரது குடும்பத்தினரின் புகாரின் அடிப்படையில், ஐந்து முதல் ஆறு பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
மத்திய ரயில்வே துணை ஆணையர் மனோஜ் நானா பாட்டீலின் கூற்றுப்படி, இந்த வழக்கில் சந்தேகத்தின் பேரில் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பிபிசியுடன் ரயில்வே பகிர்ந்து கொண்ட தகவலின்படி, சந்தேகத்தின் பேரில் சிலரை துலேயில் போலீசார் கைது செய்தனர். அவர்களை தானேக்கு அழைத்து வர ஒரு குழு அனுப்பப்பட்டது.
இது தொடர்பாக ரயில்வே போலீஸ், சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர். புகாரைப் பெற்ற பிறகு, சாலிஸ்கான் ரயில் நிலையத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் வழக்கு விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
சமூக வலைதளங்களில் வைரலான மற்றொரு வீடியோவில், பாதிக்கப்பட்ட முதியவர் அவமானத்தால் தற்கொலை செய்து கொண்டதாக வதந்தி பரப்ப முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இருப்பினும், முதியவர் பாதுகாப்பாக இருப்பதாகவும், இந்த விவகாரத்தில் வதந்திகளை பரப்ப வேண்டாம் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளதாக ரயில்வே துறை பிபிசியிடம் தெரிவித்துள்ளது.
புகார் அளித்த பிறகு, பாதிக்கப்பட்ட முதியவர் அஷ்ரப் தான் உயிருடன் இருப்பதாகக் கூறும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.
அவர், “என் பெயர் அஷ்ரப் அலி சையத் உசேன். நான் சாலிஸ்கானில் வசிப்பவன். நான் உயிருடன் இருக்கிறேன், என்னைப் பற்றி கவலைப்பட்ட உங்கள் அனைவருக்கும் நன்றி கூறுகிறேன். எனக்கு ஆதரவாக எந்த தவறான நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்.” என்று அந்த வீடியோவில் அவர் கூறியுள்ளார்.
சமூக வலைதளங்களில் வைரலான வீடியோ
உண்மைச் சரிபார்ப்பு தளத்தை (fact checker) சேர்ந்த முகமது ஜுபைர், முதியவர் தாக்கப்பட்ட வீடியோவை சமூக வலைதளங்களில் பகிர்ந்து, "ஹாஜி அஷ்ரப் தனது மகளை பார்க்க கல்யாண் நகருக்கு ரயிலில் சென்று கொண்டிருந்தார், அப்போது சில இளைஞர்கள் குண்டர்கள் போன்று அவரை மோசமாக அடித்து துஷ்பிரயோகம் செய்தனர்" என்று பதிவிட்டார்.
மஜ்லிஸ் கட்சி (AIMIM) மூத்த தலைவர் இம்தியாஸ் ஜலீல் தனது எக்ஸ் பக்கத்தில், “நாங்கள் எப்போதும் வாய் மூடி பார்வையாளர்களாக மட்டுமே இருக்க முடியாது. இந்த சக்திகளை முறியடிக்க மத சார்பற்ற இந்தியர்களாகிய நாம் அனைவரும் ஒன்றுபட வேண்டிய நேரம் இது. இவர்களுக்குள் எவ்வளவு விஷம் பரவியிருக்கிறது. தனது தாத்தாவின் வயதில் இருக்கும் ஒருவரிடம் இப்படி நடந்து கொள்கின்றனர்” என்று குறிப்பிட்டுள்ளார்.
தி இந்து ஆங்கில செய்தித்தாள் தகவலின்படி , இந்த சம்பவம் ஆகஸ்ட் 28, 2024 அன்று 72 வயதான ஹாஜி அஷ்ரப் என்பவர் துலே-சத்ரபதி சிவாஜி டெர்மினஸ் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணித்த போது நிகழ்ந்தது. முதற்கட்ட விசாரணையில், மகாராஷ்டிராவில் தடை செய்யப்படாத எருமை இறைச்சியை எடுத்துச் சென்றது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
தி இந்துவின் கூற்றுப்படி, இந்த சம்பவத்துடன் தொடர்புடைய மூன்று முக்கிய குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு துலேயில் இருந்து தானேக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.
அந்த செய்தியின் படி, குற்றம் சாட்டப்பட்டவர்கள் ரயிலின் அதே பெட்டியில் பயணித்ததாகவும், மீண்டும் துலேவுக்குச் செல்லும் போது, போலீசார் அவர்களை அடையாளம் கண்டு காவலில் எடுத்ததாகவும் கூறப்பட்டுள்ளது.
மும்பையின் மூத்த ரயில்வே காவல்துறை அதிகாரிகளின் கூற்றுப்படி, குற்றம் சாட்டப்பட்டவர்கள் இந்த சம்பவத்தில் ஈடுபட்டது உறுதி செய்யப்பட்ட பின்னர் அதிகாரப்பூர்வமாக கைது செய்யப்படுவார்கள்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)