You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
"இங்குள்ள மக்கள் மிகவும் அன்பானவர்கள்.. ஆனால்.. ” - வன்முறையால் அச்சத்தில் இருக்கும் பிரிட்டன் முஸ்லிம் சமூகம்
- எழுதியவர், ரேடா எல் மாவி, மான்செஸ்டரில் இருந்து
- பதவி, பிபிசி அரபி
"மக்கள் எதை போராட்டங்கள் என்கிறார்கள், நான் உண்மையில் இந்த போராட்டங்களை பயங்கரவாத தாக்குதல்கள் என்று அழைப்பேன்” என்கிறார் ஹுமா கான்.
ஹுமா கான் கிரேட்டர் மான்செஸ்டர் நகரின் ஸ்டாக்போர்ட் பகுதியில் வசிக்கிறார். உள்ளூர் பள்ளியில் ஆசிரியராகப் பணிபுரிகிறார்.
பிரிட்டன் நகரங்களில் சமீபத்தில் நடந்த வன்முறைச் சம்பவங்களை அவர் சாதாரணமாக எடுத்து கொண்டு அன்றாட பணிகளை தொடர தீர்மானித்தார். ஆனால் அவரால் முடியவில்லை. அவ்வப்போது மன பதற்றம் அடைந்தார்.
"போராட்டங்களை பார்த்த போது முதலில் அதிர்ச்சியாக இருந்தது. வன்முறையை மக்கள் போராட்டங்கள் என்று சொல்கின்றனர். நான் உண்மையில் அதை பயங்கரவாதத் தாக்குதல்கள் என்று சொல்வேன். சமூக ஊடக வதந்திகளிலிருந்து அது எப்படி பொய்யாக உருவானது என்பது அதிர்ச்சியாக உள்ளது” என்று அவர் பிபிசியிடம் கூறினார்.
அவர் தனது வழக்கமான பணிகளை இப்போதைக்கு மாற்றப்போவதில்லை என்று கூறினாலும், எச்சரிக்கையாக இருக்கப் போவதாகத் தெரிவித்தார்.
"என் மத நம்பிக்கைகளுக்காகவும், என் தோற்றத்துக்காகவும், என் உடைகளுக்காகவும் நான் குறி வைக்கப்படுகிறேன். துன்புறுத்தலுக்கு ஆளாகிறேன்.”
“நான் பயங்கரவாதத்தை பார்த்து பயப்பட மாட்டேன்… ஆனால் ஒவ்வொரு முறையும் நான் என் வீட்டை விட்டு வெளியே செல்லும் போது என் மனதில் அந்த அச்ச உணர்வு இருக்கிறது. எனக்கு ஏதாவது நடந்துவிடுமோ, ஆபத்தில் இருக்கிறேனா என பதற்றமடைகிறேன்" என்று அவர் விவரித்தார்.
பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
பிரிட்டனின் என்ன நடக்கிறது?
ஜூலை 29 அன்று இங்கிலாந்தின் வடமேற்கில் உள்ள சவுத்போர்ட்டில் மூன்று சிறுமிகள் கத்தியால் தாக்கப்பட்டதில் இருந்து பரவலான கலவரம் இங்கிலாந்து மற்றும் வடக்கு அயர்லாந்தில் உள்ள நகரங்களில் பரவியுள்ளது. ஆன்லைனில் தவறான தகவல், தீவிர வலதுசாரிகள் மற்றும் குடியேற்ற எதிர்ப்பு உணர்வு ஆகியவற்றால் வன்முறை தூண்டப்பட்டு அரங்கேறியது.
சவுத்போர்ட் கத்தி குத்து நிகழ்வுக்கு பிறகு, இந்த சம்பவத்தில் குற்றம் செய்தவர் என்று சந்தேகிக்கப்படும் நபர் ஒரு படகில் சட்டவிரோதமாக பிரிட்டனுக்குள் வந்த புகலிடக் கோரிக்கையாளர் என்று சமூக ஊடகங்களில் பொய்யான தகவல் பரவியது. அவர் முஸ்லிம் என்றும் ஆதாரமற்ற வதந்திகள் பரவின.
விரைவில், வன்முறை வெடித்தது. 2011 ல் நடந்த கலவரங்களுக்குப் பிறகு காணப்படாத அளவுக்கு அழிவுக் காட்சிகளை காண முடிந்தது.
பிரிட்டன் முஸ்லிம்கள் என்ன கூறுகிறார்கள்?
வன்முறையால் ஏற்படும் அமைதியின்மை அசாதாரண சூழ்நிலைக்கு வழிவகுக்கும், ஆனால் எல்லா நேரங்களிலும் அது பேரழிவை ஏற்படுத்தக் கூடியது அல்ல.
செவ்வாயன்று , மான்செஸ்டரின் புறநகரில் நகரின் வடமேற்கில், உள்ள சால்ஃபோர்ட் ஷாப்பிங் சென்டருக்கு மதிய வேளையில் சென்றபோது, அது மிகவும் அமைதியாக இருந்தது.
அந்த நாளின் பிற்பகுதியில் போராட்டங்கள் நடைபெறும் என்று ஆன்லைனில் உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் வந்தததை அடுத்து வணிக வளாகங்களை முன்கூட்டியே மூடுமாறு அறிவுறுத்தப்பட்டது.
அந்த பெரிய, காலியான வளாகத்தில் ஒரு சிலரை மட்டுமே காண முடிந்தது. ஒரு சில முகமூடி அணிந்த இளைஞர்களை மட்டுமே போலீசார் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர், அவர்கள் அங்கும் இங்கும் நடந்து கொண்டிருந்தனர், ஆனால் போராட்டம் நடத்தும் அறிகுறி இல்லை.
மான்செஸ்டரின் தெற்குப் பகுதியில் நிலைமை முற்றிலும் மாறுபட்டு இருந்தது.
மோஸ் சைட் (Moss Side) என்னும் பகுதியில் ஆசியா, மத்திய கிழக்கு மற்றும் ஆப்பிரிக்காவிலிருந்து அதிகளவிலான முஸ்லிம் சமூகத்தினர் வசிக்கின்றனர். செவ்வாய்க்கிழமை, உணவகங்கள் மற்றும் கஃபேக்கள் வாடிக்கையாளர்களால் நிரம்பி வழிந்தன.
அப்பகுதியில் வேலை செய்யும் மற்றும் வசிக்கும் பலர் "எந்த பிரச்னையும் இல்லை, பாதுகாப்பாக உணர்கிறோம் " என்று கூறுகிறார்கள். ஆனால் அவர்கள் அங்கு நடக்கும் அடுத்தடுத்த நிகழ்வுகளை கவலையுடன் கண்காணித்து வருகின்றனர்.
"நான் 2018 இல் சிரியாவிலிருந்து இங்கு வந்தேன், நானும் எனது குடும்பமும் இங்கு பாதுகாப்பான இருப்பிடத்தை கண்டடைந்தோம்" என்று மான்செஸ்டரில் தற்போது அரபு புத்தகக் கடையை நடத்தி வரும் ஆலா கூறுகிறார்.
"சமீபத்திய நிகழ்வுகள் நாட்டு மக்களின் எதிர்காலத்திற்கு நல்லதல்ல. தற்போதைக்கு, நான் பெரிதாக யார் கவனத்திலும் விழாமல் அமைதியாக வசித்து வருகிறேன். நான் மீண்டும் ஒரு துன்புறுத்தலை உணர விரும்பவில்லை" என்று அவர் பிபிசியிடம் கூறினார்.
அப்துல் ஹக்கீம் 20 ஆண்டுகளுக்கு முன்பு சோமாலியாவில் நடந்த போரில் தப்பி வந்தவர். தீவிர வலதுசாரி ஆர்வலர்கள் முஸ்லிம் குழுக்களுடன் மோதுவதைக் குறித்து அவர் கவலைப்படுகிறார்.
"இந்த இரண்டு குழுக்கள் சந்தித்தால், அவர்கள் ஒரு கலவரத்தை உருவாக்கலாம், உள்நாட்டுப் போரை உருவாக்கலாம். சோமாலியாவிலிருந்து இந்த மான்செஸ்டருக்கு என்னைத் துரத்தியது போலவே மீண்டும் ஒரு நிகழ்வு நடக்கலாம்"
மசூதிகள், வணிகங்கள் மற்றும் வீடுகளைப் பாதுகாக்க முஸ்லிம் சமூகத்தின் அழைப்பு குறித்தும் அலா வருத்தப்படுகிறார் - "தேவைப்பட்டால் வன்முறையைப் பயன்படுத்துங்கள்” என்னும் அழைப்பு அவரை கவலையில் ஆழ்த்தியுள்ளது.
“இதில் எனக்கு உடன்பாடு இல்லை. முஸ்லிம்களின் பாதுகாப்புக்காக அரசாங்கம் ஏற்கெனவே உறுதியளித்துள்ளது. உள்ளூர் அதிகாரிகள் மற்றும் அரசாங்கத்தின் ஒருங்கிணைப்பில் அனைத்தும் நடக்க வேண்டும்.”
"எங்கள் மசூதிகளைப் பாதுகாக்க எங்களுக்கு உரிமை உள்ளது என்று நான் நினைக்கிறேன், மேலும் நமது நம்பிக்கை சுதந்திரத்திற்கான உரிமையை நாங்கள் பாதுகாக்க வேண்டும், ஆனால் இதை நாமாக செய்தால், நம்மை பயங்கரவாதிகளாக முத்திரை குத்துவார்கள். அதற்கு நாம் வழிவகுக்கக் கூடாது." என்றார்.
இந்த கலவரத்தால் இளைய தலைமுறையினருக்கும் பாதிப்பு உள்ளது என்கிறார் ஹுமா கான்.
“எனது நெருங்கிய உறவுக்கார சிறுவர்களிடம் நடக்கும் நிகழ்வுகளை எப்படி விவரிப்பது என்று தெரியவில்லை. எனக்கு மிகவும் கடினமாக இருப்பது அவர்களுக்கு விவரித்துக் கூறுவதுதான். அவர்கள் 12, 10 மற்றும் 7 ஆகிய வயதில் இருக்கும் சிறுவர்கள். அவர்களிடம் மான்செஸ்டரின் எங்கள் தெருக்களில் நடப்பதற்கு அனைவரும் காரணமல்ல, அனைவரும் தீங்கு விளைவிப்பவர்கள் அல்ல என்று எப்படி உறுதியளிக்க போகிறேன்? இந்த பன்முக கலாச்சார சமூகத்தின் அனைத்து அங்கத்தினரையும் இந்தப் போராட்டம் பிரதிபலிக்கவில்லை” என்றார்.
‘இங்கு இனவெறியை நான் அனுபவித்ததே இல்லை’
சிரியாவைச் சேர்ந்த சயீத், மூன்று ஆண்டுகளுக்கு முன்பு பிரிட்டனுக்கு வந்து, ஐரோப்பாவைச் சுற்றிப் பயணங்களை மேற்கொண்டார்.
"நான் ஐரோப்பா முழுவதும் பயணம் செய்தேன், என்னிடம் ஸ்வீடிஷ் பாஸ்போர்ட் உள்ளது. நான் வேண்டுமென்றே இந்த நாட்டிற்கு [பிரிட்டன்] வந்தேன், ஏனென்றால் அனைத்து தரப்பின் நம்பிக்கைகளும் மதிக்கப்படுகின்றன. கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள், யூதர்கள் - அனைவரும் ஒற்றுமையாக வாழ்கின்றனர்.”
“சமீபத்திய இனவெறி நிகழ்வுகளைப் பற்றி கேள்விப்பட்டபோது நான் மிகவும் அதிர்ச்சியடைந்தேன். நான் இங்கு இனவெறியைக் கண்டதில்லை. இந்த செய்தியைப் பற்றி முதலில் கேள்விப்பட்டபோது நாங்கள் கொஞ்சம் பயந்தோம், இது எங்களுக்கு அசாதாரணமான ஒன்று, ஏனென்றால் நாங்கள் இப்படி நிகழ்வை பார்ப்பது அல்லது கேட்பது இதுவே முதல் முறை."
"நான் மூன்று ஆண்டுகளாக இங்கு வசிக்கிறேன், இங்குள்ள மக்கள் மிகவும் அன்பானவர்கள். அவர்கள் உதவும் பண்பு கொண்டவர்கள். அவர்கள் என் மொழி தடையை உடைக்க உதவுகிறார்கள், ஆனால் நான் செய்திகளில் பார்த்தது உண்மையில் நான் பார்த்ததை விட மிகவும் மோசமாக உள்ளது."
கிரேட்டர் மான்செஸ்டர் முஸ்லிம் பாதுகாப்பு மன்றத்தின் தலைவர் டாக்டர் ஜவாத் அமீன் கூறுகையில், "கடந்த இருபது ஆண்டுகளாக சில வன்முறை சம்பவங்களை நாங்கள் பார்த்திருக்கிறோம்.
"சவுத்போர்ட்டில் இந்த குறிப்பிட்ட சம்பவம் பற்றிய கவலை என்னவென்றால், ஆன்லைனில் வெறுப்பை பரப்ப விரும்புபவர்களால் சமூக ஊடகங்களில் பரப்பப்படும் தவறான தகவல்களால் இந்த கலவரம் தூண்டப்பட்டது என்பது தான்" என்று அவர் பிபிசியிடம் கூறினார்.
"தாக்குதல் நடத்தியவர் முஸ்லிமாக இருந்தாலும் இல்லாவிட்டாலும், நாம் பார்த்த அந்த வன்முறைக்கு அது அடிப்படையாக இருக்கக்கூடாது." என்றார்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)