You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
திரைப்படங்களில் ஒருவரின் கைபேசி எண்ணை அனுமதியின்றி காட்சிப்படுத்துவதால் ஏற்படும் சிக்கல்கள் என்ன?
- எழுதியவர், சிராஜ்
- பதவி, பிபிசி தமிழ்
நடிகர் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் தயாரிப்பில், ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில், சிவகார்த்திகேயன் நடிப்பில், கடந்த அக்டோபர் 31-ம் தேதி தீபாவளியை முன்னிட்டு வெளியான திரைப்படம் ‘அமரன்’. மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையைத் தழுவி எடுக்கப்பட்ட இந்த திரைப்படம், ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.
இப்படத்தின் ஒரு காட்சியில், சாய் பல்லவியின் (இந்து ரெபேக்கா வர்கீஸ் கதாபாத்திரத்தின்) கைபேசி எண்ணாக தனது கைபேசி எண் திரையில் காட்டப்படுவதாக, சென்னையைச் சேர்ந்த ஒரு இளைஞர் புகார் எழுப்பியிருப்பதாக சமீபத்தில் ‘தி இந்து’ நாளிதழில் செய்தி வெளியானது.
அவ்வாறு தனது கைபேசி எண் காட்டப்படுவதால், பல தேவையில்லாத அழைப்புகள் தனக்கு வருவதாகவும், அதனால் பெரும் மனஉளைச்சல் ஏற்பட்டதாகவும் அந்த இளைஞர் கூறியதாக அச்செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்நிலையில், ‘அமரன்’ திரைப்படத்தின் தயாரிப்பு நிறுவனத்திடம் ஒரு கோடியே 10 லட்ச ரூபாய் இழப்பீடு கேட்டு அந்த இளைஞர் நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக நவம்பர் 21 அன்று ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. தன்னுடைய கைபேசி எண்ணை அனுமதியின்றி திரைப்படத்தில் பயன்படுத்தியதாக ஒருவர் நஷ்ட ஈடு கேட்பது, நாம் அதிகம் கேள்விப்படாத ஒன்று.
இந்த விவகாரம் குறித்து ‘அமரன்’ படக்குழு கூறுவது என்ன? இவ்வாறு ஒருவரின் கைபேசி எண்ணை அனுமதியின்றி திரைப்படத்தில் பயன்படுத்துவது சட்டப்படி குற்றமா?
- ‘அமரனாக’ துப்பாக்கி பிடித்த சிவகார்த்திகேயன் வெற்றி பெற்றாரா? ஊடகங்கள், ரசிகர்கள் கூறுவது என்ன?
- 'அமரன்' படம் வெளியாகும் வேளையில் சாய் பல்லவிக்கு எதிராக வைரலாகும் ஹேஷ்டேக் - என்ன காரணம்?
- 'சமூக ஊடகங்களில் மற்றவர் பெயரில் கணக்கு வைத்திருப்பது குற்றம்' - வாட்ஸ்ஆப்பில் ஃபார்வர்டு செய்வதும் குற்றமாக வாய்ப்பு
- சிறார்கள் சமூக வலைதளங்கள் பயன்படுத்தத் தடை விதிக்க ஆஸ்திரேலிய அரசு திட்டம் - சாத்தியமா?
புகாரின் பின்னணி என்ன?
கடந்த மாதம் வெளியான ‘அமரன்’ திரைப்படத்தில், ‘இந்து ரெபேக்கா வர்கீஸ்’ எனும் கதாபாத்திரத்தில் நடித்துள்ள சாய் பல்லவி தனது கைபேசி எண்ணை ஒரு காகிதத்தில் எழுதி, அதை ‘முகுந்த் வரதராஜன்’ கதாபாத்திரத்தில் நடித்த சிவகார்த்திகேயனிடம் கொடுப்பது போல ஒரு காட்சி உள்ளது. காகிதத்தில் எழுதப்பட்டிருக்கும் அந்த கைபேசி எண், சில நொடிகள் திரையில் காட்டப்படுகிறது.
இந்த காட்சியைக் குறிப்பிட்டு, அவ்வாறு காட்டப்படும் அந்த எண் தன்னுடையது என சென்னையைச் சேர்ந்த கல்லூரி மாணவரான வி.வி. வாகீசன் புகார் தெரிவித்துள்ளார் என ‘தி இந்து நாளிதழ்’ கடந்த நவம்பர் 7ஆம் தேதி செய்தி வெளியிட்டது.
தீபாவளி தினத்தன்றே வாகீசனுக்கு அளவுக்கு அதிகமான அழைப்புகள் வரத்தொடங்கியுள்ளது. முதலில் சில அழைப்புகளை எடுத்துப் பேசிய போது, ‘அமரன்’ குறித்தும், சாய் பல்லவி குறித்தும் அவரிடம் கேட்கப்பட்டது, அவருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
பின்னர் அடுத்தடுத்த அழைப்புகளால், போனை ‘சைலன்ட்’ மோடில் போட்டுவிட்டு, அடுத்தநாள் காலை எடுத்துப் பார்த்தபோது நூற்றுக்கும் மேற்பட்ட அழைப்புகள் வந்திருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.
அழைப்புகள் வருவது தொடர்ந்ததால், படத்தின் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி மற்றும் கதாநாயகன் சிவகார்த்திகேயனுக்கு சமூக ஊடகங்கள் மூலம் இதுகுறித்து தெரிவித்துள்ளார். ஆனால், அவர்களிடமிருந்து வாகீசனுக்கு பதில் கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது. தொடர் அழைப்புகளால் படிப்பில் கவனம் செலுத்த முடியாமல், தூங்க முடியாமல் அவர் தவித்ததாகக் கூறப்படுகிறது.
இரண்டு வருடங்களாக தான் உபயோகித்து வரும் கைபேசி எண் என்பதாலும், வங்கிக் கணக்குகள், ஆதார் ஆகியவற்றுடன் அந்த எண் இணைக்கப்பட்டிருப்பதாலும் அதை அவர் கைவிடமுடியாத சூழல் இருப்பதாகவும், அதனால் அவர் தற்காலிகமாக கைபேசியை அணைத்து வைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், நவம்பர் 21 அன்று தனது வழக்கறிஞர் மூலமாக அமரன் திரைப்படத்தின் தயாரிப்பாளர் மற்றும் இயக்குநருக்கு, ‘தனது கைபேசி எண்ணை படத்தில் இருந்து நீக்க வேண்டும் என்றும், தான் அடைந்த மன உளைச்சலுக்கு ஒரு கோடியே 10 லட்ச ரூபாய் நஷ்ட ஈடாக அளிக்க வேண்டுமென்றும்’ நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.
இயக்குநர் வசந்தபாலனின் அனுபவம்
இந்த செய்தி வெளியானவுடன், இதுகுறித்த பதிவுகளை சமூக ஊடகங்களில் காண முடிந்தது. வெயில், அங்காடித் தெரு, காவியத்தலைவன் ஆகிய திரைப்படங்களின் இயக்குநர் வசந்தபாலன், ‘வாகீசன் குறித்து செய்தியைப்’ பகிர்ந்து தனக்கும் இதுபோன்ற ஒரு அனுபவம் நேர்ந்ததாக ஒரு பதிவை வெளியிட்டிருந்தார்.
லிங்குசாமி இயக்கத்தில் 2005ஆம் ஆண்டு வெளியான 'சண்டக்கோழி' திரைப்படத்தின், வெளியீட்டுக்கு முந்தைய நாள் சிறப்புக் காட்சியையும் முதல் நாள் முதல் காட்சியையும் பார்த்த வசந்தபாலனின் நண்பர்கள் 'சண்டக்கோழி' திரைப்படத்தைப் பாராட்டி அவருக்கு குறுஞ்செய்திகள் அனுப்பியுள்ளனர்.
அதைப் பார்த்துவிட்டு, இயக்குநர் லிங்குசாமிக்கு அதைப் பகிர்ந்து, 'சண்டக்கோழி' திரைப்படத்திற்கு தனது வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளார் வசந்தபாலன்.
“அதற்கு அடுத்த நாள், காலை 7 மணியிலிருந்தே புதிய எண்களிலிருந்து, ‘நீங்கள் தான் நடிகர் விஷாலா? இயக்குநர் லிங்குசாமியா?’ போன்ற கேள்விகளுடன் இடைவிடாத அழைப்புகள் வந்தவண்ணம் இருந்தன. என் வேலையை செய்ய முடியாத அளவுக்கு இடைவிடாத அழைப்புகள். ‘ஏன் என் எண்ணிற்கு எல்லாரும் அழைக்கிறீர்கள்' என்று கோபத்தில் ஒரு அழைப்பாளரிடம் கத்தி விட்டேன்,” என்று அந்தப் பதிவில் குறிப்பிட்டுள்ளார் வசந்தபாலன்.
எதிர்முனையில் பதிலளித்த அந்த நபர், ஒரு செய்தித்தாள் விளம்பரத்தில் வசந்தபாலனின் எண் உள்ளது என்று கூறியுள்ளார்.
“அந்த செய்தித்தாளை வாங்கிப் பார்த்தால் 'சண்டக்கோழி' திரைப்பட விளம்பரத்தில் நான் லிங்குசாமிக்கு அனுப்பிய குறுஞ்செய்தியைப் பதிவிட்டு கீழே என் கைபேசி எண்ணை போட்டிருந்தார்கள். இதுகுறித்து லிங்குசாமியிடம் கேட்டபோது, படத்தைப் பற்றிய பாராட்டுகளை இப்படி புதிய விளம்பர உத்தி வாயிலாக விளம்பரம் செய்ய முயன்றதை அறிந்துகொண்டேன்” என்று தெரிவித்துள்ளார் வசந்தபாலன்.
அத்தகைய கைபேசி அழைப்புகள் ஒரு மாதம் வரை தனக்குத் தொடர்ந்து வந்ததாகவும், அந்த எண்ணை மாற்றிய பிறகு தான் அந்தப் பிரச்னையிலிருந்து விடுபட்டதாகவும் வசந்தபாலன் தெரிவித்துள்ளார்.
திரைப்படங்களில் அனுமதியின்றி ஒருவரின் தொடர்பு எண்ணை காட்டுவது சரியா?
“நிச்சயம் தவறு தான். ஒரு இளைஞனுக்கு ஒரு நாளுக்கு நூற்றுக்கும் மேற்பட்ட சம்மந்தமில்லாத அழைப்புகள் வருகிறது என்றால், அது எவ்வளவு மன உளைச்சலை ஏற்படுத்தியிருக்கும். அதுமட்டுமல்லாது, தகவல் தொழில்நுட்பச் சட்டம் 2000-இன் படியும் இது தவறுதான் (Information Technology Act 2000)” என்று கூறுகிறார், சைபர் சட்ட வல்லுநரும் சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞருமான வி.பாலு.
தகவல் தொழில்நுட்பச் சட்டம் 2000-இன் படி, ஒருவரின் தனிப்பட்ட தகவலை அனுமதியின்றி பொதுவெளியில் வெளியிடுவது குற்றம் என்கிறார் வழக்கறிஞர் பாலு.
“அவருக்கு பல அழைப்புகள் வருகிறதென்றால், ‘ட்ரூகாலர்’ போன்ற ஒருவரின் கைபேசி எண்ணை வைத்து அவரது பெயரை அறிந்துகொள்ளும் செயலியில், அந்த இளைஞனின் எண் வேறு பெயரில், அதாவது அந்த நடிகையின் பெயரிலோ அல்லது அந்தக் கதாபாத்திரத்தின் பெயரிலோ சேமிக்கப்பட்டிருக்கும். அதுவே பெரிய சிக்கலாக அவருக்கு இருக்கும்” என்று கூறுகிறார்.
ஆனால், படக்குழு இதை வேண்டுமென்றே செய்திருக்காது என்று கூறும் வழக்கறிஞர் பாலு, “அவசரத்திற்கு ஏதோ பத்து எண்களை எழுதும்போது, இவரது எண் தற்செயலாக வந்திருக்க தான் வாய்ப்புகள் அதிகம். ஆனால், அதேசமயம் அந்த இளைஞனின் மன உளைச்சலை என்னால் நினைத்துப் பார்க்க முடிகிறது. எனவே அவர் நோட்டீஸ் அனுப்பியதில் தவறில்லை” என்கிறார்.
இந்த நோட்டீஸுக்கு உரிய பதில் வராவிட்டால், நஷ்ட ஈடு கேட்டு நீதிமன்றத்தில் வழக்குத் தொடுப்பதில் இருக்கும் சிக்கலைச் சுட்டிக்காட்டுகிறார் வழக்கறிஞர் பாலு. “இதுபோன்ற நஷ்ட ஈடு வழக்குகளில், எவ்வளவு நஷ்ட ஈடு கேட்கிறோமோ அதற்கு ஏற்றார் போல முத்திரைக் கட்டணம் (Stamp Duty) செலுத்த வேண்டும். அதனால் தான், பல நஷ்ட ஈடு வழக்குகள் நோட்டீஸ் அனுப்புவதோடு நின்றுவிடுகின்றன” என்கிறார்.
டிஜிட்டல் தனிநபர் தரவு பாதுகாப்பு சட்டம் 2023-இன் (டிபிடிபி) படி, ஒருவரின் தனிப்பட்ட தகவல்களை பொதுவெளியில் கையாள்வது குறித்து இன்னும் கடுமையான விதிமுறைகள் கொண்டுவரப்படவுள்ளதாக கூறும் வழக்கறிஞர் பாலு,
“பல லட்சம் மக்கள் பார்க்கக்கூடிய சினிமா போன்ற ஒரு மிகப்பெரிய பொதுத்தளத்தில், அதுவும் ஒரு முன்னணி நடிகரின் திரைப்படத்தில், ஏதோ 10 எண்களை எழுதிவிட்டு, அப்படியே காட்சிப்படுத்திவிட்டார்கள். அதை யாரேனும் பயன்படுத்துகிறார்களா என்பதை விசாரித்திருக்கலாம். இனி இதுபோல வேறு யாருக்கும் நடக்காமல் இருக்க இந்த சம்பவம் உதவலாம்” என்று கூறினார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)