You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
'அமரன்' படம் வெளியாகும் வேளையில் சாய் பல்லவிக்கு எதிராக வைரலாகும் ஹேஷ்டேக் - என்ன காரணம்?
- எழுதியவர், போடா நவீன்
- பதவி, பிபிசி செய்தியாளர்
நடிகை சாய் பல்லவி தற்போது ஒரு சமூக ஊடகச் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
சில சமூக ஊடக பயனர்கள் வலைதளங்களில் ‘சாய் பல்லவியை புறக்கணியுங்கள்' (Boycott Sai Pallavi) என்ற ஹேஷ்டேக்கை ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.
“இந்திய ராணுவத்திடம் சாய் பல்லவி மன்னிப்புக் கோர வேண்டும்,” என்று எக்ஸ் தளத்தில் தன்மய் குல்கர்னி என்ற பயனர் பதிவிட்டுள்ளார்.
“சாய் பல்லவி கூறியதை பலர் சரியாக புரிந்துகொள்ளவில்லை,” என்று எக்ஸ் தளத்தில் பாடகி சின்மயி ஸ்ரீபாதா பதிவிட்டுள்ளார்.
சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிப்பில் அமரன் திரைப்படம் வரும் 31-ஆம் தேதி தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளது. இந்தப் படம் இந்திய ராணுவத்தின் மேஜர் முகுந்த் வரதராஜன் வாழ்க்கை வரலாற்றை சார்ந்து திரையாக்கப்பட்டுள்ளது.
ஆனால் இத்திரைப்படம் வெளியாகும் சமயத்தில் நடிகை சாய் பல்லவியைக் குறிப்பிட்டு, ‘Boycott Sai Pallavi' என்று சமூக ஊடக பயனர்கள் பதிவிட்டு வருகின்றனர்.
நடிகை சாய் பல்லவி ஏற்கனவே கொடுத்த நேர்காணலில் இந்திய ராணுவத்தைப் பற்றி ஒரு கருத்து தெரிவித்திருந்தார், அதற்காக அவர் தற்போது விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளார்.
நடிகை சாய் பல்லவி என்ன பேசினார்? அது ஏன் இப்போது சர்ச்சையாகி இருக்கிறது?
என்ன சர்ச்சை?
"பாகிஸ்தான் மக்கள் இந்திய ராணுவத்தினரைத் தீவிரவாதிகளாகப் பார்க்கிறார்கள். அதேசமயம் இந்தியர்கள் பாகிஸ்தான் ராணுவத்தை தீவிரவாதிகளாகப் பார்க்கிறார்கள்,” என்று முன்பு நடந்த ஒரு நேர்காணலில் நடிகை சாய்பல்லவி கூறியது இப்போது வைரலாகப் பரவிவருகிறது.
“சாய் பல்லவி பேசியதைப் பார்க்கும்போது, அவர் (இஸ்லாமிய மதபோதகர்) ஜாகிர் நாயக்கால் மிகவும் ஈர்க்கப்பட்டுள்ளார் என்பது போலத் தெரிகிறது. இவருடைய படங்களைப் பார்க்காதீர்கள்," என்று ‘மிஸ்டர் சின்ஹா’ என்ற பயனர் ஒருவர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
"காஷ்மீரில் பண்டிட்களுக்கு எதிரான வன்முறைக்கும், கோவிட் பெருந்தொற்று காலத்தில் ஒரு பசுவை வாகனத்தில ஏற்றி கொண்டுசென்றதற்காக ஒரு முஸ்லிமுக்கு நடந்த வன்முறைக்கும் என்ன வித்தியாசம்,” என்றும் சாய் பல்லவி அதே நேர்காணலின் மற்றொரு பகுதியில் கூறியுள்ளார்.
ஆனால் சில சமூக வலைதளப் பயனர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
“பசுக்களை கடத்துவதும், காஷ்மீரில் உள்ள பண்டிட்களின் மீது நடக்கும் தாக்குதலும் ஒன்று என்று சொல்பவர் தான், பாலிவுடில் சீதை கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார்,” என்று ‘பேராசிரியர் சாஹப்’ என்பவர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
“சாய் பல்லவி இந்து மதத்திற்கும் இந்திய ராணுவத்திற்கும் எதிரானவர். அவரது படங்களைப் புறக்கணிப்போம்," என்று ‘ஹிந்து IT செல்’ என்னும் கணக்கு எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளது.
பலரும் சமூக வலைதளத்தில் சாய் பல்லவிக்கு எதிராகப் பல விமர்சனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.
நேர்காணலில் சாய் பல்லவி என்ன பேசினார்?
இதுகுறித்து பிபிசி தெலுங்கு சேவையிடம் பேசிய மூத்த திரைப்பட பத்திரிக்கையாளர் பிரபு, “சமூக ஊடகங்களின் காலமான இன்று, முப்பது நொடி, அல்லது ஒரு நிமிடக் காணொளியை மட்டும் பார்த்துவிட்டு ஒரு முடிவுக்கு வரக்கூடாது. அவர் பேசிய முழு காணொளியையும் பார்த்த பின்பு தான் நாம் ஒரு முடிவுக்கு வரவேண்டும்,” என்று கூறினார்.
அந்த நேர்காணலின் பின்னணியை ஆராய்ந்து பார்ப்போம்.
ராணா டகுபதி மற்றும் சாய் பல்லவி நடிப்பில் ‘விராட பர்வம்' திரைப்படம் 2022-ஆம் ஆண்டு ஜூன் 17-ஆம் தேதி அன்று வெளியானது. இந்தத் திரைப்படம் நக்சல் இயக்கத்தைக் கதைக்களமாகக் கொண்டது.
இந்தத் திரைப்படத்தின் விளம்பரத்திற்காக ‘க்ரேட் ஆந்திரா' என்ற யூட்யூப் சேனலுக்கு நடிகை சாய் பல்லவி நேர்காணல் ஒன்றை கொடுத்தார்.
இந்த நேர்காணல் 2022-ஆம் ஆண்டு ஜூன் 12-ஆம் தேதி அன்று யூட்யூபில் வெளியானது.
அதில் கீழ்கண்ட உரையாடல் இடம்பெற்றிருந்தது:
நெறியாளர்: இந்தப் படத்தில் நீங்கள் நக்சல் இயக்கத்தினரின் உடை அணிந்திருந்தீர்கள். உங்களுக்கு அவர்கள் மீது ஏதேனும் இரக்கம் உள்ளதா?
சாய் பல்லவி: வன்முறை என்றுமே ஒரு சிறந்த வழி இல்லை என்று நான் நம்புகிறேன். நக்சலிசம் சரியா தவறா என்று சொல்லும் நிலையில் நான் இல்லை. பாகிஸ்தான் மக்கள் நம் ராணுவ அதிகாரிகளை தீவிரவாதிகள் என்று நினைக்கிறார்கள். ஏனென்றால் நம்மால் அவர்களுக்கு ஆபத்து உள்ளது. அதேபோல நாம் அவர்களைத் தீவிரவாதிகளாகப் பார்க்கிறோம். நமது பார்க்கும் கோணத்திற்கேற்ப நமது கண்ணோட்டம் மாறுபடும். வன்முறை சரியா? தவறா? என்பதைச் சொல்ல முடியாது.
நெறியாளர்: இடதுசாரி இயக்கங்களைப் பார்த்துள்ளீர்களா?
சாய் பல்லவி: நான் இடதுசாரி-வலதுசாரி என்று எல்லாவற்றையும் பார்த்துள்ளேன். நான் நடுநிலையான நபர். நான் வலதுசாரி குடும்பத்திலோ அல்லது இடதுசாரி குடும்பத்திலோ பிறந்திருந்தால் நான் ஒரு சார்புடையவராக இருந்திருப்பேன். ஆனால் என் வீட்டில் பாதிக்கப்பட்டவர்களின் பக்கம் உறுதுணையாக நிற்கவேண்டும் என்று சொல்லி வளர்த்தார்கள்.
இடதுசாரி அல்லது வலதுசாரி... இவர்களில் யார் சரி என்று நாம் சொல்ல முடியாது. உதாரணமாக ‘காஷ்மீர் ஃபைல்ஸ்' திரைப்படத்தில் அங்குள்ள பண்டிட்களை எப்படி கொலை செய்தார்கள் என்று பார்த்தோம். அதுவே மதக்கலவரம் என்றால், ஒரு பசுமாட்டை வாகனத்தில் ஏற்றி சென்ற முஸ்லிம் ஓட்டுனரை தாக்கிவிட்டு 'ஜெய் ஸ்ரீ ராம்' என்று சொல்வது என்ன? இதற்கும் அதற்கும் என்ன வித்தியாசம்?
வலியவர்கள் தங்களை விட எளியவர்களைத் தாக்குவது தவறு. தவறைச் சுட்டிக்காட்டும் பக்கத்தில் நிற்கவேண்டும். நல்ல மனிதர்களாக இருப்பவர்கள் எப்போதும் நடுநிலையோடு இருப்பார்கள்.
பாடகி சின்மயி என்ன சொன்னார்?
இந்தச் சர்ச்சை குறித்து எக்ஸ் தளத்தில் கருத்தினைப் பதிவிட்டுருக்கும் பாடகர் சின்மயி ஸ்ரீபாதா, “சாய் பல்லவி சொன்னதைப் பலர் சரியாகப் புரிந்துகொள்ளவில்லை என்று நினைக்கிறேன். கடந்த 10 ஆண்டுகளில் மக்களின் பகுத்தறிவுச் சிந்தனை திட்டமிட்டு அழிக்கப்பட்டுள்ளது. இதுபோல யாரேனும் ஒருவர் கேள்வி எழுப்பினால் அவர்களை ‘நக்சல்’ அல்லது ‘தேச விரோதி’ என்று அழைக்க ஆரம்பித்துவிடுவார்கள்,” என்று கூறியிருக்கிறார்.
இந்தப் பிரச்னையை இரண்டு கோணங்களில் இருந்தும் பார்க்கவேண்டும் என்று மூத்த திரைப்படப் பத்திரிக்கையாளர் பிரபு, பிபிசி தெலுங்கிடம் கூறினார்.
“பிரபலங்களை மக்கள் மிகவும் உன்னிப்பாகக் கவனிக்கிறார்கள். அதனால் அவர்கள் அரசியல் தொடர்பாகவோ, மத உணர்வுகள் பற்றியோ பேசும்போது பல முறை சிந்தித்துதான் பேச வேண்டும். மற்ற விஷயங்களைப் பற்றி பேசுவது போல இவற்றைக் கையாளக்கூடாது," என்கிறார் பிரபு.
“சாய் பல்லவி, சீதை கதாபாத்திரத்தில் நடிக்கக் கூடாது என்று சொல்வது தவறு. ஒரு நடிகர் எந்தக் கதாபாத்திரத்தில் வேண்டுமானாலும் நடிக்கலாம். ஒருவருடைய தனிப்பட்டக் கருத்துகளை வைத்துக்கொண்டு இவர் எந்தெந்தக் கதாபாத்திரத்தில் நடிக்கலாம், நடிக்கக்கூடாது என்று நாம் சொல்லக்கூடாது,” என்றும் பிரபு கூறினார்.
“சாய் பல்லவி கூறியதில் என்ன தவறு உள்ளது? இந்த விமர்சனங்கள் முற்றிலும் அடிப்படையற்றவை. உணர்வுகள், கலாசாரங்கள் என்ற பெயரில் நாளுக்கு நாள் தாக்குதல்கள் அதிகரித்துக்கொண்டே உள்ளன.
இதுகுறித்து பிபிசி தெலுங்கு சேவையிடம் பேசிய சமூக ஆர்வலர் சஜாயா, திரைத்துறை மட்டுமல்லாமல் அனைத்து துறைகளிலுள்ள பெண்களுக்கும் இதுபோல கேலி செய்யப்படுவது அதிகரித்துவருகிறது,, என்றார். "அரசாங்கம் முன்வந்து இதுகுறித்து நடவடிக்கை எடுக்காதது மிகவும் வருத்தமளிக்கிறது,” என்றார் சஜாயா.
சாய் பல்லவி பதில் என்ன?
இந்தச் சர்ச்சை குறித்து இதுவரை சாய் பல்லவி எந்தவொரு பதிலும் கூறவில்லை.
மறுபுறம், கடந்த ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 27) டெல்லியிலுள்ள தேசிய போர் நினைவுச்சின்னத்திற்கு சென்ற நடிகை சாய் பல்லவி மறைந்த ராணுவ வீரர்களுக்கு மரியாதை செலுத்தினார்.
இதுகுறித்து, “நமக்காக உயிர்த்தியாகம் செய்த ஆயிரக்கணக்கான ராணுவ வீரர்களின் நினைவாக இங்கு சின்னங்கள் வைக்கப்பட்டுள்ளன. மேஜர் முகுந்த் வரதராஜன் மற்றும் சிப்பாய் விக்ரம் சிங் ஆகியோருக்கு அஞ்சலி செலுத்தும்போது மிகவும் உணர்ச்சிவசமானேன்,” என்று நடிகை சாய்பல்லவி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)