ப்ளூ ஸ்கை: ஈலோன் மஸ்கின் எக்ஸ் தளத்துடன் போட்டி போட முடியுமா? இதை உருவாக்கியது யார்?

    • எழுதியவர், டாம் கெர்கன்
    • பதவி, தொழில்நுட்ப செய்தியாளர்

சமீபத்தில் உங்கள் சமூக ஊடக பக்கங்களில் “ப்ளூ ஸ்கை” என்ற வார்த்தையைப் பார்த்திருப்பீர்கள். அதைப் பற்றி அப்படி என்ன விவாதிக்கப்படுகிறது என்று நீங்கள் சிந்தித்திருக்கலாம்.

ப்ளூ ஸ்கை என்பது ஈலோன் மஸ்க்கின் எக்ஸ் தளத்திற்கு மாற்றான ஒரு சமூக ஊடக செயலி. மேலும் இதன் நிறம் மற்றும் லோகோ எக்ஸ் தளத்தை ஒத்திருக்கும்.

ப்ளூ ஸ்கை செயலியின் பயன்பாடு அதிகரித்து வருகிறது. தற்போது நாளொன்றுக்குச் சுமார் 10 லட்சம் பயனாளர்கள் இதில் இணைகிறார்கள்.

இந்தக் கட்டுரையை எழுதும்போது இதில் 1.67 கோடி பயனர்கள் இருந்தார்கள். ஆனால் நீங்கள் இதைப் படிக்கும்போது இந்த எண்ணிக்கை அதிகரித்து இருக்கும்.

இந்த ப்ளூ ஸ்கை சமூக ஊடக செயலியில் என்ன இருக்கிறது? இதில், ஏன் அதிக மக்கள் இணைகிறார்கள்?

ப்ளூ ஸ்கை என்றால் என்ன?

ப்ளூ ஸ்கை தன்னை "ஒரு சமூக ஊடகம் எப்படி இருக்க வேண்டுமோ அப்படிப்பட்ட ஓர் ஊடகம்" என்று விவரித்துக் கொள்கிறது. இருப்பினும், அது மற்ற சமூக ஊடக தளங்களைப் போலவே இருக்கிறது.

ப்ளூ ஸ்கை பக்கத்தின் இடது புறத்தில் உங்களுக்குத் தேவையான முகப்பு பக்கம்(home page), தேடல்(search), அறிவுப்புகள்(notifications) எனப் பல்வேறு சேவைகள் இருக்கும்.

இந்த ஊடகத்தில் மக்கள் தங்கள் கருத்துகளை, புகைப்படங்களை, காணொளிகளைப் பதிவிடலாம், மீள்பதிவு செய்யலாம், தங்களுக்குப் பிடித்த பதிவுகளில் கமென்ட் மற்றும் லைக் செய்யலாம்.

எளிமையாகச் சொல்ல வேண்டுமானால், எக்ஸ் தளம் முன்னாள் டிவிட்டர் என அறியப்பட்டபோது இருந்ததைப் போலவே இது காட்சியளிக்கும்.

ப்ளு ஸ்கையின் முக்கிய வேறுபாடே இதுவொரு மையப்படுத்தபடாத (decentralized) ஊடகம். சிக்கலான இந்த வார்த்தையின் எளிமையான அர்த்தம் என்னவென்றால், இதன் பயனர்கள் தங்களது தரவுகளை அந்த நிறுவனம் சேமித்து வைப்பதைக் கடந்து, தங்களுக்கான தனிப்பட்ட சர்வர்களிலும் சேமித்து வைக்கலாம்.

அதாவது, ப்ளூ ஸ்கையின் பெயருடன் கூடிய தனிப்பட்ட கணக்கு கொண்டிருப்பதைவிட, பயனர்கள் (விருப்பம் இருந்தால்) அவர்களே நிர்வகிக்கக் கூடிய வகையில் அவர்களின் தனிப்பட்ட, சொந்தக் கணக்குகளை உருவாக்கிக் கொள்ளலாம்.

பெரும்பாலான பயனர்கள் இதைச் செய்ய மாட்டார்கள் எனக் குறிப்பிடுவது மிகையல்ல. புதிய பயனர்கள் பெரும்பாலும் ".bsky.social" என்ற வார்த்தை தங்களின் பயனர் பெயருக்குப் பின்னால் இருப்பதையே விரும்புவர்.

ப்ளூ ஸ்கை செயலியை உருவாக்கியது யார்?

ப்ளூ ஸ்கை செயலியின் தோற்றம் பலவும் எக்ஸ் தளத்தைப் போல் உள்ளதாக நீங்கள் நினைக்கிறீர்கள் என்றால், அதற்கான காரணம் உங்களை வியப்பில் ஆழ்த்தாது. டிவிட்டரின் முன்னாள் தலைவரான ஜாக் டோர்சிதான், இதை உருவாக்கியவர்.

ஒரு தனி நபராலோ, ஒரு நிறுவனத்தாலோ சொந்தம் கொண்டாட முடியாத வகையில், ப்ளூ ஸ்கையை டிவிட்டரின் பரவலாக்கப்பட்ட பதிப்பாக உருவாக்க வேண்டும் என்று அவர் முன்பு ஒருமுறை கூறியிருந்தார்.

ஆனால் இப்போது, ப்ளூ ஸ்கையை இயக்கும் குழுவில் டோர்சி இல்லை. கடந்த மே 2024இல் அவர் இந்தக் குழுவில் இருந்து விலகினார். அவர் தனது கணக்கை முழுவதுமாக செப்டெம்பர் மாதமே நீக்கிவிட்டார்.

இது தற்போது அமெரிக்காவில் பொது ஆதாய நிறுவனமாக, ஜே கிராபரை தலைமை செயல் அதிகாரியாகக் கொண்டு செயல்படுகிறது. இவர்தான் இந்த நிறுவனத்தின் பெரும்பாலான பங்குகளை வைத்துள்ளார்.

பொதுமக்கள் ஏன் ப்ளூ ஸ்கை மீது ஆர்வம் காட்டுகின்றனர்?

கடந்த 2019ஆம் ஆண்டு முதலே ப்ளூ ஸ்கை புழக்கத்தில் இருந்தது. ஆனால் கடந்த பிப்ரவரி வரை, அழைப்பு விடுக்கப்பட்டால் மட்டுமே இதில் இணைய முடியும்.

பொது மக்களின் சேவைக்காக இது அறிமுகப்படுத்தப்படுவதற்கு முன், டெவலப்பர்கள் இதைப் பலப்படுத்துவது, சிக்கல்களைக் களைவது போன்ற வேலைகளைச் செய்தனர்.

இந்தத் திட்டம் ஓரளவுக்கு வேலை செய்துள்ளது. ஆனால், நவம்பர் மாதத்தில் இருந்து அதிக அளவிலான பயனர்கள் இந்த செயலியில் இணைந்து வருவதால் இதில் சில தொழில்நுட்பக் கோளாறுகளும் ஏற்படுகின்றன.

அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றதும், ப்ளூ ஸ்கை தளத்தில் அதிக மக்கள் இணைவதும் வெறும் தற்செயலாக நடப்பது அல்ல.

டிரம்பின் தேர்தல் பிரசாரத்தில் அவருக்குப் பக்கபலமாக இருந்தவர் ஈலோன் மஸ்க். இந்த ஆட்சியில் பெரிய அரசாங்கப் பொறுப்பிலும் மஸ்க் இடம் பெறவுள்ளார். தவிர்க்க முடியாதபடி, இது அரசியல் பிளவிற்கு வழிவகை செய்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பலர் எக்ஸ் தளத்தை விட்டு வெளியேறி வருகின்றனர்.

ஆனால், சிலர் இதற்கு வேறு சில காரணங்களையும் குறிப்பிடுகின்றனர். உதாரணமாக கார்டியன் இணையதளம் எக்ஸ் தளத்தை "ஒரு நச்சு ஊடக தளம்" என விமர்சித்து அதில் பதிவிடுவதை நிறுத்த முடிவு செய்துள்ளது போன்றவற்றைக் கூறுகின்றனர்.

அதேவேளையில், ப்ளூ ஸ்கை செயலி தொடர்ந்து உலக அளவில் அதிகமாகப் பதிவிறக்கம் செய்யப்பட்டு வருகிறது. கடந்த வியாழனன்று ஐரோப்பாவில் ஆப்பிள் ஆப் ஸ்டோரில் அதிகம் தரவிறக்கப்பட்ட இலவச செயலியாக இது இருந்தது.

பாப் பாடகர் லிசோ முதல் டாஸ்க்மாஸ்டரின் கிரெக் டேவிஸ் வரை பல பிரபலங்கள் ப்ளூ ஸ்கை செயலியில் இணைவதாகவும் எக்ஸ் தளத்தின் பயன்பாட்டைக் குறைப்பதாகவும் அல்லது சில காரணங்களுக்காக எக்ஸ் தளத்தில் இருந்து முழுவதுமாக வெளியேறுவதாகவும் அறிவித்துள்ளனர்.

ப்ளூ ஸ்கையின் வளர்ச்சி குறிப்பிடத்தக்கதாக இருந்தாலும், அதன் போட்டியாளரான எக்ஸ் தளத்தை எதிர்கொள்ளும் அளவுக்கு வளர இன்னும் நீண்ட காலத்திற்கு மக்கள் பயன்பாட்டில் நிலைத்திருக்க வேண்டும்.

எக்ஸ் தளம், தனது பயனர்களின் எண்ணிக்கையை வெளிப்படையாகச் சொல்லவில்லை என்றாலும் அது பல கோடிக்கணக்கில் இருக்கும் என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது. ஒரு முறை ஈலோன் மஸ்க் எக்ஸ் தளத்தை நாளொன்றுக்கு 250 மில்லியன் வாடிக்கையாளர்கள் பயன்படுத்துகிறார்கள் என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

ப்ளூ ஸ்கை தளத்திற்கு எங்கிருந்து வருமானம் வருகிறது?

உண்மையில், இதுவொரு மில்லியன் டாலர் கேள்வி. தொடக்கத்தில் ப்ளூ ஸ்கை நிறுவனம் முதலீட்டாளர்களிடம் இருந்தும் முதலீட்டு நிறுவனங்களிடம் இருந்தும் பல மில்லியன் டாலர் நிதியைத் திரட்டியுள்ளது.

ஆனால் இப்போது அதிக பயனர்கள் கிடைத்துள்ள காரணத்தால், சுயமாகத் தனக்கான நிதியை அதனால் உருவாக்க முடியும். டிவிட்டர் அதிகம் பயன்படுத்தப்பட்ட காலத்தில் பெரும்பாலான நிதி அதற்கு விளம்பரங்கள் மூலம்தான் கிடைத்தது.

ப்ளூ ஸ்கை இந்த நடைமுறையைத் தவிர்க்க வேண்டும் என்று கூறுகிறது. அதற்கு மாற்றாக, கட்டண முறையில் சேவைகளை வழங்கத் திட்டமிட்டுள்ளதாக, அதாவது பயனர் பெயரில் உள்ள தனிப் பயனர் டொமைன்களை விலையுடன் கூடிய சேவையாக வழங்கவுள்ளதாக ப்ளூ ஸ்கை கூறுகிறது.

உதாரணமாக, என்னுடைய - @twgerken.bsky.social பயனர் பெயர், வருங்காலத்தில் இதைவிட அதிகாரப்பூர்வமானதாக [email protected] என்று இருக்கலாம்.

இந்தத் திட்டத்தின் ஆதரவாளர்கள் கூறுகையில், இந்த இணையதளத்தின் உரிமையாளர் இதன் பயன்பாட்டிற்கான அனுமதியைக் கொடுக்க வேண்டியிருப்பதால், சரிபார்ப்பு நடைமுறையை இது இரட்டிப்பாக்கியுள்ளது.

இப்படியே ப்ளூ ஸ்கையின் உரிமையாளர்கள் விளம்பரங்களைத் தவிர்த்துக் கொண்டே வந்தால், அது அவர்கள் மேலும் பல விரிவான வாய்ப்புகளைப் பற்றிச் சிந்திக்க வழிவகுக்கும். நிதி திரட்டுவதற்காக சந்தா அம்சங்கள் போன்ற வழிகளையும் உருவாக்கலாம்.

பணம் ஈட்டாமல் இருப்பது புதிய தொழில்நுட்ப நிறுவனங்களுக்குப் புதிதல்ல. சொல்லப் போனால், 2022ஆம் ஆண்டு டிவிட்டரை மஸ்க் வாங்குவதற்கு முன்பு அது செயல்பட்ட 8 ஆண்டுகளில் இரண்டு முறை மட்டுமே லாபம் ஈட்டியது.

உலக பணக்காரரான மஸ்க் டிவிட்டரை 44 பில்லியன் டாலர் கொடுத்து வாங்கியது அனைவரும் அறிந்ததே, அதன் முதலீட்டாளர்களுக்கு அன்று பெரும் சம்பள நாளாக இருந்தது.

இப்போதைக்கு பார்த்தால் ப்ளூ ஸ்கையின் எதிர்காலம் எப்படி இருக்கும் என்று தெரியவில்லை. ஆனால் அதன் வளர்ச்சி தொடர்ந்தால், எதுவும் சாத்தியமே!

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)