ஒட்டுமொத்த தீவுக்கும் ஒரே மருத்துவர்: கொலை மிரட்டல்களை தாண்டி சாதித்த இளம்பெண்

பிலிப்பைன்ஸ், மருத்துவர், கோவிட்
    • எழுதியவர், ரூபர்ட் விங்க்ஃபீல்ட் - ஹேயஸ்
    • பதவி, பிபிசி நியூஸ்

பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ளது, அகுடா தீவுக்கூட்டம். இது பிலிப்பைன்ஸ் நாட்டிற்குச் சொந்தமான மிக ஏழ்மையான தீவுப் பகுதி. இங்கு வாழும் 13,000 மக்களுக்குக் கடந்த மூன்று ஆண்டுகளாக ஒரேயொரு மருத்துவர்தான் இருந்துள்ளார்.

அலெனா என்ற 28 வயதே ஆன அந்த சாகச மருத்துவர், கோவிட் பெருந்தொற்றைத் தன்னால் சமாளிக்க முடிந்த அளவுக்கு, அந்நாட்டின் மோசமான மருத்துவத் துறையின் நிலைமையையும் அரசாங்கத்தையும் சமாளிக்க முடியவில்லை என்கிறார்.

13,000 மக்கள்; ஒரே மருத்துவர்

பிலிப்பைன்ஸ், மருத்துவர், கோவிட்
படக்குறிப்பு, 99 வயதான பாட்டிக்கு மருத்துவம் பார்க்க அவரது குடும்பத்திடம் பணம் இல்லை

எலியுதெரா அபுஸ். அவருக்கு 99 வயதாகிறது. தனது வலது கையைச் சிறிது அசைத்தால்கூட அவர் உயிர்போகும் அளவுக்குக் கடுமையான வலியால் துடிக்கிறார். அவர் கீழே விழுந்ததில், கை முறிந்து ஆறு மாதம் ஆகிறது.

“என்னால் முடிந்ததெல்லாம் அவரது வலியைக் குறைக்க முயல்வது மட்டும்தான்,” என்கிறார் அவருக்கு மருத்துவம் பார்க்கும் 28 வயதான மருத்துவர் அலெனா யாப்.

“அவருக்குச் சரியான முறையில் கட்டுப் போடவேண்டும். ஆனால் அவரது குடும்பம் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல மறுக்கிறது.”

எலியுதெராவின் மகள்கள் குரூரமானவர்கள் அல்ல, தாய்க்கு மருத்துவம் பார்க்க முடியாத அளவுக்கு ஏழைகள்.

அவர்கள் வசிக்கும் சிறிய தீவான தீத் தீவிற்கு அருகிலிருக்கும் அறுவை சிகிச்சை மையத்திற்குப் போக நூற்றுக்கணக்கான மைல்களை கடக்க வேண்டும். பிலிப்பைன்ஸ் தேசத்தின் சூலூ கடலின் மத்தியில் தனித்திருக்கும் அகுடா தீவுக்கூட்டத்தில் இருக்கும் தீவுகளில் ஒன்றுதான் தீத் தீவு.

அலெனா யாப், குதிரைவால் முடியோடு, கண்ணாடி அணிந்து, எப்போதும் சிரித்தபடி இருக்கும் ஓர் இளம்பெண். அவர்தான், அங்கு வசிக்கும் ஏறத்தாழ 13,000 மக்களுக்கு வைத்தியம் பார்க்கும் ஒரே மருத்துவர்.

கொரோனா பெருந்தொற்று துவங்குவதற்குச் சற்று முன்னர் அலெனா இப்பகுதிக்கு வந்தார். பிலிப்பைன்ஸின் உயரிய மருத்துவக் கல்லூரியில் படித்த அலெனா போன்றவர்கள் பெரும்பாலும் தலைநகரான மணிலாவில் இருப்பர்.

பலர் ஆஸ்திரேலியா, அமெரிக்கா, பிரிட்டன் போன்ற தேசங்களுக்குச் சென்று விடுகின்றனர். ஆனால் அலெனாவோ ஓர் அரசு மருத்துவத் திட்டத்தில் தன்னார்வலராகச் சேர்ந்தார், நாட்டின் மிக வறுமையான பகுதிக்கு அனுப்பப்பட்டார்.

பிலிப்பைன்ஸ் தேசத்தால் பெரும்பாலும் மறக்கப்பட்டுவிட்ட, இந்தத் தீவுக்கு வந்து சேர்ந்தபோது கோவிட் தொற்றுப் பேரிடரோடு சேர்த்து வேறு பல பிரச்னைகளையும் அலெனா சமாளிக்க வேண்டியிருந்தது.

'உண்மையான மாற்றகளை' கொண்டு வருவதற்காக இங்கு அலெனா வந்திருந்தார். ஆனால், அவருக்குக் கிடைத்த எதிர்வினை அவரை வெகுசீக்கிரமே மனம் தளரச் செய்தது.

‘என்னைச் சுட்டுக் கொல்லப்போவதாகச் சொன்னார்கள்’

அகுடா தீவு, பிலிப்பைன்ஸ்
படக்குறிப்பு, அகுடா தீவுகள் ஒரு சிறு சொர்க்கம்போல் காட்சியளிக்கின்றன

இந்தத் தீவை அடைய வேண்டுமெனில், அதற்கு ஒரு விமானப்பயணம், 15 மணிநேரம் படகுப் பயணம், மேலும் ஒரு சிறு துணைப்படகில் இரண்டு மணிநேரம் ஆபத்தான பயணம் எனப் பல கட்ட பயணங்களை மேற்கொள்ள வேண்டும்.

தீவுக்கூட்டத்தை நெருங்க நெருங்க, ஒரு சிறு சொர்க்கம்போல் காட்சியளிக்கின்றன. வெண்மணற் பரப்புகளும், தென்னை மரங்களும், பல வண்ணப் படகுகளும் தென்படுகின்றன. ஆனால் இதன் புவியியல் அமைப்பே இதன் வரமும் சாபமும். மழைக்காலங்களில் இப்பகுதி முழுமையாகத் தனிமைப்படுத்தப்படுகிறது. வேளாண்மைக்கான வாய்ப்புகள் மிகக் குறைவு. இங்கு மக்களின் வாழ்வாதாரம் கடலை நம்பியே இருக்கிறது.

அலெனா பிப்ரவரி 2020இல் தான் முதன்முதலாக அகுடாவிற்கு வந்தார்.

“அப்போது எனக்கு 26 வயது. மக்கள் என்னை ஒரு பள்ளி மாணவி என்று நினைத்தனர். என்னை மருத்துவர் என்றே நம்பவில்லை,” என்கிறார்.

அவர் வந்து ஒரு மாதத்தில் கோவிட் கோவிட் தொற்றுப் பேரிடரால் தீவுகளுக்கான பயணம் முழுவதும் நிறுத்தப்பட்டது. பேரிடர் தொடங்கிய முதல் ஆண்டில் யாருக்கும் தொற்றுப் பாதிப்பு ஏற்படவில்லை. ஆனால், 2021ஆம் ஆண்டில் மக்களை சொந்த ஊர்களுக்குத் திரும்பிச் செல்ல அனுமதித்தபோது, நாட்டின் வெவ்வேறு இடங்களில் இருந்தும் மக்கள் அகுடாவுக்கு வரத் தொடங்கினார்கள்.

மக்கள் தம்மைத் தனிமைப்படுத்திக்கொள்வதை உறுதிசெய்யும் பொறுப்பில் அலெனா இருந்தார். அப்போதுதான் அவருக்குச் சவால்கள் அதிகரித்தன. தனிமைப்படுத்திக்கொள்ளச் சொன்னபோது மக்கள் மூர்க்கமாக எதிர்வினையாற்றினர். அவருக்குப் பல கொலை மிரட்டல்கள் வந்தன.

அதுகுறித்துப் பேசியபோது, "மக்கள் தன்னைச் சுட்டுக் கொல்லப் போவதாகச் சொன்னார்கள்" என்கிறார் அலெனா.

அதற்குக் காரணம், அந்தத் தீவில் வாழ்ந்தவர்கள் அனைவரும் அன்றாடம் கடலுக்குச் சென்று மீன் பிடித்து பிழைப்பு நடத்தியவர்கள். கடலுக்குப் போகாவிட்டால் அன்றைய தினம் பட்டினிதான்.

இதனால், அங்கு இருப்பவர்களால் அலெனா வெறுக்கப்பட்டார். அவர் தனது வருங்காலக் கணவரை மணிலாவில் விட்டு வந்திருந்தார். இங்கு அவர் எதிர்கொண்ட அழுத்தத்தைத் தாங்க முடியாமல், தனிமையில் பல நாட்கள் அழுதார். துணைக்கு நாய்களை வளர்த்தார். கடற்கரைக்குச் சென்று சூரியனை ஓவியமாக வரைந்தார்.

அடுத்த பெரும் சவால், 2021இல் வந்தது. அதுதான் தடுப்பூசிகள்.

தடுப்பூசிகள் வழங்க அவர் ஒவ்வொரு வீடாகச் செல்ல நேர்ந்தது. தூரம் காரணமாகப் பலர் கிளினிக்குக்கு வரத் தயங்கினர். அதுமட்டுமல்ல, பலரும் சமூக ஊடகங்களின் ஊடாகத் தடுப்பூசியைப் பற்றிய தவறான தகவல்களைப் படித்து, ஊசி போட்டுக்கொள்ளத் தயங்கினர்.

கோவிட் பரவல், 2022ஆம் ஆண்டின்போது குறையத் தொடங்கியிருந்தது. தடைகளை மீறி, வெற்றிகரமாகத் தடுப்பூசிகள் வழங்கப்பட்டன. அகுடா தீவுகளில் எட்டு பேர் மட்டுமே கோவிட் தொற்று பாதிப்பால் உயிரிழந்தனர்.

ஆனால், மேலும் பல சவால்கள் அவருக்குக் காத்திருந்தன.

சிறிய நோய்கள், பெரிய சவால்கள்

பிலிப்பைன்ஸ், மருத்துவர், கோவிட்
படக்குறிப்பு, அறுவை சிகிச்சை செய்யச் சொன்னால் அவ்வளவு பணத்திற்கு எங்கு போவது என்று மக்கள் கவலைப்படுகிறார்கள்

ஒவ்வொரு நாளும் அலெனாவை பார்ப்பதற்காக நோயாளிகளின் நீண்ட வரிசை காத்திருக்கிறது.

அந்த மக்களிடையே குடிநீர்ப் பற்றாக்குறையால் அதிகமான குளிர்பானத்தை மக்கள் குடிப்பதால் நீரிழிவு நோய் அதிகமாக இருக்கிறது. அதோடு, அதிகப்படியான கருவாடு உட்கொள்வதால் ரத்த அழுத்தமும் அதிகமாக உள்ளது.

மற்றொரு பெரும் சவால்: காசநோய்.

பாக்டீரியாவினால் பரவும் காசநோயை குணப்படுத்தாவிட்டால் மரணம் நேரிடும். ஆண்டிபயாடிக் மற்றும் தடுப்பூசிகள் மூலம் உலகின் சில பகுதிகளில் இந்நோய் முற்றிலும் அழிக்கப்பட்டுவிட்டது. ஆனால் பிலிப்பைன்ஸ் நாட்டில் பத்து லட்சத்திற்கும் அதிகமான காசநோயாளிகள் உள்ளனர்.

“எங்களது குறிக்கோள் காசநோயை முழுமையாக அழிப்பதுதான், ஆனால் இப்போதைக்கு அது சாத்தியப்படாது,” என்கிறார் அலெனா.

சரியான மருத்துவ வசதிகள் இல்லாததால் மக்கள் மீண்டும் பாதிக்கப்படுகின்றனர். சிலர் மருந்துகளை எதிர்க்கும் பாக்டீரியா வகைகளால் பாதிக்கப்படுகிறார்கள்.

இவையல்லாமல், டெங்கு காய்ச்சலும் இங்கு புதிதாகப் பரவத் தொடங்கியிருக்கிறது.

காலை 11:00 மணிவாக்கில் அலெனா அகுடாவிலிருந்து தீத் தீவுக்கு செல்கிறார். அங்கு மக்கள் இவரை ‘மருத்துவச்சி’ என்று அன்பாக அழைக்கின்றனர், ஆரவாரமாக வரவேற்கின்றனர்.

நாற்பது வயதான ஒரு பெண்மணி தனது குழந்தையை அவரிடம் கொண்டு வருகிறார். பரிசோதித்துப் பார்த்துவிட்டு, குழந்தைக்கு குடலிறக்கம் ஏற்பட்டிருப்பதாகவும், அறுவை சிகிச்சை தேவைப்படும் எனவும் கூறுகிறார்.

இதைக் கேட்டவுடன் அந்தப் பெண்ணின் முகம் வாடுகிறது. “அறுவை சிகிச்சை செய்யச் சொல்லும்போது அவ்வளவு பணத்திற்கு எங்கு போவது என்று மக்கள் கவலைப்படத் தொடங்கிவிடுவார்கள்,” என்கிறார் அலெனா.

வேறு நாடுகளில் குடலிறக்கத்திற்கான சிகிச்சை மிக எளிது. ஆனால், இங்கு அது மக்களைக் கடனாளிகளாக்கிவிடும்.

அகுடா தீவிற்கு சென்று மூன்று ஆண்டுகளான பிறகு அலெனவின் நம்பிக்கையும் லட்சியமும் தகர்ந்து போய்விட்டன. மருத்துவ சேவைகளுக்கான நிதிப் பற்றாக்குறை எப்போதும் ஒரு பெரிய சவாலாகவே இருக்கும்.

ஊழலில் மூழ்கியிருக்கும் சுகாதாரத் துறை

பிலிப்பைன்ஸ், அரசியல், ஊழல்
படக்குறிப்பு, அகுடா தீவில் தொடங்கிய சாலை போடும் பணி பாதியில் நிறுத்தப்பட்டது

அகுடா தீவில், சென்ற ஆண்டு உள்ளாட்சித் தேர்தலுக்கான பிரசாரங்கள் நடந்துகொண்டிருந்தபோது, சாலை போடும் பணி தொடங்கியது. தேர்தலுக்குப் பிறகு பாதியில் நிறுத்தப்பட்டது.

“அடுத்த தேர்தல் வந்தால்தான் பணிகள் முடியும்,” என்கிறார் ஓர் உள்ளூர்வாசி.

மற்றொருபுறம், ஆரம்ப சுகாதார மையம் கட்டும் பணி துவங்கி, நிதிப் பற்றாக்குறையால் பாதியில் கைவிடப்பட்டுள்ளது.

பிலிப்பைன்ஸ் அரசியல், கட்சிகளால் அல்ல, பிரபலங்களால் நடத்தப்படுகின்றன. செல்வாக்குமிக்க இனக்குழுக்களின் தலைவர்கள் தமக்கு வாக்களித்தால் அகுடாவிற்கு நலத்திட்டங்கள் செய்து தருவதாகச் சொல்கின்றனர்.

ஓட்டுக்குப் பணம் கொடுப்பதும் நடக்கிறது. ஓட்டு ஒன்றுக்கு சுமார் 700 ரூபாய் வரை கொடுக்கப்படுகிறது.

ஊழலும் மிகப் பெரிய பிரச்னை. மக்களுக்கான நிதி அவர்களைச் சென்றடைவதில்லை.

அலெனா பெரும் கனவுகளோடு அகுடா தீவுக்கு வந்தார். தனது பணிக் காலமான மூன்றாண்டுகள் முடிந்ததும் ‘இந்தக் குறுகிய காலத்தில் ஒன்றும் பெரிதாகச் செய்துவிட முடியாது,’ என்று உணர்ந்ததாகச் சொல்கிறார்.

அகுடாவில் பணியாற்றிய அவரது உதவியாளர்கள் அவர் தன்னலமற்று, கடினமாக உழைத்ததாகக் கூறுகின்றனர்.

அவர் மணிலாவுக்கு திரும்பி சில வாரங்கள் ஆகின்றன. அரசாங்கத்திற்கு வேலை செய்த அனுபவம் ஏமாற்றம் அளித்ததாக அவர் கூறுகிறார்.

மற்றோர் அரசாங்க வேலைவாய்ப்பை மறுத்துவிட்டு, இப்போது ஒரு தன்னார்வ நிறுவனத்திற்கு வேலை செய்கிறார். இந்த நிறுவனம் அகுடா தீவுகளில் இருக்கும் மக்களுக்கு சிறிய அறுவை சிகிச்சைகளைச் செய்ய மருத்துவர்களை அனுப்புகிறது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: