You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
இரண்டு பேருந்து நீளமுள்ள ராட்சத மீன் பல்லியின் புதைபடிமங்கள் கண்டுபிடிப்பு
- எழுதியவர், ஜார்ஜினா ரேனார்ட்
- பதவி, அறிவியல் செய்தியாளர்
மிகப்பெரிய கடல் வாழ் ஊர்வனம் எது என்பதை ஆராய்ச்சியாளர்கள் அடையாளம் கண்டுள்ளனர். இரண்டு பேருந்துகளை ஒன்றன் பின் ஒன்றாக நிற்க வைத்தால் எவ்வளவு நீளம் இருக்குமோ அதை விட அதிக நீளம் கொண்டதாக அந்த கடல் வாழ் ஊர்வனம் இருந்திருக்கும் என கண்டறியப்பட்டுள்ளது.
இந்த உயிரினம் சுமார் 20 கோடி ஆண்டுகளுக்கு முன்பு டைனோசர்கள் வாழ்ந்த காலகட்டத்தில் வாழ்ந்துள்ளது. 2016 இல் பிரிட்டனின் சோமர்செட் கடற்கரையில் ஒரு புதைபடிவ ஆய்வாளர் இந்த ஊர்வனத்தின் புதைபடிவ தாடை எலும்பை கண்டுபிடித்தார். 2020 இல் ஒரு தந்தையும் மகளும் இதே போன்ற மற்றொரு தாடை எலும்பை கண்டுபிடித்தனர்.
இந்த புதைபடிவங்கள் இரண்டு ராட்சத இக்தியோசர் (ichthyosaur) ஊர்வன உயிரினங்களுடையது என்றும் அவை 25 மீட்டர் நீளத்தில் இருந்திருக்கலாம் என்றும் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
இயற்கையியலாளரும் எழுத்தாளருமான டேவிட் அட்டன்பரோ இயக்கிய ஆவணப்படமான 'ஜெயண்ட் சீ மான்ஸ்டர்' -இல் டோர்செட் பாறைகளில் கண்டறியப்பட்ட ஒரு பெரிய ப்ளியோசரின் (pliosaur) மண்டை ஓடு காண்பிக்கப்பட்டிருக்கும். தற்போது கண்டறியப்பட்டுள்ள கடல் ஊர்வனம் அந்த ப்ளியோசரை விட பெரியது.
பிரிஸ்டல் பல்கலைக்கழகத்தில், தொல்லுயிர் எச்சங்களைக் கொண்டு முற்காலத்தினை ஆராயும் நிபுணரான டாக்டர் டீன் லோமாக்ஸ் கடந்த புதன்கிழமை ஒரு அறிவியல் கட்டுரையை வெளியிட்டார். அவரின் கருத்துப்படி, " தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள புதைபடிவ தாடை எலும்புகளின் அளவின் அடிப்படையில் - அவற்றில் ஒன்று ஒரு மீட்டருக்கு மேல் நீளமும் மற்றொன்று இரண்டு மீட்டர் நீளமும் இருந்தன - முழு உயிரினத்தின் அளவு சுமார் 25 மீட்டர் நீளம் இருக்கலாம். அதாவது, நீல திமிங்கலத்தின் நீளத்தை ஒத்ததாக இருக்கும்." என்றார்.
மேலும், இதுவரை ஒரு சில துண்டுகள் மட்டுமே கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்த உயிரினத்தின் துல்லியமான அளவை உறுதிப்படுத்த முழுமையான மண்டை ஓடு மற்றும் எலும்புக்கூடு போன்ற புதைபடிவ சான்றுகள் தேவை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
"மிகப்பெரிய உடல் அமைப்பை கொண்ட ராட்சத இக்தியோசர் இனம் ஒரு பேரழிவு நிகழ்வில் அழிந்து போயின, அதன் பிறகு வாழ்ந்த இக்தியோசர்கள் மீண்டும் பெரிய அளவை எட்டவில்லை’’ என்றும் கூறினார்.
2016 ஆம் ஆண்டில், புதைபடிவ வேட்டைக்காரர் பால் டி லா சாலே சோமர்செட் கடற்கரைகளில் தேடலில் ஈடுபட்டபோது இந்த உயிரினத்தை பற்றிய முதல் சுவடு தென்பட்டது. பிரபல புதைபடிவ நிபுணரான ஸ்டீவ் எட்ச்ஸால் ஈர்க்கப்பட்ட அவர், கடந்த 25 ஆண்டுகளாக புதைபடிவங்களை சேகரித்து வருகிறார்.
தனது மனைவி கரோலுடன் கடற்கரையில் தொல்லியல் தேடலில் ஈடுபட்ட அவருக்கு வாழ்நாள் முழுவதும் எண்ணி மெச்சக் கூடிய அற்புதமான புதைபடிவம் கிடைத்தது. மிகப்பெரிய கடல் ஊர்வனத்தின் முதல் புதைபடிவ சுவடு அவருக்கு கிடைத்தது.
இதுகுறித்து டீன் லோமாக்ஸுடன் அவர் பேசியபோது, இது மிகப்பெரிய கண்டுபிடிப்பாக இருக்கக்கூடும் என யூகித்தார். இருவரும் இணைந்து தங்கள் கண்டுபிடிப்புகளை 2018 இல் வெளியிட்டனர்.
இருப்பினும் அந்த உயிரினத்தின் துல்லியமான அளவு என்ன என்பதைப் புரிந்து கொள்வதற்கு கூடுதல் ஆதாரங்கள் வேண்டும் என அவர்கள் விரும்பினர்.
"எங்கள் கண்டுபிடிப்புகளை முழுமையாக்க கூடுதல் புதைபடிவங்கள் கிடைக்க வேண்டும் என கடவுளை வேண்டினேன் " என்கிறார் டீன்.
டீன் மற்றும் சாலே தேடிய எச்சங்கள், 2020 ஆம் ஆண்டு, தந்தை ஜஸ்டின் மற்றும் மகள் ரூபி ரெனால்ட்ஸ் ஆகியோர் கண்களில் தென்பட்டது. ப்ளூ ஆங்கர் பகுதியில் கடற்கரையில் 10 கி மீ தொலைவில் ஒரு புதைபடிவ தாடையை அவர்கள் கண்டறிந்தனர்.
"உண்மையில் நான் மிகவும் உற்சாகமாக இருந்தேன். பால் சாலே-விடம் இருப்பது போன்று மற்றொரு இக்தியோசரின் புதைபடிவ தாடை கண்டுப்பிடிக்கப்பட்டதை அறிந்து பெருமகிழ்ச்சி அடைந்தேன்" என்று டீன் தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
இரண்டாவது தாடை கண்டறியப்பட்டதை அறிந்ததும் பால் சாலே அந்த கடற்கரைக்கு விரைந்தார், மேலும் பல எச்சங்களை கண்டுபிடிக்க உதவினார்.
"கடற்கரையில் தாடை கண்டுபிடிக்கப் பட்ட இடத்தில் தோண்டத் தொடங்கினேன். சுமார் ஒரு மணி நேரத்திற்குப் பிறகு, எனது மண்வெட்டி திடமான ஒன்றின் மீது இடிப்பட்டது - அதுவொரு புதைபடிவ எலும்பு. அதனை பாதுகாப்பாக வெளியே எடுத்தோம்" என்றார் பால்.
தொல்லியல் ஆராய்ச்சியில் ஆர்வம் கொண்ட அந்த குழுவும், குடும்ப உறுப்பினர்களும் தொடர்ச்சியாக இரண்டாவது தாடையின் மீதமுள்ள பாகங்களைத் தேடி வந்தனர் - அவர்கள் தேடிய கடைசி பாகம் 2022 இல் கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த கண்டுபிடிப்பு கடல்வாழ் ஊர்வனத்தின் அளவை மதிப்பிடுவதற்கான கூடுதல் ஆதாரங்களை அவர்களுக்கு வழங்கியது.
அவர்கள் கண்டறிந்த புதைபடிவ எச்சங்கள், மிகப்பெரிய உயிரினமான இக்தியோசர் என்னும் இனத்தை சேர்ந்தது என அவர்கள் முடிவுக்கு வந்தனர். மேலும், அந்த உயிரினத்துக்கு அக்குழு இக்தியோடிடன் செவர்னென்சிஸ் ( Ichthyotitan severnensis) அல்லது 'செவர்னின் ராட்சத மீன் பல்லி' என்று பெயரிட்டுள்ளனர்.
டீன், ரூபி ரெனால்ட்ஸுடன் இணைந்து ஒரு அறிவியல் கட்டுரை எழுதினார் - ஒரு நாள் அவர் கண்டுபிடித்த தொல்லியில் மாதிரிக்கு `ரூபி’ என்று பெயரிடப்படலாம் என்று அதில் குறிப்பிட்டுள்ளார்.
பால் கண்டுபிடித்த புதைபடிவ மாதிரி, மூன்று ஆண்டுகளாக அவரது வீட்டு வாகனப் பராமரிப்பிடத்தில் வைக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டது. விரைவில் பிரிஸ்டல் மியூசியம் மற்றும் ஆர்ட் கேலரியில் அது பொதுக் காட்சிக்கு வைக்கப்படும்.
"நான் கண்டுபிடித்த புதைபடிவ தாடைக்கு விடை கொடுக்க கொஞ்சம் வருத்தமாக உள்ளது. நான் அதை பற்றி நன்கு தெரிந்து கொண்டேன். அதை ஆய்வு செய்து விரிவாகப் படித்தேன். இனி அதைப் பற்றி நான் அதிகம் கவலைப்பட வேண்டியதில்லை" என்கிறார் பால்.
"அனுபவமில்லாத புதைபடிவ சேகரிப்பாளர்கள் எவ்வளவு முக்கியமானவர்கள் என்பதை இந்த கண்டுபிடிப்பு எடுத்துக்காட்டுகிறது’’ என்று டீன் கூறுகிறார்.
"குடும்பங்கள் மற்றும் அனைத்து தரப்பு மக்களும் அற்புதமான கண்டுபிடிப்புகளை சாத்தியமாக்க முடியும். நீங்கள் ஒரு சர்வதேச ஆராய்ச்சியாளராக இருக்க வேண்டிய அவசியமில்லை. பொறுமையும் கூரிய பார்வையும் இருந்தால் போதும், உங்களால் இதுபோன்ற கண்டுபிடிப்பை மேற்கொள்ள முடியும்," என்றும் அவர் கூறினார்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)