You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
இந்திய குடியுரிமை பெற்று வாக்களித்த முதல் இலங்கைத் தமிழர் பெண்
- எழுதியவர், தங்கதுரை குமாரபாண்டியன்
- பதவி, பிபிசி தமிழ்
திருச்சி இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் வசித்து வரும் பெண் ஒருவர், இந்திய அரசின் சட்டத்தை உயர் நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டி பாஸ்போர்ட், வாக்காளர் அடையாள அட்டை ஆகிய ஆவணங்களைப் பெற்றிருந்தார். இந்நிலையில், வெள்ளிக்கிழமை (ஏப். 19) நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் அப்பெண் முதல் இலங்கைத் தமிழராக வாக்கு செலுத்தியுள்ளார்.
இலங்கைத் தமிழர் பெண் இந்திய குடியுரிமை பெற்றது எப்படி? இலங்கைத் தமிழர்கள் இந்திய குடியுரிமை பெற முடியுமா?
திருச்சி மாவட்டம் கொட்டப்பட்டு இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் வசித்து வருபவர் நளினி, இவருக்கு 38 வயது ஆகிறது. இவரது பெற்றோர்களான கண்ணன், சாந்தி இலங்கையைச் சேர்ந்த தமிழர்கள். அங்கு ஏற்பட்ட போர் பதற்றத்தால் கடல் வழியாக ராமேஸ்வரத்திற்கு 1983ஆம் ஆண்டு வந்தடைந்தனர்.
ராமேஸ்வரம் அருகே இருக்கும் மண்டபம் இலங்கை மறுவாழ்வு முகாமில் தங்க வைக்கப்பட்டனர். அங்கு 1986ஆம் ஆண்டு நளினி பிறந்தார். அதைத் தொடர்ந்து அங்கிருந்து திருச்சியில் உள்ள இலங்கை மறுவாழ்வு முகாமிற்கு மாற்றப்பட்டு அங்கு கிருபாகரன் என்பவரை நளினி திருமணம் முடித்து இரண்டு மகன்களுடன் வசித்து வருகிறார்.
இவர் பாஸ்போர்ட் பெற விண்ணப்பித்திருந்தார். அவர் இலங்கை அகதிகள் முகாமில் வசிப்பதால் அவருக்கு பாஸ்போர்ட் வழங்க அதிகாரிகளால் மறுப்பு தெரிவிக்கப்பட்டது.
நீதிமன்றத்தில் பாஸ்போர்ட் கேட்டு வழக்கு
தனக்கு பாஸ்போர்ட் வழங்கக்கோரி சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் கடந்த 2021ஆம் ஆண்டு ஜூலை மாதம் 2 ஆம் தேதி வழக்கு தொடுத்தார்.
அதில், இந்திய குடியுரிமைச் சட்டம் 1955 பிரிவு 3iன் படி, 26.1.1956 முதல் 1.7.1986 வரை இந்தியாவில் பிறந்த குழந்தைகள் அனைவரும் இந்தியர்கள்தான் என்ற அடிப்படையில் தனக்கு பாஸ்போர்ட் வழங்க வேண்டும் எனக் கேட்டிருந்தார்.
இந்த வழக்கு விசாரணை நடைபெற்று 2022ஆம் ஆண்டு ஆகஸ்ட்12இல் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் தீர்ப்பு வழங்கினார்.
அதில், "மனுதாரர் நளினி இலங்கையைச் சேர்ந்த பெற்றோருக்குப் பிறந்திருந்தாலும் அவர் இந்திய குடிமகள்தான்” எனத் தீர்ப்பளித்து, அவருக்கு இந்திய பாஸ்போர்ட் வழங்க வேண்டும் என உத்தரவிட்டார்.
இதையடுத்து, நளினிக்கு பாஸ்போர்ட் வழங்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, இந்திய குடியுரிமை பெற்று வாக்களிக்க எண்ணிய நளினி வாக்காளர் அடையாள அட்டைக்கு கடந்த ஆண்டு விண்ணப்பித்து அதையும் பெற்றார். நாளை நடைபெறும் மக்களவைத் தேர்தலில் வாக்களிக்கும் முதல் இலங்கை தமிழர் என்ற பெயரை பெற்றிருக்கிறார்.
40 ஆண்டு போராடத்திற்குக் கிடைத்த வெற்றி
இதுகுறித்து பிபிசி தமிழிடம் பேசிய நளினி கூறுகையில், “கடந்த 40 ஆண்டுகளாக தமிழ்நாட்டில் உள்ள அகதிகள் முகாமில் எனது தாய், தந்தை வசித்து வருகின்றனர். இலங்கைத் தமிழர்களுக்கு குடியுரிமை வழங்க வேண்டும் எனப் போராடி வருகின்றனர்.
எங்களுக்கு அரசிடமிருந்து சலுகைகள் கிடைத்தாலும் நாங்கள் நாடற்ற அகதிகளாகவே இன்னும் பார்க்கப்பட்டு வருகிறோம். எனவே, எங்களுக்கான அடையாளம் குடியுரிமை மட்டுமே. அதைப் பெற வேண்டும் என்பதற்காகப் போராடி வருகின்றோம்.
கடந்த 1986ஆம் ஆண்டு பிறந்தவர் என்ற அடிப்படையில் பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பித்து அது மறுக்கப்பட்டது. இந்திய குடியுரிமை சட்டத்தை மேற்கோள் காட்டி நீதிமன்றத்தை அணுகியபோது பாஸ்போர்ட் கிடைத்தது. அதைத் தொடர்ந்து, தற்போது முதல் இலங்கைத் தமிழராக வாக்களிப்பதற்கான உரிமையும் பெற்றுள்ளேன்,” என்றார்.
அதோடு, இந்திய அரசு தமிழ்நாட்டில் உள்ள பிற இலங்கைத் தமிழர்களுக்கும் வாக்களிக்கும் உரிமையை வழங்க வேண்டும் என்பதையும் அவர் வலியுறுத்தினார்.
‘150 இலங்கைத் தமிழர்கள் வாக்களிக்க வாய்ப்பு’
இந்திய குடியுரிமைச் சட்டத்தை மேற்கோள் காட்டி நளினிக்கு பாஸ்போர்ட் கொடுக்கப்பட்டு இந்திய குடியுரிமை பெற்ற நபராக மாறினார். அதைத் தொடர்ந்து வாக்காளர் அடையாள அட்டைக்கு விண்ணப்பித்து அதையும் பெற்றுள்ளார்.
இதை அடிப்படையாகக் கொண்டு இலங்கைத் தமிழர் முகாமில் வசிக்கும் மூன்று பேர் பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பித்து உள்ளதாகவும் நளினி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ரோமியோ ராய் குறிப்பிட்டார்.
அதேவேளையில், "தமிழ்நாடு அரசு சார்பில் 1986ஆம் ஆண்டு மற்றும் அதற்கு முன்பாகப் பிறந்தவர்களின் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதில் 150 பேர் இருப்பது தெரிய வந்தது. இவர்களும் இந்திய அரசின் குடியுரிமையைப் பெறுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறேன்.
இவர்கள் குடியுரிமை பெறும் பட்சத்தில் எதிர்வரும் தேர்தல்களில் இவர்களும் வாக்கு செலுத்த வாய்ப்பு கிடைக்கும்," என்றார் வழக்கறிஞர் ரோமியோ ராய்.
தமிழ்நாட்டில் 110 இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்கள் உள்ளன. அதில் தோராயமாக 1.10 லட்சம் மக்கள் வசிப்பதாகவும் காவல் நிலையத்தில் அனுமதி பெற்று 80,000க்கும் மேற்பட்டோர் வெளியில் வசித்து வருவதாகவும் கூறுகிறார் வழக்கறிஞர் புகழேந்தி.
தமிழர்கள் உரிமைகள் நலனுக்காக இயங்கி வரும் வழக்கறிஞர் புகழேந்தியிடம் பிபிசி தமிழ் பேசியபோது, "அவர்கள் குடியுரிமை வேண்டுமென நீண்டகாலமாகப் போராடி வருவதாகவும்" குறிப்பிட்டார்.
தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய இலங்கைத் தமிழர்களுக்கு ஆதார், குடும்ப அட்டை போன்ற அடையாள ஆவணங்கள் வழங்கப்படுவதாகவும் குடும்பத் தலைவருக்கு ஆயிரம் ரூபாய், மற்ற உறுப்பினர்களுக்கு 750 ரூபாய் என உதவித் தொகையும் கொடுக்கப்படுவதாகவும் கூறுகிறார் புகழேந்தி.
அவர்களது நிலை குறித்துப் பேசிய அவர், "இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் வசிக்கும் குழந்தைகளால் படித்து முன்னேறி அரசு வேலைக்குச் செல்ல முடியவில்லை. வெளிநாட்டுக்கு வேலைக்குச் செல்ல முடியாது. இதனால் படித்த இளைஞர்கள் கூலித் தொழிலாளர்களாக கட்டட வேலைகளுக்கு மட்டுமே செல்லும் சூழலுக்குத் தள்ளப்படுகின்றனர் அதிலும் பல சிக்கல்களை அவர்கள் சந்தித்து வருகின்றனர்," என்கிறார்.
மத்திய அரசு கொண்டு வந்திருக்கும் குடியுரிமை திருத்தச் சட்டத்தில் 2014ஆம் ஆண்டுக்கு முன் ஆப்கனில் இருந்து வந்தவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு கொண்டு வந்திருக்கும் குடியுரிமை திருத்தச் சட்டத்தில் "2014ஆம் ஆண்டுக்கு முன் ஆப்கனில் இருந்து வந்தவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது."
அந்தச் சட்டத்தின்கீழ், "இலங்கைத் தமிழர்களையும் சேர்த்துவிட்டால் இவர்களுக்கும் குடியுரிமை கிடைக்கும். அதைச் செய்ய மத்திய அரசு தயங்குவது ஏனென்று புரியவில்லை," என்றும் கூறுகிறார் புகழேந்தி.
இலங்கை நாட்டைச் சேர்ந்தவர்கள் லண்டன், ஆஸ்திரேலியா, பிரான்ஸ் போன்ற நாடுகளுக்குச் சென்று மூன்று ஆண்டுகள் தொடர்ச்சியாக வசித்தால் அவர்களுக்கு கிரீன் கார்டு வழங்கப்படுகிறது.
ஐந்து ஆண்டுகளுக்கு மேல் வசித்தால் அவர்களுக்கு குடியுரிமை வழங்கப்படுகிறது. ஆனால், "இங்கே 30 ஆண்டுகள் தாண்டி வசிக்கும் இலங்கைத் தமிழர்களுக்கு குடியுரிமை என்பது மறுக்கப்படுக்கிறது.
தமிழ்நாட்டில் இலங்கைத் தமிழர்கள் திறந்தவெளி சிறையில் வசிப்பதைப் போன்று வசித்து வருகின்றனர். இதில் மாற்றம் நிகழ வேண்டும் அதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்," எனவும் வலியுறுத்தினார் வழக்கறிஞர் புகழேந்தி.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)