You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
யுக்ரேன் போர்: சொந்த வீரர்களையே கொடூரமாக பலி கொடுக்கும் ரஷ்யா - பிபிசி ஆய்வில் உறுதி
யுக்ரேனில் ரஷ்ய ராணுவ வீரர்களின் இறப்பு எண்ணிக்கை இப்போது 50,000ஐ கடந்துவிட்டதை பிபிசி உறுதிப்படுத்தியுள்ளது.
ரஷ்யா இரண்டாவது ஆண்டிலும், இறைச்சி அரவை (Meat Grinder) உத்தி என்றழைக்கப்படும் அதன் தாக்குதல் உத்தியின்படி – அதாவது யுக்ரேனிய படைகளை வலுவிழக்கச் செய்வதற்காக கூட்டம் கூட்டமாக ராணுவ வீரர்களை களமிறக்கும் ரஷ்யாவின் உத்தி – பல ராணுவ வீரர்களை போருக்கு அனுப்பியது. அதன் விளைவாக ஏற்பட்ட ரஷ்ய வீரர்களின் இறப்புகள் முதல் ஆண்டைவிட தற்போது கிட்டத்தட்ட 25% அதிகமாக இருப்பதைப் பார்க்க முடிகிறது.
பிபிசி ரஷ்ய சேவை, சுயாதீன ஊடக குழுவான மீடியாசோனா மற்றும் தன்னார்வலர்கள், பிப்ரவரி 2022 முதல் இந்த இறப்புகளைக் கணக்கெடுத்து வருகின்றனர். புதைவிடங்களில் உருவாக்கப்பட்ட புதிய கல்லறைகளில் இருந்த ராணுவ வீரர்களின் பெயர்கள் அவர்களுக்கு இந்தக் கணக்கெடுப்பில் உதவின.
அலுவல்ரீதியிலான அறிக்கைகள், செய்தித்தாள்கள், சமூக ஊடகங்கள் ஆகியவை மூலம் திறட்டப்பட்ட தகவல்களையும் எங்கள் குழுக்கள் இதில் பயன்படுத்தின.
எங்கள் கண்டுபிடிப்புகளின்படி, ரஷ்ய வீரர்களில் சுமார் 27,300க்கும் மேற்பட்டோர் போரின் இரண்டாவது ஆண்டில் இறந்துள்ளனர். இது, பிராந்தியத்தைக் கையகப்படுத்தும் முயற்சியில் எவ்வளவு பெரிய மனித இழப்பு ஏற்பட்டுள்ளன என்பதைப் பிரதிபலிக்கிறது.
பிபிசியின் செய்திக்கு பதிலளித்திருக்கும் ரஷ்யா, மாஸ்கோவில் உள்ள பாதுகாப்பு அமைச்சகம்தான் இதுதொடர்பான தகவல்களைத் தர முடியும் என்று கூறியுள்ளது.
யுக்ரேனிய படைகளை வீழ்த்துவதற்கும், ரஷ்ய பீரங்கிகளுக்கு அவர்களது இருப்பிடங்களை அம்பலப்படுத்துவதற்கும் ரஷ்யா இடைவிடாமல் ராணுவ வீரர்களை முன்னோக்கி அனுப்பும் இந்த உத்தியை விவரிக்க மீட் கிரைண்டர் (meat grinder) என்ற சொல் பயன்படுத்தப்பட்டது.
மொத்த ரஷ்ய வீரர்களின் இறப்பு எண்ணிக்கை, 50,000க்கும் அதிகமானது. செப்டம்பர் 2022இல் ரஷ்யாவால் இதுவரை வழங்கப்பட்ட இறப்பு எண்ணிக்கைகளின் அதிகாரபூர்வ தரவுகளைவிட இது 8 மடங்கு அதிகம். ரஷ்யா தரப்பில் ஏற்பட்டுள்ள இறப்புகளின் எண்ணிக்கை உண்மையில் இதைவிட அதிகமாக இருக்கக்கூடும்.
எங்கள் பகுப்பாய்வில் ரஷ்யாவால் ஆக்கிரமிக்கப்பட்ட டொனெட்ஸ்க் மற்றும் கிழக்கு யுக்ரேனில் உள்ள லுஹான்ஸ்கில் ஏற்பட்ட வீரர்களின் இறப்புகள் குறித்து எதுவும் சேர்க்கப்படவில்லை. அதுவும் சேர்க்கப்பட்டால், ரஷ்யா தரப்பில் இறப்பு எண்ணிக்கை இன்னும் அதிகமாக இருக்கும்.
"சிறப்பு ராணுவ நடவடிக்கை" அரசு ரகசியங்களை உள்ளடக்கிய சட்டங்கள் மற்றும் தகவல்களைப் கொண்டிருப்பதால், உயிரிழப்புகள் பற்றிய தகவல்களை "பாதுகாப்பு அமைச்சகம்தான் வழங்க முடியும்" என்று கிரெம்ளின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் கூறினார்.
இதற்கிடையில், யுக்ரேன் தனது போர்க்களத்தில் ஏற்பட்ட உயிரிழப்புகளின் அளவு குறித்து அரிதாகவே கருத்து தெரிவிக்கிறது. பிப்ரவரியில், அதிபர் வோலொதிமிர் ஸெலென்ஸ்கி, 31,000 யுக்ரேனிய வீரர்கள் கொல்லப்பட்டதாகக் கூறினார். ஆனால், அமெரிக்க உளவுத்துறையின் தரவுகள் அடிப்படையிலான மதிப்பீடுகள், மேலதிக இழப்புகள் இருப்பதாகக் கூறுகின்றன.
ரஷ்யாவின் மீட் கிரைண்டர் உத்தி
பிபிசி மற்றும் மீடியாசோனாவிடம் இருக்கும் இறந்த வீரர்களின் சமீபத்திய பட்டியல், ரஷ்யாவின் மாறிவரும் போரின் முன்களத் தாக்குதல் தந்திரங்களில் இருக்கும் அப்பட்டமான மனித இழப்புகளைக் காட்டுகிறது.
யுக்ரேனின் டொனெட்ஸ்க் பகுதியில் ஒரு பெரியளவிலான தாக்குதலைத் தொடங்கியதால், 2023 ஜனவரியில் ரஷ்ய ராணுவம் தரப்பில் இறந்தவர்களின் எண்ணிக்கையில் கணிசமான அதிகரிப்பு எவ்வாறு ஏற்பட்டது என்பதைக் கீழே உள்ள வரைபடம் காட்டுகிறது.
ரஷ்யர்கள், வுஹ்லடேரி நகரத்தைக் கைப்பற்றப் போரிட்டபோது, அது “சாரைசாரையாக வீரர்களை முன்னோக்கி அனுப்பும் பயனற்ற தாக்குதல்களை” பயன்படுத்தியதாக போர் ஆய்வுக்கான நிறுவனம் (ISW) தெரிவித்துள்ளது.
“சவாலான நிலப்பரப்பு, போர்த்திறன் இல்லாமை, யுக்ரேனிய படைகளுக்கு அதிர்ச்சி அளிக்கத் தவறியது” என இந்தத் தாக்குதல் அதிக போர் இழப்புகளுக்கும் ஆனால் சிறிய அளவிலான ஆதாயங்களுக்கும் வழிவகுத்தது.
வரைபடத்தில் மற்றொரு குறிப்பிடத்தக்க உச்சம் 2023 வசந்த காலத்தில் பாக்முத் போரின்போது நிகழ்ந்திருப்பதைக் காணலாம். கூலிப்படை குழுவான வாக்னர், ரஷ்யா அந்நகரத்தைக் கைப்பற்ற உதவியது. வாக்னரின் அப்போதைய தலைவரான யெவ்ஜெனி ப்ரிகோஜின், அந்த நேரத்தில் அவரது குழுவின் இழப்புகள் 22,000 என மதிப்பிட்டார்.
கடந்த இலையுதிர்க்காலத்தில் கிழக்கு யுக்ரேனிய நகரமான அஃப்டிஃப்காவை ரஷ்யா கைப்பற்றியது ராணுவ வீரர்களின் இறப்புகள் மீண்டும் அதிகரிக்க வழிவகுத்தது.
கல்லறைகளைக் கணக்கெடுத்தல்
பிபிசி மற்றும் மீடியாசோனாவுடன் பணியாற்றும் தன்னார்வலர்கள் போர் தொடங்கியதில் இருந்து ரஷ்யா முழுவதும் 70 புதைவிடங்களில் புதிய ராணுவ கல்லறைகளைக் கணக்கெடுத்து வருகின்றனர்.
இந்தப் புதைவிடங்கள் கணிசமாக விரிவுபடுத்தப்பட்டிருப்பதை வான்வழிப் படங்கள் காட்டுகின்றன.
எடுத்துக்காட்டாக, மாஸ்கோவின் தென்கிழக்கில் உள்ள ரியாசானில் அமைந்திருக்கும் போகோரோட்ஸ்காய் கல்லறையின் இந்தப் படங்கள், ஒரு புதிய பகுதி அங்கு தோன்றியிருப்பதைக் காட்டுகிறது.
தரையில் எடுக்கப்பட்ட படங்கள் மற்றும் வீடியோக்கள், இந்தப் புதிய கல்லறைகளில் பெரும்பாலானவை யுக்ரேனில் கொல்லப்பட்ட வீரர்கள் மற்றும் அதிகாரிகளுக்குச் சொந்தமானவை எனத் தெரிவிக்கின்றன.
ரஷ்யாவின் இறந்த வீரர்களில் ஐந்தில் குறைந்தபட்சம் இரண்டு பேர், படையெடுப்புக்கு முன்பு நாட்டின் ராணுவத்துடன் எந்தத் தொடர்பும் இல்லாமல் வாழ்ந்தவர்கள் என்று பிபிசி மதிப்பிடுகிறது.
“கடந்த 2022ஆம் ஆண்டின் படையெடுப்பின் தொடக்கத்தில், சிக்கலான ராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்ள ரஷ்யா தனது தொழில்முறை துருப்புகளைப் பயன்படுத்த முடிந்தது. ஆனால், அந்த அனுபவமிக்க வீரர்கள் பலர் இப்போது இறந்திருக்கக்கூடும் அல்லது காயமடைந்திருக்கலாம்,” ராயல் யுனைடெட் சர்வீசஸ் நிறுவனத்தைச் சேர்ந்த பாதுகாப்புத் துறை ஆய்வாளர் சாமுவேல் க்ரானி-இவான்ஸ் விளக்குகிறார்.
மேலும், குறைந்த அளவு பயிற்சி அல்லது ராணுவ அனுபவமே உள்ளவர்கள், தன்னார்வலர்கள், பொதுமக்கள் மற்றும் கைதிகள் போன்றவர்கள் அவர்களுக்குப் பதிலாக போர்க்களத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவிக்கிறார்.
தொழில்முறை ராணுவ வீரர்கள் செய்யக்கூடியதை இவர்களால் செய்ய முடியாது எனக் கூறும் க்ரானி-இவான்ஸ், “இதன் பொருள், அவர்கள் தந்திரோபாயரீதியாக மிகவும் எளிமையான விஷயங்களைச் செய்ய வேண்டும். அதாவது பொதுவாக பீரங்கிகளின் உதவியோடு யுக்ரேனிய ராணுவ நிலைகள் மீது முன்னோக்கிச் சென்று தாக்குதல் புரிய வேண்டியுள்ளதாகத் தெரிகிறது,” எனக் கூறினார்.
வாக்னர் படையில் சேர்க்கப்பட்ட சிறைக் கைதிகள்
சிறைச்சாலையில் செய்யப்படும் ராணுவத்திற்கான ஆட்சேர்ப்பு இந்த மீட் கிரைண்டர் உத்திக்கு மிக முக்கியமானது. மேலும் எங்கள் பகுப்பாய்வு அவர்கள் இப்போது முன்வரிசையில் விரைவாகக் கொல்லப்படுவதாகத் தெரிவிக்கிறது.
ஜூன் 2022 முதல் சிறைச்சாலைகளில் ஆட்சேர்ப்பைத் தொடங்க வாக்னர் தலைவர் யெவ்ஜெனி ப்ரிகோஜினுக்கு ரஷ்யா அனுமதியளித்தது. பின்னர் வீரர்களாக மாறிய கைதிகள், ரஷ்ய அரசின் சார்பாக ஒரு தனியார் ராணுவத்தின் ஒரு பகுதியாகப் போரில் களமிறங்கினர்.
இடைவிடாத சண்டை உத்திகள், மிருகத்தனமான உள் நடவடிக்கைகளுக்குப் பெயர்போன தனியார் ராணுவமாக வாக்னர் இருந்தது. அவர்கள் உத்தரவின்றிப் பின்வாங்கிய வீரர்களை அந்த இடத்திலேயே தூக்கிலிடலாம்.
இந்தக் குழு பிப்ரவரி 2023 வரை கைதிகளில் இருந்து தனது படைக்கு ஆட்சேர்ப்பு செய்தது. பிறகு ரஷ்யாவுடனான அதன் உறவு மோசமாகத் தொடங்கியது.
ப்ரிகோஜின் கடந்த ஆண்டு ஜூன் மாதம் ரஷ்யாவின் ஆயுதப் படைகளுக்கு எதிராகக் கலகம் நடத்தினார். பின்னர் அதைக் கைவிட்டார். மேலும் திரும்பிச் செல்ல ஒப்புக்கொள்வதற்கு முன்பு மாஸ்கோவை நோக்கி முன்னேற முயன்றார். அதைத் தொடர்ந்து ஆகஸ்ட் மாதம் அவர் விமான விபத்தில் கொல்லப்பட்டார்.
முன்வரிசையில் கொல்லப்பட்ட 9,000 ரஷ்ய சிறைக்கைதிகளின் பெயர்களை எங்கள் சமீபத்திய பகுப்பாய்வு மையமாகக் கொண்டது.
அவர்களில் 1,000க்கும் மேற்பட்டவர்களுக்கு, அவர்களின் ராணுவ ஒப்பந்தம் தொடங்கும் தேதிகள் மற்றும் அவர்கள் எப்போது கொல்லப்பட்டார்கள் என்பதை நாங்கள் உறுதிப்படுத்தினோம்.
வாக்னரின் கீழ், அந்த முன்னாள் கைதிகள் சராசரியாக மூன்று மாதங்கள் மட்டுமே உயிர் பிழைத்திருந்ததை நாங்கள் கண்டறிந்தோம்.
இருப்பினும், மேலே உள்ள வரைபடம் குறிப்பிடுவது போல, பாதுகாப்பு அமைச்சகத்தால் அதற்குப் பின்னர் பணியமர்த்தப்பட்டவர்கள் சராசரியாக இரண்டு மாதங்கள் மட்டுமே பிழைத்திருந்தனர்.
பாதுகாப்பு அமைச்சகம் பொதுவாக புயல் படைப்பிரிவுகள் (Storm platoons) என்றழைக்கப்படும் ராணுவப் பிரிவுகளை உருவாக்கியுள்ளது. இது கிட்டத்தட்ட முழுக்க முழுக்க குற்றவாளிகளால் ஆனது.
வாக்னரின் கைதி படைப்பிரிவுகளைப் போலவே, இந்தப் பிரிவினரும் போரில் முன்களத்தில் பலியிடப்படுவதற்கான ஒரு சக்தியாகவே கருதப்படுகின்றனர்.
“இந்தப் புயல் வீரர்கள், வெறும் சதைப்பிண்டம் மட்டுமே” என்று புயல் உறுப்பினர்களுடன் இணைந்து போராடிய ஒரு சராசரி சிப்பாய் கடந்த ஆண்டு ராய்ட்டர்ஸ் செய்தி முகமையிடம் கூறினார்.
சமீபத்தில், புயல் வீரர்கள் அஃப்திஃப்காவை பிடிக்கப் பல மாதங்கள் நீடித்த போரில் முக்கியப் பங்கு வகித்தனர். இந்த நகரம் எட்டு வாரங்களுக்கு முன்பு ரஷ்யாவிடம் வீழ்ந்தது. அதோடு பாக்முத்திற்கு பிறகு புதினுக்கு மூலோபாய ரீதியாகவும் குறிப்பிடத்தக்க வகையிலும் ஒரு மிகப்பெரிய போர்க்கள வெற்றியை இது பிரதிநிதித்துவப்படுத்தியது.
பயிற்சியின்றி போர்க்களத்தின் முன்வரிசைக்கு அனுப்பப்பட்ட கைதிகள்
வாக்னர் கூலிப்படையின்கீழ், வீரர்களாக மாறிய சிறைக்கைதிகளுக்கு போரில் களமிறக்கப்படுவதற்கு முன்பாக 15 நாட்கள் ராணுவப் பயிற்சி அளிக்கப்பட்டது.
இதற்கு நேர்மாறாக, பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் சேர்க்கப்பட்டவர்கள் சிலர் ஒப்பந்தம் போடப்பட்ட இரண்டே வாரங்களில் முன்வரிசையில் கொல்லப்பட்டதைக் கண்டோம்.
பிபிசி இறந்த மற்றும் உயிருடன் இருக்கின்ற ராணுவ வீரர்கள் சிலரது குடும்பத்தினரிடம் பேசியது. சிறையில் ஆட்சேர்ப்பு செய்தபோது படையில் சேர்க்கப்பட்டவர்களுக்கு பாதுகாப்பு அமைச்சகம் வழங்கிய ராணுவப் பயிற்சி போதுமானதாக இல்லையென்று அவர்கள் கூறினர்.
கடந்த ஆண்டு ஏப்ரல் 8ஆம் தேதி சிறையில் தனது கணவர் அமைச்சகத்தின் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதாக கணவரை இழந்த ஒரு பெண் எங்களிடம் கூறினார். மேலும், அவர் ஒப்பந்தம் போடப்பட்டு மூன்று நாட்களுக்குப் பிறகு போரில் முன்வரிசையில் சண்டையிட்டார்.
“அவர்கள் கூறியதன்படி சில வாரங்களுக்கு பயிற்சிகள் இருக்கும் என்று நான் உறுதியாக இருந்தேன். குறைந்தபட்சம் ஏப்ரல் இறுதிவரை பயப்பட ஒன்றுமில்லை என நினைத்தேன்.”
தனது கணவர் தன்னிடம் பேசுவார் எனக் காத்திருந்ததாகவும் ஆனால் அவர் ஏப்ரல் 21 அன்று கொல்லப்பட்டதாகத் தெரிய வந்ததாகவும் அந்தப் பெண் தெரிவித்தார்.
மற்றொரு தாய் கூறுகையில், போர்க்களத்தில் சண்டையிட்டுக் கொண்டிருந்த தனது மகனின் மரணம் குறித்துத் தெரிவிக்கத் தனது கணவரைத் தொடர்புகொள்ள முயன்றபோதுதான் தனது கணவரும் சிறையில் இருந்து போர்க்களத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டதைத் தாம் அறிந்ததாகக் கூறினார்.
இரட்டைக் குழந்தைகளின் தந்தையான தனது மகன் வாடிம், இந்த ராணுவ ஆட்சேர்ப்புக்கு முன்னதாக எந்த ஆயுதத்தையும் ஏந்தியதில்லை என்று அவரது தாய் அல்ஃபியா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) கூறினார்.
மகனின் மரணம் குறித்துத் தனது கணவர் அலெக்சாண்டரிடம் அவரால் சொல்ல முடியவில்லை. ஏனெனில் அவர் சண்டையிடுவதற்காக “போர்க்களத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்” என்று அவர் கூறுகிறார். வேறொரு கைதியின் தொலைபேசி அழைப்பு மூலமாகத்தான் தன் கணவர் சென்றிருப்பது அவருக்குத் தெரிய வந்தது.
அலெக்சாண்டர் யுக்ரேனில் வளர்ந்ததாகவும் அங்கு குடும்பம் நடத்தியதாகவும் அல்ஃபியா கூறுகிறார். மேலும், பாசிசத்தை எதிர்த்துப் போராடுவதற்காக ரஷ்யா யுக்ரேனை ஆக்ரமித்தது “பொய் என்று அவருக்குத் தெரியவும்” எனவும் அவர் தெரிவித்தார்.
அவரது மகன் இறந்து ஏழு மாதங்களுக்குப் பிறகு கணவர் அலெக்சாண்டரும் போரில் கொல்லப்பட்டதாக அல்ஃபியாவுக்கு தெரிவிக்கப்பட்டது.
‘இறப்பதற்குத் தயாராக இருங்கள்’
வாக்னர் கூலிப்படைக்கு வேலை செய்யும்போது, சிறைக்கைதிகள் பொதுவாக ஆறு மாதங்களுக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டனர். ஒப்பந்த காலத்தின் இறுதியில் அவர்கள் உயிர் பிழைத்தால் அவர்களுக்கு சுதந்திரம் வழங்கப்படும்.
ஆனால், கடந்த செப்டம்பரில் இருந்து பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் பட்டியலிடப்பட்ட கைதிகள் அவர்கள் இறக்கும் வரை அல்லது போர் முடியும் வரை, இரண்டில் எது முதலில் வருகிறதோ அதுவரைக்கும் போரில் சண்டையிட வேண்டும்.
சரியான சீருடைகள், காலணிகளை வாங்குவதற்கு உதவுமாறு உறவினர்களிடம் கேட்ட கைதிகள் பற்றிய கதைகளை பிபிசி சமீபத்தில் கேட்டுள்ளது. கைதிகள் சரியான உபகரணங்கள், மருத்துவப் பொருட்கள் அல்லது கலாஷ்னிகேவ் துப்பாக்கிகள் கூட இல்லாமல் சண்டைக்கு அனுப்பட்ட செய்திகளும் உள்ளன.
ரஷ்ய போர் ஆதரவாளரும் பதிவருமான விளாதிமிர் க்ரூப்னிக் தனது டெலிகிராம் சேனலிலி, “பல வீரர்களிடம் போருக்குப் பொருத்தமற்ற துப்பாக்கிகள் இருந்தன,” என்று எழுதியுள்ளார்.
“முதலுதவிப் பெட்டி, அகழி தோண்ட மண்வெட்டி, உடைந்த துப்பாக்கியுடன் முன்வரிசையில் ஒரு சிப்பாய் என்ன செய்ய முடியும் என்பது பெரிய மர்மம்” எனக் குறிப்பிடுகிறார் அவர்.
க்ரூப்னிக், ரஷ்யாவால் ஆக்கிரமிக்கப்பட்ட கிழக்கு யுக்ரேனை தளமாகக் கொண்டவர். சில துப்பாக்கிகள் “முற்றிலும் உடைந்து இருப்பதைக் கண்டறிந்தபோது, அவற்றை மாற்றுவது சாத்தியமற்றது” என்று தளபதிகள் கூறியதாக அவர் கூறுகிறார்.
“அந்தத் துப்பாக்கி ஏற்கெனவே அந்த நபருக்கு ஒதுக்கப்பட்டுவிட்டது. மேலும் கடுமையான ராணுவ அதிகாரத்துவத்தால் அதுகுறித்து எதுவும் செய்ய முடியவில்லை,” என்று அவர் குறுப்பிடுகிறார்.
முன்னாள் கைதிகளும் தங்கள் தோழர்கள் தம் உயிர்கள் மூலம் இந்தப் போருக்காகச் செலுத்தியுள்ள அதிக விலையை விவரித்துள்ளனர்.
“நீங்கள் படையில் இப்போது பதிவு செய்தால், இறப்பதற்குத் தயாராக இருங்கள்” என்று புயல் வீரர்கள் மற்றும் அவர்களது உறவினர்களுக்கான ஆன்லைன் குழுவில் செர்கேய் கூறுகிறார். இந்தத் தளத்தில் அவர்கள் பற்றிய தகவல் பகிரப்படுகிறது.
அவர் அக்டோபர் முதல் புயல் படையில் சண்டையிட்டு வரும் முன்னாள் கைதி எனக் கூறுகிறார்.
இந்தத் தளத்தைச் சேர்ந்த மற்றோர் உறுப்பினர், ஐந்து மாதங்களுக்கு முன்பு 100 வீரர்களைக் கொண்ட புயல் படைப்பிடிவில் தாம் சேர்ந்ததாகவும் இப்போது அதில் உயிருடன் இருக்கும் 38 வீரர்களில் தானும் ஒருவர் எனவும் கூறுகிறார்.
“போரில் நடத்தப்படும் ஒவ்வொரு தாக்குதலும், மறுபிறவியைப் போல் உள்ளது” என்கிறார் அவர்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)