இஸ்ரேலை தாக்கியதால் மகிழ்ச்சி, பதிலடி குறித்த அச்சம் - இரானில் மக்கள் என்ன செய்கிறார்கள்?

    • எழுதியவர், ஜீயர் கோல்
    • பதவி, பிபிசி நிருபர்

முதல் முறையாக இரான் தனது எல்லையில் இருந்து நேரடியாக இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியது. இரான் இஸ்லாமியக் குடியரசின் புரட்சிகர காவலர்கள் படை (IRGC-ஐஆர்ஜிசி) மீது பிராந்தியத்தில் உள்ள நட்பு நாடுகள் மற்றும் உள்நாட்டு ஆதரவாளர்களுக்கு இருக்கும் நம்பிக்கையைத் தக்க வைத்துக் கொள்வதற்கும் இது முக்கியமானதாகக் கருதப்பட்டது.

இரானின் விருப்பத்தையும், அதன் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களின் திறனை உலகிற்கு நிரூபிக்கும் நோக்கமும் இந்தத் தாக்குதலின் பின்னே இருந்தது.

நாட்டின் இஸ்லாமிய அமைப்பைப் பாதுகாக்கவும், ஆயுதப் படைகளுக்கு தேவையான கூடுதல் பலத்தை வழங்கவும் 45 ஆண்டுகளுக்கு முன்பு ஐஆர்ஜிசி உருவாக்கப்பட்டது. இந்த அமைப்பு இன்று இரான் மற்றும் பிராந்தியத்தில் ஒரு பெரிய இராணுவ, அரசியல் மற்றும் பொருளாதார சக்தியாக மாறியுள்ளது.

சனிக்கிழமை இரவு இஸ்ரேல் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களைத் தொடர்ந்து, இரான் இஸ்லாமியக் குடியரசின் ஆதரவாளர்கள் பலர் பாலத்தீன ஆதரவு சின்னங்களுடன் தெஹ்ரானின் தெருக்களில் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

"சிரியா மற்றும் பிற இடங்களில் உள்ள இரானிய தளபதிகள் கொல்லப்படுவதைத் தடுக்க, இஸ்ரேலைத் தாக்குவது சரியான முடிவு என்று நம்புகிறேன்," என்று இரான் அரசாங்கத்தை ஆதரிக்கும் 20 வயது பெண் ஒருவர் பிபிசி பாரசீகத்திற்கு அனுப்பிய குரல் செய்தியில் தெரிவித்தார்.

ஆனால் இஸ்லாமியக் குடியரசை விமர்சிக்கும் ஏராளமான இரானியர்கள், "இந்த அரசின் செயல்பாடுகள் அனைத்து இரானிய மக்களின் கருத்துகளையும் பிரதிநிதித்துவப்படுத்துகிறது எனச் சொல்ல முடியாது" என்கிறார்கள்.

"நாங்கள் இஸ்லாமிய குடியரசு அல்ல, உண்மையான இரான். இரானியர்களே தற்போதைய ஆட்சியுடன் போரில் ஈடுபட்டுள்ளனர். இஸ்ரேல் உட்பட எந்த தேசத்தின் மீதும் எங்களுக்கு விரோதம் இல்லை" என்று 40 வயதுடைய ஒருவர் பிபிசியிடம் பகிர்ந்துள்ள குரல் செய்தியில் கூறியுள்ளார்.

50களில் உள்ள மற்றொரு பெண், “இந்த தாக்குதல் பிராந்திய போராக விரிவடைந்து, இரான், இஸ்ரேல் மற்றும் அதன் மேற்கத்திய நட்பு நாடுகளுக்கு இடையே ஒரு முழு அளவிலான மோதலுக்கு வழிவகுக்கும்” என்று கவலை தெரிவித்தார்.

அமெரிக்க டாலருக்கு நிகரான இரானிய நாணயத்தின் மதிப்பு மேலும் சரிந்ததில் இந்த உணர்வு பிரதிபலித்தது.

இஸ்ரேலின் பதிலடி குறித்த அச்சம்

தாக்குதலைத் தொடர்ந்து இஸ்ரேல் மற்றும் அதன் நட்பு நாடுகளின் பதிலடி எவ்வாறு இருக்கும் என இரானியர்கள் அஞ்சுவதால், சனிக்கிழமை இரவு மக்களிடையே பதற்றம் அதிகரித்தது. உணவு, எரிபொருள் போன்ற அத்தியாவசிய பொருட்களை பதுக்கி வைக்க குடிமக்கள் முயன்றனர்.

தெஹ்ரான் மற்றும் பிற முக்கிய நகரங்களில் உள்ள பெட்ரோல் நிலையங்களில் மக்கள் நீண்ட வரிசைகளில் நிற்கத் தொடங்கினர். அதே நேரத்தில் பல்பொருள் அங்காடிகளும் நிரம்பி வழிந்தன.

இஸ்ரேல் தனது எல்லையை நோக்கி ஏவப்பட்ட 300 ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களில் 99% வெற்றிகரமாக இடைமறித்ததாகக் கூறினாலும், இரானிய அதிகாரிகள் தாக்குதலை ஒரு வெற்றியாகக் கொண்டாடினர். உயிரிழப்புகளைப் பொருட்படுத்தாமல் அதன் அடையாள தாக்கத்தை வலியுறுத்தினர்.

இரானின் தலைமைத் தளபதி, மேஜர் ஜெனரல் முகமது பாகேரி, “இஸ்ரேலுக்குள் எங்களது இலக்குகளில் ‘இஸ்ரேலிய நோட்டம் விமானப்படை தளமும்’ இருந்தது. இரண்டு வாரங்களுக்கு முன்பு இங்கிருந்து கிளம்பிய இஸ்ரேலிய F35 விமானங்கள், டமாஸ்கஸில் உள்ள இரானிய துணைத் தூதரகத்தில் தாக்குதல் நடத்தின. இதன் விளைவாக 7 ஐஆர்ஜிசி தளபதிகள் கொல்லப்பட்டனர்” என்று கூறினார்.

இரான் தனது இலக்கை அடைந்துவிட்டதாகவும், மேற்கொண்டு தாக்குதல் நடவடிக்கைகளைத் தொடரும் எண்ணம் இல்லை என்றும் அவர் கூறினார்.

இஸ்ரேலின் எந்தவொரு புதிய தாக்குதலுக்கும் இரானிடமிருந்து கணிசமான, வலுவான ஒரு பதிலடி கிடைக்கும் என்று இரானிய ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி எச்சரித்தார்.

புதிய தாக்குதல்களை முன்னெடுக்காமல், இப்போது நிலவும் போர் பதற்றத்தை தணிப்பது தான் இரானின் நோக்கமாக இருக்கிறது. இராணுவ அதிகாரிகளும் அரசாங்க அதிகாரிகளும் நேற்றிரவு நடத்தப்பட்ட தாக்குதலில் திருப்தி அடைந்ததாகத் தெரிகிறது.

இஸ்ரேல் தனது தற்காப்பு நடவடிக்கைகளில் கவனம் செலுத்துவதற்கு போதுமான நேரத்தை இரான் வழங்கியிருப்பதன் மூலம், மேலும் சேதம் அல்லது உயிரிழப்புகளை ஏற்படுத்தும் எண்ணம் இரானுக்கு இல்லை என்பது தெரிகிறது.

சட்டப்பூர்வமான நெருக்கடி

பல இரானியர்கள் பிராந்தியத்தில் இரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல் படையின் தலையீடுகளுக்கு எதிராகவே உள்ளனர்.

இரானில் சமீபத்திய போராட்டங்களின் போது, ​​"காஸா வேண்டாம், லெபனான் வேண்டாம், இரானுக்காக என் உயிரைத் தியாகம் செய்கிறேன்" போன்ற கோஷங்கள் பரவலாக எதிரொலித்தன.

வெளிநாடுகளில் போராளிகளை ஒருங்கமைக்கவும், அவர்களுக்கு பயிற்சி கொடுக்கவும், ஆயுதம் வழங்கவும் இரான் செலவழித்த பல பில்லியன் டாலர் நிதியை தங்கள் நாட்டின் வளர்ச்சி மற்றும் எதிர்கால நலனுக்காக சிறப்பாக பயன்படுத்தியிருக்கலாம் என்று பல இரானியர்கள் வாதிடுகின்றனர்.

பிராந்தியத்தில் இரானின் தலையீடு காரணமாக பொருளாதாரத் தடைகளும் தனிமைப்படுத்தலும் நிகழ்ந்தது, நாட்டின் பொருளாதாரத்தை இது முடக்கியது. இப்போதும் பொருளாதாரம் தள்ளாடுகிறது, பணவீக்கம் விண்ணை முட்டும் அளவுக்கு இருக்கிறது. இரானிய நடுத்தர வர்க்கத்தினருக்கும் கூட வாழ்க்கையைச் சந்திப்பது மிகவும் கடினமாகி வருகிறது.

இரானில் இருந்து நாம் கேட்கும் குரல்கள், தற்போதைய ஆட்சிக்கு அதன் பெரும்பாலான மக்களிடம் ஆதரவு இல்லை என்பதைக் குறிக்கிறது. குறிப்பாக இந்த போர் சூழலின் போது.

1980களில் இராக் உடனான எட்டு ஆண்டு கால மோதலின் போது காணப்பட்ட மக்கள் ஒற்றுமையைப் போல இப்போது இல்லை. லட்சக்கணக்கான இளம் இரானியர்கள் சதாம் ஹுசைனின் ஆட்சிக்கு எதிராக தங்கள் நாட்டை அப்போது ஆர்வத்துடன் பாதுகாத்தனர்.

இரான்- இராக் போரில் ஈடுபட்ட ஒரு ஓய்வு பெற்ற ராணுவ வீரர், அரசாங்கத்திற்கு தனது எதிர்ப்பையும், விமர்சகர்களை அரசு கடுமையாக ஒடுக்குவதையும் கண்டித்தார். “நான் (இரான் அரசு) அவர்களுக்காக இனி ஒருபோதும் போராட மாட்டேன்” என்று உறுதியாகக் கூறினார்.

லெபனான், சிரியா மற்றும் இராக்கில் உள்ள ஷியா போராளிகள் மற்றும் யேமனில் உள்ள ஹூதிகளின் வலுவான ஆதரவு இரானுக்கு உள்ளது. அதோடு சேர்த்து சக்தி வாய்ந்த ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களை மேற்கொள்ளக் கூடிய திறனும் இரானுக்கு உள்ளது. ஆனால் இஸ்ரேலுக்கு எதிராக தாக்குதலில் குறைந்தபட்ச உயிரிழப்புகளை ஏற்படுத்தும் நோக்கில் தான் இரான் இதைச் செய்ததாகத் தெரிகிறது.

போரின் போது, ​​இரான் இஸ்லாமியக் குடியரசு இஸ்ரேல் மற்றும் அதன் வல்லமைமிக்க நட்பு நாடான அமெரிக்காவின் இராணுவ வலிமையைப் பற்றி மட்டும் கவலைப்படவில்லை, உள்நாட்டில் இதனால் ஏற்படும் அமைதியின்மை குறித்தும் கவலை கொண்டுள்ளது.

மஹ்சா அமினி (ஹிஜாப் அணிவதற்கு எதிராகப் போராடிய பெண்) போலீஸ் காவலில் இறந்ததைத் தொடர்ந்து 2022ஆம் ஆண்டு நடந்த போராட்டங்கள் ஆட்சியின் பலவீனத்தை எடுத்துக்காட்டுகின்றன.

இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவுடனான போரின் போது இரானிய பாதுகாப்புப் படைகள், ஐஆர்ஜிசியின் கட்டுப்பாட்டு மற்றும் தகவல் தொடர்பு மையங்கள் குறிவைக்கப்பட்டால், அது இரானிய ஆட்சியை எதிர்ப்பவர்களை மீண்டும் எழுச்சிபெற வைக்கும் என்று இரான் இஸ்லாமிய குடியரசில் உள்ள பல அதிகாரிகள், அரசியல்வாதிகள் அஞ்சுகின்றனர்.

அத்தகைய சாத்தியமான மக்கள் எழுச்சியைக் கட்டுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது இப்போதைய அரசு.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)