பொன்முடி: நாடாளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டால் மீண்டும் அமைச்சராவதில் சிக்கல் ஏற்படுமா?

பொன்முடி மீண்டும் அமைச்சராக முடியுமா

பட மூலாதாரம், KPonmudi/Facebook

    • எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன்
    • பதவி, பிபிசி தமிழ்

உச்சநீதிமன்றம் தீர்ப்பை நிறுத்தி வைத்ததால், மீண்டும் சட்டமன்ற உறுப்பினராகியிருக்கும் முன்னாள் அமைச்சர் க. பொன்முடிக்கு மீண்டும் அமைச்சர் பதவியை அளிக்க நினைக்கிறது தி.மு.க. அரசு.

ஆனால், ஆளுநர் டெல்லி சென்றிருப்பதால் பதவியேற்பு தாமதமாகிறது. நாடாளுமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டால், புதிய அமைச்சர் பதவியேற்க முடியுமா?

ஆளுநரின் டெல்லி பயணம்

பொன்முடி மீண்டும் அமைச்சராக முடியுமா

பட மூலாதாரம், ANI

வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்ததாகத் தொடரப்பட்ட வழக்கில் முன்னாள் தமிழக அமைச்சர் க. பொன்முடிக்கு எதிராக வந்த தீர்ப்பை நிறுத்தி வைக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருக்கும் நிலையில், அவரது தகுதி இழப்பு நீக்கப்பட்டிருக்கிறது. அவரை மீண்டும் அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்து வைக்க வேண்டுமென முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆளுநர் ஆர்.என். ரவிக்கு கடிதம் எழுதியிருக்கிறார்.

உயர்கல்வித் துறையின் அமைச்சராக இருந்த க.பொன்முடியும் அவரது மனைவி விசாலாட்சியும் வருமானத்திற்கு அதிகமாக 1.75 கோடி ரூபாய் அளவுக்கு சொத்து சேர்த்ததாக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் விசாரணை நீதிமன்றம் அவர்களை விடுவித்தது. இதை எதிர்த்து செய்யப்பட்ட மேல் முறையீட்டில், க. பொன்முடிக்கும் அவரது மனைவிக்கும் 3 ஆண்டு சிறை தண்டனையும் 50 லட்ச ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தது.

இதனால், மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின்படி க. பொன்முடி தனது எம்.எல்.ஏ. பதவியையும் அமைச்சர் பதவியையும் இழந்தார். இந்தத் தீர்ப்பை எதிர்த்து க. பொன்முடியும் அவரது மனைவியும் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர்.

இதற்கிடையில் க. பொன்முடியின் திருக்கோவிலூர் சட்டமன்றத் தொகுதி காலியாக இருப்பதாக மார்ச் 5ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், பொன்முடியின் மேல் முறையீட்டு வழக்கு கடந்த 11ஆம் தேதி இந்திய உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது க.பொன்முடி வழக்கு மீதான தீர்ப்பை நிறுத்தி வைப்பதாக உச்ச நீதிமன்றம் அறிவித்தது.

இதையடுத்து, திருக்கோவிலூர் சட்டமன்றத் தொகுதி காலியாக இருப்பதாக வெளியிடப்பட்ட அரசாணை ரத்துசெய்யப்படுவதாக சபாநாயகர் மு. அப்பாவு வெளியிட்ட உத்தரவு தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்பட்டது. அதேநேரம், க. பொன்முடிக்கு தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி மார்ச் 13ஆம் தேதி மாலையோ, அடுத்த நாள் காலையோ பதவிப் பிரமாணம் செய்துவைக்க வேண்டுமென தமிழக அரசின் சார்பில் கடிதம் ஒன்று மார்ச் 13ஆம் தேதி பிற்பகலில் அனுப்பப்பட்டது.

ஆனால், மார்ச் 13ஆம் தேதி மாலை பதவியேற்பு நடக்காத நிலையில், 14ஆம் தேதி காலையில் ஆளுநர் டெல்லிக்குப் புறப்பட்டுச் சென்றுவிட்டார். அவர் 16ஆம் தேதி சென்னை திரும்புவார் எனக் கூறப்படுகிறது. இதற்குப் பிறகே க. பொன்முடிக்கான பதவியேற்பு விழா நடக்கக்கூடும்.

தேர்தல் நடத்தை விதிகள் அமலானால் சிக்கலா?

பொன்முடி மீண்டும் அமைச்சராக முடியுமா

பட மூலாதாரம், APPAVU M

படக்குறிப்பு, தமிழ்நாடு சட்டமன்றத்தின் சபாநாயகர் மு. அப்பாவு

ஆனால், மார்ச் 16ஆம் தேதிக்குள் இந்தியத் தேர்தல் ஆணையம் நாடாளுமன்றத் தேர்தல் தேதிகளை அறிவித்துவிட்டால், தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துவிடும். அந்த நிலையில், க. பொன்முடி அமைச்சராகப் பதவியேற்க முடியுமா என்ற கேள்வி எழுந்திருக்கிறது.

இருப்பினும், தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வருவதற்கும் மாநில அரசில் ஒருவர் அமைச்சராகப் பதவியேற்பதற்கும் எந்தத் தொடர்பும் இல்லையெனத் தெரிவித்திருக்கிறார் தமிழ்நாடு சட்டமன்றத்தின் சபாநாயகரான மு. அப்பாவு.

வியாழக்கிழமையன்று செய்தியாளர்களிடம் பேசிய மு. அப்பாவு, "பதவிப் பிரமாணத்தைத் தவிர்ப்பதற்காக ஆளுநர் டெல்லி சென்றிருக்கிறாரா என்பது எனக்குத் தெரியாது. ஆனால், நாடாளுமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டாலும்கூட, மாநிலத்தில் அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்து வைப்பதில் எந்தத் தடையும் இருக்காது என்றே கருதுகிறேன்" எனக் கூறியிருக்கிறார்.

இதற்கு ஒரு முன்னுதாரணத்தையும் மு. அப்பாவு சுட்டிக்காட்டினார். ராஜஸ்தானில் சட்டமன்றத் தேர்தல்கள் 2023ஆம் ஆண்டு நவம்பர் 25ஆம் தேதி நடைபெற்றன. ஆனால், வாக்குப்பதிவு நடப்பதற்கு முன்பாக கரன்பூர் தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளரும் எம்.எல்.ஏவுமான குர்மீத் சிங் கூனர் நவம்பர் 15ஆம் தேதி மரணமடைந்தார். இதையடுத்து அந்தத் தொகுதிக்கான தேர்தல் தள்ளிவைக்கப்பட்டு, பிற தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்றது.

இந்தத் தேர்தலில் பா.ஜ.க. பெரும் வெற்றி பெற்றது. கரன்பூர் தொகுதிக்கு ஜனவரி 5ஆம் தேதி இடைத் தேர்தல் நடக்குமென அறிவிக்கப்பட்டது. இந்த இடைத்தேர்தலில் பா.ஜ.கவின் சார்பில் சுரேந்திர பால் சிங்கும் காங்கிரஸ் கட்சியின் சார்பில் குர்மீத் சிங்கின் மகன் ருபீந்தர் சிங் கூனரும் போட்டியிட்டனர்.

இடைத்தேர்தலுக்கு ஆறு நாட்களே இருக்கும்போது, டிசம்பர் 30ஆம் தேதி ராஜஸ்தானில் புதிய அமைச்சரவை பதவியேற்றது. மொத்தம் 21 அமைச்சர்கள் பதவியேற்றனர். அதில் ஒருவராக பா.ஜ.கவின் இடைத்தேர்தல் வேட்பாளரான சுரேந்திர பால் சிங்கும் இடம்பெற்றிருந்தார்.

தேர்தல் நடைமுறைகள் அமலில் இருக்கும்போது இதுபோல பதவியேற்கச் செய்வது தவறு என எதிர்க்கட்சியான காங்கிரஸ் கடும் கண்டனம் தெரிவித்தது. இருந்தபோதும் அவர் பதவியேற்றுக் கொணடார் (ஆனால், அந்த இடைத்தேர்தலில் அவர் தோல்வியடைந்தார். அமைச்சர் பதவியையும் ராஜினாமா செய்தார்).

இந்த நிகழ்வைச் சுட்டிக்காட்டிய சபாநாயகர் அப்பாவு, தேர்தல் நடைமுறைகள் அமலில் இருக்கும்போது அமைச்சர் பதவியேற்பதில் பிரச்னை இருக்காது எனத் தெரிவித்தார்.

சட்ட வல்லுநர்களிடம் ஆலோசனை கேட்டுள்ள ஆளுநர்

பொன்முடி மீண்டும் அமைச்சராக முடியுமா

பட மூலாதாரம், Getty Images

பொன்முடிக்கு பதவிப் பிரமாணம் செய்து வைக்கும்படி முதலமைச்சர் கடிதம் எழுதியிருக்கும் நிலையில், இது தொடர்பாக சட்ட வல்லுநர்களின் கருத்தை ஆளுநர் கேட்டிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நாடாளுமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டுவிட்டால், மாநிலங்களில் புதிதாக ஒரு அமைச்சர் பதவியேற்பது தேர்தல் விதிமுறைகளை மீறுவதாகுமா என இந்தியாவின் முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் என். கோபாலசுவாமியிடம் கேட்டபோது, "அதற்கும் இதற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. மாநிலங்களில் அமைச்சர்கள் பதவியேற்க முடியும்" எனத் தெரிவித்தார்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)