சென்னை கோட்டையில் இருந்து இந்தியர்களை அடிமைகளாக விற்ற ஆங்கிலேய ஆளுநர் பற்றிய கொடூரமான கதை

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், கீதா பாண்டே
- பதவி, பிபிசி நியூஸ் , டெல்லி
கடந்த மாதம் தான் யேல் பல்கலைக்கழகம் தனது ஆரம்பகால முன்னாள் தலைவர்கள் மற்றும் நன்கொடையாளர்கள் அடிமை முறையை ஆதரித்ததற்காக முறையான மன்னிப்பை கேட்டுக்கொண்டது.
அப்போது தொடங்கி, சமீப காலமாக இந்தியாவில் தீவிரமாக தேடப்பட்டு வரும் பெயர்களில் ஒன்று எலிஹு யேல். ஆம், நீங்கள் நினைப்பது போல் யேல் பல்கலைக்கழகத்திற்கு இவரது பெயர்தான் சூட்டப்பட்டுள்ளது.
யேல் 17 ஆம் நூற்றாண்டில் தென்னிந்தியாவைச் சேர்ந்த மெட்ராஸில் (இன்றைய சென்னை) பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனியின் மிக அதிகாரமிக்க ஆளுநர்-அதிபராக (Governor-President) பணியாற்றினார். அந்த சமயத்தில் £1,162 ($1,486) மதிப்பிலான நன்கொடையை அவர் இந்த கல்லூரிக்கு வழங்கியதன் விளைவாக அந்த கல்விநிலையம் தனது பெயரை யேல் பல்கலைக்கழகம் என்று மாற்றிக்கொண்டது.
"இதை பணவீக்கத்தோடு கணக்கிட்டுப் பார்த்தால் இன்றைய நிலைக்கு 206,000 பவுண்டுகளுக்கு (ரூ.2.2 கோடி) சமம்" என்று பிபிசியிடம் தெரிவிக்கிறார் வரலாற்றாசிரியர் பேராசிரியர் ஜோசப் யான்னியெல்லி. இவர் பர்மிங்காமின் ஆஸ்டன் பல்கலைக்கழகத்தில் நவீன வரலாறு பாடம் பயிற்றுவிப்பது மட்டுமின்றி, இந்தியப் பெருங்கடல் அடிமை வர்த்தகத்துடன் யேலிற்கு உள்ள தொடர்புகளை ஆய்வு செய்துள்ளார்.
“இன்றைய மதிப்புக்கு இது ஒரு பெரிய தொகை இல்லை என்றாலும், அன்றைய தேதியில் இந்த பணத்தை கொண்டு கல்லூரிக்கு புதிய கட்டடமே கட்ட முடிந்தது.”
பல்வேறு தருணங்களில் அறிவாளி, அரிய விஷயங்களை சேகரிப்பவர் மற்றும் தேவாலயங்கள், தொண்டு நிறுவனங்களுக்கு தாராளமாக நன்கொடை வழங்கும் நன்கொடையாளர் என அறியப்பட்ட எலிஹு யேல், தற்போது இந்தியாவைக் கொள்ளையடித்த ஒரு காலனித்துவவாதியாக, அடிமைகளை வியாபாரம் செய்த மோசமான மனிதராக விவாதங்களில் அடிபட்டு வருகிறார்.
அதன் இருள்படர்ந்த கடந்த காலம் குறித்து மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்ற தொடர் விசாரணைக்கு பிறகு பல்கலைக்கழகம் தனது பொதுமன்னிப்பை வெளியிட்டுள்ளது. யேல் வரலாற்றாசிரியர் டேவிட் ப்ளைட்டின் தலைமையில், ஆராய்ச்சியாளர்கள் குழு, "பல்கலைக்கழகத்திற்கும் அடிமைத்தனத்திற்கும் இடையிலான வரலாறு, யேல் கட்டிடத்தை கட்டுவதில் அடிமைகளின் பங்கு" ஆகியவை குறித்து ஆய்வில் ஈடுபட்டதாக பல்கலைக்கழகம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
மேலும் எலிஹு யேல் அடிமைத்தனத்திலிருந்து எவ்வளவு லாபம் ஈட்டினார் என்பது பற்றிய பார்வையை தரும் பேராசிரியர் ப்ளைட்டின் 448 பக்க அறிக்கை- யேல் அண்ட் ஸ்லேவரி: எ ஹிஸ்டரி - என்ற பெயரில் வெளியிடப்பட்டுள்ளது.
"அளவு மற்றும் நோக்கம் ஆகிய இரண்டிலும் அட்லாண்டிக் அடிமை வர்த்தகத்தோடு பொருந்திப்போகும் இந்தியப் பெருங்கடல் அடிமை வர்த்தகம் 19 ஆம் நூற்றாண்டு வரை அவ்வளவு விரிவானதாக இருந்திருக்கவில்லை. ஆனால் இந்தியத் துணைக்கண்டத்தில், அதன் கடலோரப் பகுதிகளிலும், உள்நாடு மற்றும் தீவுகளிலும் மனிதர்களின் வர்த்தகம் மிகவும் பழமையானது." என்று எழுதியுள்ளார் பேராசிரியர் ப்ளைட்.
கூடுதலாக, யேல் "கிழக்கிந்திய கம்பெனிக்காக அடிமைப்படுத்தப்பட்ட மக்கள் குறித்த கணக்குகள், விற்பனை, முடிவுகள் ஆகியவற்றை கண்காணித்தது குறித்தும்” அதில் குறிப்பிட்டுள்ளார் அவர்.
100 ஆண்டு அட்லாண்டிக் அடிமை வர்த்தகத்தில் 12 மில்லியன் அடிமைகள் விற்கப்பட்டுள்ளதாக பேராசிரியர் யான்னியெல்லி குறிப்பிடுகிறார். அதே சமயம், தென்கிழக்கு ஆசியாவை, மத்திய கிழக்கு மற்றும் ஆப்பிரிக்காவுடன் இணைக்கும் மிகப் பெரிய புவியியல் பகுதியை உள்ளடக்கிய இந்தியப் பெருங்கடல் வர்த்தகம், பெரிதாக இருந்தது என்று தான் நம்புவதாகவும், இந்த வர்த்தகம் நீண்ட காலம் நடந்ததாகவும் அவர் கூறுகிறார்.

பட மூலாதாரம், Getty Images
இந்த வரலாறு குறித்த விசாரணை முக்கியமானது. 1701 இல் நியூ ஹேவன், கனெக்டிகட்டில் நிறுவப்பட்ட, யேல் கல்விவளாகம் அமெரிக்காவின் மூன்றாவது பழமையான உயர்கல்வி நிறுவனமாகும். மேலும் அதன் முன்னாள் மாணவர்களில் பல அமெரிக்க அதிபர்களும், முக்கிய நபர்களும் உள்ளனர்.
எலிஹு யேல் 1713 ஆம் ஆண்டு தொடங்கி, இறையியல், இலக்கியம், மருத்துவம், வரலாறு மற்றும் கட்டடக்கலை குறித்த நூற்றுக்கணக்கான புத்தகங்கள், முதலாம் ஜார்ஜின் உருவப்படம், சிறந்த ஜவுளி பொருட்கள் மற்றும் பிற மதிப்புமிக்க பரிசுகளை கனெக்டிகட் கல்விநிலையத்திற்கு வழங்கியுள்ளார்.
அவற்றை விற்றதன் மூலம் கிடைத்த பணத்தில் ஒரு புதிய மூன்று மாடி கட்டடம் கட்டப்பட்டது. இதன்விளைவாக அவரது பெயரும் அந்த கல்லூரிக்கு சூட்டப்பட்டது.
19 ஆம் நூற்றாண்டில் எலிஹு யேலின் வாழ்க்கை வரலாற்றை எழுதிய வரலாற்றாசிரியரும் குடும்ப உறுப்பினருமான ரோட்னி ஹோரேஸ் யேல், “இந்த நன்கொடை மூலமே யேல் பல்கலைக்கழகத்தின் செயல்பாடு உறுதிசெய்யப்பட்டதாக,” கூறுகிறார்,
மேலும் இந்த பல்கலைக்கழகத்திற்கு யேலின் பெயரை சூட்டியதின் மூலம், அவருக்கு நேரடி வாரிசுகள் இல்லை என்றாலும் கூட, அவருக்கு சாகா வரம் கிடைத்தது போல் ஆகிவிட்டது என்று குறிப்பிடுகிறார்.
பல்கலைக்கழகம் தனது மன்னிப்பு அறிக்கையில், "பன்முகத்தன்மையை மேம்படுத்தவும், சமத்துவத்தை ஆதரிக்கவும், வரவேற்பு, அனைவரையும் உள்ளடக்குதல் மற்றும் மரியாதைக்குரிய சூழலை மேம்படுத்தவும்" உறுதியளிப்பதாக தெரிவித்துள்ளது.
மேலும் 30% கறுப்பினத்தவர்களை கொண்டுள்ள "நியூ ஹேவனில் அனைவரையும் உள்ளடக்கிய பொருளாதார வளர்ச்சியை" முன்னெடுப்பதற்கான பணிகளை மேற்கொள்வதாகவும் கூறியுள்ளது.
ஆனால், அதன் பட்டியலில் பல்கலைக்கழகத்தின் பெயரை மாற்றுவதற்கான எந்த திட்டமும் இல்லை. கடந்த காலத்திலும் கூட இந்த கோரிக்கையை அது நிராகரித்துள்ளது.
சென்னை ஆளுநராக யேல் இருந்தபோது நடந்தவை என்னென்ன?
1649 ஏப்ரல் மாதம் பாஸ்டனில் பிறந்த எலிஹு யேல் மூன்று வயதில் தனது குடும்பத்துடன் இங்கிலாந்துக்கு குடிபெயர்ந்தார். பின், 1672 ஆம் ஆண்டில் கிழக்கிந்திய கம்பெனியில் ஒரு எழுத்தர் வேலையில் இணைந்த அவர் அதற்காக மதராஸில் உள்ள வெள்ளையர்கள் காலனியான செயின்ட் ஜார்ஜ் கோட்டைக்கு வந்தார்.
கம்பெனியால் வழங்கப்படும் சம்பளம் "மேலிருந்து கீழ் வரை மிகவும் குறைவானது - அதாவது ஒரு ஆண்டுக்கு ஆளுநருக்கு 100 பவுண்ட் முதல் பயிற்சி பணியாளர்களுக்கு 5 பவுண்ட் வரை என்ற அளவில் சம்பளம் வழங்கப்பட்டது" என்று ரோட்னி ஹோரேஸ் யேல் கூறுகிறார்.
இதன் காரணமாக கிழக்கிந்திய நிறுவனத்தின் ஊழியர்கள் சொந்த லாபத்திற்காக தனியாக வியாபாரத்தில் ஈடுபட்டதாக அவரும் மற்ற வரலாற்றாசிரியர்களும் கூறுகிறார்கள்.
25 ஆண்டுகளில், எழுத்தரிலிருந்து பதவி உயர்ந்து, இறுதியாக 1687 இல் ஆளுநராக நியமிக்கப்பட்டார் யேல். அதில் 1692 வரை ஐந்து ஆண்டுகள் அவர் நீடித்தார். ஆனால், "சொந்த வர்த்தகத்திற்காக நிறுவன நிதியைப் பயன்படுத்தியதற்காகவும், தன்னிச்சையான முடிவுகளை எடுத்தது மற்றும் கடமை தவறியது” உள்ளிட்ட காரணங்களுக்காக அவர் பணிநீக்கம் செய்யப்பட்டார்.
தனது 51 வயதில் 1699 ஆம் ஆண்டு அவர் இங்கிலாந்து திரும்பியபோது, பெரும் செல்வந்தராக இருந்தார். கிரேட் ஆர்மண்ட் தெருவில் உள்ள குயின்ஸ் சதுக்கத்தில் பெரிய வீடு ஒன்றையும் கட்டியிருந்தார். மேலும் அதில் மதிப்புமில்ல கலைப்பொருட்களை வாங்கி நிரப்பினார்.
பிரிட்டிஷ் ஆவணங்கள்படி, ஜூலை 1721 இல் அவர் இறந்த பிறகு, "பரந்துபட்ட தொண்டு செய்த ஒரு மனிதராக" அவர் அறியப்பட்டார். ஆனால், அவர் மெட்ராஸில் இருந்த காலத்தில், அவர் கொடுமையானவர் மற்றும் பேராசை பிடித்தவராகவும் அறியப்பட்டதாக வரலாற்றாசிரியர்கள் கூறுகின்றனர்.
அவர் ஆளுநராக இருந்த காலத்தில், நடைபெற்ற ஊழல் மற்றும் கவுன்சில் உறுப்பினர்களின் இயல்புக்கு மாறான மரணங்கள் உள்ளிட்ட பல குற்றசாட்டுகளை இவர் மீது சுமத்தினார் இவருக்கு பிறகு வந்த அதிகாரி.

பட மூலாதாரம், Getty Images
மேலும், "இவரது அனுமதியின்றி இவருக்குப் பிடித்த குதிரையில் சவாரி செய்ததற்காக" குதிரை கண்காணிப்பாளர் ஒருவரை தூக்கிலிட உத்தரவிட்டதாகவும் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டதாக” ரோட்னி ஹோரேஸ் யேல் எழுதியுள்ளார்.
ஆனால், குற்றச்சாட்டுகளுக்கான ஆதாரங்களில் சில சந்தேகங்கள் இருப்பதாக குறிப்பிடும் வரலாற்றாசிரியர், இருப்பினும் அதை "அவரது குணாதிசயங்களோடு பொருத்திப்பார்க்கும் போது மறுப்பதிற்கில்லை” என்றும் கூறுகிறார்.
"மெட்ராஸில் (சென்னை) அதிகாரத்தில் இருந்த சமயத்தில் இவரது ஆணவம், கொடுமை, சிற்றின்பம் மற்றும் பேராசை ஆகியவற்றிற்கு, அவரது சுற்றுப்புறமே மிக பாதுகாப்பானதாக இருந்திருக்க வேண்டும்" என்று அவர் எழுதியுள்ளார்.
ஆனால் ரோட்னி ஹோரேஸ் யேல், அடிமை வர்த்தகத்தில் அவரது மூதாதையர் பங்கு குறித்தும் விளக்குகிறார்.
செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் உள்ள காலனித்துவம் குறித்த ஆவணங்களை ஆராய்ந்த பேராசிரியர் யான்னியெல்லி, "எல்லாமே கறுப்பு-வெள்ளையாக உள்ளன" என்று கூறுகிறார், மேலும் எலிஹு யேல் ஒரு தீவிரமான மற்றும் வெற்றிகரமான அடிமை வர்த்தக வியாபாரி என்பதை மறுப்பதற்கில்லை என்றும் தெரிவிக்கிறார்.
யேல் அடிமை வர்த்தகத்தில் இருந்து எவ்வளவு பணம் சம்பாதித்தார் என்று யூகிக்க முடியாது. காரணம் அவர் அடிமை வர்த்தகம் மட்டுமின்றி வைரங்கள் மற்றும் ஜவுளிகள் ஆகியவற்றையும் வியாபாரம் செய்தார். இதனால், இவை ஒவ்வொன்றின் வருமானத்தையும் தனித்தனியாக பிரிப்பது முடியாத காரியம். ஆனால், யேலின் பெரும்பான்மையான சொத்துக்களில் குறிப்பிட்ட பகுதி அடிமைத்தனத்தில் இருந்து வந்திருக்கலாம் என்று யான்னியெல்லி நம்புகிறார்.
"அவரது பணம் சம்பாதிக்கும் திறன் மகத்தானது என்று என்னால் சொல்ல முடியும். அவர் இந்தியப் பெருங்கடல் அடிமை வர்த்தகத்தை வழிநடத்தும் பொறுப்பில் இருந்தார். 1680 களில், தென்னிந்தியாவில் ஏற்பட்ட பேரழிவு தரும் பஞ்சம், தொழிலாளர் எண்ணிக்கை அதிகரிக்க வழிவகுத்தது. இதை யேல் மற்றும் நிறுவனத்தின் பிற அதிகாரிகள் பயன்படுத்திக் கொண்டனர். நூற்றுக்கணக்கான அடிமைகளை வாங்கி, செயின்ட் ஹெலினாவில் உள்ள ஆங்கிலேயர் காலனிக்கு அனுப்பினார்கள்" என்று அவர் கூறினார்.
மேலும், "ஐரோப்பா செல்லும் ஒவ்வொரு கப்பலிலும் குறைந்தது 10 அடிமைகளை அனுப்ப வேண்டும் என்று முடிவெடுக்கப்பட்ட ஒரு கூட்டத்தில் பங்கேற்றார் அவர். 1687 இல் ஒரு மாதத்தில் மட்டும், செயின்ட் ஜார்ஜ் கோட்டை குறைந்தது 665 அடிமைகளை ஏற்றுமதி செய்திருந்தது. மெட்ராஸின் ஆளுநர்-அதிபராக இருந்த யேல் ஒரு கப்பலுக்கு 10 அடிமைகள் என்ற விதியை அமல்படுத்தியிருந்தார்" என்று தெரிவிக்கிறார் ரோட்னி ஹோரேஸ் யேல்.

பட மூலாதாரம், Getty Images
யேல் பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவரான பேராசிரியர் யான்னியெல்லி, பத்தாண்டுகளுக்கு முன் ஆளுநர் யேல் காலர் அணிவிக்கப்பட்ட ஓர் அடிமையுடன் இருப்பது போன்ற படத்தை பார்த்ததற்கு பின் தான், எலிஹு யேலுக்கும் அடிமைத்தனத்திற்கும் உள்ள தொடர்பு குறித்து ஆராயத் தொடங்கினார்.
அந்த புகழ்பெற்ற ஓவியம், யேலை அடிமைத்தனத்துடன் தொடர்புபடுத்தும் மிக மோசமான ஆவணங்களில் ஒன்று என்று அவர் கூறுகிறார். 1719 மற்றும் 1721 க்கு இடையில் தேதியிடப்பட்ட அந்த படத்தில், யேல் மற்றும் மூன்று வெள்ளையர்களுக்கு அடிமை ஒருவர் பணிவிடை செய்வதை போல் இருக்கும்.
"அந்த சமயம் இங்கிலாந்தில் அடிமைத்தனம் எங்கும் காணப்பட்டது. இந்நிலையில் அந்த படத்தில் காணப்படும் அந்த அடிமையை அவர் சொந்தமாக வைத்திருந்தாரா அல்லது அவருடைய குடும்ப உறுப்பினரா என்பது தெளிவாகத் தெரியவில்லை. ஆனால் அடிமைத்தனம் அவரது அன்றாட வாழ்வில் ஒன்றாக இருந்ததை இது காட்டுகிறது."
யேலின் வாழ்க்கை குறித்து ஆய்வு செய்த முந்தைய வரலாற்றாசிரியர்கள் சிலர் அடிமைத்தனத்துடனான அவரது தொடர்பைக் குறைத்து மதிப்பிடுவதற்குக் காரணம், கடந்த காலங்களில் வரலாறு குறித்த தரவுகளை பயன்படுத்துவதற்கான வாய்ப்பு முக குறைவாக இருந்ததாக இருக்கலாம் என்கிறார் பேராசிரியர் யான்னெல்லி கூறுகிறார்.
ஆனால் கிழக்கிந்திய கம்பெனியின் கூட்டங்களின் விரிவான குறிப்புகள் தற்போது டிஜிட்டல் வழியில் கிடைக்கின்றன. மேலும் சமீபத்திய அறிஞர்கள் இந்த ஆதாரங்களைக் கவனிக்காமல் இருக்க காரணம், "ஒன்று அவர்கள் அதைப் பார்க்க விரும்பவில்லை அல்லது அதை முக்கியமானதாகக் கருதாமல் இருக்கலாம்” என்று குறிப்பிடுகிறார் அவர்.
மேலும், யேல் மெட்ராஸ் ஆளுநராக இருந்தபோது அடிமை வியாபாரத்தை தடை செய்ய உத்தரவிட்ட ஒரு அடிமை ஒழிப்புவாதி என்ற கூற்றையும் பேராசிரியர் யான்னியெல்லி மறுக்கிறார்.
“யேல் அடிமைத்தனத்தை முடிவுக்குக் கொண்டுவந்தார் என்று சொல்வது அவரது உண்மையான முகத்தை மறைக்கும் முயற்சியாகும். உண்மையான ஆவணங்களைப் பார்த்தால், இந்தியாவின் முகலாய ஆட்சியாளர்தான் அதை நிறுத்த சொல்லி வலியுறுத்தியுள்ளனர். ஆனால் யேல், ஒரு வருடம் கழித்து மடகாஸ்கரில் இருந்து இந்தோனேசியாவிற்கு அடிமைகளைக் கொண்டு செல்ல உத்தரவிட்டார்.”
"அடிமைத்தனம் மற்றும் ஏகாதிபத்தியத்திற்கான எதிர்ப்பு 15 ஆம் நூற்றாண்டிலேயே தொடங்கிவிட்டது. மேலும் அடிமைத்தன ஒழிப்புவாதிகள் பலரும் இருந்தனர். ஆனால், நிச்சயமாக அவர்களில் ஒருவரல்ல யேல்"
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












