இந்தியா vs ஆஸ்திரேலியா: இறுதிச்சுற்றில் பாகிஸ்தான் வீரர்களின் ஆதரவு யாருக்கு?

பட மூலாதாரம், Getty Images
கொல்கத்தாவில் நடைபெற்ற உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் அரையிறுதி ஆட்டத்தில் தென்னாப்பிரிக்காவை 3 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆஸ்திரேலியா இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
ஞாயிற்றுக்கிழமை ஆமதாபாத்தில் நடக்கவுள்ள இறுதிப்போட்டியில் இந்தியா ஆஸ்திரேலியாவுடன் மோதுகிறது.
இந்த உலகக்கோப்பையில் இந்தியா இதுவரை 10 ஆட்டங்களில் விளையாடி அனைத்திலும் வெற்றி பெற்றுள்ளது. அதேநேரம் ஆஸ்திரேலியா ஆடிய 10 ஆட்டங்களில் 8இல் வென்றுள்ளது.
குரூப் ஆட்டத்திலும் இந்தியா ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது. தென்னாப்பிரிக்கா இந்தியாவை இறுதிப்போட்டியில் எதிர்கொண்டிருந்தால் இந்தியா கோப்பையைக் கைப்பற்றுவது எளிதாக இருந்திருக்கும் என்று கூறப்படுகிறது.
கடந்த 2003ஆம் ஆண்டு இறுதிப்போட்டியில் இந்தியா ஆஸ்திரேலியாவிடம் தோற்றது பெரும்பான்மை ரசிகர்களுக்கு இன்னமும் நினைவிருக்கிறது.
இருப்பினும், 2003ஆம் ஆண்டு இருந்த இந்திய அணிக்கும் 2023ஆம் ஆண்டில் இருக்கும் இந்திய அணிக்கும் இடையே நிறைய வித்தியாசங்கள் உள்ளன. அதுமட்டுமின்றி இப்போதைய அணியை 20 ஆண்டுகளுக்கு முன்பு இறுதிப்போட்டியில் ஏற்பட்ட தோல்வியுடன் ஒப்பிட்டுப் பார்க்க முடியாது.
இந்திய அணி குறித்து சோயிப் மாலிக் என்ன கூறினார்?

பட மூலாதாரம், Getty Images
தற்போது உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி பெறுமா அல்லது இந்தியா வெற்றி பெறுமா என்பது குறித்துப் பல விவாதங்கள் நடந்து வருகின்றன. இந்நிலையில் இந்த இறுதிப்போட்டி குறித்து முன்னாள் கிரிக்கெட் வீரர்களும் கிரிக்கெட் வல்லுநர்களும் என்ன சொல்கிறார்கள் என்பதை இங்கு பார்ப்போம்.
ஆஸ்திரேலிய அணி பலம் வாய்ந்த அணியாக இருந்தாலும் இந்தியாவும் இந்த முறை சிறப்பான ஃபார்மில் உள்ளதாக நிபுணர்கள் கருதுகின்றனர். அத்தகைய சூழ்நிலையில், இருவருக்கும் இடையிலான போட்டி மிகவும் சுவாரஸ்யமாக இருக்கும்.
பாகிஸ்தானில் கிரிக்கெட்டை அடிப்படையாகக் கொண்டு வெளியாகும் ‘தி பெவிலியன்’ என்ற விளையாட்டு நிகழ்ச்சியில் இதற்குப் பதிலளித்த பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சோயிப் மாலிக், ஆஸ்திரேலியா இந்த முறை உலகக்கோப்பையை வெல்லும் என்று கூறியிருந்தார்.
“போட்டியில் அழுத்தம் ஏற்படும்போது, அதை ஆஸ்திரேலிய அணி கையாள்வதைப் போல் வேறு யாரும் கையாள மாட்டார்கள். இந்திய அணியைப் பொறுத்தவரை, அனைத்துமே அவர்களுக்குச் சாதகமாக உள்ளது. ஆனால், அன்றைய தினம் அவர்களுக்கு மோசமான நாளாகவும் இருக்க வாய்ப்புள்ளது,” என்று கூறினார் சோயிப் மாலிக்.
“இந்த உலகக்கோப்பைத் தொடரில் இந்திய அணியின் ஆட்டம் சிறப்பாக உள்ளது. இந்திய அணி தொடர்ந்து வெற்றி பெற்று வருகிறது. இதுபோன்ற சூழ்நிலையில் இந்தியாவிடம் பல எதிர்பார்ப்புகள் உள்ளன,” என்றும் சோயிப் மாலிக் கூறினார்.
இந்திய அணியின் கிரிக்கெட்டை பாராட்டிய வாசிம் அக்ரம்

பட மூலாதாரம், Getty Images
அதே நிகழ்ச்சியில் பேசிய பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் வாசிம் அக்ரம், “இந்திய அணி சொந்த மண்ணில், சொந்த மைதானத்தில் ஆடுவதால் அவர்களுக்கு வெற்றி வாய்ப்பு அதிகம்,” என்று கூறினார்.
“இந்தியா தென்னாப்பிரிக்காவை இறுதிப்போட்டியில் எதிர்கொண்டிருந்தால் நன்றாக இருந்திருக்கும். அவர்கள் கோப்பையை வெல்வது எளிதாக இருந்திருக்கும். ஆனால், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக விளையாடுவது இந்திய அணிக்கு சவாலாக இருக்கும்,” என்றும் வாசிம் அக்ரம் கூறினார்.
மேலும், “ஆஸ்திரேலியா ஒரு கடினமான அணி. அவர்கள் களத்தில் நன்கு போராடுகிறார்கள். இரு அணிகளும் வலிமையாக உள்ளன, அழுத்தத்தை நன்கு கையாள்கின்றன. இந்திய அணி அதன் சிறந்த ஃபார்மில் உள்ளது,” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
“இருப்பினும் ஆஸ்திரேலிய அணியில் ஒரு பிரச்னை உள்ளது. முதல் இரண்டு பேட்டர்கள் அவுட்டாகி பெவிலியன் திரும்பினால், ஒட்டுமொத்த அணியும் நிலைகுலைந்து போகும் ஆபத்து ஆஸ்திரேலியாவிடம் உள்ளது. ஆனால், இந்த விஷயத்தில் இந்தியா வலுவாக உள்ளது,” என்றும் வாசிம் அக்ரம் கூறினார்.
அரையிறுதியில் தனி ஆளாக ஏழு விக்கெட்டுகளை வீழ்த்திய முகமது ஷமி குறித்துப் பேசிய வாசிம் அக்ரம், “அவர் கேள்விகளைக் கேட்கிறார், புதிய விஷயங்களைக் கற்றுக் கொள்கிறார். அவரது சொந்த உழைப்பின் பலனால்தான் அவர் இப்போதைய நிலையில் இருக்கிறார்,” என்று கூறினார்.
ரோஹித் சர்மாவை புகழ்ந்த பாகிஸ்தான் முன்னாள் வீரர்

பட மூலாதாரம், Getty Images
இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் மோதுவது குறித்துப் பேசிய பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மொயீன் கான், “இந்தியாவில் ஐந்து பந்துவீச்சாளர்கள் உள்ளனர். ஆனால், அவர்களில் ஒருவர் காயமடைந்தால் இந்தியா நிலைமை மோசமடையுமா என்பதைப் பார்க்க வேண்டும்,” என்று கூறினார்.
“அதுவும் நடக்கலாம். அப்படி நடந்துவிட்டால், அவர்களிடம் வேறு வழி எதுவும் இல்லை. இருப்பினும் இந்திய அணியில் நல்ல பந்துவீச்சாளர்கள் உள்ளனர். அவர்களது ஆட்டத்தில் கவனம் செலுத்தப்பட வேண்டும்,” என்று தெரிவித்தார்.
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் மற்றொரு முன்னாள் கேப்டனான மிஸ்பா உல்-ஹக், “ஆட்டத்தில் முக்கியமாக தாக்கம் செலுத்தும் வீரர்கள் ஐந்து பேர் இந்திய அணியில் உள்ளனர். ஆனால், ஆஸ்திரேலிய அணியில் அப்படி யாரும் இல்லை,” என்று கூறினார்.
அதேநேரம் ஏ.ஆர்.ஒய் தொலைக்காட்சியின் நிகழ்ச்சி ஒன்றில், கிரிக்கெட் வீரர் இமாத் வாசிம், ரோஹித் சர்மாவை பற்றி நம்பிக்கை தெரிவித்ததோடு அவர் இன்று உலகின் தலைசிறந்த கேப்டன்களில் ஒருவர் என்றும் கூறினார்.
இறுதிப்போட்டியில் வெற்றி பெற்ற பிறகு ரோஹித் சர்மா ஓய்வுபெற வேண்டுமா என்று அவரிடம் ஒரு கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அவர், “அப்படி எதுவும் செய்யக்கூடாது, அவருக்கு ஓய்வு கொடுக்கப்படக்கூடாது” என்று பதிலளித்தார்.
எந்த அணி, எத்தனை முறை வெற்றி பெற்றுள்ளது?

பட மூலாதாரம், Getty Images
இதுவரை 13 உலகக்கோப்பை போட்டிகள் நடத்தப்பட்டுள்ளன.
- ஆஸ்திரேலியா இதுவரை ஐந்து போட்டிகளில் (1987, 1999, 2003, 2007, 2015) வெற்றி பெற்றுள்ளது. இரண்டு முறை (1975, 1996) இறுதிப் போட்டியில் தோல்வியடைந்துள்ளது.
- இந்தியா இதுவரை இரண்டு முறை (1983, 2011) இறுதிப் போட்டியில் வென்றுள்ளது. ஒருமுறை (2003) இறுதிப்போட்டியில் தோல்வியடைந்துள்ளது.
- மேற்கிந்தியத் தீவுகள் இதுவரை இரண்டு முறை (1975, 1979) வெற்றி பெற்றுள்ளது, ஒருமுறை (1983) இறுதிப் போட்டியில் தோல்வியடைந்துள்ளது. மேற்கிந்தியத் தீவுகள் அணி இந்த ஆண்டு உலகக்கோப்பையில் பங்கேற்கவில்லை. இந்தத் தொடருக்கு மேறிந்தியத் தீவுகள் அணி தகுதி பெறவில்லை.
- இங்கிலாந்து, இலங்கை, பாகிஸ்தான் ஆகிய அணிகள் ஒருமுறை உலகக்கோப்பையை வென்றுள்ளனர். கடந்த 2019ஆம் ஆண்டில் இங்கிலாந்தும் 1996இல் இலங்கையும் 1992இல் பாகிஸ்தானும் உலகக்கோப்பையை வென்றன.
- அதேநேரம் இங்கிலாந்து மூன்று முறையும் (1979, 1987, 1992) இலங்கை இரண்டு முறையும் (2007, 2011) பாகிஸ்தான் ஒருமுறையும் (1999) உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் தோல்வியடைந்துள்ளன.
- நியூசிலாந்து இரண்டு முறை (2015, 2019) உலகக்கோப்பை இறுதிப்போட்டிக்கு வந்துள்ளது, அந்த இரண்டு முறையும் தோல்வியைத் தழுவியது.
- தென்னாப்பிரிக்கா இதுவரை உலகக்கோப்பை இறுதிப்போட்டிக்கு முன்னேறியதில்லை.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












