தி கேரளா ஸ்டோரி: என்னென்ன காரணங்களின் அடிப்படையில் ஒரு திரைப்படம் தடை செய்யப்படுகிறது?

பட மூலாதாரம், Twitter/adah_sharma
- எழுதியவர், விஷ்ணுபிரகாஷ் நல்லதம்பி
- பதவி, பிபிசி தமிழ்
'தி கேரளா ஸ்டோரி' திரைப்படம் நேற்று வெளியானது. இந்த திரைப்படத்தின் டிரெய்லர் வெளியான பிறகு, கேரளா மாநிலத்தில் கடும் எதிர்ப்பு உருவானது.
தமிழ்நாட்டில் இந்த திரைப்படத்தை திரையிடும் தியேட்டர்களுக்கு பாதுகாப்பு அளிக்க காவல்துறை உத்தரவிட்டு இருந்தது.
'தி கேரளா ஸ்டோரி' திரைப்படத்துக்கு தடை விதிக்க கோரி சென்னை உயர் நீதிமன்றம், கேரளா உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் ஆகிய நீதிமன்றங்களில் பல்வேறு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன.
ஆனால் இந்த வழக்குகளை நீதிமன்றங்கள் தள்ளுபடி செய்ததையடுத்து 'தி கேரளா ஸ்டோரி' திரைப்படம் வெளியானது.
இதே போல அண்மையில் தமிழில் வெளியான புர்கா திரைப்படத்தையும் தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.
ஒரு திரைப்படத்தை தடை செய்ய முடியுமா? என்ன காரணங்களுக்காக திரைப்படங்கள் தடை செய்யப்படுகின்றன? சினிமா தணிக்கை வாரியம் படங்களுக்கு சான்று வழங்கும் போது எந்த விதிகளின் அடிப்படையில் தணிக்கை செய்கிறது? இதுவரை தடை செய்யப்பட்ட படங்கள் என்னென்ன?
சினிமா தணிக்கை வாரியத்தின் விதிகள் என்ன சொல்கிறது?

பட மூலாதாரம், Getty Images
சென்சார் போர்டு என்று அழைக்கப்படும் மத்திய திரைப்படத் தணிக்கை வாரியம் இந்தியாவில் வெளியாகும் விளம்பரப்படம், ஆவணப்படம், திரைப்படங்களை தணிக்கை செய்து சான்றிதழ்களை வழங்கி வருகிறது.
ஒளிபரப்புத்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் மத்திய திரைப்படத் தணிக்கை வாரியம், இந்திய சினிமாடோகிராஃப் சட்டத்தின் அடிப்படையில் சென்சார் செய்யப்பட்டு சான்றிதழ்களை வழங்கி வருகிறது.
- 'யு' - எல்லா வயதினரும் பார்க்க உகந்த படம்.
- 'யு/ஏ’- 12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் பெற்றோரின் துணையோடு மட்டுமே பார்க்க வேண்டிய படம்.
- 'ஏ’- 18 வயது நிறைவடைந்தவர்கள் மட்டுமே பார்க்க உகந்த படம்.
இதுமட்டுமின்றி இன்னும் சில சிறப்பு தணிக்கை சான்றிதழ்களை சென்சார் போர்டு வழங்குகிறது
திரைப்படத் தணிக்கை வாரியம் ஒரு படத்தை தணிக்கை செய்ய சில விதிமுறைகளை வகுத்துள்ளது. இந்த விதிமுறைகளை தனது இணையதளத்தில் பதிவு செய்துள்ளது. இந்த விதிகளின் அடிப்படையில் ஆட்சேபத்திற்கு உரிய காட்சிகளை நீக்கினால் மட்டுமே படத்திற்கு அனுமதி அளிக்கும் சான்றிதழ்களை வழங்கி வருகிறது.
- சமூகத்தின் மதிப்புகள் மற்றும் தரத்தை ஒட்டியதாக திரைப்படம் இருக்க வேண்டும்
- கலைப்படைப்பும், படைப்புச் சுதந்திரமும் அவசியமின்றி தடுக்கப்படாது
- ஆரோக்கியமான பொழுதுபோக்காக திரைப்படங்கள் இருக்க வேண்டும்.
- முடிந்தவரை அழகியல் ரீதியாகவும், சினிமா ரீதியாகவும் நல்ல தரத்துடன் இருக்க வேண்டும்
இவை திரைப்படத் தணிக்கை வாரியத்தின் நோக்கங்கள் என்றும், இதற்கு உட்பட்டு எடுக்கப்படும் திரைப்படங்களுக்கு உரிய சான்றிதழ் வழங்கப்படுகிறது.
மேலே குறிப்பிட்டவை தணிக்கை வாரியத்தின் பரந்த நோக்கமாக அறியப்படுகிறது. இதன்கீழ் பல்வேறு விதிமுறைகள் இடம்பெற்றுள்ளன.
- சமூகத்திற்கு எதிரான வன்முறைகள் நியாயப்படுத்துவதாகவும், புகழ்வதாகவும் இருக்கக்கூடாது
- படத்தில் இடம்பெறும் வன்முறை காட்சிகளோ, வார்த்தைகளோ வன்முறையை தூண்டும் வகையில் இருக்கக்கூடாது
- விலங்குகளை துன்புறுத்தும் காட்சிகள் இடம்பெறக்கூடாது
- குழந்தைகள், மாற்றுத்திறனாளிகளை துன்புறுத்தும் வகையில் காட்சிகள் படமாக்கக்கூடாது
- புகைப்படம், மதுபானம் பயன்படுத்துவதை உற்சாகமூட்டும் வகையில் காட்சிகள் படமாக்கக்கூடாது
- பெண்களை தவறாக சித்தரிக்கும் காட்சிகள் இடம்பெறக்கூடாது
- குறிப்பிட மதம், இனத்தைச் சேர்ந்தவர்களை இழிவுப்படுத்தும் வகையில் காட்சிகள் இடம்பெறக்கூடாது
- இந்தியாவின் இறையாண்மை, ஒருமைப்பாடு கேள்விக்கு உள்ளாக்கும் வகையில் காட்சிகள் இடம்பெறக்கூடாது
இதுபோல இன்னும் பல விதிமுறைகளை சென்சார் போர்டு வகுத்துள்ளது. இந்த விதிகளை மீறி எடுக்கப்பட்டும் காட்சிகளை நீக்கினால் மட்டுமே படத்திற்கு அனுமதி அளிக்கும் சான்றிதழ் வழங்கப்படும்.
திரைப்பட வாரியம் அனுமதி மறுத்தால், அதை மேல்முறையீடு செய்யும் நடைமுறையும் உள்ளது.
அண்மையில் சர்ச்சைக்குள்ளான தி கேரளா ஸ்டோரி திரைப்படத்திற்கு 'ஏ’ சான்றிதழ் வழங்கியுள்ளது சென்சார் போர்டு. இதுமட்டுமின்றி இந்த படத்தில் இடம்பெற்றுள்ள 10 காட்சிகள் வரை நீக்கவும் படக்குழுவுக்கு சென்சார் போர்டு பரிந்துரை வழங்கியுள்ளது.
தள்ளுபடி செய்யப்பட்ட வழக்குகள்

பட மூலாதாரம், Getty Images
தி கேரளா ஸ்டோரி திரைப்படத்தை வெளியிட தடை விதிக்கக் கோரி, பல்வேறு அமைப்புகள் மற்றும் தனிநபர்கள் பொது நல மனுவை தாக்கல் செய்து இருந்தனர்.
இந்த மனுக்கள் சென்னை உயர் நீதிமன்றம், கேரளா உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றங்கள் தாக்கல் செய்யப்பட்டு இருந்தன.
ஆனால் தாக்கல் செய்யப்பட்ட அனைத்து மனுக்களை நீதிமன்றங்கள் தள்ளுபடி செய்து, படம் வெளியாக தடையேதும் விதிக்கவில்லை.
சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பொது நல வழக்கில், "எந்த ஆரய்ச்சியும் செய்யாமல், எந்த அதிகாரப்பூர்வ தகவலும் இல்லாமல், உண்மை சம்பவம் எனக் கூறி நாட்டில் மத நல்லிணக்கத்துக்கு ஊறு விளைவிக்கும் வகையிலும், கலவரத்தை தூண்டும் வகையிலும் எடுக்கப்பட்டுள்ள இந்த படத்துக்கு தடை விதிக்க வேண்டும்," என்று மனுதாரர் குறிப்பிட்டு இருந்தார்.
"உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் எடுக்கப்பட்ட கற்பனை கதை," என படக்குழு பதிலளித்தது.
"படத்திற்கு எதிராக கேரளா உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றங்களில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. அதனால் படத்தை வெளியிட தமிழக அரசுக்கு ஆதரவோ, எதிர்ப்போ இல்லை," என வாதம் முன்வைக்கப்பட்டது.
இறுதியாக கேரளா உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளதைச் சுட்டிக்காட்டி, சென்னை உயர் நீதிமன்றம் எந்த உத்தரவையும் பிறப்பிக்க முடியாது எனக் கூறி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
இதே போல கேரள உயர் நீதிமன்றத்தில் தி கேரளா ஸ்டோரி படத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
அந்த தீர்ப்பில், "சென்சார் போர்டு இந்த படத்திற்கு உரிய அனுமதியை வழங்கி இருக்கிறது. அனைவருக்கும் இருக்கும் படைப்புச் சுதந்திரம், கருத்துச் சுதந்திரத்தின் அடிப்படையில் இந்த படம் உருவாகி இருக்கிறது. குறிப்பிட்ட மதத்திற்கு எதிராக இந்த படத்தில் எந்த காட்சிகளும் இல்லை," என நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த திரைப்படத்திற்கு தடை விதிக்கக்கோரி உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது.
இது தொடர்பாக பிபிசி தமிழிடம் பேசிய சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் விஜயன் சுப்ரமணியன், "உச்ச நீதிமன்றம் தனது உத்தரவில் முக்கியமான ஒன்றைக் குறிப்பிட்டுள்ளது. சென்சார் போர்டு மட்டுமே தணிக்கை வழங்கும் பொறுப்பில் இருக்கிறது. அதற்கு மேல் யாருமில்லை, No Super censor Board என்று தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது," எனத் தெரிவித்தார்.
நீதிமன்றம் எப்போது தடை விதிக்கிறது?

பட மூலாதாரம், ANI
இந்தியாவில் உள்ள நீதிமன்றங்கள் பல தருணங்களில் திரைப்படங்களை வெளியிட தடை விதித்து இருக்கின்றன. இப்படி விதிக்கப்படும் தடை எந்த அடிப்படையில் விதிக்கப்படுகின்றன என பிபிசி தமிழிடம் பகிர்ந்து கொண்டார் வழக்கறிஞர் விஜயன் சுப்ரமணியன்.
நிதி - படத்தின் தயாரிப்பாளருக்கு கடன் அளித்த நபரோ, நிறுவனமோ படம் வெளியாகும் முன் ஒப்புக்கொண்டபடி பணத்தை திருப்பி அளிக்காத நிலையில் நீதிமன்றங்கள் மூலமாக தடை விதிக்கப்பட்டுள்ளன.
தலைப்பு - படத்திற்கு வைக்கப்பட்ட டைட்டிலை வேறு ஒருவர் பதிவு செய்திருந்தால், காப்புரிமை சட்டத்தின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து படத்திற்கு எதிராக தடை வாங்க முடியும்.
கதைக்கரு - ஒரு திரைப்படத்தின் கதைக்கரு, அதாவது கதையின் ஒன்லைன் வேறு ஒருவரின் கதையுடன் ஒத்து போவதாக இருந்தால் அதற்கு எதிராக தடை பெற முடியும். ஆனால் பொதுவான அம்மா-மகன் பாசம், அப்பாவுக்காக பழிவாங்கும் மகன் போன்ற கதைக்கருவை காட்டி இந்த தடையை பெற முடியாது.
இது தவிர பல்வேறு காரணங்களுக்காக திரைப்படம் தொடர்பாக வழக்குகள் நீதிமன்றங்கள் வந்துள்ளன. மத நல்லிணக்கத்திற்கு எதிராக உள்ள படங்கள், குறிப்பிட்ட ஒரு சாதியை தவறாக சித்தரிக்கும் படங்கள் என பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்று விஜயன் சுப்ரமணியன் தெரிவித்தார்.
தடை செய்யப்பட்ட படங்கள்

பட மூலாதாரம், Getty Images
அரசியல் ரீதியிலான கருத்துகள், சமூகத்திற்கு எதிரான கருத்துகள் இருப்பதாக கூறி சில திரைப்படங்களுக்கு தடை விதிக்கப்பட்டு இருக்கிறது. அவற்றில் ஓரிரு படங்கள் தணிக்கை வாரியம் கூறிய காட்சிகளை நீக்கி அல்லது மேல் முறையீடு செய்து திரையரங்குகள், தொலைக்காட்சிகளில் வெளியாகி இருக்கின்றன.
தமிழ்நாட்டில் ஒரு சில வெளிமாநிலத்தைச் சேர்ந்த படங்கள் வெளியிட எதிர்ப்பு எழுந்தாலும், தமிழில் உருவாகி வெளியிட தடை விதிக்கப்பட்ட படங்களில் முக்கியமானது 'கிராமத்து அத்தியாயம்'. சாதிய அடக்குமுறைகளை விமர்சித்து வெளிவந்த இந்த திரைப்படத்திற்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டு, சில காலத்திற்கு படம் வெளியானது என்று பிபிசி தமிழிடம் பேசிய எழுத்தாளரும், வரலாற்றாளருமான தியடோர் பாஸ்கரன் தெரிவித்தார்.
இதே போல 'அக்ரஹாரத்தில் ஒரு கழுதை' என்ற தமிழ் படமும், வெளியான பிறகு தனது கருத்துகளுக்காக அரசியல் ரீதியாக விமர்சிக்கப்பட்டு தடை செய்யப்பட்டது. சில நாட்களுக்கு இந்தப்படம் மீண்டும் வெளியானது.
அக்ரஹாரத்தில் வசிக்கும் ஒரு பேராசிரியர் கழுதையை வளர்க்க அங்குள்ளவர்கள் எதிர்ப்பு தெரிவிக்கும் நிலையில், அவர்களுக்கு எதிராக அந்த பேராசியர் எப்படி செயல்படுகிறார் என்ற வகையில் இந்த திரைப்படம் உருவாக்கப்பட்டு இருக்கும் என்று தியடோர் பாஸ்கரன் கூறினார்.
இதுதவிர உட்தா பஞ்சாப், பாஞ்ச், பாண்டிட் குயின், ஃபயர், லிப்ஸ்டிக் அன்டர் மை புர்கா உள்ளிட்ட பல்வேறு படங்கள் அதன் கருத்துகளாக அரசியல் ரீதியாக விமர்சிக்கப்பட்டு தடை செய்யப்பட்டது. ஆனால் சில மாற்றங்களுடன் இந்த படங்கள் சில திரையரங்குகளில் வெளியானது. பல படங்கள் யுடியூப், விமியோ உள்ளிட்ட சமூக ஊடகங்களிலும், சில படங்கள் ஓடிடி தளங்களிலும் வெளியாகின.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












