சோமாலியா வறட்சி: இரண்டு சகோதரிகளின் உயிரைக் காப்பாற்ற போராடும் சிறுவன்

பட மூலாதாரம், BBC/ ED HABERSHON
தாஹிரின் சகோதரர் பசியால் இறந்துவிட்டார். தற்போது அவருடைய இரண்டு சகோதரிகள் நோய் மற்றும் ஊட்டச்சத்து குறைபாட்டுடன் போராடிக்கொண்டுள்ளனர். கடந்த 40 ஆண்டுகளாக மிக மோசமான வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள சோமாலியாவிலிருந்து வெளியேற வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளான ஒரு குடும்பத்தை மீண்டும் சந்திக்க பிபிசியின் ஆண்ட்ரூ ஹார்டிங் பைடோவாவுக்கு சென்றார்.
எச்சரிக்கை - இந்தக் கட்டுரையில் உள்ள சில விஷயங்கள் உங்களுக்கு சங்கடத்தைத் தரலாம்.
பதினோரு வயது தாஹிர் பைடோவாவின் எல்லையில் இருக்கும் தன்னுடைய குடிசை வீட்டில் இருந்து பிரதான சாலைக்கு அருகில் உள்ள தகரத்தால் மேற்கூரை போடப்பட்டுள்ள பள்ளிக்குச் செல்கிறார். தன்னிடம் உள்ள ஒரே சட்டை மற்றும் கால் சட்டையை அவர் அணிந்துள்ளார். மேலும் அவர் கையில் ஒரு புதிய புத்தகம் உள்ளது.
பள்ளியின் ஒரே ஆசிரியரான அப்துல்லா அகமது, கரும்பலகையில் வாரத்தின் ஆங்கில நாட்களை எழுதுகிறார். தாஹிரும் அவருடைய 50 வகுப்பு தோழர்களும் ‘சனி, ஞாயிறு, திங்கள்...’ என்று சத்தமாக வாசிக்கிறார்கள்.
சில நிமிடங்களுக்கு குழந்தைகள் உற்சாகமாக இருந்தனர். ஆனால், விரைவில் அவர்கள் கொட்டாவி விடவும் இருமவும் தொடங்கினர். பசி மற்றும் உடல்நலக் குறைபாட்டின் அறிகுறிகளான இவை, பைடோவாவைச் சுற்றியுள்ள பாறை நிலம் முழுவதும் கடுமையான சத்தம் போல எதிரொலித்தது. 40 ஆண்டுகளாக சோமாலியாவைத் தாக்கிய மிக மோசமான வறட்சியால் இடம்பெயர்ந்த பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு சமீபத்திய மாதங்களில் பைடோ அடைக்கலம் கொடுத்துள்ளது.
"இந்தக் குழந்தைகளில் குறைந்தது 30 குழந்தைகள் காலை உணவை உட்கொள்ளவில்லை என்று நினைக்கிறேன். சில சமயங்களில் தங்கள் பசியைச் சொல்ல என்னிடம் வருகிறார்கள்" என்கிறார் அகமது.

பட மூலாதாரம், BBC/ ED HABERSHON
இந்தக் குழந்தைகள் கவனம் செலுத்துவதற்கு அல்லது வகுப்பிற்கு வருவதற்கு கூட சிரமப்படுவதாகவும் அவர் கூறுகிறார்.
ஆறு வாரங்களுக்கு முன்பு, தெற்கு சோமாலியாவின் இந்தப் பகுதிக்கு நாங்கள் சென்றபோது, தங்கள் குடிசைக்கு வெளியே தாய் ஃபாத்துமாவின் அருகில் அமர்ந்து, தாஹிர் அழுதுகொண்டிருந்தார்.
அதற்கு சில நாட்களுக்கு முன்பு, அவரது தம்பி சலாத் வறண்டு கிடக்கும் கிராமத்தில் இருந்து பைடோவாவுக்குச் செல்லும் வழியில் பட்டினியால் இறந்தார்.
இங்கிருந்து சில மீட்டர் தூரத்தில்தான் சலாத் அடக்கம் செய்யப்பட்டார். தற்போது அந்த இடத்தைச் சுற்றி அடைக்கலம் தேடி புதிதாக வந்தவர்கள் கட்டிய குடிசைகள் உள்ளன.

பட மூலாதாரம், BBC/ ED HABERSHON
தன்னுடைய சகோதரிகளைப் பற்றி தான் கவலைப்படுவதாக தாஹிர் கூறுகிறார். கடுமையாக இருமிய ஆறு வயது மரியம், தனக்கு தலைவலிப்பதாக கூறினார். அருகே நான்கு வயது மாலியூன் சோம்பலாக அமர்ந்திருந்தார்.
"இவள் உடல் சூடாக இருக்கிறது. இவளுக்கு அம்மை இருப்பதாக நான் நினைக்கிறேன். இவர்கள் இருவருக்கும் அம்மை இருக்கலாம்" என்று ஃபாத்துமா மாலியூனின் நெற்றியில் கை வைத்தார்.
ஊட்டச்சத்து குறைபாட்டால் நோயெதிர்ப்பு மண்டலம் பலவீனமடைந்த பல இளம் குழந்தைகள் சமீப மாதங்களில் பைடோவாவில் பரவிய தட்டம்மை மற்றும் நிமோனியாவிற்கு பலியாகினர்.
பைடோவாவின் மாகாண மருத்துவமனையில், மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் தீவிர சிகிச்சை வார்டில் உள்ள உடல் மெலிந்த குழந்தைகளின் கைகளில் மருந்துகளையும், மூக்கில் ஆக்ஸிஜன் குழாய்களையும் சொருகுகிறார்கள்.
பல குழந்தைகளின் கை மற்றும் கால்களில் கடுமையான தீக்காயங்கள் ஏற்பட்டது போன்று கருமையாகவும் கொப்புளமாகவும் இருந்தன. இது நீண்ட நாள் பட்டினியின் கடுமையான எதிர்வினை.

பட மூலாதாரம், BBC/ ED HABERSHON
"எங்களுக்கு கூடுதலாக சில உதவிப்பொருட்கள் கிடைத்துள்ளன. ஆனால் அவை போதுமானதாக இல்லை" என்கிறார் மருத்துவமனையின் தலைமை மருத்துவர் அப்துல்லாஹி யூசுப்.
"தற்போது உலகம் சோமாலியாவின் வறட்சியைக் கவனிக்கிறது. சர்வதேச நன்கொடையாளர்கள் இங்கு வருகை தருகிறார்கள். இதற்கு எங்களுக்கு போதுமான உதவி கிடைக்கிறது என்று அர்த்தமல்ல. அது விரைவில் நடக்கும் என்று நம்புகிறேன். இது நம்பிக்கை இழந்த சூழல்" என்றும் அவர் கூறுகிறார்.
ஆறு வாரங்களுக்கு முன்பு அவர் நிலைமை அச்சுறுத்துவதாகக் கூறினார். ஆனால், இன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை சற்று குறைந்திருப்பதாக அவர் கூறுகிறார். சில நாட்களாக பெய்த மழை குழந்தைகளை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதைவிட பயிர் செய்வதில் சில குடும்பங்களின் கவனத்தைத் தூண்டியிருக்கலாம் என்றும் அவர் கூறுகிறார்.
மோசமடையும் சூழல்
மீண்டும் முகாமிற்கு திரும்புவோம், பொதுக் குழாயில் இருந்து ஒரு பிளாஸ்டிக் கேனில் பிடித்த தண்ணீரை ஃபாத்துமா வீட்டிற்கு கொண்டுவந்தார். தாஹிர் ஒரு கிண்ணத்தை சுத்தம் செய்வதற்காக குடிசையிலிருந்து வெளியே வருகிறார்.
"என் பையன் எனக்குப் பெரிய உதவி. அவன் பெண் குழந்தைகளுக்கு நிறைய உதவி செய்கிறான்" என்கிறார் ஃபாத்துமா.
அவர் தண்ணீரைக் கொதிக்க வைக்கும்போது, அவருடைய தொலைபேசி ஒலித்தது. 60 வயதான அவர் கணவர் அதான் நூர், இஸ்லாமிய போராளிக் குழுவான அல்-ஷபாப்பின் கட்டுப்பாட்டில் இருக்கும் அவர்களுடைய கிராமத்தில் இருந்து அழைத்தார்.
அவருடன் பேசி முடித்ததும், “அவர் சோளம் பயிரிட்டிருப்பதாக கூறினார். அவர் நன்றாக இருக்கிறார். அவர் விரைவில் வந்துவிடுவார். ஆனால், எங்கள் கால்நடைகள் அனைத்தையும் இழந்துவிட்டோம். பயிர்களை மட்டும் வைத்து பிழைப்பு நடத்த வழியில்லை, அதனால் நான் இங்கு இருக்கிறேன். அந்த வாழ்க்கை முடிந்துவிட்டது” என்று ஃபாத்துமா கூறினார்.
"நிலைமை இன்னும் மோசமாகி வருகிறது. உணவு, பாதுகாப்பு மற்றும் தண்ணீரைத் தேடி நிறைய பேர் இங்கு வருகிறார்கள். பல குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாட்டால் இறக்கின்றனர். அரசு மற்றும் சர்வதேச சமூகம் இந்த நிலைமையை பஞ்சமாக கருதுமாறு கேட்டுக்கொள்கிறோம்" என்று சமூக கூட்டத்தில் பேசிய பைடோவாவின் மேயர் அப்துல்லா கூறினார்.
அந்தக் கூட்டம் நடைபெற்ற அரங்கத்திற்கு உள்ளே ராணுவ ஜெனரல் ஒருவர் உள்ளூர் மக்களை அல்-ஷபாப்பிடம் இருந்து அதிகரித்து வரும் அச்சுறுத்தல் பற்றி எச்சரித்துக் கொண்டிருந்தார். வெடிக்கும் சாதனங்கள் மற்றும் பதுங்கியிருந்து தாக்குபவர்களிடம் எச்சரிக்கையாக இருக்கும்படி அவர் கேட்டுக்கொண்டார்.
சோமாலிய அரசுப் படைகளும் போராளிப் படைகளும் தாக்குதலை விரிவுபடுத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது வறட்சியால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள சில கிராமப்புற சமூகங்களை அணுகுவதை மேலும் கடினமாக்குகிறது.
ஃபாத்துமா தனது இரண்டு நோய்வாய்ப்பட்ட குழந்தைகளையும் அவர்கள் குடிசையின் அழுக்குத் தரையில் ஒரு போர்வையில் படுக்க வைத்தார்.
குழந்தைகளை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல நாம் கேட்டபோது பாரம்பரிய மூலிகை மருந்துகளை பின்பற்றுவதாக் கூறி அவர் மறுத்துவிட்டார். பின்னர் சோர்வாக இருந்த பாத்துமாவும் குழந்தைகளின் அருகில் படுத்துக் கொண்டார்.
தன்னுடைய போர்வையில் இருந்து அவர்களைப் பார்த்துக் கொண்டிருந்த தாஹிர், அவர்கள் நலமடைய வேண்டும் என்று நான் விரும்புகிறேன் என்றார். பின்னர், அந்த சொற்றொடரை மேலும் இரண்டு முறை அவர் கூறினார்.
இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
YouTube பதிவின் முடிவு
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












