இந்தியாவை தொடர்ந்து 5வது நாடாக நிலவில் கால் பதித்த ஜப்பான் - சாதனையிலும் ஒரு சோதனை

பட மூலாதாரம், JAXA
- எழுதியவர், ஜொனாதன் அமோஸ்
- பதவி, அறிவியல் செய்தியாளர்
ஜப்பான் விண்கலம் வெற்றிகரமாக சந்திரனைத் தொட்டுவிட்டது. ஆனால், அதன் சூரிய சக்தி அமைப்பில் ஏற்பட்டுள்ள சிக்கலால், அதனால், நீண்ட நேரம் அங்கிருக்க முடியாது.
நிலவை ஆய்வு செய்வதற்காக ஜப்பான் அனுப்பிய ஒரு ஸ்மார்ட் தரையிறங்கி கலன் (ஸ்லிம்) சந்திர மேற்பரப்பில் அதன் மையப் பகுதியில் மெதுவாக தன்னை நிலைநிறுத்தியது.
அமெரிக்கா, சோவியத் யூனியன், சீனா மற்றும் இந்தியாவுக்குப் பிறகு நிலவில் தரையிறங்கிய ஐந்தாவது நாடாக ஜப்பான் சாதனை படைத்துள்ளது.
இருப்பினும், இந்தத் திட்டத்தை காப்பாற்ற ஜப்பான் விஞ்ஞானிகள் போராடி வருகின்றனர்.
இன்னும் முழுமையாக புரிந்து கொள்ளப்படாத காரணங்களுக்காக, விண்கலத்தில் உள்ள சூரிய மின்கலங்கள் மின்சாரத்தை உருவாக்காது.
இது ஸ்மார்ட் தரையிறங்கி கலனை, முழுவதுமாக அதன் பேட்டரிகளை நம்பியிருக்கச் செய்கிறது. மேலும், அந்த பேட்டரி படிப்படியாக குறையும். அதன் முடிவில், அந்த ரோபோ அமைதியான நிலைக்குச் சென்றுவிடும். அதனால், எந்தக் கட்டளைகளையும் பெற முடியாது. பூமியுடன் தொடர்புகொள்ள முடியாது.
விண்கலத்தை சரி செய்யும் பணியில் உள்ள பொறியாளர்கள், ஹீட்டர்களை அணைத்துவிட்டு, விண்கலத்தில் உள்ள படங்களை பதிவிறக்கம் செய்கிறார்கள். தரையிறங்கும் மென்பொருள் எவ்வளவு நன்றாக வேலை செய்தது என்பதைத் தெரிவிக்கும் தரவையும் அவர்கள் மீட்டெடுக்கிறார்கள்.
ஜப்பானிய விண்வெளி ஏஜென்சி (ஜாக்ஸா) அதிகாரிகள் ஸ்லிம் விண்கலம் தொழில்நுட்பக்கோளாறு காரணமாக வேலை செய்யவில்லை என்றால், உடனடியாக அந்தத் திட்டத்தை கைவிட மாட்டார்கள். சூரிய மின்கலங்கள் சூரியனைப் பார்ப்பதைத் தடுக்கும் வகையில் அமைந்திருப்பதற்கான சாத்தியங்கள் உள்ளன.
சந்திரனில் ஒளி கோணங்கள் மாறுவதால், விண்கலத்தை மீண்டும் உயிர்ப்பிக்க வாய்ப்புள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

பட மூலாதாரம், REUTERS
ஒரு செய்தியாளர் சந்திப்பில், ஜப்பான் தனது விண்கலத்தை நிலவில் தரையிறக்கியதாகக் கூற முடியுமா என்ற கேள்விக்கு, கூற முடியும் எனக் கூறியுள்ளார்.
"இத்திட்டம் வெற்றிபெறவில்லை என்றால், மிக அதிக வேகத்தில் நிலவின் மேற்பரப்புடன் மோதியிருக்கும். பின், விண்கலம் முற்றிலும் செயலிழந்திருக்கும்," என்று அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.
"ஆனால், விண்கலம் இன்னும் எங்களுக்கு தரவுகளை சரியாக அனுப்புகிறது. இதன் மூலம் நிலவில் விண்கலத்தை தரையிறக்க வேண்டும் என்ற எங்கள் நோக்கம் வெற்றி பெற்றுள்ளது."
ஸ்லிம் விண்கலம், இரண்டு சிறிய ரோவர்களை எடுத்துச் சென்றது. திட்டமிட்டபடி தரையிறக்கத்திற்கு முன்பு, அந்த இரண்டு ரோவர்களையும் வெற்றிகரமாக வெளியேற்றியது.
அகச்சிவப்பு(Infrared) கேமராவை சுமந்து செல்லும் இந்த விண்கலம், அடுத்த பதினைந்து நாட்களில் அங்கு நிலவியல் ஆய்வுகளில் ஈடுபட இருந்தது. ஆனால், தற்போது இருக்கும் நேரத்தில் அந்த ஆய்வை எவ்வளவு செய்ய முடியும் என்பது நிச்சயமற்றதாக உள்ளது.

பட மூலாதாரம், JAXA
இதுவரை பல்வேறு நாடுகள் மேற்கொண்ட முயற்சிகளின் அடிப்படையில், சந்திரனில் தரையிறங்குவது மிகவும் கடினமானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான முயற்சிகள் பாதி மட்டுமே வெற்றி பெற்றுள்ளன.
ஜப்பான் விண்வெளி நிறுவனமான (ஜாக்ஸா) புதிய துல்லியமான வழிசெலுத்தல் தொழில்நுட்பங்களில் நம்பிக்கை வைத்துள்ளது.
தரையிறங்கி கலனில் உள்ள கணினி, நிலவில் தரையிறங்கும்போது ஏற்படும் ஆபத்துகளை தவிர்க்க விரைவான பட செயலாக்க தொழில்நுட்பத்தை பயன்படுத்தியது.
பொறியாளர்கள் தங்களின் இலக்கு இடத்திலிருந்து 100மீ (330 அடி) தூரத்திற்கு செல்ல விரும்பினர். தற்போது, ஸ்லிம் விண்கலம் எவ்வளவு சிறப்பாகச் செயல்பட்டது என்பதை விண்கலத்தில் பதிவாகியுள்ள தரவுகளை ஆராய்வார்கள். விண்கலத்தில் உள்ள தொழில்நுட்பங்கள், வடிவமைக்கப்பட்டது போல் வேலை செய்தன என்பது ஆரம்ப அறிகுறிகள்.
"விண்கலத்தின் தரவுகளின்படி, ஸ்லிம் நிச்சயமாக 100மீ துல்லியத்துடன் தரையிறக்கத்தை அடைந்துவிட்டதாக நம்புகிறேன். நிச்சயமாக, நாங்கள் உங்களுக்கு முன்கூட்டியே தெரிவித்தது போல், தகவலைத் துல்லியமாக பகுப்பாய்வு செய்ய ஒரு மாதம் ஆகும்" என்றார் குனினாகா.

பட மூலாதாரம், NASA/LRO
ஜப்பான் ஏற்கனவே இரண்டு முறை தனது விண்கலத்தை விண்கற்களில் தரையிறக்கியுள்ள நிலையில், தற்போது நிலவில் தரையிறக்கம் செய்துள்ளது மற்றுமொரு சாதனையாக கருதப்படுகிறது.
இது அமெரிக்க விண்வெளி ஏஜென்சியின் (நாசா) ஆர்ட்டெமிஸ்(Artemis ) திட்டத்தில் குறிப்பிடத்தக்க பங்கை வகிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆர்ட்டெமிஸ் திட்டத்தின்படி, மனிதர்களை சந்திர மேற்பரப்பில் தரையிறக்கும் ஒரு முயற்சி.
கடந்த ஆண்டு, ஐஸ்பேஸ் என்ற தனியார் ஜப்பானிய நிறுவனம் இதேபோல் விண்கலத்தை நிலவில் தரையிறக்க முயன்றது. அதன் ஹகுடோ-ஆர்(Hakuto-R) விண்கலம், நிலவுக்கு மேலே உள்ள உயரம் குறித்து உள் கணினி குழப்பமடைந்து செயலிழந்தது.
ஜப்பானின் இந்த தரையிறக்கம் குறித்து பேசிய இங்கிலாந்தின் திறந்தவெளிப் பல்கலைக்கழகத்தி்ன் பேராசிரியர் சிமியோன் பார்பன், "என்னைப் பொறுத்தவரை, இது துல்லியமான தரையிறக்கத்தைப் பற்றியது. இது ஒரு பெரிய வெற்றி. அவர்களாக இருந்தால் நான் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பேன்," என்று அவர் பிபிசி செய்தியிடம் கூறினார்.
அதேபோல், ஸ்பேஸ்வாட்ச் குளோபல் என்ற டிஜிட்டல் இதழைச் சேர்ந்த டாக்டர் எம்மா காட்டி, ஜப்பான் கொண்டாடுவதற்கு நிறைய இருக்கிறது என்று கூறினார்.
"இது அவர்களுக்கு வரலாற்று சிறப்பு வாய்ந்தது; இது ஒரு கௌரவம். ஒரு நாடாக ஜப்பானுக்கு இது முக்கியமானது; அவர்கள் வைத்திருக்கும் அனைத்து முதலீட்டிற்கும் இது முக்கியமானது. சீனா அல்லது அமெரிக்கா போன்று பெரிய நாடுகளாக இல்லாத நாடுகளால், இதனை செய்ய முடியும் என்பதற்கான சான்று இது," என்றார் எம்மா காட்டி.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












