2K கிட்ஸ் சம்பளத்திற்கு மட்டுமே முன்னுரிமை கொடுக்கிறார்கள் என்ற கூற்று உண்மையா?

அதிகரித்து வரும் அன்றாட செலவுகள் மற்றும் பொருளாதாரத்தில் நிலவும் நிச்சயமற்ற தன்மையின் விளைவாக ஒவ்வொரு தனிமனிதனும் ஒருவித அழுத்தத்திற்கு ஆளாகிறான். குறிப்பாக, இன்றைய இளம் தலைமுறையினர் (Gen Z) பொருளாதார நெருக்கடியால் ஏற்படும் பாதிப்புகளை அதிகம் எதிர்கொள்ள வேண்டி உள்ளது.

இந்த பாதிப்புகளால் நிகழ்காலத்தில் அவர்களுக்கு ஏற்படும் தாக்கங்கள் எதிர்காலத்திலும் தொடரலாம் என கருதப்படுகிறது. 1997 -2012 காலகட்டத்தில் பிறந்தவர்கள் Gen Z என்று அழைக்கப்படுகின்றனர்.

பிரிட்டனின் பர்மிங்காமில் தேசிய சுகாதார சேவையில் (NHS) பணியாற்றி வந்தார் லாரன் என்ற 25 வயது இளம்பெண். மருத்துவமனை அறுவை சிகிச்சை அரங்கில் உதவியாளராக பணியாற்றி வந்த அவருக்கு 20 ஆயிரம் பவுண்ட் ஊதியமாக வழங்கப்பட்டது.

இந்த நிலையில், இன்னும் அதிகம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசையில் அவர் 2021 இல் லண்டனுக்கு குடிபெயர்ந்தார். அங்கு பர்மிங்காமில் ஏற்கெனவே அவர் பார்த்து கொண்டிருந்த அதே வேலைக்கு 38 ஆயிரம் பவுண்ட் சம்பளம் கிடைத்தது. ஆனாலும் நிதி தேவையை சமாளிப்பதில் லாரன் இன்னமும் சிக்கல்களை சந்திக்க தான் வேண்டி இருந்தது.

பிரிட்டனில் அதிகரித்துவரும் அன்றாட செலவுகள் மற்றும் பணவீக்கத்தின் காரணமாக, தன்னால் தற்போது கூடுதலாக சம்பாதிக்கும் பணத்தை சேமிக்க முடியவில்லை என்கிறார் லாரன்.

“ஆரம்பத்தில் குறைந்த ஊதியத்தில் பணியாற்றி வந்தாலும், தற்போது என் வயதுக்கேற்ப கௌரவமான சம்பளத்தை பெற்று வருகிறேன். ஆனால் இப்போதும் எனக்கு வரவை விட செலவுகள் அதிகமாகி கொண்டு தான் இருக்கின்றன” என்கிறார் அவர்.

வாரன் நன்கு சம்பாதிப்பவர் என்பதுடன், அநாவசியமான செலவுகள் எதையும் அவர் செய்வதில்லை. ஆனாலும் லண்டன் மாநகர வாழ்க்கை முறையில் அவரது சம்பாத்தியம் போதுமானதாக இல்லை.

வயதான காலத்தை நிம்மதியாக கழிக்க சொந்தமாக ஒரு வீட்டை வாங்க வேண்டும் என்ற ஆசை லாரனுக்கு தீவிரமாக உள்ளது. ஆனால் இந்த ஆசை நிறைவேற அவரின் நிதி நிலைமை இடம் கொடுக்குமா என்று சொல்ல முடியாத நிலையில் தான் அவர் இருக்கிறார்.

“எதிர்காலத்தை பற்றி எனக்கு பெரிதாக எண்ணம் எதுவும் இல்லை. தற்போது போலவே தொடர்ந்து பணிக்கு போவேன். என் வருமான வரம்புக்கு உட்பட்டு எதிர்காலத்தில் எங்காவது ஒரு வீட்டை வாங்குவேன்” என்று நம்பிக்கை தெரிவிக்கிறார் லாரன்.

பிரிட்டனை சேர்ந்த லாரனை போன்றே, பிற நாடுகளை சேர்ந்த இன்றைய இளம் தலைமுறையினரும் அன்றாட செலவினங்கள் அதிகரிப்பால் ஏற்படும் பொருளாதார ரீதியிலான சிக்கல்களை சந்தித்து வருகின்றனர்.

அமெரிக்காவின் பென்சில்வேனியாவை சேர்ந்த 25 வயது பெண் மேடி. முதியோர் இல்லத்தில் ஒருங்கிணைப்பாளராக பணியாற்றி வருகிறார். இவர் பட்டப்படிப்பு பயின்றிருந்தாலும், தற்போது வாங்கும் சம்பளம் அவருக்கு போதுமானதாக இல்லை.

“ஒரு மணி நேரத்திற்கு 17 டாலர்கள் மட்டுமே எனக்கு ஊதியம் வழங்கப்படுகிறது. ஒரு வாரத்துக்கு அதிகபட்சம் 35 மணி நேரம் தான் வேலை.

ஆனால், மாதந்தோறும் வீட்டு வாடகைக்கு மட்டும் 850 டாலர்கள் செலவிட வேண்டி உள்ளது. இவற்றுடன் கார், இன்டர்நெட் என ஒவ்வொன்றும் செலவு செய்ய வேண்டி உள்ளது. இந்த செலவுகளை எதிர்கொள்ள நான் சம்பாதிப்பது போதுமானதாக இல்லை” என்கிறார் மேடி.

லாரன், மேடி போன்று உலகம் முழுவதும் இளம் தலைமுறையை சேர்ந்த பெரும்பாலோர் பொருளாதார பாதுகாப்பற்ற நிலையிலேயே இருக்கின்றனர். தற்போதைய ஸ்திரமற்ற பொருளாதார தன்மை அவர்களை ஒருவித அழுத்தத்தில் ஆழ்த்துகிறது.

‘இன்றைய இளம் தலைமுறையினரில் மூன்றில் ஒரு பங்கு பேருக்கு அன்றாட செலவுகளை எதிர்கொள்வதே மிகப்பெரிய கவலையாக உள்ளது. 45 சதவீதம் பேருக்கு அவர்களின் சம்பாத்தியம், நிதி தேவைகளை பூர்த்தி செய்யும் அளவுக்கு இல்லை. 25 சதவீதத்துக்கு மேற்பட்ட இளைஞர்கள், தங்களின் ஓய்வுகாலத்தில் நிம்மதியாக கழிக்க முடியுமா என்பது குறித்து சந்தேகம் தெரிவிக்கின்றனர்” என்கிறது Deloitte’s 2022 global Gen Z and Millennial Survey.

பொருளாதாரத்தில் நிலவும் நிலையற்றதன்மை அனைவரையும் பாதித்தாலும், 1997 -2012 காலகட்டத்தில் பிறந்தவர்களே குறிப்பாக பணத்தை பற்றி கவலைப்படுபவர்களாக உள்ளனர். தங்களை தாங்களே நிலைநிறுத்திக் கொள்பவர்களாகவும், சிறப்பான எதிர்காலத்தை பற்றிய திட்டமிடுபவர்களாகவும் அவர்கள் திகழ்ந்தாலும், பணத்தை பற்றிய அவர்களின் கவலை சரியானதே என்கின்றனர் பொருளாதார வல்லுநர்கள்.

நேரத்தை செலவழிப்பதால் என்ன பயன்?

தற்போதைய பொருளாதார நிலவரங்களுக்கு முன்பே, நிதி தொடர்பான சவால்களை எதிர்கொள்ளும் பொருட்டு தங்களை தயார்படுத்தி கொள்வதில் இளம் தலைமுறையினர், அவர்களின் பெற்றோரை விட நிறைய சிரமங்களை சந்தித்தவர்களாகவே இருந்துள்ளனர். சொந்த வீடு வாங்குவது போன்ற விஷயங்களும் அவர்களின் இந்த பொருளாதார போராட்டத்தில் அடங்கும்.

உதாரணமாக, உலகப் பொருளாதார மன்றம், அமெரிக்கா மற்றும் தெற்கு ஐரோப்பாவில் மேற்கொண்ட ஆய்வு ஒன்றில், முந்தைய இளம் தலைமுறையினரை ஒப்பிடும்போது, இன்றைய இளம் தலைமுறையினரில் சொந்த வீடு வைத்திருக்க விரும்புவோர் மிகவும் குறைவு என தெரிய வந்துள்ளது.

இதற்கு பல காரணங்கள் இருந்தாலும், இன்று ஒருவரின் சராசரி வருமானத்துடன் ஒப்பிடும்போது, வீட்டின் சராசரி விலை படிப்படியாக அதிகரித்து வருவதே இதற்கு முக்கிய காரணமாக கருதப்படுகிறது.

இன்றைய இளம் தலைமுறைக்கு சொந்த வீடு வேண்டும் என்ற விருப்பம் இல்லை என்று அர்த்தமில்லை. இந்த விருப்பத்தை நிறைவேற்றி கொள்ள அவர்களால் இயலவில்லை என்பதே உண்மை என்கிறார் ஐரோப்பிய மத்திய வங்கியின் மூத்த பொருளாதார நிபுணரான கோன்சாலோ பாஸ் பார்டோ.

அத்துடன், அமெரிக்காவில் கடந்த 50 ஆண்டுகளாக பணியாளர்களுக்கு பொதுவாக ஊதிய உயர்வு இருந்து வந்தாலும், அன்றாட செலவுகள் அதைவிட அதிகரித்து வருகிறது. இது இளம்தலைமுறையை கடும் பொருளாதார நெருக்கடிக்கு ஆளாக்குகிறது. அமெரிக்காவின் முந்தைய தலைமுறையுடன் ஒப்பிடும்போது இன்றைய தலைமுறையினரின் வாங்கும் சக்தி 86 சதவீதம் குறைவாக உள்ளதாக ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.

கொரோனா பெருந்தொற்றின் தாக்கம்

உலகம் எதிர்கொண்ட கொரோனா எனும் பெருந்தொற்று, பொருளாதாரத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளதாக கருதப்படுகிறது.

இதுகுறித்து அமெரிக்காவில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்றில், முந்தைய தலைமுறையுடன் ஒப்பிடும்போது 18 -35 வயதுக்குட்பட்ட இளம் தலைமுறையினரில் 59 சதவீதம் பேர், கொரோனா ஏற்படுத்திய பொருளாதார தாக்கத்தின் காரணமாக சொந்த வீடு வாங்குவது போன்ற தங்களின் இலக்குகளை ஒத்திவைத்துள்ளனர் என தெரிய வந்துள்ளது. இந்த மனநிலை 35- 55 வயதுக்கு உட்பட்டவர்களில் 40 சதவீதமாகவும், 55 அல்லது அதற்கு மேற்பட்ட வயதினரில் 23 சதவீதமாகவும் உள்ளது என்று அந்த ஆய்வு கூறுகிறது.

உலகளாவிய பணவீக்கம் மற்றும் அதிகரித்து வரும் செலவுகள் கோடிக்கணக்கான மக்களின் அன்றாட வாழ்க்கையை கடுமையாக பாதித்துள்ளன.

பொருளாதாரம் தொடர்பான ஆய்வுகளை மேற்கொண்டு வரும் Refinitiv நிறுவனம் மற்றும் அமெரிக்கா மற்றும் பிரிட்டனின் தேசிய புள்ளியியல் துறைகளின் தரவுகள்படி, ஆகஸ்ட் 2022 இல், நுகர்வோர் பொருட்களுக்கான பணவீக்கம் அமெரிக்கா மற்றும் பிரிட்டனில் முறையே 8.3 மற்றும் 9.9 ஆக இருந்தது. இதுவே அர்ஜென்டினாவில் 78.5 சதவீதமாகவும், துருக்கியில் பணவீக்கம் கிட்டதட்ட 80 சதவீதமாகவும் இருந்தது என்று அந்த தரவுகள் தெரிவிக்கின்றன.

எரிபொருட்களின் விலை உயர்வு, கடன்களுக்கான வட்டி விகிதம் அதிகரிப்பு போன்றவை பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளில் பொருளாதார சிக்கலை மேலும் அதிகரிப்பதாக உள்ளன.

இன்றைய உலக பொருளாதார சூழல், அனைத்து தலைமுறையினர் மத்தியிலும் ஒருவித அழுத்தத்தை ஏற்படுத்தி உள்ளது. ஆனாலும் அதிகரிக்கும் அன்றாட செலவுகளால், இன்றைய இளம் தலைமுறையினரே அதிகமான வலியை அனுபவித்து வருகின்றனர் என்கிறார் அமெரிக்காவின் சியாட்டிலைச் சேர்ந்த, நிதி மேலாண்மை குறித்த கல்வியை அளித்துவரும் நிறுவனத்தின் உரிமையாளரான டோரி டன்லப்.

கல்விக் கடனும், சேமிப்பும்

நிலையற்ற பொருளாதார தன்மை, பட்டப்படிப்பை முடித்து புதிதாக பணிக்கு சேரும் இளைஞர்களின் கல்விக் கடனை திருப்பி செலுத்துவதில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. மேலும் இதனால் அவர்கள் பணத்தை சேமிக்க முடியாமல் போவது, எதிர்காலத்தில் அவர்களை மேலும் கடனாளிகளாக ஆக்கலாம் என்று எச்சரிக்கிறார் டன்லப்.

அமெரிக்கா மற்றும் பிரிட்டனில் அதிகரித்துவரும் மாணவர்களின் கல்விக் கடனும், அவர்கள் இளம் வயதை அடையும்போது அவர்களின் சேமிப்பை பாதிக்கும் காரணியாக உள்ளது. 1981 -1996 ( millennials) மற்றும் 1965 – 1980 ( Gen X) இடைப்பட்ட காலத்தில் பிறந்தவர்களை ஒப்பிடும்போது, 1997 -2012 இடையே பிறந்தவர்களான Gen Z தலைமுறையினர் கல்விக் கடனை அதிகம் பெறுபவர்களாக உள்ளனர்.

உதாரணமாக அமெரிக்காவில், Gen Z தலைமுறையை சேர்ந்த ஒரு இளைஞரின் சராசரி கல்விக் கடன் தோராயமாக 20,900 டாலர்களாக உள்ளது. இது millennials தலைமுறையை ஒப்பிடும்போது 14 சதவீதம் அதிகமாகும். அத்துடன், 20 -25 வயதுக்குட்பட்ட Gen Z தலைமுறை இளைஞர்களில் 36 சதவீதம் பேர் கல்விக் கடன் வாங்குபவர்களாக உள்ளனர். இவர்களின் இந்த எண்ணிக்கை முந்தைய தலைமுறையை ஒப்பிடும்போது 5 சதவீதம் அதிகம்.

அமெரிக்காவை ஒப்பிடும்போது, பிரிட்டனில் மாணவர்கள் கல்விக் கடனை திருப்பிச் செலுத்துவதற்கான திட்டம் சிறப்பாகவே உள்ளது. ஆனாலும் அங்கு இளநிலை பட்டப்படிப்புக்கு மாணவர் ஒருவர் பெறும் கடன் 40 ஆயிரம் பவுண்ட்டை தாண்டுகிறது. இது அமெரிக்காவில் மாணவர்கள் வாங்கும் சராசரி கல்விக் கடனை விட இருமடங்கு ஆகும்.

அமெரிக்காவின் பென்சில்வேனியாவை சேர்ந்த மேடிக்கு சுமார் 25 ஆயிரம் டாலர்கள் கல்விக் கடன் உள்ளது. 2019 இல் பட்டம் பெற்றதில் இருந்து, கடனை திருப்பிச் செலுத்துவதை அவர் நிறுத்தி வைத்துள்ளார்.

“தங்களின் வாழ்நாள் முழுவதும் கடனில் இருப்பவர்களை போல இருக்க நான் விரும்பவில்லை. ஆனால் நான் என்ன செய்தாலும், எவ்வளவு கடினமாக உழைத்தாலும் எப்போதும் கடன் இருந்து கொண்டே தான் இருக்கும் என்ற எண்ணம் எனக்கு உள்ளது. ஆனாலும் கடன் எதுவும் இல்லாதது போல் பாசாங்கு செய்கிறேன்” என்கிறார் மேடி.

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அண்மையில் அறிவித்த கடன் நிவாரண திட்டத்தில் பயன்பெற தான் தகுதியானவரா என்பது கூட மேடிக்கு சரியாக தெரியவில்லை. அதனை தெரிந்து கொள்ளவும் அவர் விரும்பவில்லை.

2008 பொருளாதார மந்த நிலை

2008 இல் உலகம் சந்தித்த பொருளாதார மந்த நிலையின் விளைவாக, millennials தலைமுறையினர் பல்வேறு நிதி நெருக்கடிகளை சந்தித்தனர். குறைந்த ஊதியம் மற்றும் குறைந்த வேலைவாய்ப்புகள் என தங்களின் முந்தைய தலைமுறையினர் (Gen X) அனுபவிக்காத கொடுமைகளை எல்லாம் அவர்கள் அனுபவித்தனர். அந்த கடுமையான காலகட்டத்தை அந்த தலைமுறையினர் எப்படி எதிர்கொண்டனர், அதிலிருந்து எப்படி மீண்டு வந்தனர் என்பதில் இருந்து இன்றைய இளம் தலைமுறையினர் பாடம் கற்கலாம் என்று யோசனை கூறுகிறார் அமெரிக்காவைச் சேர்ந்த பொருளாதார ஆய்வாளரான கசாண்ட்ரா மார்டின்செக்.

இன்றைய தலைமுறை சந்திக்கும் பொருளாதார சிக்கல்கள் அவர்களின் நிகழ்காலம் மற்றும் எதிர்காலத்தை மட்டும் பாதிக்காது. சொந்த வீடு வாங்குவது போன்ற தங்களின் வாழ்நாள் கனவுகள் நிறைவேறாமல் போனால் அது அவர்களுக்கு உளவியல் ரீதியான பாதிப்பையும் ஏற்படுத்தும் என்றும் எச்சரிக்கப்படுகிறது.

இதுதொடர்பாக பிரிட்டனில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்றில், இன்றைய இளம் தலைமுறையினரில் 83 சதவீதம் பேருக்கு தங்களின் வாழ்நாள் கனவுகளை நனவாக்கியே தீர வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கி இருப்பதாக தெரிய வந்துள்ளது.

ஆனால் millennials தலைமுறையில் 77 சதவீதம் பேரும், தற்போது 75 வயதுக்கும் மேற்பட்டவர்களில் 66 சதவீதம் பேரும் மட்டுமே அவர்களின் இளமைக் காலத்தில் வாழ்நாள் கனவுகளை நனவாக்க வேண்டும் என்ற விருப்பம் கொண்டவர்களாக இருந்துள்ளனர் என்று அந்த ஆய்வு மேலும் கூறுகிறது.

சமூகரீதியான சிக்கல்

இன்றைய இளம் தலைமுறை சந்திக்கும் பொருளாதார ரீதியான சிக்கல்கள், அவர்களுக்கு உளவியல் ரீதியான பாதிப்பை மட்டுமின்றி சமூகரீதியான பாதிப்புகளையும் ஏற்படுத்தும் என்கிறார் டன்லப்.

“நிதி சார்ந்த சிக்கலை ஒரு இளைஞர் எதிர்கொண்டால், அது சமூகத்தில் அவருக்கும், மற்றவர்களுக்கும் இடையேயான உறவையும் பாதிக்கும். தங்களது நண்பர்களுடன் கூட மகிழ்ச்சியாக வெளியே சென்று வர முடியாத அளவுக்கு இந்த பாதிப்பு இருக்கும்” என்கிறார் அவர்.

பண விஷயத்தில் இன்றைய இளம்தலைமுறையின் இந்த நிலை தொடர்ந்தால், இறுதியில் அவர்கள் தங்களது தந்தையின் தலைமுறை நிதி பாதுகாப்பு விஷயத்தில் சாதித்ததை ஒருபோதும் சாதிக்க முடியாமல் போகலாம் என்று எச்சரிக்கின்றனர் பொருளாதார வல்லுநர்கள்

“அடுத்த 5 அல்லது 10 ஆண்டுகளில் வாழ்க்கையில் எந்த செய்ய வேண்டும் என்று விரும்புகிறீர்கள் என்று எல்லோரும் என்னை கேட்கின்றனர். ஆனால், 5 அல்லது 10 ஆண்டுகள் கழித்து உலகம் எப்படி இருக்கும் என்று எனக்கு தெரியாது என்பதால், நான் என்ன செய்ய வேண்டும் என்பதும் எனக்கு தெரியாது என்கிறார்” மேடி.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

  • ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
  • டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
  • இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
  • யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்