கோவையில் கல்லுாரி மாணவர்கள் அறைகளில் போலீசார் சோதனையிடுவது ஏன்?

    • எழுதியவர், சேவியர் செல்வக்குமார்
    • பதவி, பிபிசி தமிழ்

கோவையில் பல்வேறு பகுதிகளில் கல்லுாரி மாணவர்கள் தங்கியிருக்கும் அறைகளில், 'கஞ்சா தடுப்பு நடவடிக்கை' என கூறி காவல்துறையினர் சோதனைகளை நடத்துவதற்கு எதிராக மனித உரிமை அமைப்பினர் போர்க்கொடி துாக்கியுள்ளனர்.

'மாணவர்கள் மத்தியில் புழங்கும் போதைப் பொருட்கள், விற்பனையில் அவர்களின் பங்களிப்பு குறித்து கிடைக்கப்பெறும் தகவலின் அடிப்படையில்' மட்டுமே சோதனைகள் நடத்தப்படுவதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கைதான கல்லுாரி மாணவர்கள்

கடந்த மாதத்தில், கோவையில் படிக்கும் கல்லுாரி மாணவர், உதகையில் கஞ்சாவுடன் பிடிபட்டார். கடந்த பிப்ரவரி 23 அன்று, கோவைப்புதுாரில் தாங்கள் தங்கியிருந்த வாடகை வீட்டில் தொட்டிகளில் கஞ்சா செடி வளர்த்த 5 கல்லுாரி மாணவர்கள் கைது செய்யப்பட்டனர்.

கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன், கோவை மாநகர காவல் ஆணையாளர் சரவண சுந்தர் பகிர்ந்த தகவலின்படி, கோவையில் கடந்த ஓராண்டில் 30-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களை பயன்படுத்தியதற்காக கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், கடந்த சில நாட்களாக கோவை மாநகரின் பல்வேறு பகுதிகளிலும் மாணவர்கள் தங்கியுள்ள அறைகளில், காவல்துறையினர் சோதனைகளை நடத்தி வருகின்றனர்.

மாணவர்கள் தங்கியுள்ள அறைகளைத் தட்டித் திறந்து, போலீசார் சோதனை நடத்தும் காணொளிகள் மாணவர்கள் மத்தியில் வேகமாகப் பரவி வருகின்றன. இதற்கு பல தரப்பிலும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

இவ்வாறு மொத்தமாக மாணவர்கள் அறைகளை சோதனையிடுவது, மனித உரிமையை மீறும் செயல் என்பதுடன், பல்வேறு நீதிமன்றங்களின் உத்தரவுகளையும் மீறுகிற செயல் என்கிறார் மக்கள் சிவில் உரிமைக் கழகத்தின் தேசிய செயலாளரும் வழக்கறிஞருமான ச.பாலமுருகன்.

காவல்துறையினரின் கெடுபிடியால், மாணவர்களுக்கு யாரும் வீடுகள் தர முன் வரமாட்டார்கள் என்கிறார் அவர்.

''ஒரு வீட்டில் நடக்கின்ற குற்றத்துக்காக, ஒரு வீதியிலுள்ள வீடு அனைத்திலும் சோதனை நடத்துவது தனி மனித உரிமையை மீறுவது என்று கடந்த 2015 ஆம் ஆண்டில், மும்பை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. சென்னை உயர்நீதிமன்றமும் இதுபோல பல உத்தரவுகளை கொடுத்துள்ளது. ஒரு அறையில் போதைப் பொருள் இருப்பதாகத் தகவல் தெரிந்தால் வாரண்ட் வாங்கிக் கொண்டு சோதனையிடலாம். மொத்தமாக 100 போலீசார் சென்று மாணவர்களின் எல்லா அறைகளையும் சோதனையிடுவது அப்பட்டமாக மனித உரிமையை மீறுவதுடன் மாணவ சமுதாயத்தைத் தவறாகச்சித்தரிப்பதாகும்.'' என்கிறார் பாலமுருகன்

ஆனால் வாரண்ட் இல்லாமல் சோதனையிட காவல்துறைக்கு அதிகாரம் இருக்கிறது என்கிறார் ஓய்வு பெற்ற காவல் கண்காணிப்பாளர் கருணாநிதி.

இங்கேதான் சோதனையிட வேண்டும்; அங்கே சோதனையிடக் கூடாது என்று யாராலும் தடுக்க முடியாது என்று கூறும் அவர், பல நேரங்களில் வாரண்ட் வாங்கிக் கொண்டு, சம்பந்தப்பட்ட இடத்துக்குச் செல்வதற்குள் தகவல் லீக் ஆகி தடயத்தை மறைக்க வாய்ப்பு அதிகம் என்கிறார்.

''இத்தகைய நேரங்களில் நோட் புக், ஸ்டேஷன் டைரியில் எழுதி வைத்து விட்டு, அருகிலுள்ள மாஜிஸ்திரேட்டுக்குத் தகவல் தெரிவித்துப் போக வேண்டும் என்பது உண்மைதான். ஆனால் சூழ்நிலை கருதி, உடனடி சோதனை நடத்த அனுமதிக்க துணை காவல் கண்காணிப்பாளர், உதவி ஆணையர் போன்றவர்களுக்கே அதிகாரம் உண்டு.'' என்கிறார் ஓய்வு பெற்ற காவல் கண்காணிப்பாளர் கருணாநிதி.

போலீஸ் அதிகாரம் தவறாக பயன்படுத்தப்படுகிறதா?

குற்றவியல் நீதிமன்ற நீதிபதி அல்லது தலைமை குற்றவியல் நீதிமன்ற நடுவர் போன்றவர்களுக்குத் தகவல் தெரிவிக்காமல் போவதால் போலீசுக்கும், சந்தேக நபர்களுக்கும் பாதுகாப்பில்லாத சூழ்நிலை ஏற்படும் என்கிறார் கோவை மனித உரிமை அமைப்பின் தலைவரும் வழக்கறிஞருமான வி.பி.சாரதி.

''கஞ்சா என்றாலே பொய் வழக்கு என்று நினைவுக்கு வருமளவுக்கு, நம் தமிழகத்தில் முன்னுதாரணங்கள் இருக்கின்றன. அதனால்தான் இந்த அச்சம் ஏற்படுகிறது. போலீசை விட வேறு யாருக்கும் இதுபோன்று சோதனையிட அதிகாரமில்லை. அந்த அதிகாரத்தைக் கொண்டு, அவர்கள் தவறு செய்யக்கூடாது என்பதே எங்கள் எதிர்ப்புக்கான காரணம். ஏனெனில், சோதனையின்போது, சட்டப்படி நடந்து கொள்ள முடியாது என்று சொல்வதற்கு போலீசுக்கு எந்த சிறப்பு அதிகாரமும் தரப்படவில்லை.'' என்கிறார் வி.பி.சாரதி.

போதை மருந்துகள் தடுப்புச்சட்டத்தின் 42 வது பிரிவில் (Narcotic Drugs and Psychotropic Substances Act, 1985) ஒரு இடத்தில் வாரண்ட் இல்லாமல் உள்ளே நுழையவும், சோதனையிடவும், பறிமுதல் செய்யவும், கைது செய்யவும் காவல்துறைக்கு அதிகாரம் இருக்கிறது என கூறும் வழக்கறிஞர் பாலமுருகன், ''அதை கோவை காவல் துறையினர் தவறாகப் பயன்படுத்தக்கூடாது என்பதே எங்கள் வாதம்'' என்கிறார்.

''கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களை விநியோகிப்பவர்களைத்தான் போலீசார் முதலில் பிடிக்க வேண்டும். அதை விடுத்து மாணவர்களின் அறைகளை சோதனையிடுவது, ஒட்டுமொத்தமாக மாணவ சமுதாயத்துக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் முயற்சி. இது தவிர்க்கப்பட வேண்டும்.'' என்கிறார் வழக்கறிஞர் பாலமுருகன்.

6 மணி நேர சோதனை!

''இப்படி நடவடிக்கை எடுப்பதால், எதிர்காலத்தில் கோவையில் எந்த மாணவர்களுக்கும் வீடுகள் கொடுக்க யாரும் முன் வரமாட்டார்கள்'' என்பதை குறிப்பிடும் வழக்கறிஞர் பாலமுருகன், ''இதனால் காவல்துறையினரின் குழந்தைகளும்தான் பாதிக்கப்படுவார்கள்'' என்கிறார்.

இந்த கருத்தை மறுக்கும் கோவை மாநகர காவல்துறையினர், மாணவர்கள் தங்கியுள்ள வீடுகளில் மட்டுமின்றி, போதைப் பொருட்கள் தொடர்பாக, மற்ற பகுதிகளிலும் தாங்கள் சோதனையிடுவதாக கூறுகின்றனர்.

கடந்த மாதம் 9 ஆம் தேதியன்று செல்வபுரம் வீட்டு வசதி வாரியக் குடியிருப்பில் 1103 வீடுகளில், உதவி ஆணையாளர் தலைமையில் 63 போலீசார், 6 மணி நேரத்துக்கும் மேலாக சோதனையிட்டனர்.

அப்போது தடை செய்யப்பட்ட கேரள லாட்டரிகள் மட்டும் பிடிபட்டன. இருவர் கைது செய்யப்பட்டனர்.

''மலுமிச்சம்பட்டியில் ஒரு மாணவரின் வீட்டில் போதைப் பொருள் இருப்பதாக வந்த தகவலையடுத்து, சோதனை செய்ய வந்ததாக கூறிய போலீசார், அங்கிருந்த பல மாணவர்களின் வீடுகளில் சோதனையிட்டனர்'' என்கிறார் இந்திய மாணவர் சங்கத்தின் மாநிலத் தலைவர் சம்சீர் அகமது.

இதனால் எந்தவித போதைப் பழக்கமும் இல்லாத மாணவர்களும் உளவியல்ரீதியாக பாதிக்கப்படுவதாகக் கூறுகிறார் அவர்.

''கோவையில் மாணவர்கள் மத்தியில்போதைப் பொருட்கள் புழங்குவதை மறுக்க முடியாது. ஆனால் அவர்களுக்கு விநியோகம் செய்யும் நெட்வொர்க்கை போலீசார் பிடிக்க வேண்டுமே தவிர, அதற்காக மாணவர்களைத் துன்புறுத்தக்கூடாது. இது தொடர்பாக, மாநகர காவல் ஆணையாளரைச் சந்தித்து முறையிட்டு வந்துள்ளோம்.'' என்றார் சம்சீர் அகமது.

'போதை நெட்வொர்க்கை தடுக்க தீவிரம்'

தகவல் ஏதுமின்றி இதுவரை மாணவர்கள் அறைகளைச் சோதனையிட்டதில்லை என்கிறார் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன்.

''கடந்த ஆகஸ்ட்டில் இது போன்று சோதனையிட்டு, கல்லுாரி மாணவர்கள் சிலரை கைது செய்துள்ளோம்'' என்கிறார்

''மாணவர்களை மட்டும்தான் சோதனையிடுகிறோம் என்பது தவறு. சோதனை பரவலாகவே நடக்கிறது. கஞ்சா, மெத்த பெட்டமின் என ஒவ்வொரு விதமான போதைப் பொருளுக்கும் ஒவ்வொரு விதமான நெட்வொர்க் இருக்கிறது. அத்தனையையும் தடுப்பதற்கான நடவடிக்கைளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறோம்.'' என்கிறார் காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன்.

மனித உரிமை அமைப்புகளின் எதிர்ப்பு குறித்து பதிலளித்த கோவை மாநகர காவல் ஆணையாளர் சரவண சுந்தர்,'' கோவையில் கடந்த சில மாதங்களில் கஞ்சா விற்பனையில் பல மாணவர்கள் பிடிபட்டுள்ளனர்; கஞ்சா செடி வளர்ப்பில் ஈடுபட்ட மாணவர்கள் கைதாகியுள்ளனர்; இதற்கு மனித உரிமை ஆர்வலர்களின் கருத்து என்ன?'' என்று கேள்வி எழுப்பினார்.

''எங்களுக்கு வரும் தகவல்களின் அடிப்படையில், குறிப்பிட்ட பகுதியில் மட்டுமே மாணவர்களின் அறைகளைச் சோதனையிடுகிறோம். அதுவும் முறைப்படி தகவல் பதிவு செய்து விட்டு, சட்டத்தில் எந்த விதங்களில் அனுமதிக்கப்பட்டுள்ளதோ அவையனைத்தையும் கடைப்பிடித்தே இந்த சோதனைகள் நடக்கின்றன. இதில் எந்த மனித உரிமை மீறலும் நடப்பதில்லை.'' என்றார் சரவணசுந்தர்.

குற்றம்தடுக்கப்பட வேண்டும்; குற்றத்தில் ஈடுபடும் நபர் தண்டிக்கப்பட வேண்டுமென்பதில் மாற்றுக்கருத்தில்லை என்று கூறிய கோவை மனித உரிமைகள் அமைப்பின் தலைவர் வி.பி.சாரதி, ''காவல்துறையினரின் சோதனைகள் குறித்து மாணவர்களிடமிருந்து புகார்கள் வந்துள்ளதன் அடிப்படையில் தேசிய மனித உரிமை ஆணையத்தின் கவனத்துக்கு இதைக் கொண்டு போகிறோம்'' என்றார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)