யுஜிசி புதிய விதிகளுக்கு தடை விதித்த உச்ச நீதிமன்றம் - என்ன சொன்னது?

பட மூலாதாரம், Getty Images
பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் பாகுபாட்டைத் தடுக்கும் முயற்சியாக பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) வெளியிட்ட புதிய விதிகளுக்கு உச்ச நீதிமன்றம் வியாழக்கிழமை தடை விதித்தது. இந்த விதிகள் சிறிது காலமாக ஒரு தரப்பின் எதிர்ப்பை சந்தித்து வருகின்றன.
பிபிசி செய்தியாளர் உமாங் போடார் அளித்த தகவல்களின்படி, யுஜிசி 'உயர்கல்வி நிறுவனங்களில் சமபங்கை மேம்படுத்துதல் (Promotion of Equity) ஒழுங்குமுறை 2026'இன் விதிகளில் தெளிவின்மை இருப்பதாகவும், அவை தவறாகப் பயன்படுத்தப்படுவதற்கான வாய்ப்பு இருப்பதாகவும் உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.
இந்த விதிகளை மறுவரைவு செய்யுமாறு உச்ச நீதிமன்றம் மத்திய அரசைக் கேட்டுக் கொண்டுள்ளது, அதுவரை அந்த விதிகள் செயல்படுத்தப்படுவது நிறுத்தி வைக்கப்படும்.
இந்தியாவில் உள்ள கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் பாகுபாட்டைத் தடுக்க, யுஜிசி ஜனவரி 13, 2026 அன்று புதிய விதிமுறைகளை வெளியிட்டது. இந்த விதிமுறைகள் 2012 இல் இதே நோக்கத்திற்காக இருந்த பழைய விதிமுறைகளை மாற்றுகின்றன.
உச்ச நீதிமன்றம் என்ன சொன்னது?

பட மூலாதாரம், Getty Images
பிபிசி நிருபர் உமாங் போடார் அளித்த தகவல்களின்படி, "2012 இல் யுஜிசி உருவாக்கிய விதிகள் மட்டுமே தற்போதைக்கு பொருந்தும் என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.
புதிய யுஜிசி விதிமுறைகளை எதிர்த்து மனுதாரர்கள் வாதிட்டனர். விசாரணைக்குப் பிறகு, இந்த பிரச்னை தொடர்பான சில அரசியலமைப்பு மற்றும் சட்ட கேள்விகள் இன்னும் ஆராயப்பட வேண்டியுள்ளதாக நீதிமன்றம் கூறியது.
புதிய விதிகளில் "தெளிவின்மை" இருப்பதாகவும், அவை தவறாகப் பயன்படுத்தப்படலாம் என்றும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யா காந்த் கூறினார்.
இந்த பிரச்னையை ஆராய நிபுணர்கள் குழுவை நீதிமன்றத்திற்கு பரிந்துரைக்குமாறு இந்திய சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தாவிடம் அவர் கேட்டுக்கொண்டார். இந்த மனுக்களுக்கு யுஜிசி தனது பதிலைத் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் தலைமை நீதிபதி கூறினார்.
புதிய விதிகளை உருவாக்கும் போது சில அம்சங்கள் கவனிக்கப்படாமல் போனதாகத் தெரிகிறது என்றும் தலைமை நீதிபதி வாய்மொழியாகக் குறிப்பிட்டார்.
இந்த வழக்கின் அடுத்த விசாரணை வரும் மார்ச் 19 அன்று நடைபெறும், மேலும் இது 2012 ஆம் ஆண்டின் யுஜிசி விதிகளை எதிர்த்து ரோஹித் வெமுலாவின் தாயார் தாக்கல் செய்த மனுவுடன் சேர்த்து விசாரிக்கப்படும்.
புதிய விதிகளில் என்ன உள்ளன?
2012 விதிகள் 'பாகுபாடு' பற்றிப் பேசினாலும், 2026 இல் அறிமுகப்படுத்தப்பட்ட திருத்தப்பட்ட விதிகள் பாகுபாட்டின் வரையறையில் 'சாதி அடிப்படையிலான பாகுபாடு' சேர்க்கப்பட்டது.
புதிய விதிகளின்படி, சாதி அடிப்படையிலான பாகுபாடு என்பது பட்டியலினத்தவர், பழங்குடியினர் மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு எதிராக சாதி அல்லது சமூகத்தின் அடிப்படையில் காட்டப்படும் பாகுபாட்டைக் குறிக்கும்.
இந்த விதிகள் இந்தியாவின் அனைத்து உயர்கல்வி நிறுவனங்களுக்கும் (HEIs) பொருந்தும்.
மதம், இனம், சாதி, பாலினம், பிறந்த இடம் அல்லது மாற்றுத்திறன் ஆகியவற்றின் அடிப்படையில் நிலவும் அனைத்து பாகுபாடுகளையும் ஒழிப்பதே இதன் முக்கிய நோக்கமாகும் என அரசு கூறுகிறது.
குறிப்பாக, எஸ்.சி/எஸ்.டி, பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு எதிரான பாகுபாடுகளைத் தடுப்பதில் இது கவனம் செலுத்துகிறது.
ஆனால், இந்த புதிய விதிகளுக்கு ஒரு தரப்பு மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது, குறிப்பாக வட இந்திய மாநிலங்களில்.
பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் பொருளாதார ரீதியாக நலிவடைந்த பிரிவினரை சாதி அடிப்படையிலான பாகுபாட்டின் வரையறையில் கொண்டுவந்துள்ளது எதிர்ப்புக்கு ஒரு காரணமாக உள்ளது. மறுபுறம், இந்த புதிய விதிமுறைகள் பொதுப் பிரிவைச் (General category) சேர்ந்தவர்களுக்கு எதிரானது என்றும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

உயர்கல்வி நிறுவனங்கள் என்ன செய்ய வேண்டும்?
புதிய விதிகளின்படி ஒவ்வொரு உயர்கல்வி நிறுவனமும் ஒரு சம வாய்ப்பு மையத்தை (Equal Opportunity Centre) அமைக்க வேண்டும். ஒரு மூத்த பேராசிரியர் அல்லது தகுதியான ஆசிரியர் இந்த சம வாய்ப்பு மையத்தின் ஒருங்கிணைப்பாளராக இருப்பார்.
பாகுபாடுகள் தொடர்பான புகார்களைப் பெறுவது, விசாரிப்பது மட்டுமல்லாது, பாதிக்கப்பட்டவரை பாதுகாப்பதும் இந்த மையத்தின் செயல்பாடுகளில் ஒன்றாக இருக்கும்.
சம வாய்ப்பு மையத்தின் செயல்பாட்டை நிர்வகிக்கவும் பாகுபாடு தொடர்பான புகார்களை விசாரிக்கவும், கல்வி நிறுவனத் தலைவரால் ஒரு சமபங்கு குழுவும் (Equity Committee) அமைக்கப்படும்.
கல்வி நிறுவனத்தின் தலைவர் அதன் தலைவராக இருப்பார். இதில் ஆசிரியர்கள், ஊழியர்கள், சிவில் சமூகப் பிரதிநிதிகள் மற்றும் மாணவர்கள் (சிறப்பு அழைப்பாளர்கள்) இடம்பெறுவர்.
இக்குழுவில் ஓபிசி, எஸ்.சி, எஸ்.டி, மாற்றுத்திறனாளிகள் மற்றும் பெண்களுக்குக் கட்டாயம் பிரதிநிதித்துவம் அளிக்கப்பட வேண்டும்.
கல்வி வளாகத்தில் பாகுபாடு ஏற்படுவதைத் தடுக்கவும், விழிப்புடன் இருக்கவும் 'சமபங்கு கண்காணிப்புக் குழுக்கள்' (Equity Squads) அமைக்கப்படும். இவை வளாகத்தின் முக்கியமான இடங்களுக்கு அடிக்கடி சென்று கண்காணிக்கும்.
அதேபோல, ஒவ்வொரு துறை, விடுதி மற்றும் நூலகத்திலும் ஒரு 'சமபங்கு தூதர்' நியமிக்கப்படுவார். ஏதேனும் விதிமீறல்கள் நடந்தால் இவர்கள் உடனடியாகத் தகவல் தெரிவிப்பார்கள் என யுஜிசி விதிமுறைகள் கூறுகிறது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு












