You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
இந்தியாவில் முதல் மாநிலமாக உத்தராகண்டில் பொது சிவில் சட்டம் அமல் - இன்றைய முக்கிய செய்திகள்
இன்றைய (27/01/2025) நாளிதழ்கள் மற்றும் இணையதளங்களில் வெளியான முக்கிய செய்திகளைப் பார்க்கலாம்.
இந்தியாவில் பாஜக ஆளும் உத்தராகண்டில் முதல் மாநிலமாக பொது சிவில் சட்டம் இன்று முதல் அமலுக்கு வந்திருப்பதாக தினமணி நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
உத்தராகண்டில் பழங்குடியினர் தவிர்த்து பிற மக்கள் அனைவருக்கம் பொது சிவில் சட்டம் பொருந்தும். இச்சட்டத்தின்படி, திருமணப் பதிவு மட்டுமின்றி திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழ்வோரும் அரசிடம் முறையாக பதிவு செய்வது கட்டாயமாகும். இணையவழியில் இந்த பதிவை மேற்கொள்ள முடியும்.
விவாகரத்துக்கான காரணங்கள், மறுமணம், ஜீவனாம்சம் தொடர்பாக பொது விதிமுறைகளை உறுதி செய்யும் இச்சட்டம் பலதார மணம் மற்றும் ஹலாலா நடைமுறையை தடை செய்கிறது.
பாலின சமத்துவத்தை முக்கிய அம்சமாகக் கொண்ட இச்சட்டம், ஆண் - பெண் இரு பாலருக்கும் ஒரே போன்ற குறைந்தபட்ச திருமண வயது, ஆண் - பெண் குழந்தைகளுக்கு சமமான சொத்துரிமையை உறுதி செய்கிறது. செல்லுபடியாகாத திருமணத்தில் பிறந்த குழந்தைகளையும் சட்டப்பூர்வ வாரிசாக கருத வழிவகை செய்வததோடு உயில் தயாரிப்பு நடைமுறைகளையும் இந்த பொது சிவில் சட்டம் எளிதாக்குகிறது.
உத்தரகாண்டில் அமலுக்கு வந்துள்ள பொது சிவில் சட்டத்தை முன்மாதிரியாகக் கொள்ள அசாம் உள்ளிட்ட பாஜக ஆளும் மாநிலங்கள் பலவும் ஏற்கனவே விருப்பம் தெரிவித்திருப்பதாகவும் தினமணி நாளிதழின் அந்த செய்தி கூறுகிறது.
இலங்கை கடற்படையினரால் ராமேசுவரம் மீனவர்கள் 34 பேர் கைது
இலங்கை கடற்படையினரால் ராமேசுவரம் மீனவர்கள் 34 பேர் கைது செய்யப்பட்டிருப்பதாக இந்து தமிழ் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
அதன்படி, ராமேசுவரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து 439 விசைப்படகுகள் அனுமதிச் சீட்டு பெற்று, 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் நேற்று முன்தினம் கடலுக்குச் சென்றனர். நேற்று அதிகாலை வடக்கு மன்னார் கடல் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த ரூபில்டன், டேனியல், சச்சின் ஆகியோருக்குச் சொந்தமான 3 விசைப்படகுகளை, இலங்கைக் கடற்படையினர் சுற்றிவளைத்தனர்.
எல்லை தாண்டிவந்து மீன் பிடித்ததாகக் கூறி, படகுகளில் இருந்த ரூபில்டன், கிறிஸ்டோபர், ஜான், ரீகன், பாலாஜி, சந்தோஷ், ரேமிஸ்டன், மேக்மில்லன் உள்ளிட்ட 34 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். அவர்களது விசைப்படகுகளையும் இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்தனர்.
கைது செய்யப்பட்ட மீனவர்கள் இரணை தீவில் உள்ள கடற்படை முகாமுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கு 3 படகுகளையும், 34 மீனவர்களையும் அந்நாட்டு மீன்வளத் துறையினரிடம் இலங்கை கடற்படையினர் ஒப்படைத்தனர். தொடர்ந்து, 34 தமிழக மீனவர்களும் கிளிநொச்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, வவுனியா சிறையில் அடைக்கப்பட்டனர்.
டங்ஸ்டன் திட்டத்திற்கு எதிராக போராடிய மக்கள் மீதான வழக்குகள் வாபஸ்
டங்ஸ்டன் திட்டத்திற்கு எதிராக போராடிய மக்கள் மீதான வழக்குகள் திரும்பப் பெறப்பட்டன என்று தினமணி இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், மதுரை மாவட்டம் மேலூர் பகுதியில் உள்ள அரிட்டாப்பட்டி கிராமத்தை சுற்றியுள்ள பகுதிகளில் டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கான உரிமையை ஒன்றிய அரசு வழங்கியதை எதிர்த்து அப்பகுதி மக்கள் போராட்டம் நடத்தினர். இந்தத் திட்டத்தை ஒன்றிய அரசு கைவிட வேண்டும் என்று ஒருமனதாக தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் 09.12.2024 அன்று ஒரு சிறப்பு தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது. மக்களின் உணர்வுக்கும் தமிழ்நாடு அரசின் உறுதிக்கும் கிடைத்த வெற்றியாக, இந்த திட்டத்தை ஒன்றிய அரசு கைவிட்டுள்ளது. இந்த டங்ஸ்டன் சுரங்கத் திட்டத்தை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் மீது காவல்துறையினரால் பதிவு செய்யப்பட்ட வழக்குகள் அனைத்தும் திரும்ப பெறப்படும் என்று முதல்வர் உறுதி அளித்தார்.
இதன்படி, இந்த போராட்டத்தில் ஈடுபட்ட 11,608 பொதுமக்கள் மீது மதுரை நகரம் தல்லாகுளம் மற்றும் மேலூர் காவல் நிலையங்களில் பாரதிய நியாய சந்கீதா சட்டம் 2023 ன் கீழ் 3 பிரிவுகளில் பதிவு செய்யப்பட்ட 4 குற்ற வழக்குகளும் இன்று திரும்பப் பெறப்பட்டுள்ளன என்று தமிழக அரசு தெரிவித்துள்ளதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தொண்டையில் கேரட் சிக்கியதால் இரண்டு வயது குழந்தை உயிரிழப்பு
தொண்டையில் கேரட் சிக்கியதில் மூச்சுத்திணறி பெண் குழந்தை உயிரிழந்துள்ளதாக தினத்தந்தி நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில் தட்டாங்கு பகுதியை சேர்ந்த விக்னேஷ் -பிரமிளா தம்பதியினருக்கு இரண்டு வயதில் மகள் உள்ளார். பிரமிளா தனது தாயார் வீட்டுக்கு சென்றிருந்த போது, அங்கு சமைக்காத கேரட் ஒன்றை சாப்பிட்டு விட்டு விளையாடி கொண்டிருந்தார். அப்போது திடீரென கேரட் தொண்டையில் சிக்கியதில் மூச்சு திணறல் ஏற்பட்டு மயங்கி கீழே விழுந்துள்ளார் என்று செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அவரது தாய் மற்றும் உறவினர் குழந்தையை தூக்கிக்கொண்டு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு குழந்தைக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இது குறித்து தகவல் அறிந்த கொருக்குப்பேட்டை போலீஸார் வழக்குப்பதிவு செய்து குழந்தையின் உடலை கைப்பற்ரி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் கொருக்குப்பேட்டை பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது என்று அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் மூத்த இதயவியல் மருத்துவர் உயிரிழப்பு
இந்தியாவின் முதல் இருதய-நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்த மருத்துவர் கே எம் செரியன் தனது 82 வயதில் சனிக்கிழமை உயிரிழந்துவிட்டார் என்ற செய்தியை தி இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆங்கில நாளிதழ் வெளியிட்டுள்ளது.
கேரளாவில் பிறந்த மருத்துவர் கே எம் செரியன், கர்நாடகாவில் உள்ள கஸ்தூர்பா மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் பயின்றார். தமிழ்நாட்டில் வேலூரில் உள்ள கிறித்துவ மருத்துவக் கல்லூரியில் விரிவுரையாளராக தனது பணியை தொடங்கினார்.
நவீன மருத்துவத்தின் தந்தையாக கருதப்படும் ஹிப்போக்ரடீஸின் பிறந்த இடமான கிரீஸ் நாட்டில் உள்ள கோஸ் தீவில், பெயர் பொறிக்கப்பட்ட மூன்று இந்திய அறுவை சிகிச்சை நிபுணர்களிலும் இவரும் ஒருவர்.
இந்திய குடியரசு தலைவர் கௌரவ அறுவை சிகிச்சை நிபுணராக 1990 முதல் 1993ம் ஆண்டு வரை இருந்துள்ளார். அவருக்கு 1991-ம் ஆண்டில் பதம்ஶ்ரீ விருது வழங்கப்பட்டது.
"அவரது நினைவுக்குறிப்பு சமீபத்தில் தான் வெளியிடப்பட்டது. மருத்துவ தொழில்நுட்ப வளர்ச்சி மற்றும் புதிய கண்டுபிடிப்புகள் இந்தியாவில் எப்படி இருக்கப் போகிறது என்பது குறித்து நாங்கள் நீண்ட கலந்துரையாடல்களை மேற்கொண்டோம். பல உயிர்களை காப்பாற்றியுள்ளார் என்பதை தாண்டி பலருக்கு ஊக்கமாகவும் இருந்துள்ளார்" என்று உலக சுகாதார நிறுவனத்தின் முன்னாள் தலைமை விஞ்ஞானி டாக்டர் சௌம்யா சுவாமிநாதன் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் புதையல் அகழ்வில் ஈடுபட்ட 4 பேர் கைது
இலங்கையில் வெலிகந்த பொலிஸ் பிரிவில் பொரவெவ பிரதேசத்தில் புதையல் அகழ்வில் ஈடுபட்ட நால்வர் கைது செய்யப்பட்டதாக வீரகேசரி இணையதள செய்தி கூறுகிறது.
பொலிஸ் விசேட அதிரடிப்படையின் அரலகங்வில முகாமின் அதிகாரிகளுக்கு பழங்காலப் பொருட்களை தோண்டி எடுப்பதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து புதையல் தோண்டுவதற்குப் பயன்படுத்தப்பட்ட உபகரணங்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
சந்தேக நபர்கள் 20 முதல் 50 வயதுக்கு இடைப்பட்ட தெஹிஅத்தகண்டிய, செவனபிட்டிய மற்றும் காஷ்யப புர பிரதேசங்களை சேர்ந்தவர்கள் ஆவர். மேலதிக விசாரணைகளுக்காக வெலிகந்த பொலிஸ் நிலையத்தில் அவர்கைள் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வெலிகந்த பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)