You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
செய்யும் வேலை மூலம் கடவுளை தொழும் 'பயே ஃபால்' முஸ்லிம்கள் குறித்து தெரியுமா?
- எழுதியவர், ருகியே புலே
- பதவி, பிபிசி நியூஸ்
மத்திய செனெகலில் எம்பேக்கே கடியோர் என்ற கிராமம் உள்ளது. அந்திசாயும் வேளையில் உள்ளூர் முஸ்லிம்கள் தொழும் சத்தம், காற்றில் கலந்திருக்கிறது.
இங்குள்ள முஸ்லிம்கள் சற்று வித்தியாசமானவர்கள். இவர்கள், சிறுசிறு வெவ்வேறு துணிகளை ஒன்றாக சேர்த்து தைத்து அதனை ஆடையாக அணிகின்றனர்.
இந்த முஸ்லிம்கள் குழு, 'பயே ஃபால்' (Baye Fall) என அழைக்கப்படுகின்றனர்.
மசூதிக்கு வெளியே 'பயே ஃபால்' முஸ்லிம்கள் சிறு வட்டமாக குழுமுகின்றனர். பின்னர் அவர்கள் ஆடி பாடுகின்றனர்.
இதன் பின்னணியில் நெருப்பு கொளுந்துவிட்டு எரியும். அதன் நிழலில் பல வண்ண ஆடைகளுடன் இவர்கள் நடனமாடுவதை காண முடியும்.
இது அக்குழுவினரின் புனித சடங்காகக் கருதப்படுகிறது, இதற்கு 'சாம் ஃபால்' (Sam Fall) என பெயர்.
இது, கொண்டாட்டம் மற்றும் பக்தியின் வெளிப்பாடாக கருதப்படுகின்றது. அவர்கள் நடக்கும்போது அவர்களின் முடி அங்குமிங்கும் அலைவீசும். வியர்வை மற்றும் உற்சாகத்தில் அவர்களின் முகங்கள் பிரகாசிக்கும்.
இந்த தொழுகையில் அவர்கள் மூழ்கிவிடுகின்றனர். இந்த தொழுகை வாரத்துக்கு இரண்டு முறை நடக்கும், இரண்டு மணிநேரம் வரை இது நீடிக்கும்.
'மௌரிடே பிரதர்ஹுட்' எனப்படும் செனெகலின் முஸ்லிம் பெரும்குழுவிலிருந்து வந்த துணைக்குழுதான் இந்த 'பயே ஃபால்'. இது, மற்ற முஸ்லிம் குழுக்களிலிருந்து தனித்துவமானதாக உள்ளது.
ஒரு கோடியே 70 லட்சம் மக்கள்தொகை உள்ள செனெகலில் பெரும்பாலும் முஸ்லிம்களே உள்ளனர், அதில் ஒரு சிறிய குழுதான் இது. ஆனால், அவர்களின் கவர்ந்திழுக்கும் தோற்றம், மற்ற முஸ்லிம்களிடமிருந்து வேறுபடுத்திக் காட்டுகிறது.
இஸ்லாமிய வழிமுறைகளிலிருந்து அவர்களின் பழக்கவழக்கங்கள் மிகவும் விலகி இருப்பதாக சிலர் நம்புகின்றனர்.
'பயே ஃபால்' குழுவினரின் நம்பிக்கை
இதை பின்பற்றுபவர்களுக்கு மற்ற முஸ்லிம்களை போன்று ஒரு நாளைக்கு ஐந்து முறை தொழுவதோ அல்லது ரமலான் புனித மாதத்தில் நோன்பு இருப்பதோ நம்பிக்கை அல்ல.
மாறாக, அவர்கள் கடின உழைப்பு மற்றும் சமூக சேவை மீது நம்பிக்கை கொண்டுள்ளனர். ஏனெனில், அவர்களை பொறுத்தவரை சொர்க்கம் என்பது ஓர் இடம் மட்டுமல்ல, மாறாக அது கடினமாக உழைப்பவர்களுக்குக் கிடைக்கும் வெகுமதி.
இவர்கள், மற்ற முஸ்லிம்களால் பொதுவாக தவறாக புரிந்துகொள்ளப்படுகின்றனர். இவர்கள் மது அருந்துவார்கள் என்றும் சிலர் கஞ்சா புகைப்பார்கள் என்றும் தவறாக புரிந்துகொள்ளப்பட்டுள்ளது. ஆனால், இது அவர்களின் வாழ்க்கை முறை அல்ல.
எம்பேக்கே கடியோர் கிராமத்தில் இக்குழுவின் தலைவராக மாம் சம்பா என்பவர் உள்ளார். "இக்குழுவின் தத்துவம் கடின உழைப்பை மையமாகக் கொண்டது. கடின உழைப்பு, கடவுள் மீதான பக்தியின் வெளிப்பாடாக கருதப்படுகிறது," என பிபிசியிடம் கூறினார்.
ஒவ்வொரு வேலையும் ஆன்மீக முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளதாக அவர் நம்புகிறார். அது, கொளுத்தும் வெயிலில் நிலத்தை உழுதல், பள்ளிக்கூடம் கட்டுதல், பொருட்களை தயாரித்தல் என எதுவாக இருந்தாலும் சரி.
வேலை என்பது வெறும் கடமை மட்டுமல்ல, அதன் வாயிலாக கடவுளை தொழுவதற்கான ஒரு தியானம் என அவர்கள் நம்புகின்றனர்.
எப்படி தோன்றியது?
19-ம் நூற்றாண்டில் எம்பேக்கே கடியோர் கிராமத்தில் தான் இக்குழுவின் நிறுவனர் இப்ரஹிமா ஃபால், மௌரிடே பிரதர்ஹுட் குழுவை தோற்றுவித்த செய்க் அஹமதோ பம்பாவை முதன்முறையாக சந்தித்ததாக இவர்கள் நம்புகின்றனர்.
செனெகலில் செல்வாக்குமிக்கதாக விளங்கும் சூஃபி இஸ்லாமின் ஒரு கிளையாக இக்குழு கருதப்படுகிறது.
தன்னுடைய உணவு, நோன்பு, தொழுகை, தன்னை கவனித்துக்கொள்ளுதல் என அனைத்தையும் மறந்து, செய்க் அஹமதோ பம்பாவுக்கு சேவை செய்ய இப்ரஹிமா ஃபால் தன்னை அர்ப்பணித்துக்கொண்டதாக கருதப்படுகிறது.
நாளடைவில் இப்ரஹிமா ஃபாலின் ஆடைகளில் கிழிசல் ஏற்பட்டு, அதில் ஒட்டுத்துணிகள் வைத்துத் தைக்கப்பட்டன.
இவை, அவருடைய தன்னலமற்ற பக்தியைக் காட்டுகிறது. இப்படிதான், இக்குழுவினரின் தத்துவமும், ஒட்டுத்துணிகளால் ஆன ஆடையை அணியும் வழக்கமும் உருவானது.
தங்கள் மதத்தலைவரின் இத்தகைய விசுவாசம், அக்குழுவினராலும் பின்பற்றப்படுகின்றது. இது, "இன்டிகுவெல்" என அழைக்கப்படுகிறது. இந்த வார்த்தையை தங்களின் குழந்தைகளின் பெயர்களிலும் சேர்க்கின்றனர்.
ஒட்டுத்துணிகளை அணிவது ஏன்?
இக்குழுவை சேர்ந்த பெண்கள் ஆடைகளை வெவ்வேறு வண்ணப்பூச்சுகளில் தோய்த்து எடுக்கின்றனர். ஒவ்வொரு முறை தோய்க்கும்போதும் ஆடைகள் மேலும் அழகாகின்றன.
அதேபோன்று, ஆண்களும் அந்த ஆடைகளை மிகுந்த கவனமாக சேர்த்துத் தைத்து, இக்குழுவினரின் தனித்துவமான அடையாளமான ஆடைகளை உருவாக்குகின்றனர்.
இந்த ஆடைகள் கலையுணர்வு மற்றும் வேலைப்பளுவின் பிரதிபலிப்பாக உள்ளது. தயாரான ஆடைகள் செனெகல் முழுவதும் உள்ள சந்தைகளுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன. இது, அவர்களுக்கு வாழ்வாதாரம் அளிப்பதோடு இல்லாமல், அவர்களின் சமூகத்தை பரவலாக எடுத்துச் செல்லும் ஒன்றாகவும் உள்ளது.
"பயே ஃபால் வழிதான் உண்மையானது," என்கிறார் சம்பா. அவருடைய மறைந்த தந்தை பயே ஃபால் ஷேய்க், செனெகலில் அக்குழுவின் மதத்தலைவராக கருதப்படுகிறார்.
"இந்த ஆடைகள் உலகளாவிய தன்மையை பிரதிபலிக்கிறது. நீங்கள் முஸ்லிமாக இருந்துகொண்டே, உங்களின் கலாசாரத்துடன் வாழ முடியும். ஆனால், இதை எல்லோரும் புரிந்துகொள்ள மாட்டார்கள். விமர்சனங்களை ஏற்றுக்கொள்ளாவிட்டால், நாம் வளர முடியாது என நாங்கள் சொல்வோம்."
மற்ற முஸ்லிம்கள் ரமலான் மாதத்தில் சூரிய உதயம் முதல் சூரியன் மறையும் வரை நோன்பு இருக்கும்போது, மாலை வேளைகளில் மசூதிகளில் நோன்பை முடிக்கும்போது, பயே ஃபால் குழுவினர்தான் இஃப்தார் உணவு சமைத்து வழங்குவார்கள்.
இந்த அர்ப்பணிப்பு, உடல் உழைப்பு சார்ந்த வேலையுடன் நின்றுவிடவில்லை.
பயே ஃபால் குழுவினர் என்ன செய்வார்கள்?
இக்குழுவினர் செனெகலின் ஊரகப் பகுதிகளில் கூட்டுறவு அமைப்புகள், சமூக வணிகங்கள் மற்றும் அரசு-சாரா அமைப்புகளை நிலையான வளர்ச்சியை ஊக்குவிப்பதற்காக நிறுவியுள்ளனர். வேலை என்பது அவர்களை பொறுத்தவரையில் வாழ்வதற்கான ஒன்று மட்டுமல்ல, அது பக்தியை வெளிப்படுத்தும் வழிகளுள் ஒன்றாகும்.
"பள்ளிகள், சுகாதார மையங்கள் மற்றும் சமூக நிறுவனங்களை நாங்கள் நிறுவியுள்ளோம்," என்கிறார் சம்பா.
"எல்லாவற்றையும் மரியாதை, அன்பு மற்றும் இயற்கை மீதான அக்கறை ஆகியவற்றுடன் தான் மேற்கொள்ள வேண்டும் என்பது எங்கள் வாழ்க்கையின் தத்துவம். எங்களின் நிலையான வளர்ச்சி மாதிரிக்கு சூழலியல் தான் மையமாக உள்ளது." என்கிறார் அவர்.
எனினும், தெருக்களில் பிச்சை எடுத்தல் போன்ற நடவடிக்கைகளுக்காக அக்குழுவினர் விமர்சனங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
எனினும், பணம் கேட்பது இம்மதக் குழுவினரின் நம்பிக்கைகளுக்கு எதிரானது அல்ல. இது கலாசார ரீதியாகவே நடைபெற்று வருகிறது. அப்பணத்தை தங்கள் மதத்தலைவருக்கு வழங்கி, அவர் அதை சமூகத்தினருக்கு விநியோகிக்க அதரவளிக்க வேண்டும் என்பதே இதன் நோக்கம்.
நிபுணர்கள் கூறுவது என்ன?
பாம்பே எனும் நகரில் அலியௌன் டியோப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தரான சேய்க் சேனே, மௌரிடே பிரதர்ஹுட் குழு குறித்த நிபுணராக உள்ளார். "பயே ஃபௌக்ஸ் (Baye Faux) எனப்படும் பொய்யான குழுவினரும் இதில் உள்ளனர்" என அவர் பிபிசியிடம் கூறினார்.
தலைநகர் டாக்கர் போன்ற நகர்ப்புறங்களில் இவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக அவர் கூறுகிறார்.
"இவர்கள் எங்களை போன்றே உடையணிந்து, தெருக்களில் பிச்சை எடுக்கின்றனர். ஆனால், சமூகத்துக்கு அவர்கள் பங்களிப்பதில்லை. இது எங்களின் புகழுக்குக் களங்கம் விளைவிக்கும் தீவிரமான பிரச்னையாக உருவெடுத்துள்ளது," என்கிறார் அவர்.
இக்குழுவினர் கடின உழைப்பை வலியுறுத்துகின்றனர், இம்மதக்குழு செனெகல் எல்லையைக் கடந்தும் பிரதிபலித்துள்ளது.
இக்குழுவை பின்பற்றுபவர்களுள், 2019-ல் இங்கு வந்த அமெரிக்கரான கீட்டோன் சாயர் ஸ்கான்லோனும் அடங்குவார்.
அவர் இக்குழுவில் இணைந்ததும் அவருக்கு ஃபாத்திமா பட்டோலி பா எனும் செனெகலிய பெயரும் சூட்டப்பட்டது. அங்கு ஃபக்கிரை (இஸ்லாமிய, சூஃபி துறவி) சந்தித்தது தன் வாழ்க்கையை மாற்றிய தருணம் என அவர் விவரிக்கிறார்.
"என்னுடைய உடலிலிருந்து ஒளி வெளிப்படுவது போன்று உணர்ந்தேன். என் இதயம் உண்மையை உணர்ந்த தருணம் அது. உச்சகட்ட ஆன்மீக எழுச்சியாக அது இருந்தது." என அவர் பிபிசியிடம் தெரிவித்தார்.
பயே ஃபால் குழுவினருடன் இணைந்து வாழும் இவர், அக்குழுவினரின் திட்டங்கள் மற்றும் சேவைகளில் தன்னை இணைத்துக்கொண்டு வாழ்கிறார். சிறிய, ஆனால் வளர்ந்துவரும் சர்வதேச மதக்குழுவின் ஓர் அங்கமாக இவர் உள்ளார்.
சமூகத்தில் இவர்களின் பங்கு என்ன?
செனெகலிய சமூகத்தில் இக்குழுவினர் முக்கிய பங்கு வகிக்கின்றனர். வேளாண் சார்ந்த பணிகளில் இவர்களின் பரவலான பங்கெடுப்பு, பொருளாதாரத்துக்கு முக்கியமானதாக உள்ளது.
கலீஃப் அல்லது கிராண்ட் மராபவுட் என்று அழைக்கப்படும் தற்போதைய மௌரிடே பிரதர்ஹுட் தலைவருக்கு தங்கள் விசுவாசத்தைக் காட்டும் விதமாக, பணம், கால்நடைகள் மற்றும் பயிர்களை நன்கொடையாக வழங்குவதாக இக்குழுவினர் உறுதிபூண்டுள்ளனர்.
செனெகலின் புனித நகரமான டௌபா, மௌரிடே பிரதர்ஹுட் மதக்குழுவின் மையமாக கருதப்படுகிறது. அங்குள்ள பிரமாண்ட மசூதியை நிர்வகிக்கும் பொறுப்பு இக்குழுவினருடையது.
மகல் புனித யாத்திரை போன்று டௌபாவில் முக்கிய நிகழ்ச்சிகள் நடைபெறும்போது, மசூதியின் அதிகாரபூர்வமற்ற பாதுகாவலர்களாக இவர்கள் உள்ளனர். இந்த யாத்திரையின்போது அந்நகருக்கு ஆயிரக்கணக்கானோர் வருகை தருவர்.
உதாரணமாக, மக்கள் முறையான ஆடைகளை அணிந்திருக்கிறார்களா என்பதையும் இவர்கள் உறுதிசெய்வர். அப்பகுதியில் அப்போது போதைப் பொருட்கள் விற்கப்படுகிறதா என்பதையும், மதத்தலைவரை அவமதிக்கும் வகையில் ஏதேனும் நடக்கிறதா என்பதையும் கண்காணிப்பர்.
"மதத்தலைவர் மற்றும் அந்நகரத்தின் பாதுகாப்புக்கு இக்குழுவினர் தான் உத்தரவாதம்," என்கிறார் சேய்க் சேனே.
"இக்குழுவினர் நம்மை சுற்றி இருக்கும்போது, நம்மிடம் யாரும் முறை தவறி நடந்துகொள்ள மாட்டார்கள்."
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)