You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
மதுரை விமான நிலைய விரிவாக்கத்தை எதிர்த்து இந்த கிராம மக்கள் போராடுவது ஏன்?
- எழுதியவர், விஜயானந்த் ஆறுமுகம்
- பதவி, பிபிசி தமிழ்
"தங்கள் விளைநிலங்களில் இருந்து வெளியேற மாட்டோம்" எனக் கூறி 50 நாட்களைக் கடந்து போராடிக் கொண்டிருக்கிறார்கள், மதுரை சின்ன உடைப்பு கிராம மக்கள்.
காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரை போல சின்ன உடைப்பு கிராம மக்களும் விமான நிலைய விரிவாக்கத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
மதுரை விமான நிலையத்தை விரிவாக்கம் செய்வதற்காக 2009ஆம் ஆண்டு 633 ஏக்கர் நிலத்தை மாநில அரசு கையகப்படுத்தியது. நிலத்தை இழந்த மக்களில் சுமார் 80 சதவீதம் பேருக்கு கடந்த 2019ஆம் ஆண்டு அரசு இழப்பீடு வழங்கிவிட்டது.
ஆனாலும், மதுரை விமான நிலைய விரிவாக்கத்தை எதிர்த்து இந்த கிராம மக்கள் போராடுவது ஏன்? அதுகுறித்து விரிவாகத் தெரிந்துகொள்ள பிபிசி தமிழ் கள ஆய்வு மேற்கொண்டது.
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில் சின்ன உடைப்பு கிராமம் அமைந்துள்ளது. சுற்றிலும் விவசாய நிலங்களைக் கொண்டுள்ள இந்தக் கிராமத்தின் பல இடங்களில் விமான நிலைய ஆணையத்தால் கட்டப்பட்ட சுற்றுச் சுவர்கள் தென்படுகின்றன.
சுமார் 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வரும் இப்பகுதியில் விவசாயமே பிரதானத் தொழில். விமான நிலைய விரிவாக்கத்துக்காக சின்ன உடைப்பு, பெருங்குடி, குயவன் குன்று, பாப்பானோடை உள்பட ஆறு கிராமங்களில் இருந்து நிலங்கள் கையகப்படுத்தப்பட்டுள்ளன.
இவ்வாறு கையகப்படுத்தப்பட்டுள்ள633 ஏக்கரில் 462 ஏக்கர் பட்டா நிலமாகவும் மற்றவை நீர்நிலை உள்பட புறம்போக்கு நிலங்களாகவும் உள்ளதாகக் கூறுகிறார், மதுரை விமான நிலைய விரிவாக்க நில எடுப்பு தாசில்தார் பிரபாகரன்.
இவற்றில் சுமார் 300 ஏக்கர் நிலம், சின்ன உடைப்பு கிராம எல்லைக்குள் வருகிறது. இந்தத் திட்டத்தால் தங்கள் கிராமத்துக்கு அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகக் கூறுகிறார், இதே பகுதியில் வசிக்கும் வழக்கறிஞர் மதுரை வீரன்.
பிபிசி தமிழிடம் பேசிய அவர், "2009ஆம் ஆண்டில் நிலத்தைக் கையகப்படுத்துவது தொடர்பாக வருவாய்த் துறை அதிகாரிகள் நோட்டீஸ் கொடுத்தனர். ஆனால், 2018ஆம் ஆண்டு வரை எந்த இழப்பீடும் வழங்கப்படவில்லை.
அவனியாபுரம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதியாக இருந்த சின்ன உடைப்பு கிராமம், தற்போது மாநகராட்சி எல்லைக்குள் வந்துவிட்டது. தற்போது நிலத்தின் மதிப்பும் கூடிவிட்டது. ஆனால் 2019ஆம் ஆண்டு அரசு வழங்கிய இழப்பீட்டுத் தொகை என்பது மிக சொற்பமாக உள்ளது," என்கிறார் அவர்.
இந்தப் பணத்தை வாங்கவில்லையென்றால் வங்கியில் டெபாசிட் செய்துவிடுவதாக அதிகாரிகள் கூறியதால் மக்கள் பயந்து போய் பணத்தை வாங்கிவிட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
சின்ன உடைப்பு கிராமத்தில் வசிக்கும் மக்களில் சுமார் 80 சதவீதம் பேர் மாநில அரசின் இழப்பீட்டுத் தொகையைப் பெற்றுக் கொள்வதாக எழுதிக் கொடுத்துவிட்டனர். இதர 20 சதவீதம் பேர் இழப்பீட்டை பெற்றுக் கொள்ள மறுத்துவிட்டனர்.
- தந்தை இறந்து 15 நாட்களுக்கு மேலாகியும் இறுதிச் சடங்குகளை செய்ய முடியாத மகன் - கிறிஸ்தவர் என்பதால் புறக்கணிப்பா?
- ஆலிவ் ரிட்லி: மீனவர்கள் தெய்வமாக வழிபடும் இந்த ஆமைகள் சென்னை கடற்கரைகளில் இறந்து கரை ஒதுங்குவது ஏன்?
- மதுரை டங்ஸ்டன் சுரங்க ஏலம் ரத்து - டெல்லியில் அமைச்சரை சந்தித்த மக்கள் கூறியது என்ன?
- தெலங்கானாவில் அதிர்ச்சி: மனைவியைக் கொன்று குக்கரில் வேக வைத்ததாக கணவர் கைது
போராட்டம் நீடிப்பது ஏன்?
தொடக்கத்தில் விமான நிலைய விரிவாக்கத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்காமல் அமைதியாக இருந்த சின்ன உடைப்பு மக்கள், தங்களுக்கு வழங்கப்பட்ட இழப்பீட்டுத் தொகை போதுமானதாக இல்லை எனவும் மாற்று இடத்தில் தங்களைக் குடியமர்த்தும் வரை தங்களை அப்புறப்படுத்தக் கூடாது எனவும் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை வைத்தனர்.
இதன் தொடர்ச்சியாக, மேலூர் வருவாய் கோட்டாட்சியர் ஜெயந்தியிடம் மனு அளித்துள்ளனர். அதன் பின் நடந்த பேச்சுவார்த்தையில் ஒன்றரை சென்ட் நிலம் தருவதாக முடிவானது.
ஆனால், "ஆடு, மாடுகளுடன் தாங்கள் வாழ்ந்து பழக்கப்பட்டுவிட்டதால், குறைந்தது இரண்டு சென்ட் நிலம் வேண்டும்" என சின்ன உடைப்பு கிராம மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இந்தக் கோரிக்கைக்கு அதிகாரிகள் செவிசாய்க்கவில்லை என்பதால், போராட்டமும் தீவிரம் அடைந்ததாக கூறுகிறார் வழக்கறிஞர் மதுரை வீரன்.
பதற்றம் - போலீஸ் குவிப்பு
"கடந்த நவம்பர் மாதம் மதுரை விமான நிலையத்துக்கு துணை முதலமைச்சர் உதயநிதி வந்திருந்தார். அவரிடம் மனு கொடுத்தோம். அந்த மனுவை அமைச்சர் மூர்த்தியிடம் உதயநிதி கொடுத்தார். பின்னர் அமைச்சர் மூர்த்தியை ஊர் மக்கள் சந்தித்தபோது, 'பொருட்களை எடுத்துச் செல்வதற்கு அவகாசம் கொடுக்கிறேன்' எனக் கூறினார்.
ஆனால், இரண்டே நாளில் ஐநூறுக்கும் மேற்பட்ட வருவாய் மற்றும் காவல்துறையினர் ஜேசிபி இயந்திரத்துடன் குவிந்துவிட்டனர். அவர்களை உள்ளே நுழையவிடாமல் தடுத்துப் போராட்டம் நடத்தினோம்" என்றார் வழக்கறிஞர் மதுரை வீரன்.
கடந்த நவம்பர் மாதம் 17ஆம் தேதி நடந்த இந்தப் போராட்டத்தால் சுற்று வட்டாரப் பகுதிகளில் பதற்றமான சூழல் நிலவியது. அப்போது பொது மக்களுக்கும் காவலர்களுக்கும் இடையே கடும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
மாற்றும் இடம் கொடுக்காமல் காலி செய்வதற்கு முயன்றதாகக் குற்றம் சாட்டிய சிலர், ஊரின் நடுவே இருந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் ஏறிக்கொண்டு, அதிகாரிகள் ஊரை விட்டு வெளியேறாவிட்டால் தற்கொலை செய்துகொள்வதாக மிரட்டல் விடுத்தனர்.
இதன்பிறகு வீடுகளைக் காலி செய்வதற்குப் போதிய அவகாசம் கொடுக்க உள்ளதாக மாவட்ட நிர்வாகம் உறுதியளித்ததால் பொதுமக்கள் சமாதானம் அடைந்தனர். ஆனால், 'எப்போது வேண்டுமானாலும் தங்கள் வீடுகள் இடிக்கப்படலாம்' என்பதால் ஊரின் நுழைவாயிலில் சமைத்துச் சாப்பிட்டு தினந்தோறும் இப்பகுதி மக்கள் போராடி வருகின்றனர்.
"எங்கள் கோரிக்கை தொடர்பாக மாவட்ட ஆட்சியரிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை" எனக் கூறுகிறார் சின்ன உடைப்பு கிராமத்தைச் சேர்ந்த வள்ளிராணி. பிபிசி தமிழிடம் பேசிய அவர், "இங்கு வசிக்கும் சுமார் 300 குடும்பங்களும் அமைதியான முறையில், மூன்று மாதங்களாகப் போராடி வருகிறோம். ஆனால் அரசாங்கம் கண்டுகொள்ளவில்லை.
நிலத்துக்கு இழப்பீடாக பணம் வாங்கிய பிறகு எதற்காகப் போராடுகிறீர்கள் எனக் கேட்கிறார்கள். அந்தப் பணத்தைத் திருப்பிக் கொடுத்து விடுகிறோம். அதற்கு மாறாக, எங்களிடம் இருந்து எடுக்கப்பட்ட நிலத்திற்கு ஈடாக நிலத்தையும் வீட்டையும் அரசு ஒதுக்கித் தரவேண்டும்" என்றார்.
'புதைப்பதற்கு சுடுகாடு இல்லை'
நிலங்களை மாநில அரசு கையகப்படுத்தி எல்லைகளை வகுத்துக் கொடுத்த பிறகு மதுரை விமான நிலைய ஆணைய நிர்வாகத்தால் சின்ன உடைப்பு கிராமத்தில் சுற்றுச் சுவர்கள் கட்டப்பட்டுள்ளன. இந்தப் பணிகள் சுமார் 50 சதவீதம் முடிந்துவிட்டன.
ஆனால், விளைநிலங்களில் இருந்தும் வீடுகளில் இருந்தும் வெளியேற மாட்டோம் எனக் கூறி பொதுமக்கள் தொடர்ந்து போராடி வருவதால் அதிகாரிகளால் கிராமத்துக்குள் நுழைய முடியவில்லை.
மக்கள் அதே பகுதியில் விவசாயம் செய்து வருகின்றனர். "விவசாயம்தான் எங்களுக்குச் சாப்பாடு போடுகிறது. இதையும் பறித்துவிட்டால் எங்கே போவது?" எனக் கேள்வி எழுப்பினார் சின்ன உடைப்பு கிராமத்தில் வசிக்கும் சுமித்ரா.
அதோடு, "விமான நிலைய விரிவாக்கத்தில் எங்கள் முன்னோர்களைப் புதைத்த மயானமும் வருகிறது. அதுவும் பறிபோய்விட்டால் எங்களுக்கென்று எந்த அடையாளமும் இல்லை. நாங்கள் செத்தால் புதைப்பதற்குக்கூட இடமில்லை" என்கிறார் அவர்.
தன்னிடம் உள்ள இரண்டு ஏக்கர் நிலமும் பறிபோக உள்ளதாகக் கூறும் ராமுத்தாய், "என் நிலத்தில் கொத்தவரங்காய், தட்டைப்பயறு, பூச்செடிகள் பயிரிட்டு வாழ்ந்து வருகிறோம். இந்தப் பிரச்னையால் நிம்மதியே போய்விட்டது" எனக் கூறினார்.
இழப்பீட்டுத் தொகையில் பாரபட்சமா?
சின்ன உடைப்பு கிராமத்தில் வசிக்கும் மதுரை மாநகராட்சி மாமன்ற உறுப்பினரும் மதிமுக-வை சேர்ந்தவருமான முத்துலட்சுமி அய்யனாரின் வீடும், விமான நிலைய விரிவாக்கத்தால் பறிபோக உள்ளது.
பிபிசி தமிழிடம் பேசிய அவர், "இந்தத் திட்டத்தால் விவசாயம் பாதிக்கப்பட்டு இருப்பதோடு, விவசாயத் தொழிலாளர்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். எங்கள் குடும்பத்துக்கு சொந்தமாக 20 ஏக்கர் நிலம் இருந்தது. அதை விமான நிலைய விரிவாக்கத்துக்கு எடுத்துவிட்டனர்.
இதற்காக எங்களுக்கு வழங்கப்பட்ட இழப்பீட்டுத் தொகையில் கடன்களை அடைத்துவிட்டோம். இப்போது பிழைப்புக்காக நாங்கள் கூலி வேலைக்குச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட உள்ளது" எனக் கூறினார்.
அதிகாரிகளிடம் இதுகுறித்துக் கேட்டபோது, "இழப்பீட்டுத் தொகையை கையெழுத்துப் போட்டு வாங்கியது தவறு" எனக் கூறியதாக முத்துலட்சுமி குறிப்பிட்டார்.
மேலும், அரசின் இழப்பீட்டுத் தொகையில் பாரபட்சம் காட்டப்பட்டுள்ளதாக பிபிசி தமிழிடம் கூறினார், வழக்கறிஞர் மதுரை வீரன்.
"நிலத்துக்கு இழப்பீடாக சதுர அடிக்கு 68 ரூபாய் என நிர்ணயித்துள்ளனர். ஒரு சென்ட்டுக்கு அதிகபட்சமாக 29,649 ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இது 2009ஆம் ஆண்டு மதிப்பீடு. சில இடங்களில் சென்டுக்கு 900 ரூபாயை நிர்ணயித்துக் கொடுத்துள்ளனர்" என்றார்.
நீதிமன்றத்தில் வழக்கு
இதற்கிடையில், மறுகுடியமர்வு மற்றும் கூடுதல் இழப்பீடு தொகையை வழங்கக் கோரி கடந்த ஆண்டு சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் சின்ன உடைப்பு மக்கள் தரப்பில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கின் மனுவில், 'தொழில்துறையின் தேவைகளுக்கு நிலம் கையகப்படுத்தப்படுகிறது. ஆனால், தொழில்துறை சட்டப்படி மாநில அரசு நோட்டீஸ் கொடுக்கவில்லை.
இங்கு ஒரு கிராமத்துக்கே மறுகுடியமர்வு தேவைப்படுகிறது. எனவே, நிலத்தை இழந்தவர்களுக்கு மறுகுடியமர்வும் போதிய இழப்பீடும் வழங்கப்பட வேண்டும்' எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, "முறையாக நோட்டீஸ் வழங்கிய பின்னர் ஆக்கிரமிப்புகளை அகற்றலாம் என்றும் அதுவரை எந்த நடவடிக்கைகையும் மேற்கொள்ளக் கூடாது" எனக் கூறி இடைக்கால தடை உத்தரவை பிறப்பித்தார்.
இதன்பிறகு, நிலங்களை காலி செய்யுமாறு சின்ன உடைப்பு மக்களிடம் வருவாய்த்துறை அதிகாரிகள் நோட்டீஸ் விநியோகித்துள்ளனர்.
இதை எதிர்த்து உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் சின்ன உடைப்பு கிராம மக்கள் மேல்முறையீடு செய்தனர். இதனை விசாரித்த நீதிபதிகள், "அம்மக்களுக்கு முழுமையான வசதிகளை செய்து கொடுத்த பின்னரே அங்கிருந்து வெளியேற்ற வேண்டும்" எனக் கூறி உத்தரவிட்டனர்.
நீதிமன்ற உத்தரவு காரணமாக நிலங்களில் சுற்றுச்சுவர்கள் அமைக்கும் பணியும் வருவாய்த்துறை அதிகாரிகளின் நில அளவைப் பணிகளும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
நில எடுப்பு தாசில்தார் சொல்வது என்ன?
சின்ன உடைப்பு கிராம மக்களின் போராட்டம் தொடர்பாக, மதுரை விமான நிலைய விரிவாக்க நில எடுப்பு தாசில்தார் பிரபாகரனை பிபிசி தமிழ் நேரில் சந்தித்துப் பேசியது.
"வருவாய்த்துறை கணக்கின்படி அங்கு 63 வீடுகள் மட்டுமே உள்ளன. கூட்டுக் குடும்பமாக ஒரே வீட்டில் நான்கைந்து பேர் வசித்து வருவதால் 300 வீடுகள் வரையில் வேண்டும் எனக் கூறுகின்றனர். இதுதொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வருகிறது. விரைவில் முடிவு கிடைத்துவிடும்" என்றார்.
தொடர்ந்து பேசிய பிரபாகரன், "1997ஆம் ஆண்டு சட்டப்படி நிலத்தைக் கையகப்படுத்தினோம். ஆனால், அப்பகுதி மக்கள் 2013ஆம் ஆண்டு நில எடுப்பு சட்டத்தின்படி (Right to Fair Compensation and Transparency in Land Acquisition, Rehabiliation and Resettlement Act) இழப்பீடு கேட்கின்றனர்" எனக் கூறினார்.
இதன் காரணமாகவே சிக்கல் நீடிப்பதாகக் கூறும் பிரபாகரன், நிலத்தைக் கையகப்படுத்திய காலத்தில் என்ன மதிப்பு இருந்ததோ அதன்படியே அப்பகுதி இழப்பீடு வழங்கப்பட்டதாகக் கூறுகிறார்.
"அரசுக்கு நிலத்தைக் கொடுத்தவர்களுக்கு தற்போது வரை சுமார் 170 கோடி ரூபாய் இழப்பீடாக வழங்கப்பட்டுவிட்டது. இன்னும் சுமார் 30 கோடி ரூபாய் வரை இழப்பீடு வழங்கப்பட உள்ளது" என்கிறார்.
மதுரை மாவட்ட ஆட்சியரின் விளக்கம்
இது தொடர்பாக, மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதாவிடம் பிபிசி தமிழ் பேசியபோது, "சின்ன உடைப்பு கிராம மக்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். தங்களுக்கு மாற்று இடம் வழங்குமாறு அவர்கள் கேட்கின்றனர். இழப்பீடு கொடுக்கப்பட்ட பிறகு மாற்று இடம் கொடுப்பதற்கு வாய்ப்பில்லை" எனக் கூறினார்.
ஆனாலும், அவர்களுக்கு மதுரை புறநகரில் நிலம் கொடுக்க உள்ளதாக வருவாய்த்துறை அதிகாரிகள் கூறியும் மாநகராட்சி எல்லைக்குள் தங்களுக்கு நிலம் வேண்டும் என அவர்கள் கேட்பதாகவும் கூறுகிறார் மாவட்ட ஆட்சியர் சங்கீதா.
இந்த விவகாரத்தில் நீதிமன்ற உத்தரவின்படி மாவட்ட நிர்வாகம் முடிவெடுக்க உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
ஆடு, மாடுகள் மற்றும் விவசாய நிலங்களுடன் பூர்வீகமாக வாழ்ந்து வரும் தங்களை கிராமத்தில் இருந்து அகற்றுவதை இப்பகுதி மக்கள் விரும்பவில்லை. சின்ன உடைப்பு கிராமத்தில் வசிக்கும் 80 சதவீத மக்கள் இழப்பீட்டைப் பெற்றுவிட்ட காரணத்தால், மறுகுடியமர்வு செய்யாமல் தங்களை வெளியேற்றக் கூடாது என்ற கோரிக்கையுடன் போராடி வருகின்றனர்.
அரசின் இழப்பீட்டைப் பெறாத மக்களோ, "தங்கள் விளைநிலங்களில் இருந்து தங்களை அப்புறப்படுத்தக் கூடாது" எனக் கூறி சின்ன உடைப்பு கிராம மக்களுடன் இணைந்து போராடி வருகின்றனர்.
நீதிமன்றத் தீர்ப்பு வெளிவந்த பிறகே விமான நிலைய விரிவாக்கப் பணிகள் வேகமெடுக்க வாய்ப்புள்ளதாகக் கூறுகின்றனர், வருவாய்த் துறை அதிகாரிகள்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)