நீங்கள் அவசியம் காண வேண்டிய உலகின் தனித்துவமான 10 இடங்கள்

    • எழுதியவர், பிபிசி டிராவல்

நம்மை மாற்றும் சக்தி பயணத்துக்கு உண்டு. நம்ப முடியாத பயண அனுபவங்களுடன், உள்ளூர் சமூகங்களை ஆதரிக்கவும், சுற்றுச்சூழலை பாதுகாக்கவும் தனித்துவமான கலாசாரத்தை காக்கவும் இந்த பயணங்கள் துணைபுரிகின்றன.

அப்படி, உங்களுக்கு மிகச் சிறந்த பயண அனுபவத்தை வழங்கும் உலகின் மிக தனித்துவமான 10 சுற்றுலா இடங்களை இங்கே தொகுத்துள்ளோம். பிபிசியின் பயண செய்தியாளர்கள் ஒவ்வொருவரும் அந்த இடங்களின் சிறப்புகள் குறித்த தகவல்களை இங்கே வழங்கியுள்ளனர்.

1. இலங்கை

பனிமூட்டத்துடன் மலை உச்சியில் அமைந்த தேயிலை தோட்டங்கள், சுற்றித்திரியும் யானைகள் முதல் பழமை வாய்ந்த கோவில்கள் என, இலங்கைக்கு பயணம் மேற்கொள்வதற்கு பல காரணங்கள் உள்ளன. 2022 ஏப்ரலில், இலங்கையில் அப்போதைய பிரதமர் தங்கள் நாடு திவாலாகி விட்டதாக அறிவித்தார். ஆனால், புதிய அதிபர் அநுர குமார திஸாநாயக்க நாட்டை மீண்டும் கட்டியெழுப்புவதை நோக்கமாகக் கொண்டுள்ளார்.

சுற்றுலா துறை மூலமாக மீண்டு வர முடியும் என அந்த நாடு நம்பிக்கை கொண்டுள்ளது. கண்டி நகரில் முதல் 7 நட்சத்திர ஹோட்டலான அவியானா பிரைவேட் சேலெட்ஸ் வரவுள்ளது. கொழும்பு நகரில் 100 கோடி டாலர் மதிப்பில் மெகா ரிசார்ட் ஒன்றும் வரவுள்ளது. ஐரோப்பா மற்றும் ஆஸ்திரேலியா வரை சேவை அளிக்கும் வகையில், இலங்கையில் ஏர் சீலாவ் (Air Ceilão) எனும் ஏர்லைன்ஸ் நிறுவனம் தொடங்கப்பட்டுள்ளது. நிலையான வளர்ச்சியை இலக்காகக் கொண்டு செயல்பட்டு வரும் உள்ளூர் வணிகங்களை ஊக்குவிக்கும் வகையில், 'குட் டிராவல் சீல் இனிஷியேட்டிவ்' எனும் முயற்சி தொடங்கப்பட்டுள்ளது.

குளிர்ச்சியான பிரதேசங்களில் சுற்றுலா செய்ய விரும்புபவர்கள், மலைகளின் ஊடாக பயணிக்கும் ரயில் பயணத்தை மேற்கொள்ளலாம். கொழும்பு மற்றும் காலி பகுதிகளுக்கு பயணித்து, 5-ம் நூற்றாண்டு பானத்தை ரசிக்கலாம். தேயிலை தோட்டங்கள் மற்றும் கிராமப்புறங்களுக்கு செல்லும் வகையிலான 300 கி.மீ பெக்கோ பாதையும் இலங்கையில் உள்ளது.

2. ஹா பள்ளத்தாக்கு, பூடான்

வெளியுலகை விட்டு முற்றிலும் தனிமையில் இருக்கும் இந்த இடத்துக்கு 1974 முதல் வெளிநாட்டவர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். நீடித்த வளர்ச்சியில் இது உலக நாடுகளுக்கு முன்னுதாரணமாக விளங்குகிறது. உலகளவில் கார்பன் உமிழ்வு பெரும் பிரச்னையாக மாறியுள்ள நிலையில், அதிகளவில் கார்பனை உறிஞ்சும் (carbon-negative) முதல் நாடாக பூடான் உள்ளது. அதன் 60% நிலம் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாக உள்ளது. மொத்த உள்நாட்டு உற்பத்திக்குப் (ஜிடிபி) பதிலாக மொத்த உள்நாட்டு மகிழ்ச்சியையே (Gross National Happines) பூடான் அளவிடுகிறது.

திபெத்துடனான பூடானின் மேற்கு எல்லையில் அமைந்துள்ள ஹா பள்ளத்தாக்கு நீண்ட காலமாக அந்நாட்டின் ரகசியமாகவே உள்ளது. கலாசார ரீதியாக தனித்து விளங்கும் இப்பகுதி சுற்றுலா தலமாக பெருமளவில் கவனிக்கப்படாத ஒன்றாக உள்ளது.

2002 ஆம் ஆண்டில் இப்பகுதி சுற்றுலா பயணிகளுக்காக திறந்துவிடப்பட்ட கடைசி பகுதியாகும். 2 சதவிகிதத்துக்கும் குறைவான சர்வதேச பயணிகளே இங்கு வருகை தருகின்றனர். தற்போது, அப்பகுதியை பாதுகாக்கும் அதே சமயத்தில் அதிகமான பயணிகளை ஈர்க்கவும் முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

புதிதாக புனரமைக்கப்பட்ட 400 கிமீ டிரான்ஸ் பூடான் பாதை மற்றும் புதிதாக அமைக்கப்பட்ட 11 கி.மீ ஹா பனோரமா பாதை ஆகியவற்றின் மூலம் அதன் அழகை ரசிக்க முடியும். இரண்டு நாட்கள் நீடிக்கும் ஜாய் பே ட்ஷோ டிரெக்கிங் (Joy Bay Tsho Trek) மூலம் மேய்ச்சல் நிலங்கள், மூங்கில் தோப்புகள் ஆகியவற்றை மோச்சு மற்றும் யோகா கிராமங்களுக்கிடையே ரசிக்க முடியும்.

கிராமவாசிகளின் வீடுகளிலேயே நீங்கள் தங்க முடியும். இதன்மூலம் நூற்றாண்டு பழமையான கிராம வாழ்வை அனுபவிக்க முடியும். உள்ளூர் சமூகத்தினரால் நடத்தப்படும், ஹா பனோரமா பாதையில் கட்ஷோ ஈகோ முகாம் அமைக்கப்பட்டுள்ளது. கொரோனா காலத்தில் வேலையிழந்தவர்களால் இது நடத்தப்படுகிறது. ஆடம்பரமான சங்வா முகாமும் உள்ளது. இங்கு அரிதான சிவப்பு பாண்டா மற்றும் பனி சிறுத்தை ஆகியவற்றைக் காண முடியும்.

3. நவோஷிமா, ஜப்பான்

ஜப்பானிய சிற்ப கலைஞர் யாயோய் குசாமாவால் அமைக்கப்பட்ட மஞ்சள் நிற பூசணிக்காய் சிற்பம் உள்ள ஜப்பானிய தீவான நவோஷிமா, சமகால கலை மற்றும் கட்டடக்கலையை அறிய விரும்புபவர்கள் நிச்சயம் காண வேண்டிய நாடாக உள்ளது. அதிகமாக மாசு வெளியேற்றும் காப்பர் உருக்கு தொழிற்சாலைக்காக அறியப்பட்ட இந்த தீவு, பெனெஸ் ஆர்ட் சைட் மூலமாக குறிப்பிட்ட இடங்களுக்கான கலை வேலைப்பாடுகள் மூலமாக அழகான தீவாக மாற்றப்பட்டுள்ளது.

இந்த தீவில் ஒன்பது கலை வேலைப்பாடுகளை மேற்கொண்ட விருது பெற்ற கட்டடக்கலை வல்லுநர் டடாவ் அண்டோவால் நவோஷிமாவில் புதிய கலை அருங்காட்சியகம் வரவுள்ளது. இந்தாண்டு நடைபெறவுள்ள செடோவ்ச்சி டிரையெனல் நிகழ்வில் ஆசிய கலைஞர்களின் படைப்புகள் வைக்கப்படவுள்ளன. நூறு நாட்கள் நடைபெறும் இந்த கலை திருவிழா வசந்த காலம், கோடை, இலையுதிர் காலம் என மூன்றாக பிரிக்கப்பட்டுள்ளது. இந்த கலை திருவிழா 2010 முதல் நடைபெற்று வருகிறது. நவோஷிமா தீவுக்கு மட்டுமல்லாமல், டெஷிமா மற்றும் இனுஜிமா போன்ற அண்டை தீவுகளுக்கும் இது முக்கியமானதாக அமைந்துள்ளது.

கலை, கட்டடக் கலை மற்றும் இயற்கை ஆகியவற்றை காண ரெய் நைட்டோ மற்றும் ரியு நிஷிஸவா டெஷிமா கலை அருங்காட்சியகம் செல்லலாம். இனுஜிமாவில் காப்பர் சுத்திகரிப்பு நிலையத்தின் எச்சங்கள் வைக்கப்பட்டுள்ளன.

4. ஹைடா க்வாய், கனடா

பிரிட்டிஷ் கொலம்பியா கடற்கரையில் 150க்கும் மேற்பட்ட தீவுக்கூட்டங்கள் அமைந்துள்ள பகுதிதான் ஹைடா க்வாய். மிக அழகான நிலப்பரப்பை கொண்டது. இயற்கை, கலாசாரம் மற்றும் வரலாறு உடனான ஆழமான பிணைப்பை இப்பகுதி வழங்குகிறது. உள்ளூர் பறவையினங்கள், பாலூட்டிகள், தாவரங்கள் என 6,800க்கும் அதிகமான உயிரினங்களின் வாழ்விடமாக இது திகழ்கிறது. சுமார் 15,000 ஆண்டுகளாக இவை இங்கு உள்ளன.

யுனெஸ்கோவால் உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ள எஸ்காங் க்வாய் (SG̱ang Gwaay) உள்ளிட்ட ஹைடா கிராமங்களை சுற்றுலா பயணிகள் கண்டுகளிக்க முடியும். கழுவேற்றும் தூண்கள், பழமையான வீடுகளின் எச்சங்களை காண முடியும். ஹைடா க்வாய் கருப்பு கரடி, கடற்கிளி மற்றும் பழமையான முர்ரே பறவையினங்கள் உள்ளிட்ட கடல் பறவைகளை இங்கு காண முடியும்.

5. உஸ்பெகிஸ்தான்

இளைஞர்கள் அதிகம் உள்ள நாடுகளுள் ஒன்று உஸ்பெகிஸ்தான். அங்கு வாழும் 60% மக்கள் 30 வயதுக்குட்பட்டவர்கள். இந்த நாடு தனித்துவமான கலாசாரத்தைக் கொண்டது. புதிய ஹோட்டல்கள், ரயில் பாதைகள், உள்ளூர் விமான பயணங்கள் ஆகியவற்றுடன், சுற்றுலா பயணிகளை ஈர்க்கவும் பொருளாதாரத்தை மேம்படுத்தவும் சுற்றுலா துறையில் அதிகம் முதலீடு செய்துவருகிறது.

இந்தாண்டு உஸ்பெகிஸ்தானில் செப்டம்பர் மாதம் இரு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் முதல் சர்வதேச புகாரா கலாசார திருவிழா நடைபெற உள்ளது. ஜப்பானிய கட்டட வல்லுநர் டடாவ் அண்டோவால் வடிவமைக்கப்பட்ட கலை அருங்காட்சியகம் விரிவுபடுத்தப்பட உள்ளது. மேலும், இளவரசர் ரோமனாவ் அரண்மனை புனரமைக்கப்பட உள்ளது.

முதல் சர்வதேச ரயில் பாதையான சில்க் ரோட் ரயில் பாதை கடந்தாண்டு நவம்பர் மாதம் தொடங்கப்பட்டது. இது, கஸகஸ்தான் மற்றும் உஸ்பெகிஸ்தானை இணைக்கிறது.

6. ஹவாய், அமெரிக்கா

ஹவாயில் உள்ள மௌயி தீவு கடந்தாண்டு தொடர் காட்டுத்தீயால் பாதிக்கப்பட்டது. இதனால், சுற்றுலா பயணிகள் இங்கு மிகவும் பொறுப்புடன் பயணத்தை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

இதற்காக மலாமா ஹவாய் எனும் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, இயற்கை வனங்களை மீட்டல், உள்ளூர் மௌயி குடும்பங்களுடன் சமைத்தல், தாவரங்கள் மற்றும் விலங்குகளின் வாழ்விடங்களை காத்தல் போன்ற 350க்கும் மேற்பட்ட தன்னார்வ செயல்பாடுகளில் சுற்றுலாப் பயணிகள் ஈடுபடலாம். அதற்கு பதிலாக, தள்ளுபடி விலையிலோ அல்லது இலவசமாகவோ அங்குள்ள ஹோட்டல்கள் மற்றும் ரிசார்ட்டுகளில் தங்க முடியும்.

7. ஜோர்டான்

உலகின் மிக பிரமிக்கத்தக்க பாலைவன நிலப்பரப்பு ஜோர்டானில் உள்ளது. வரலாற்றின் மிகவும் மர்மமான நாகரிகத்தின் பழமையான மையமாகவும் விளங்குகிறது. உங்களை ஆச்சர்யப்படுத்த ஜோர்டான் எப்போதும் தவறியதில்லை. சாகசங்களை விரும்புபவர்களுக்கு மத்திய கிழக்கில் சிறந்த இடமாக ஜோர்டான் உள்ளது.

2023-ல் 10 நாட்களுக்கு செல்லும் 120 கிமீ நீள மலையேற்ற பாதையான வாடி ரம் பாதை (Wadi Rum Trail) திறக்கப்பட்டது. ஜோர்டானின் தனித்துவமான அடையாளமாக விளங்கும் வாடி ரம்மின் சிவப்பு நிற சுவர்களின் ஊடாக அந்த பாதை செல்கிறது.

ஜோர்டானில் கடல் மட்டத்துக்கு 410 மீட்டர் ஆழத்துக்குக் கீழே அமைந்துள்ள வாடி முஜிப் இயற்கை சரணாலயம் உள்ளது. ஜோர்டானின் மிக நீளமான டானா சரணாலயத்தில் 180 பறவையினங்கள், அழியும் ஆபத்திலுள்ள 25 பாலூட்டி இனங்களும் உள்ளன. அகாபா கடல் காப்பகத்தில் வளமான பவளப் பாறைகள் உள்ளன. இவை, பன்னாட்டு இயற்கை பாதுகாப்பு ஒன்றியத்தின் (ஐயுசிஎன்) பாதுகாக்கப்பட்ட பகுதிகளில் ஒன்றாக பட்டியலிடப்பட்டுள்ளது. இங்கு 500 மீன் இனங்கள் உள்ளன.

8. பனாமா

பெரிய காடுகள், அமைதியான தீவுகள் மற்றும் மலைக்காடுகள் உள்ளிட்டவை பனாமா கால்வாயில் நிரம்பியுள்ளன. பனாமாவில் சுற்றுலாவை ஊக்குவிக்கும் பொருட்டு, மீனிங்ஃபுல் டிராவல் மேப் என்ற திட்டம் 2024ல் தொடங்கப்பட்டது.

பனாமா நகரின் காஸ்கோ ஆன்டிகுவோ மற்றும் எல் கொரில்லோ பகுதிகளை சுற்றி பார்த்தபின், தென் மேற்கு பகுதியில் உள்ள லா பின்டாடா மாவட்டத்துக்கு செல்லுங்கள். அங்கு கைவினைஞர்கள் பனாமாவின் தனித்துவமான தொப்பிகளை கைகளாலேயே செய்துகொண்டிருப்பார்கள். இந்த தொப்பிகள், யுனெஸ்கோவால் அங்கீகரிக்கப்பட்ட சோம்ப்ரெரோ பிண்டாவ் எனும் முறையால் செய்யப்படுகிறது.

2024-ல் ஐநா சுற்றுலா பிரிவால் சிறந்த சமூக சுற்றுலா பகுதியாக அறிவிக்கப்பட்ட எல் வல்லே டீ ஆண்டன் மற்றும் செர்ரோ கெயிட்டலில் உள்ள லுக்அவுட் பாதையில் பசிபிக் பெருங்கடல் மற்றும் கரீபியக் கடலையும் பார்க்க முடியும். இந்த புதிய பாதை 1,000 கி.மீ நீள பாதையை வடிவமைக்கும் திட்டத்தின் ஒரு பகுதியாகும்.

9. வேல்ஸ்

வேல்ஸ் நகரம், பிரிட்டனின் மற்ற பகுதிகளை விட அதிகம் பார்க்கப்படாத இடமாகும். திகைக்க வைக்கும் தேசிய பூங்காக்கள், அதிசயிக்க வைக்கும் இடைக்கால கோட்டைகள் ஆகியவை பெரும் கூட்டமின்றி உள்ளன. இந்தாண்டு வேல்ஸில் ஆண்டு முழுவதும் கொண்டாடத்தக்க நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இதில், வேல்ஸ் கலாசாரம், மொழி ஆகியவை கொண்டாடப்பட உள்ளன.

நீடித்த மற்றும் கலாசாரத்தை மையமாகக் கொண்டு சமீப காலமாக இங்கு சுற்றுலா வடிவமைக்கப்பட்டுள்ளது. பைக் மூலம் நகரத்தை சுற்றிப் பார்க்கும் வகையிலும் இங்கு சுற்றுலா மேம்படுத்தப்பட்டுள்ளது. மேலும், உலகிலேயே நாட்டின் கடற்கரை முழுதும் செல்லக்கூடிய வேல்ஸ் கடற்கரை பாதை இங்குள்ளது.

10. கிரீன்லாந்து

உலகில் கிரீன்லாந்து போன்று மற்றொரு இடமில்லை. 20 லட்சம் சதுர கிமீட்டரில் விரிந்துள்ள கிரீன்லாந்து, உலகின் மிக நீண்ட தீவு பகுதியாகும். 57,000க்கும் குறைவானவர்களே இங்கு வசிக்கின்றனர்.

மலைக்க வைக்கும் மலையேற்றம், கோடை காலத்தில் நம்மை அதிசயிக்க வைக்க்கும் திமிங்கலங்கள், பாரம்பரியமான நாய்களின் பனிச்சறுக்கு விளையாட்டு ஆகியவற்றுக்காக கிரீன்லாந்து நிச்சயம் செல்ல வேண்டும். எனினும், இது தொலைதூர, அதிக செலவுமிக்க, அதிக நேரம் எடுக்கும் ஒரு பகுதியாகும்.

எனினும், தலைநகர் நுக்கில் திறக்கப்பட்டுள்ள புதிய சர்வதேச விமான நிலையம் மற்றும் 2026-ல் வரவுள்ள மேலும் இரண்டு விமான நிலையங்களால் இங்கு எளிதில் செல்ல முடியும். சாகசங்களை விரும்புபவர்களுக்கு இந்த இடம் நிச்சயம் பிடிக்கும்.

மலையேற்றம், மீன்பிடித்தல் உள்ளிட்டவற்றுடன் இந்த ஆர்க்டிக் பிரதேசத்தை நாம் அனுபவிக்கலாம்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)