செல் போன் தொடர்ந்து பயன்படுத்துவதால் நம் மூளையில் என்ன மாற்றம் ஏற்படுகிறது?

தொடர் அலைப்பேசி பயன்பாடு நமது மூளையில் எவ்வித மாற்றத்தை ஏற்படுத்துகிறது?

பட மூலாதாரம், Getty Images

சரியாக ஐம்பது வருடங்களுக்கு முன்பாக முதல் செல்ஃபோன் அழைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. அப்போதிலிருந்து இப்போது வரை அந்த கையடக்க கருவி நமது வாழ்வில் எத்தனை தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்று பார்த்தால் வியப்பாக உள்ளது.

செல்ஃபோனில் பல மணிநேரம் மூழ்கி கிடந்துவிட்டு பின் அதுகுறித்து குற்றவுணர்ச்சியில் தவிப்பவர்கள் இங்கு ஏராளம்.

சில சமயங்களில் அதை விட்டொழிக்க வேண்டும் என்றுகூட நம்மில் பலர் நினைத்திருக்கலாம். ஆனால் எனது பணிக்கு அது அவசியம், எனது படிப்புக்கு அது அவசியம் என சப்பைக்கட்டு கட்டி மீண்டும் அதை கையில் எடுத்திருப்போம்.

ஆனால் ஒருபக்கம் உண்மையில் செல்ஃபோன் இல்லாமல் பல பணிகள் இயங்காமல் போவதுண்டு. பில் கட்டணம் தொடங்கி காலண்டர், கால்குலேட்டர், டார்ச், வானிலை அறிக்கை, வழிகாட்டி என நமது வாழ்க்கையில் பிரிக்க முடியாத அங்கமாக மாறிவிட்டது இந்த கையடக்க அலைபேசி.

4 நிமிடங்களுக்கு ஒரு முறை

சமீபத்தில் அமெரிக்காவில் நடைபெற்ற ஒரு ஆய்வில், 18 வயதுக்கு மேற்பட்டோர் நாள் ஒன்றுக்கு சராசரியாக 344 முறை அதாவது ஒவ்வொரு 4 நிமிடங்களுக்கு ஒருமுறை அலைபேசியை பார்க்கின்றனர் என தெரியவந்துள்ளது. ஒட்டுமொத்தமாக ஒரு நாளில் மூன்று மணி நேரம் அலைப்பேசியில் கழிக்கின்றனர். பல சமயங்களில் ஏதோ ஒரு சிறிய மெசேஜை பார்ப்பதற்காக அதை கையில் எடுத்து மணி கணக்காக நாம் அதில் மூழ்கி விடுகிறோம்.

இம்மாதிரியாக முழுக்க முழுக்க அலைபேசியை நம்பியிருப்பது நமது மூளையில் என்ன மாதிரியான மாற்றத்தை ஏற்படுத்துகிறது? அது வெறும் கெடுதலை மட்டுமே ஏற்படுத்துகிறதா என்று பார்ப்போம்.

நோட்டிஃபிகேஷன்களும் ஆபத்தே

தொடர் அலைப்பேசி பயன்பாடு நமது மூளையில் எவ்வித மாற்றத்தை ஏற்படுத்துகிறது?

பட மூலாதாரம், Getty Images

அலைபேசியை அதிக நேரம் பயன்படுத்துவது மட்டுமல்ல, ஏதேனும் நோட்டிஃபிகேஷன்களுக்காக அலைபேசியை சோதிப்பதும் ஆபத்தானதுதான்.

ஒரே சமயத்தில் பல விஷயங்களில் கவனம் செலுத்துவது பல நேரங்களில் நமது உற்பத்தி திறனை குறைக்கிறது. இதற்கு ஒரு ஆபத்தான எடுத்துக்காட்டு வாகனம் ஓட்டும்போது அலைபேசி பயன்படுத்துவது.

ஆய்வு ஒன்று, அலைப்பேசியில் பேசிக் கொண்டே வாகனம் ஓட்டினால் அவர்களால் முழுமையாக அதில் கவனம் செலுத்த முடியாது என்று கூறுகிறது. ஆனால் மற்றொரு ஆய்வில் அலைபேசியில் பேசுவது, மெசேஜ் செய்வது மட்டுமல்ல மெசேஜ் நோட்டிஃபிகேஷன் மூலமும் அதிக கவனச் சிதறல் ஏற்படுவது கண்டறியப்பட்டுள்ளது. எனவே அலைபேசியை பயன்படுத்துவது மட்டுமல்ல அது அந்த இடத்தில் இருந்தாலே அது நமது சிந்தனையை பெரிதும் பாதிக்கிறது.

சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில், இரு குழுக்களாக பங்கேற்பாளர்கள் பிரிக்கப்பட்டு ஒரு தரப்பினர் அலைபேசியை அருகாமையிலும், மறுதரப்பினர் பக்கத்து அறைகளில் அல்லது கண்ணுக்கு எட்டாத தூரத்திலும் வைத்திருக்கும்படி கோரப்பட்டனர்.

இந்த குழுக்களுக்கு, தகவல்களை நினைவில் வைத்து கொள்வது, புதிர்களை தீர்ப்பது போன்ற பல்வேறு விதமான சவால்கள் வழங்கப்பட்டன. அதில் அலைபேசிகளை தங்கள் பார்வைக்கு அப்பால் வைத்தவர்களே சிறப்பாக செயல்பட்டனர்.

பல சமயங்களில் நமது மூளை நம்மை அறியாமல் நமது அலைபேசி குறித்து நினைத்து கொண்டிருக்கும். அதில் வரும் நோட்டிஃபிகேஷன் குறித்து யோசிக்கும். எனவே அது கவனத்தை சிதறடிக்கும்.

ஆனால் அலைபேசியால் கெடுதல் மட்டுமே ஏற்படுவதில்லை என்றும் ஆய்வாளர்கள் சொல்கின்றனர்.

நன்மையும் உண்டு

தொடர் அலைப்பேசி பயன்பாடு நமது மூளையில் எவ்வித மாற்றத்தை ஏற்படுத்துகிறது?

பட மூலாதாரம், Getty Images

பொதுவாக நாம் அலைபேசியில் அனைத்தையும் குறித்து வைத்து கொள்வதால் நமது ஞாபக சக்தி குறைகிறது என்று கூறப்படுகிறது. ஆனால் அதற்கு மாறான விடையை தந்துள்ளது ஆய்வு ஒன்று.

குறிப்பிட்ட ஆய்வில், அதிக எண்ணிக்கை அளவு கொண்ட வட்டங்களையும் குறைந்த எண்ணிக்கை அளவு கொண்ட வட்டங்களையும் பங்கேற்பாளர்கள் குறித்து கொள்ள வேண்டும். அதன்பின் திரை மறைந்து மீண்டும் தோன்றும் போது அதிக எண்ணிக்கை அளவு கொண்ட வட்டங்களை அவர்கள் சுட்டிக் காட்ட வேண்டும்.

இதில் அதிக எண்ணிக்கை கொண்ட வட்டங்களை அலைபேசியில் குறித்து கொண்டவர்கள் சிறப்பாக செயல்பட்டதை காண முடிந்தது. அதேபோல அதிக எண்ணிக்கை வட்டங்களை அலைப்பேசியில் குறித்து கொண்டதால் குறைந்த எண்ணிக்கை வட்டம் குறித்து தங்களின் நினைவில் வைத்து கொள்ள அவர்களுக்கு எளிதாகவும் இருந்தது.

ஆனால் நாம் அலைபேசிகளை சார்ந்திருப்பதால் நமது எண்ணங்களில் என்ன மாதிரியான தாக்கங்கள் ஏற்படுகின்றன என்பதை துல்லியமாக சொல்வதற்கு மேலும் பல ஆய்வுகள் தேவைப்படுகின்றன.

‘தி எக்ஸ்பெக்டேஷன் எஃபக்ட்’ என்ற நூலை எழுதிய டேவிட் ராப்சன், “நாம் ஒரு பழக்கத்தை கட்டுப்படுத்த கட்டுப்படுத்த, அது தொடர்பான சுய கட்டுப்பாடு வலுவடைகிறது என்கிறார். மேலும் நமது மூளை எண்ணற்ற வளங்களை கொண்டது எனவே ஒரு செயலை செய்வதிலிருந்து நம்மை நாம் தடுத்தால் அது அடுத்த செயலில் நமது திறனை எந்த விதத்திலும் பாதிக்காது,” என்கிறார்.

சரி அலைப்பேசி பயன்பாட்டை குறைப்பதற்கு அல்லது அடிக்கடி அதனை நோக்கி ஓடுவதை குறைப்பதற்கு அதனை நாம் வேறு அறையில் வைத்து விடலாம். ஆனால் நீங்கள் நினைப்பதைக்காட்டிலும் உங்கள் மூளை அதிக வளம் பெற்றது. எனவே ஒவ்வொரு முறை நாம் அலைபேசியை சோதிக்க கூடாது என்று யோசிக்கும்போதெல்லாம் அதை சாத்தியமாக்க மூளையில் ஒரு புதிய நரம்பியல் பாதை உருவாக்கப்படுகிறது. இது அலைப்பேசி பழக்கத்திற்கு மட்டுமல்ல மற்றவைக்கும் பொருந்தும்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: