குழப்புகிறதா ஏர் இந்தியா விமான விபத்து குறித்த அறிக்கை? - நிபுணர்கள் பகிரும் தகவல்

    • எழுதியவர், இஷாத்ரிதா லாஹிரி
    • பதவி, பிபிசி நிருபர்

கடந்த மாதம் ஆமதாபாதில் நிகழ்ந்த ஏர் இந்தியா விமான விபத்து தொடர்பான முதற்கட்ட விசாரணை அறிக்கை வந்துள்ளது. விமான விபத்து புலனாய்வு பணியகம் (AAIB) தயாரித்துள்ள இந்த அறிக்கை, விபத்து தொடர்பான பல முக்கியமான விஷயங்களை வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளது.

புறப்பட்ட சில வினாடிகளிலேயே விமானத்தின் இரு என்ஜின்களுக்குமான எரிபொருள் விநியோகம் துண்டிக்கப்பட்டதாக இந்த அறிக்கை கூறுகிறது.

போயிங் 787 ட்ரீம்லைனர் விமானத்தின் எரிபொருள் கட்டுப்பாட்டு சுவிட்சுகள் இரண்டும் திடீரென "கட்-ஆஃப்" நிலைக்கு மாறியதால், என்ஜின்களுக்கு எரிபொருள் செல்வது நின்று, முழுமையாக செயலிழந்த சில வினாடிகளில் விமானம் விபத்துக்குள்ளானது.

விபத்து தொடர்பான முதல் கட்ட விசாரணை அறிக்கையின் பல முக்கிய அம்சங்கள் குறித்து, விமானம் தொடர்பான பிரச்னைகள் பற்றி அறிந்த பல நிபுணர்களிடம் பிபிசி பேசியது. அவர்கள் இந்த அறிக்கையில் காணப்படும் தகவல்களை ஆராய்ந்து சில முக்கியமான விஷயங்களை சுட்டிக்காட்டினார்கள். முதல் கட்ட விசாரணை அறிக்கையை வெளியிடும் போது, மேலும் அதிகமாக வெளிப்படைத்தன்மை பராமரிக்கப்பட்டிருக்கலாம் என்று அவர்கள் கருதுகின்றனர். உண்மையில், இந்த அறிக்கை விபத்து தொடர்பான பல கேள்விகளுக்கு பதிலளித்திருக்க வேண்டும்.

எரிபொருள் கட்டுப்பாட்டு சுவிட்சுகள் என்றால் என்ன? அவற்றின் வேலை என்ன?

விபத்து தொடர்பான முதல்கட்ட விசாரணை அறிக்கை வெளியான பிறகு, 'எரிபொருள் கட்டுப்பாட்டு சுவிட்ச்' அல்லது 'எரிபொருள் கட் ஆஃப் சுவிட்ச்' என்ற வார்த்தை மீண்டும் மீண்டும் வந்து கொண்டிருந்தது.

"எரிபொருள் கட்டுப்பாட்டு சுவிட்சுகள் விமானத்தின் இயந்திரங்களுக்கு செல்லும் எரிபொருள் விநியோகத்தைக் கட்டுப்படுத்துகின்றன. அவற்றின் வேலை, விமானத்தின் எஞ்சினுக்கு செல்லும் எரிபொருள் விநியோகத்தைத் தொடங்குவது அல்லது நிறுத்துவது" என்று விமான நிபுணர் சஞ்சய் லஜார் விளக்குகிறார். அவரைப் பொறுத்தவரை, "கட் ஆஃப்" என்பது எஞ்சினுக்கு எரிபொருள் வழங்கல் நிறுத்தப்படுவதைக் குறிக்கிறது. இதனால் எஞ்சினிகளிள் இயக்கம் நிறுத்தப்படுகின்றன."

விமானப் போக்குவரத்து நிபுணர் கேப்டன் சக்தி லும்பா கூறுகையில், "எரிபொருள் கட் ஆஃப் சுவிட்ச் என்பது எஞ்சினில் உள்ள ஒரு சுவிட்ச் ஆகும். இது எஞ்சினுக்குள் எரிபொருளை நுழைய அனுமதிக்கிறது. உதாரணமாக, எஞ்சினில் தீப்பிடித்தால், இந்த சுவிட்ச் எரிபொருள் விநியோகத்தை நிறுத்திவிடும். இதனால் நெருப்பு பற்றி எரிய மேலதிக எரிபொருள் கிடைக்காது என்பதால் தீ பரவாது. தீ விபத்து ஏற்பட்டால், கணினி கட் ஆஃப் சுவிட்ச்சைக் கட்டுப்படுத்துகிறது."

"சாதாரணமான சூழ்நிலைகளில், தரையில் விமானம் இருக்கும்போது எஞ்சினை இயக்குவதற்காக, விமானி தொடங்க 'எரிபொருள் கட்டுப்பாட்டு சுவிட்சை' பயன்படுத்துகிறார். இது இயக்கத்தைத் தொடங்கும் தொடக்க சுவிட்சைப் போன்றது" என்று அவர் விளக்குகிறார்.

"இந்த எரிபொருள் சுவிட்சுகள் தொடர்பாக ஏற்கனவே ஒரு 'சேவை அறிவிப்பு' (service bulletin) வெளியிடப்பட்டது. இதன் பேரில் ஏர் இந்தியா எந்த நடவடிக்கையும் எடுக்காததால், இந்த சேவை அறிவிப்பு யாரையும் கட்டுப்படுத்தவில்லை. இருப்பினும், ஒவ்வொரு விமான நிறுவனமும் அத்தகைய ஆலோசனை அல்லது எச்சரிக்கைக்கு கவனம் செலுத்த வேண்டும்" என்று கேப்டன் சக்தி லும்பா சுட்டிக்காட்டினார்.

இதற்கிடையில், விபத்து தொடர்பான முதல்கட்ட விசாரணை அறிக்கை குறித்து ஏர் இந்தியா ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. 'விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுடன் நாங்கள் நிற்கிறோம்' என்றும், விசாரணை நிறுவனங்களுடன் முழுமையாக ஒத்துழைப்போம் என்றும் நிறுவனம் கூறியுள்ளது. அறிக்கையில் குறிப்பிட்ட விவரங்கள் குறித்து ஏர் இந்தியா விமான நிறுவனம் எந்தவித கருத்தும் தெரிவிக்கவில்லை.

"AI171 விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுடன் ஏர் இந்தியா துணை நிற்கிறது. இந்த துயரமான நேரத்தில் நாங்கள் மிகவும் வருத்தமடைந்துள்ளோம், சாத்தியமான அனைத்து உதவிகளையும் வழங்க உறுதிபூண்டுள்ளோம். ஜூலை 12, 2025 அன்று விமான விபத்து புலனாய்வுப் பணியகம் (AAIB) வெளியிட்ட முதற்கட்ட அறிக்கை கிடைத்ததை நாங்கள் உறுதிப்படுத்துகிறோம்" என்று ஏர் இந்தியா நிறுவனத்தின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

சுவிட்ச் எப்படி 'கட் ஆஃப்' ஆக மாறியது?

விமானப் போக்குவரத்து நிபுணர் கேப்டன் மோகன் ரங்கநாதன் கூறுகையில், "எரிபொருள் சுவிட்ச் 'துண்டிக்கப்பட்டது' என்பது மிகவும் தெளிவாகத் தெரிகிறது. இது தொடர்பாக அறிக்கையில் தெளிவாக குறிப்பிடப்படவில்லை."

"விபத்து விசாரணை அறிக்கையின் தொடக்கத்தில் துணை விமானியே 'பறக்கும் விமானி' என்று குறிப்பிடப்பட்டுள்ளது, அதாவது, துணை விமானி தான் விமானத்தை ஓட்டிக்கொண்டிருந்தார். 'விமானி கண்காணிப்பு' பணியை தலைமை விமானியான கேப்டன், துணை விமானியின் செயல்பாடுகளை கண்காணித்துக் கொண்டிருந்தார். புறப்படும் நேரத்தில், பறக்கும் விமானியின் இரு கைகளும் 'கண்ட்ரோல் காலம்' எனப்படும் கட்டுப்பாட்டு நெடுவரிசையில் இருந்தன" என்று அவர் மேலும் கூறுகிறார்.

சுவிட்ச் துண்டிக்கப்பட்டால் என்னவாகும்?

எதிர்பாராதவிதமாக திடீரென சுவிட்ச் துண்டிக்கப்பட்டிருந்தால் என்ன செய்திருக்க முடியும்? என்ற கேள்வியை கேப்டன் சக்தி லும்பாவும் கவனத்தில் கொள்கிறார்.

"விமானப் பயணத்தில், சில பணிகள் அவற்றை நினைவில் வைத்துக் கொள்வதன் மூலம் செய்யப்படுகின்றன. இவை 'நினைவகப் பொருட்கள்' (memory items) என்று அழைக்கப்படுகின்றன. அவசரகாலத்தில், உடனடிப் பணிகளைச் செய்ய இவை பயன்படுத்தப்படுகின்றன. விமானி அவற்றை நினைவில் வைத்திருக்க வேண்டும். இதன் பொருள், அவசரநிலை ஏற்பட்டால், சரிபார்ப்புப் பட்டியலின் உதவியின்றி தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்."

"இரண்டு என்ஜின்களும் செயலிழந்தால், எரிபொருள் சுவிட்சை அணைத்துவிட்டு மீண்டும் இயக்க வேண்டும் (மறுசுழற்சி) என்பது 'நினைவகப் பொருளாக' இருந்தது" என்று அவர் கூறுகிறார்.

காக்பிட் குரல் ரெக்கார்டர் என்ன சொல்கிறது?

நிபுணர்களின் கூற்றுப்படி, CVR எனப்படும் காக்பிட் வாய்ஸ் ரெக்கார்டரில் பல கேள்விகளுக்கான பதில் இருந்திருக்கும். விபத்து தொடர்புடைய சில விஷயங்களை அது தெளிவுபடுத்தியிருக்கும்.

கேப்டன் சக்தி லும்பாவின் கூற்றுப்படி, "சுவிட்சை நிறுத்திவிட்டாரா என்று ஒரு விமானி மற்றவரிடம் கேட்டதாக அறிக்கை கூறுகிறது. அதற்கு இல்லை என்று பதில் கொடுத்தார். பின்னர் அவர் 'மேடே' செய்தியைக் கொடுத்தார்."

இதற்கிடையில், கேப்டன் மோகன் ரங்கநாதன், "அவர்களிடம் CVR உள்ளது. எனவே விமானிகளின் குரல்களை தெளிவாக அடையாளம் காண முடியும்" என்று கூறுகிறார்.

"ஒரு பயங்கரமான விபத்தைப் பற்றி விசாரணை அறிக்கையை தயாரிக்கும்போது, இந்த விஷயங்களைப் பற்றி தெளிவாகச் சொல்ல வேண்டும்" என்று அவர் கருதுகிறார்.

சஞ்சய் லாசரின் கருத்துப்படி, "AAIB முழுமையான CVR டிரான்ஸ்கிரிப்டை வெளியிடாதது துரதிர்ஷ்டவசமானது."

விபத்து நடந்தபோது என்ன நடந்தது?

விபத்துக்குப் பிறகு நிலைமையை விளக்கும் கேப்டன் சக்தி லும்பா, "விமானம் கீழே விழுந்தபோது, சுவிட்சுகள் 'ரன்' நிலையில் இருந்தன. என்ஜின்கள் ஸ்டார்ட் ஆகிக்கொண்டிருந்தன. என்ஜின்களை ஸ்டார்ட் செய்யும் செயல்முறை தொடங்கிவிட்டது, ஆனால் அதை முழுமையாக ஸ்டார்ட் செய்ய முடியவில்லை. இதன் காரணமாக, விமானத்தில் மின்சாரம் தடைபட்டது. இதன் பிறகு, ரேம் ஏர் டர்பைன் (RAT) கீழே வந்தது" என்று கூறுகிறார்.

சஞ்சய் லாசர் கூறுகையில், விமானத்தில் இருந்த மின்சக்திக்கான அனைத்து ஆதாரங்களும் செயலிழந்து, அவசரகால சூழ்நிலையில், RAT அதாவது ரேம் ஏர் டர்பைன் விமானத்திலிருந்து வெளியே வருகிறது.

ஆமதாபாத் விமான விபத்து தொடர்பான முதல்கட்ட விசாரணை அறிக்கை தொடர்பாக நிபுணர்களிடம் மேலும் பல கேள்விகள் உள்ளன.

"இந்த அறிக்கை தேவையான பதில்களை குறைவாக வழங்குகிறது என்பதுடன், மேலும் பல கேள்விகளை எழுப்புகிறது" என்று விமானப் போக்குவரத்து நிபுணர் சஞ்சய் லாசர் கூறுகிறார்.

கேப்டன் மோகன் ரங்கநாதன் இவ்வாறு கூறுகிறார்: "ஒரு அறிக்கையை குழப்பமான மொழியில் தெளிவற்றதாகவும், புள்ளிவிவரங்களுடனும் தொடங்கும்போது, அதன் நம்பகத்தன்மை குறித்து கேள்விகள் எழுகின்றன."

அவரைப் பொறுத்தவரை, "அவர்களிடம் இரண்டு சிசிடிவி படங்கள் உள்ளன. விமானம் புறப்படுவதும், 'ரேம் ஏர் டர்பைன்' வெளியே வரும் புகைப்படங்கள் மிகவும் தெளிவாக உள்ளன."

"இந்தப் படங்கள் முதல் நாளிலிருந்தே அவர்களிடம் இருந்தன. விபத்து நிகழ்ந்த நேரத்தில் தொலைக்காட்சி சேனல்களிலும் சமூக ஊடகங்களிலும் 787 விமானம் குறித்து பல சந்தேகங்கள் எழுப்பப்பட்டன. இதனால் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் மன உளைச்சலும் அதிகரித்தது" என்று கேப்டன் மோகன் கூறுகிறார்.

"இந்தப் படங்களை ஆரம்பத்திலேயே வெளியிட்டிருந்தால், விமானம் குறித்து மக்களுக்கு இருந்த சந்தேகங்கள் அனைத்தும் தீர்ந்திருக்கும்" என்று அவர் கூறுகிறார்.

"முழுமையான மற்றும் ஆழமான விசாரணை செய்யப்படும் வரை, போயிங் அல்லது GE (ஜெனரல் எலக்ட்ரிக்) தொடர்பாக எந்த பரிந்துரைகளும் இல்லை என்று AAIB தனது அறிக்கையில் எப்படி ஒரேயொரு வரியில் சொல்ல முடியும்?" என்று சஞ்சய் லாசர் கேட்கிறார். ஏனென்றால், விசாரணை அறிக்கையின் முதல்கட்டத்திலேயே இவ்வாறு கூறுவது என்பது அவர்களை அனைத்துப் பொறுப்பிலிருந்தும் விடுவிப்பதாகும் என்று கேப்டன் மோகன் கருதுகிறார்.

அடுத்து என்ன?

"இந்த விபத்து குறித்து மேலும் விரிவாக விசாரிக்கப்பட வேண்டும். முழு CVR தரவு தரப்படவேண்டும், அதிலும் அதன் டிரான்ஸ்கிரிப்ட்டிலும் வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டும்" என்று சஞ்சய் லாசர் கூறுகிறார்.

"விமானம் புறப்பட்ட பிறகு, இரண்டு என்ஜின்களும் எரிபொருள் பற்றாக்குறையால் செயலிழந்ததற்கு ஏதோ ஒன்று (அல்லது யாரோ ஒருவர்) காரணமாக இருந்திருப்பது தெளிவாகத் தெரிகிறது" என்று அவர் கூறினார்.

இவை அனைத்தையும் தவிர, பிபிசி பல விமானப் போக்குவரத்து நிபுணர்களிடமும் பேசியது. பெயர் குறிப்பிட விரும்பாத அவர்கள், விபத்து தொடர்பான விசாரணையின் ஆரம்ப அறிக்கை தெளிவாக இல்லை என்று கூறுகிறார்கள். எனவே, இந்த அறிக்கையில் எதுவும் அதிகமாக கூறப்படவில்லை. ஆமதாபாத் விமான விபத்து ஏன் நடந்தது என்பது குறித்த விவரங்களை இந்த அறிக்கையால் வழங்க முடியவில்லை என்று அவர்கள் நம்புகிறார்கள்.

அறிக்கைக்கு பாராட்டுகள்

இந்திய விமான விபத்து புலனாய்வுப் பணியகத்தின் (AAIB) அறிக்கை குறித்து, மத்திய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் ராம் மோகன் நாயுடு கிஞ்சராபு ஊடகங்களிடம் பேசியபோது, AAIB மிகவும் சவாலான பணியை சிறப்பாக செய்துள்ளது, என்று கூறினார். சர்வதேச நெறிமுறைகளை பின்பற்றி AAIB வெளிப்படைத்தன்மையுடன் விசாரணையை நடத்தியதாகவும் அவர் கூறியுள்ளார்.

அமெரிக்க தேசிய போக்குவரத்து பாதுகாப்பு வாரியத்தின் முன்னாள் நிர்வாக இயக்குனர் பீட்டர் கோயல்ஸ், இந்த அறிக்கை குறித்து AAIB-ஐப் பாராட்டியுள்ளார்.

"இதுபோன்ற விரிவான முதற்கட்ட அறிக்கையைத் தயாரித்ததற்காக இந்தியாவின் விமான விபத்து புலனாய்வுப் பணியகத்தைப் பாராட்ட வேண்டும்" என்று அவர் கூறினார்.

பல்வேறு விமான விபத்துக்கள் தொடர்பான விசாரணைகளை பீட்டர் கோயல்ஸ் நடத்தியுள்ளார்.

ஒரு நாட்டின் முன்னாள் தேசிய விமான நிறுவனம் போன்ற ஒரு உயர் நிறுவனத்தைப் பொறுத்தவரை, விசாரணை அறிக்கை விரிவானதாக இருக்காது என்று அவர் கூறினார்.

"ஆனால் இதுவொரு விரிவான அறிக்கை. இதற்காக AAIB-ஐப் பாராட்ட வேண்டும்" என்று பீட்டர் கோயல்ஸ் கூறினார்.

- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு