You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
2500 விபத்துகளை சந்தித்த போயிங் - ஏர் இந்தியாவின் மோசமான விபத்து எது?
- எழுதியவர், ஜாஸ்மின் நிஹலானி
- பதவி, பிபிசி செய்தியாளர்
ஜூன் 12 முதல் 17 வரை, 83 ஏர் இந்தியா விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.
இந்தியாவின் விமானப் போக்குவரத்து ஒழுங்குமுறை ஆணையமான DGCA-வின் அறிக்கையின்படி, ரத்து செய்யப்பட்ட 83 விமானங்களில் 66 விமானங்கள் அனைத்துமே குஜராத்தின் அகமதாபாத்தில் விபத்துக்குள்ளான போயிங் 787 ரக விமானங்கள்.
ஆமதாபாத் விமான விபத்தில் 270 பேர் கொல்லப்பட்டனர். இது கடந்த பத்தாண்டுகளில் உலகளவில் நடந்த மிக மோசமான விமான விபத்தாகும்.
ஜூன் 12ஆம் தேதி, ஆமதாபாத்தின் சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்திலிருந்து லண்டனுக்கு 242 பயணிகளுடன் ஏர் இந்தியா விமானம் AI-171 தனது பயணத்தைத் தொடங்கியது.
ஆனால் விமானம் புறப்பட்ட சில நொடிகளிலேயே அது விபத்துக்குள்ளானது. விமானத்தில் இருந்த ஒருவர் மட்டுமே விபத்தில் இருந்து தப்பிய நிலையில் விமானப் பணியாளர்கள் உட்பட எஞ்சிய அனைவரும் உயிரிழந்தனர்.
விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட விமானம் மருத்துவக் கல்லூரி ஒன்றின் விடுதியில் மோதியது. இதன் காரணமாக விமானத்தில் இருந்தவர்களைத் தவிர கட்டடத்தில் இருந்தவர்களும் விபத்தில் சிக்கிக் கொண்டனர்.
விபத்துக்கான காரணம் குறித்த விசாரணை நடைபெற்று வருகிறது.
ஏர் இந்தியா விமான விபத்துக்களின் வரலாறு
கடந்த 78 ஆண்டுகளில் ஏர் இந்தியா விமானங்கள், முப்பதுக்கும் மேற்பட்ட விபத்துகளைச் சந்தித்துள்ளதாகவும், அவற்றில் சுமார் 14 விபத்துகளில் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாகவும் தரவுகள் கூறுகின்றன.
1985 ஆம் ஆண்டு, AI-182 விமானத்தில் நடந்த குண்டுவெடிப்பில், விமானத்தில் இருந்த 329 பயணிகளும் கொல்லப்பட்டனர்.
இதற்குப் பிறகு, ஆமதாபாத்தில் நடந்த விமான விபத்து ஏர் இந்தியாவிற்கு மிகவும் வேதனையான விபத்தாக மாறியிருக்கிறது.
இந்தியாவில் போயிங் நிறுவனத்தின் மிகப்பெரிய வாடிக்கையாளராக ஏர் இந்தியா உள்ளதாக DGCA-வின் சமீபத்திய தரவுகள் தெரிவிக்கின்றன.
ஏர் இந்தியா நிறுவனத்திடம் 54 போயிங் விமானங்கள் உள்ளன. அவற்றில் 28 போயிங்-787 வகையைச் சேர்ந்தவைகள் ஆகும்.
ஏர் இந்தியாவின் துணை நிறுவனமான ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனத்திடம் 48 விமானங்கள் உள்ளன. அவற்றில் 43 போயிங் வகை விமானங்கள் ஆகும். இதுதவிர, கடந்த ஆண்டு 220 போயிங் விமானங்களுக்கான ஆர்டர்களை வழங்கியது. அவற்றில் 787 ரக விமானங்கள் இருபது என்பது குறிப்பிடத்தக்கது.
ஆமதாபாத் விமான விபத்துக்குப் பிறகு, தொழில்நுட்ப காரணங்களால் பல ஏர் இந்தியா விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. சில விமானங்கள் உடனடியாக தரையிறக்கப்பட்டன.
சான் பிரான்சிஸ்கோவிலிருந்து மும்பைக்கு பயணம் மேற்கொண்டிருந்த ஏர் இந்தியா விமானம் கொல்கத்தாவில் தரையிறக்கப்பட்டது.
ஹாங்காங்கிலிருந்து டெல்லிக்கு சென்றுக் கொண்டிருந்த ஏர் இந்தியாவின் போயிங் 787-8 விமானத்தில், தொழில்நுட்பக் கோளாறு இருப்பதாக விமானி சந்தேகித்ததால், நடுவழியிலேயே விமானம் திருப்பி அனுப்பப்பட்டது.
டெல்லியில் இருந்து வதோதராவுக்குச் சென்று கொண்டிருந்த விமானம் டெல்லிக்கே திரும்ப வேண்டியிருந்தது. இந்த விமானத்தின் தரையிறங்கும் கியரில் கோளாறு காணப்பட்டதாகக் கூறப்படுகிறது.
கடும் நிதி நெருக்கடியை எதிர்கொண்டுள்ள போயிங் நிறுவனம்
போயிங் நிறுவனம் தற்போது நிதி மற்றும் பாதுகாப்பு தொடர்பான சிக்கல்களை எதிர்கொள்கிறது.
கடந்த ஆண்டு ஒவ்வொரு மாதமும் ஒரு பில்லியன் டாலர் இழப்பை இந்த விமான தயாரிப்பு நிறுவனம் சந்தித்துள்ளது.
2018 மற்றும் 2019-ஆம் ஆண்டுகளில், அதன் 737 மேக்ஸ் விமானங்களில் இரண்டு புறப்பட்ட சில நிமிடங்களில் விபத்துக்குள்ளானது. இதில் இந்தோனீசியாவில் நடைபெற்ற விபத்தில் 189 பேர் இறந்தனர், எத்தியோப்பியாவில் நடைபெற்ற 737 மேக்ஸ் விமான விபத்தில் 157 பேர் உயிரிழந்தனர்.
மென்பொருள் கோளாறுகளே இந்த விபத்துகள் ஏற்படக் காரணம் என்று கூறப்பட்டது. எனவே, விபத்துகளுக்கு காரணமான 737 மேக்ஸ் ரக விமானங்கள் 18 மாதங்களுக்கு பறக்கவில்லை.
விமானப் பாதுகாப்பு வலையமைப்பின் தரவுகளை அடிப்படையாகக் கொண்டு செய்யப்பட்ட பகுப்பாய்வின்படி, 2014 மற்றும் 2025 க்கு இடையிலான காலகட்டத்தில் சர்வதேச அளவில் குறைந்தது 40 விமான விபத்துக்கள் நடைபெற்றுள்ளன. அதில் போயிங் நிறுவனத்தின் தயாரிப்புகள் 12 விபத்துக்களில் சிக்கின.
இருப்பினும், ஆமதாபாத்தில் விபத்துக்குள்ளான போயிங் 787-8 ட்ரீம்லைனர் விமானம் உயிருக்கு ஆபத்தான விபத்திற்கு உள்ளானது இதுவே முதல் முறை ஆகும்.
இதற்கு முன்பும் இந்த ரக விமானங்கள் விபத்துக்களில் சிக்கியிருந்தாலும், அவற்றில் யாரும் உயிரிழக்கவில்லை.
இன்றுவரை போயிங் நிறுவனத்தின் அனைத்து ரக விமானங்கள் சந்தித்த விபத்துகளின் எண்ணிக்கை, 2500க்கும் அதிகம் ஆகும். அதில், குறைந்தது 500 விபத்துக்களில் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன.
விமானப் பயணப் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கும் விபத்துக்கள்
பொதுமக்கள் பயன்பாட்டிற்கான விமானங்கள் சந்தித்த விபத்துக்களில் உயிரிழப்பு ஏற்படுத்தியவற்றின் வரலாற்றுத் தரவுகளைப் பார்த்தால், 1970 முதல் 1980-ஆம் ஆண்டிற்கு இடையிலான காலகட்டத்தில், உயிர்பலி கொண்ட விபத்துக்கள் மிகவும் பொதுவானவை எனத் தெரியவருகிறது.
காலப்போக்கில் உயிர்பலி வாங்கும் விபத்துகளின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு குறைந்து வருகிறது. அதே நேரத்தில் விபத்துக்குள்ளாகும் விமானங்களின் எண்ணிக்கையிலும் கணிசமாக அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.
1970 ஆம் ஆண்டில், 68 லட்சம் விமானங்கள் பயணச்சேவை வழங்கிக் கொண்டிருந்தன என்றால், இது 2024 ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 3 கோடியே 38 லட்சமாக அதிகரித்துள்ளது.
விமானங்களின் எண்ணிக்கை அதிகரித்தாலும் விமான விபத்துகளில் ஏற்படும் உயிரிழப்பு எண்ணிக்கை மிகவும் குறைவாகவே உள்ளது.
2024-ஆம் ஆண்டில், உயிரிழப்பு ஏற்படுத்திய விமான விபத்துகளின் விகிதம் பத்து லட்சம் விமான பயணங்களுக்கு 0.12 ஆக இருந்தது.
உயிரிழப்பை ஏற்படுத்தும் பெரும்பாலான விமான விபத்துக்கள், பயணத்தின் முடிவில் நிகழ்கின்றன என்பதையும் புள்ளிவிவரங்கள் சுட்டிக்காட்டுகின்றன.
2015 மற்றும் 2024 க்கு இடையில் விமான விபத்துக்களில் 37 சதவீத விபத்துகள், விமானம் தரையிறங்கும் போது நிகழ்ந்தன.
விமானம் தரையிறங்குவது என்பது, விமானத்தின் மொத்த பயண நேரத்தில் 1 சதவீதம் மட்டுமே ஆகும். அதேபோல, விமானத்தின் முழு பயண நேரத்தில் 57 சதவீதம் மட்டுமே அவை வானில் இருக்கின்றன.
அப்போது நிகழும் விபத்துக்களில், 10 சதவீத விபத்துகளில் மட்டுமே உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன.
இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு