You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
திமுகவை விட்டுவிட்டு தவெகவை குறிவைக்கிறதா அதிமுக? அரசியல் பின்னணி என்ன?
இதுவரை தமிழக வெற்றிக் கழகம் குறித்து மென்மையான போக்கைக் கடைப்பிடித்து வந்த அதிமுக, தற்போது கடும் விமர்சனங்களை முன்வைக்க ஆரம்பித்திருக்கிறது. இதன் நோக்கம் என்ன?
விஜயின் தமிழக வெற்றிக் கழகம் தொடங்கப்பட்டதில் இருந்தே அந்தக் கட்சி விஷயத்தில் அதிமுக மென்மையான போக்கைக் கடைப்பிடித்து வந்தது. ஆனால் அந்தப் போக்கு மாறி அதிமுக சமீப நாட்களாக, அக்கட்சி மீது கடும் விமர்சனங்களை முன்வைக்கத் தொடங்கியுள்ளது.
தங்கள் கூட்டணிக்கு வராதது மற்றும் திமுக-வுக்கு ஒரே போட்டி நாங்கள்தான் என தவெக முன்வைத்துக் கொள்வது போன்றவற்றை இதற்குக் காரணமா?
'அவர் சிறந்த நடிகர், நாங்கள் சிறந்த அரசியல்வாதி'
ஜனவரி 29ஆம் தேதியன்று சேலம் மாவட்டம் ஓமலூரில் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னெப்போதும் இல்லாத வகையில் விஜயை கடுமையாக விமர்சித்துப் பேசினார்.
அப்போது அவர், "அதிமுக பொன் விழா கண்ட கட்சி. 32 ஆண்டுகள் தமிழகத்தை ஆட்சி செய்த கட்சி. அவர்கள் (தவெக) இதுவரை என்ன செய்திருக்கிறார்கள்? நடிகர் என்றால் கூட்டம் வரத்தான் செய்யும். அவர் சிறந்த நடிகர். ஆனால், சிறந்த அரசியல்வாதி நாங்கள்தான். இந்த ஆட்சியை எதிர்த்து சமீப காலம் வரை (விஜய்) குரல் கொடுக்கவில்லை. அதுவரை நடித்துக் கொண்டுதானே இருந்தார்" என்று தெரிவித்தார்.
மேலும், "41 உயிர்கள் போய்விட்டன. அந்தக் கூட்டம் அவருடைய பேச்சைக் கேட்பதற்காக வந்த கூட்டம். அவர் நேரடியாகச் சென்றிருக்க வேண்டும். நாங்கள் செல்லவில்லையா? நாங்கள் எந்தக் கட்சி எனப் பார்க்கவில்லை. விலை மதிக்க முடியாத 41 உயிர்கள் போய்விட்டன. அவர்களுடைய குடும்பம் எந்த நிலையில் இருக்கும்? அவர்களுக்கு எங்களால் முடிந்தவரை ஆறுதல் கூறினோம். அதைக்கூட உங்களால் சொல்ல முடியவில்லையே! பிறகு கட்சி நடத்தி என்ன செய்யப் போகிறீர்கள்?" என்றும் விமர்சித்தார்.
அதோடு, "திரைப்படத்தில் இருக்கும் வரை சம்பாதித்தீர்கள், இப்போது 'அதை விட்டுவிட்டு வந்தேன்' என்கிறீர்கள். யாருக்காக விட்டு வந்தீர்கள்?. ரசிகர் பட்டாளம் ஏராளமாக இருப்பதால் எல்லாவற்றையும் செய்துவிட முடியாது. கொரோனா காலகட்டத்தின்போது 32 மாவட்டத்திற்கும் நேரடியாகச் சென்றேன். இவர் செல்வாரா?" என்று தெரிவித்தார் எடப்பாடி கே. பழனிசாமி.
தவெக-வுக்கு கூட்டணி அழைப்பு விடுத்த அதிமுக
தமிழக வெற்றிக் கழகத்தின் மீது சமீப நாட்களில் அதிமுக கடும் விமர்சனத்தை முன்வைப்பது இது முதல்முறையல்ல. ஆனால், விஜய் அரசியல் கட்சியைத் தொடங்கியதில் இருந்து திமுக-வை கடுமையாக விமர்சித்த அளவுக்கு அதிமுக-வை விமர்சிக்கவில்லை.
சில தருணங்களில் தற்போதைய தலைமையை விமர்சித்தாலும் அக்கட்சியின் மறைந்த தலைவர்களான எம்.ஜி.ஆர்., ஜெ. ஜெயலலிதா குறித்து தொடர்ந்து நேர்மறையாகவே பேசி வந்தார். கடந்த ஆகஸ்ட் மாதத்தில் எடப்பாடி பழனிசாமியின் தலைமையை விமர்சிப்பது போல விஜய் பேசியபோது மட்டும் அதற்கு எடப்பாடி பழனிசாமி பதிலளித்தார்.
இதைத் தவிர, இந்த இரு கட்சிகளும் பரஸ்பர விமர்சனங்களில் கவனமாகவே இருந்தன. இந்த நிலையில், கரூரில் நடந்த விஜயின் கூட்டத்தில் 41 பேர் இறந்தபோது அக்கட்சிக்கு ஆதரவாகக் குரல் கொடுத்த அதிமுக, சட்டமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும் கரூர் சம்பவத்திற்கு திமுக அரசின் கவனமின்மையே காரணம் எனக் குற்றம் சாட்டியது.
இந்தப் பின்னணியில் தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி வைத்துக்கொள்ள அதிமுக விரும்பியது வெளிப்படையாகவே தெரிந்தது.
நாமக்கல் மாவட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற அதிமுக பிரசாரக் கூட்டம் ஒன்றில் தவெக கொடியை சிலர் ஏந்தியபடி நின்றனர்.
அப்போது பேசிய எடப்பாடி பழனிசாமி, "இதோ பாருங்கள், கொடி பறக்கிறது, பிள்ளையார் சுழியைப் போட்டுவிட்டார்கள்" எனக் கூறினார். அதிமுக-வின் முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் வெளிப்படையாகவே தவெக-வுக்கு கூட்டணி அழைப்பு விடுத்தார்.
ஆனால், அதிமுக மட்டும்தான் கூட்டணிக்காக வெளிப்படையாக அழைப்பு விடுத்து வந்ததே தவிர, விஜய் தரப்பிலிருந்து எந்த நேர்மறையான சலனமும் இல்லை.
ஒரு கட்டத்தில் அதிமுக-வும் பாஜக-வும் கூட்டணி அமைத்துவிட, அந்தக் கூட்டணியில் விஜய் இணைவதற்கான வாய்ப்பு குறைந்து போனதாக கருதப்பட்டது. இருந்தபோதும் அதிமுக தரப்பிலிருந்து விஜய் மீது பெரிய விமர்சனங்கள் எதையும் முன்வைக்காமலேயே அமைதி காத்தனர்.
மூடப்பட்ட கூட்டணிக் கதவுகள்
இந்த நிலையில்தான் மகாபலிபுரத்தில் நடந்த கூட்டத்தில் அதிமுக-வை ஊழல் சக்தி என விஜய் குறிப்பிட, அதிமுக அதற்குப் பதிலடி கொடுத்தது. எந்த கரூர் சம்பவத்திற்கு வெளியிலும் சட்டமன்றத்திற்கு உள்ளும் தவெக-வுக்கு ஆதரவாக இருந்ததோ, அதே கரூர் சம்பவத்திற்கு விஜய்யும் காரணம் எனச் சாடியது.
இந்த நிலையில்தான் அக்கட்சியின் பொதுச் செயலாளரான எடப்பாடி பழனிசாமியும் விஜயை நேரடியாக விமர்சித்திருக்கிறார்.
"எடப்பாடி பழனிசாமியைப் பொறுத்தவரை விஜய் எப்படியாவது நம் கூட்டணிக்கு வந்து சேர்ந்துவிடுவார் என்ற கணக்கில் இருந்தார். அது நடந்திருந்தால் அதிமுக கூட்டணி 100% வெற்றி பெறும் வாய்ப்பு இருந்திருக்கும். இப்போது விஜய், தமிழக தேர்தல் களத்தில் ஒரு சீர்குலைப்பாளராக (Disruptor) மாறிவிட்டார்.
அவருக்கு எவ்வளவு நெருக்கடி கொடுத்தாலும் கூட்டணிக்கு ஒப்புக்கொள்ள மறுக்கிறார். தாங்கள் வெற்றி பெறவேண்டிய ஒரு தேர்தலை, விஜய் சீர்குலைப்பதாக அதிமுக நினைக்கிறது. அதனால்தான் கடுமையான தாக்குதலை நடத்த ஆரம்பித்திருக்கிறார்கள்" என்கிறார் மூத்த பத்திரிகையாளரான ஆர்.கே. ராதாகிருஷ்ணன்.
நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க., பாட்டாளி மக்கள் கட்சி, அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம், தமிழ் மாநில காங்கிரஸ், ஓ. பன்னீர்செல்வம் ஆகியோரை உள்ளடக்கிய தேசிய ஜனநாயகக் கூட்டணி, 18.28% வாக்குகளைப் பெற்றிருந்தன. அதிமுக - தேமுதிக கூட்டணி 23.05% வாக்குகளைப் பெற்றிருந்தது.
2026ஆம் ஆண்டின் சட்டமன்றத் தேர்தல் நெருங்கியிருக்கும் நிலையில், அ.தி.முக - பா.ஜ.க கூட்டணியில் ஓ. பன்னீர்செல்வம் இதுவரை சேர்க்கப்படவில்லை. அதேபோல, தேமுதிக-வும் தனது முடிவை அறிவிக்கவில்லை. பாட்டாளி மக்கள் கட்சியைப் பொறுத்தவரை அதன் ஒரு பிரிவினர் டாக்டர் ராமதாஸ் தலைமையில் செயல்படுகின்றனர்.
இந்த நிலையில், அ.தி.முக - பா.ஜ.க, பாமக, அமமுக தற்போது இணைந்திருக்கும் நிலையில் வாக்கு சதவிகிதம் நிச்சயமாக 35 சதவிகிதத்தைக் கடந்திருக்குமென அதிமுக கருதுகிறது.
தமிழக வெற்றிக் கழகம் இதுவரை எந்தத் தேர்தலையும் எதிர்கொள்ளவில்லை என்றாலும் பல்வேறு தரப்பினர் மேற்கொண்ட கருத்துக் கணிப்புகள் அக்கட்சிக்கு 8% முதல் 20% வரை வாக்குகள் கிடைக்கலாம் எனக் கணிக்கின்றன.
இந்தப் பின்னணியில்தான் தவெக-வுடன் கூட்டணி அமைத்துக்கொள்ள வெகுவாக விரும்பியது அதிமுக. ஆனால், தற்போது அதற்கான கதவுகள் முழுமையாக மூடப்பட்டுவிட்டது.
அதிமுக தவெக-வை கடுமையாக விமர்சிப்பதன் பின்னணி
ஆனால், ஆளும் கட்சியான திமுக-வை விமர்சிப்பதை விட்டுவிட்டு, தேர்தலையே சந்திக்காத தவெக-வை அதிமுக ஏன் விமர்சிக்க வேண்டும்?
இதற்கு ஒரு காரணம் இருக்கிறது என்கிறார் ஆர்.கே. ராதாகிருஷ்ணன்.
"எந்த ஒரு ஆட்சியாக இருந்தாலும் ஆட்சிக்கு எதிரான வாக்குகள் குறைந்தது 5 சதவிகிதமாவது இருக்கும். வெற்றி பெற நினைக்கும் எந்தவொரு எதிர்க்கட்சிக்கும் அந்த வாக்குகள் மிக முக்கியமானவை.
கடந்த 2016இல் மக்கள் நலக் கூட்டணி திமுக-வின் வாய்ப்புகளைச் சீர்குலைத்ததைப் போல இந்த முறை தங்களது வாய்ப்புகளை விஜய் சீர்குலைத்துவிடக் கூடாது என அ.தி.மு.க. நினைக்கிறது. திமுக-வும் விஜயும் ஒன்றுதான் என்று சொல்லி, மக்களும் அதை ஏற்றுக் கொண்டால் ஆட்சிக்கு எதிரான வாக்குகள் முழுமையாக நம் பக்கம் வரும் என்ற நம்பிக்கையில் எடப்பாடி பழனிசாமி இதைச் செய்கிறார்" என்கிறார் ஆர்.கே. ராதாகிருஷ்ணன்.
ஆனால், தவெக மீதான அதிமுக-வின் விமர்சனத்திற்கு எளிய காரணத்தை முன்வைக்கிறார் அதிமுக-வின் முன்னாள் அமைச்சரான வைகைச் செல்வன்.
"விஜயை பொறுத்தவரை, அவருக்கு ஆதரவாக இருப்பவர்கள் யார், எதிராக இருப்பவர்கள் யார் என்பதுகூட புரியாதவராக இருக்கிறார். இத்தனை நாட்களாக அவர்கள் எங்களை விமர்சிக்கவில்லை. அதனால், நாங்களும் விமர்சிக்காமல் இருந்தோம். இப்போது விமர்சிக்கிறார்கள். அதனால் பதிலுக்கு விமர்சிக்கிறோம்" என்கிறார் வைகைச் செல்வன்.
மறுபுறம், "அவர்கள் எங்களுடன் கூட்டணி வைத்துக்கொள்ள விரும்பினார்கள். அது நடக்காத நிலையில், இவ்வாறு விமர்சிக்கிறார்கள். அதற்கு நாங்கள் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லையெனக் கருதுகிறோம்.
அவர்களுடைய விமர்சனத்திற்கு நாங்கள் பதில் சொல்லவும் போவதில்லை. தேர்தல் களத்தில் எங்கள் முதன்மையான எதிரி திமுக மட்டும்தான். மற்றவர்கள் மீது நாங்கள் கவனம் செலுத்தப் போவதில்லை" என்கிறார் தமிழக வெற்றிக் கழகத்தின் இணைப் பொதுச் செயலாளரான சிடிஆர் நிர்மல்குமார்.
ஆனால், அதை மறுக்கிறார் வைகைச் செல்வன். "கூட்டணி இல்லை என்பது எப்போதோ முடிவாகிவிட்டது. கூட்டணிக்கு வராததால் விமர்சிக்கிறோம் என்று சொல்வது தவறு" என்கிறார் அவர்.
தவெக தங்களுடன் கூட்டணிக்கு வராததால், அதிமுக அதை விமர்சிக்க ஆரம்பித்திருக்கிறது என்று புரிந்துகொள்வது, ஓர் எளிய புரிதலாக இருக்கும் என்கிறார் பேராசிரியர் ராஜன் குறை கிருஷ்ணன்.
"ஆனால், அதிமுக-வுக்கு இதில் வேறு நோக்கங்களும் இலக்குகளும் இருக்கலாம். ஒரு தேர்தல் வரும்போது நாம் பொதுவாக ஆளும் கட்சி ஆதரவு வாக்குகள், எதிர்ப்பு வாக்குகள் குறித்து விவாதிக்கிறோம். எதிர்க்கட்சிகளுக்கு இருக்கக்கூடிய ஆதரவு, எதிர்ப்பு வாக்குகள் குறித்து கவனிப்பதில்லை.
இந்தத் தேர்தலில் ஒருவர் திமுக-வுக்கு வாக்களிக்கிறார் என்றால் அவர் தி.மு.க. ஆதரவாளராக இருக்க வேண்டியதில்லை. அவரது வாக்கு அதிமுக எதிர்ப்பு வாக்காகக்கூட இருக்கலாம். அப்படியான எதிர்ப்பு வாக்குகளை திமுக மட்டுமே மொத்தமாகப் பெற்றுவிடக் கூடாது என அதிமுக கருதியிருக்கலாம். விஜயை இன்னொரு முனையாக நிறுத்துவதன் மூலம் அந்த வாக்குகளைச் சிதறடிக்க அதிமுக கருதியிருக்கலாம்" என்கிறார் ராஜன் குறை கிருஷ்ணன்.
வரும் நாட்களில் தமிழக வெற்றிக் கழகம் அதிமுக-வை எப்படி அணுகப் போகிறது என்பது இந்த விவகாரத்தில் கூடுதல் வெளிச்சத்தை அளிக்கலாம்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு