இந்திய கிரிக்கெட்டில் அதிக திறமையுடன் இருப்பது பிரச்னையா? - இந்திய அணி எதிர்கொள்ளும் சிக்கல்கள்

இந்திய கிரிக்கெட்டில் அதிக திறமையுடன் இருப்பது சிக்கலா?

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், சுரேஷ் மேனன்
    • பதவி, விளையாட்டுத் துறை எழுத்தாளர்

இந்தியா ஐசிசி கோப்பையை வென்று பத்து ஆண்டுகள் ஆகின்றன. இந்தியாவில் வரும் அக்டோபர்-நவம்பர் மாதங்களில் 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டித் தொடர் நடைபெறவுள்ள நிலையில், இரண்டு கேள்விகள் முக்கியத்துவம் பெறுகின்றன. 

முதலாவது, மகேந்திர சிங் தோனியின் இறுதி சிக்ஸர் 2011 உலகக் கோப்பையில் இந்தியாவின் வெற்றியின் நிலையான பிம்பமாக மாறிய பிறகு தற்போது மீண்டும் இந்தியாவின் ஆண்டாக இருக்குமா? மற்றொரு கேள்வி, இந்திய கிரிக்கெட் மாற்றத்தை நோக்கி செல்கிறதா?

விளையாட்டைப் பொறுத்தவரை மாற்றம் என்பது அரிதாக ஓர் இரவில் நடக்கும். சில நேரங்களில் தொடர்ச்சியான வெற்றிகள், இளைய ஆட்டக்காரர்களுக்கு மூத்த ஆட்டக்காரர்கள் வாய்ப்பளிக்க வழிவகுக்கும். பெரும்பாலும், தோல்வியே மாற்றத்திற்கு வழிவகுக்கிறது.

இந்திய கிரிக்கெட்டை பொறுத்தவரை 2022ஆம் ஆண்டு என்பது நடுநிலையான ஆண்டாகவே அமைந்தது. இந்த காலகட்டத்தில் இந்திய அணி விளையாடிய டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் 58% சதவீத வெற்றியைப் பெற்றுள்ளது.

டி20 ஆட்டங்களை பொறுத்தவரை இது 70% சதவீதமாக உள்ளது. இந்த ஆண்டு நடைபெறவுள்ள டெஸ்ட் கிரிக்கெட் உலகக் கோப்பை போட்டியின் இறுதி ஆட்டத்தில் விளையாடுவதற்கும் கோப்பையை வெல்வதற்கும் சாதகமான அணியாக இந்தியா பார்க்கப்படுகிறது. 

இருப்பினும், இந்தியா தனது திறமைக்கு குறைவாகவே விளையாடியது என்ற உணர்வும் உள்ளது. சிறந்த ஆட்டக்காரர்கள் தடுமாறினார்கள், பந்துவீச்சாளர்கள் பெருமளவில் ஈர்க்கவில்லை. இதனுடன், முக்கிய வீரர்களுக்கு ஏற்பட்ட காயம் மேலும் பிரச்னைகளை அதிகப்படுத்தியது.

இந்தியா டெஸ்டில் 2வது இடத்திலும் டி20யில் முதல் இடத்திலும் ஒருநாள் போட்டிகளில் 4வது இடத்திலும் இருந்தாலும் மேற்கூறிய பிரச்னைகள் அனைத்து வகையான ஆட்டங்களிலும் உள்ளன.

அதிக எதிர்பார்ப்பும் பிரச்னையின் ஒரு பகுதியாக உள்ளது. இந்தியா அனைத்தையும் வெல்ல வேண்டும், எதையும் வெல்ல வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கிரிக்கெட்டில் இந்திய அணியின் வெற்றிகள் மற்ற இடங்களில் தங்கள் சொந்த வாழ்க்கையில் தோல்விகளை எப்படியாவது ஈடு செய்யும் என்று நினைக்கும் மக்களுக்கு தங்கள் எதிர்பார்ப்பு பூர்த்தி அடையாதபோது ஏமாற்றம் ஏற்படுகிறது. 

போட்டிக்கான அட்டவணையும் பிரச்னையின் ஒரு பகுதியாக உள்ளது. தொலைக்காட்சியின் அகோர பசிக்குத் தீனியிட அதிக போட்டிகளில் விளையாட வேண்டியுள்ளது. உலகக் கோப்பை நடைபெறவுள்ள ஆண்டில், டி20 உலகக் கோப்பை போட்டியில் விளையாடிய நிலையில் இந்த அளவு டி20 போட்டிகளில் தற்போது விளையாட வேண்டியதில்லை. 

மார்ச் மாதத்திற்கு முன்பாக இலங்கை, நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்தியா 9 ஒருநாள் போட்டிகளில் விளையாடவுள்ளது. இதன் விளைவாக அவர்கள் தங்களுக்கு எதிராகவே விளையாடிகொள்வார்கள்.

சரியான இணையை உருவாக்க முயல்வார்கள், வீரர்கள் போதுமான ஓய்வு பெறுவதை உறுதி செய்வார்கள் (ஆஸ்திரேலியா தொடரைத் தொடர்ந்து ஐபிஎல் தொடர் வேறு வருகிறது), மற்றும் காயங்கள் சரியாகக் கவனிக்கப்படுகின்றன. காயமடைந்த வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா முழுமையாகக் குணமடைவதற்கு முன்பாகவே விரைந்து போட்டிக்குத் திரும்பக்கூடும் என்று தேர்வுக்குழு தலைவர் சேத்தன் சர்மா கூறியது கவலையளிக்கிறது. 

இந்திய கிரிக்கெட்டில் அதிக திறமையுடன் இருப்பது சிக்கலா?

பட மூலாதாரம், Getty Images

மேலும், டெஸ்ட் பட்டியலில் முன்னிலையில் உள்ள ஆஸ்திரேலியாவுடன் 4 டெஸ்ட் போட்டிகளிலும் இந்திய அணி விளையாடுகிறது. இலங்கை மற்றும் தென் ஆப்ரிக்கா ஆகிய இரண்டு அணிகள் மட்டுமே போட்டியில் உள்ளதால், இந்தியா உலகக் கோப்பை டெஸ்ட் தொடரின் இறுதிப் போட்டிக்குச் செல்ல நல்ல வாய்ப்பு உள்ளது. 

வரும் நவம்பர் மாதத்தோடு, சச்சின் டெண்டுல்கர் ஓய்வு பெற்று 10 ஆண்டுகள் ஆகவுள்ளது. இந்திய கிரிக்கெட்டின் சகாப்தம் முடிவுக்கு வந்தது என்று இந்த நிகழ்வு குறிப்பிடப்பட்டது. ஆனால், சுவாரஸ்யமாக, அவரது கடைசி டெஸ்டில் விளையாடிய ஏழு வீரர்கள் இன்னும் சர்வதேச போட்டிகளில் விளையாடுகிறார்கள் - சிறப்பாகச் செயல்படுகிறார்கள். ரவிச்சந்திரன் அஷ்வின் , சேட்டேஸ்வர் புஜாரா, விராட் கோலி, ரவீந்திர ஜடேஜா, ஷிகர் தவான் ஆகியோர்தான் அவர்கள்.

ஒன்று இளைய வீரர்கள் போதுமான அளவு அழுத்தம் கொடுக்கவில்லை அல்லது அவர்கள் பெரிய லீக்கிற்குள் நுழைவதற்கு முன்பு இந்த வீரர்களில் சிலரைவிட அவர்கள் அதிக நேரம் காத்திருக்க வேண்டியிருக்கும். இடது கை நடுத்தர வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங்கிற்கு அடுத்த மாதம் 24 வயதாகிறது. தொடக்க ஆட்டக்காரர்கள் ஆதிக்கம் செலுத்தப் போராடும்பட்சத்தில் டி20இல் உலகின் மிக அற்புதமான பேட்ஸ்மேன், சூர்யகுமார் யாதவ், அர்ஷ்தீப் சிங் ஆகியோர் இந்தியாவில் நடைபெறும் டெஸ்ட் தொடருக்கான அணியில் நுழையக்கூடும். 

இந்தியா தேடுவது என்னவென்றால் ஒரு ஆல்-ரவுண்டர் மற்றும் ஒருநாள் கிரிக்கெட்டிலும் பந்துவீசக் கூடிய ஐந்து சிறந்த பேட்ஸ்மேன்கள். ஹர்திக் பாண்டியா, ஜடேஜா ஆகியோர் இதில் பொருந்திப் போவார்கள், அக்ஷர் படேல் ஓரளவு பொருந்திப்போகிறார். சமீபத்தில் பங்களாதேஷ் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் தோல்வி அடைந்ததைப் போன்று,போதிய பந்துவீச்சாளர்கள் இல்லாதபோது இந்திய அணி திணறிப் போய்விடுகிறது. 

இந்திய கிரிக்கெட்டில் அதிக திறமையுடன் இருப்பது சிக்கலா?

பட மூலாதாரம், Getty Images

டி20 உலகக் கோப்பை தோல்வியால் இந்தியாவுக்கு பாடம் உண்டு என்றால் அது இதுதான்: டி20 இளைஞர்களின் விளையாட்டு. 2007இல் இந்தியா பட்டம் வென்றபோது அதுவொரு அதிர்ஷ்டம். கடந்த ஆண்டு மெல்போர்னில் நடந்த தொடக்க ஆட்டத்தில் பாகிஸ்தானை இந்தியா தோற்கடித்தது மற்றொரு அதிர்ஷ்டம். இவ்வாறு தற்செயலாக நன்றாகச் செயல்படுவதில் உள்ள சிக்கல் என்னவென்றால், அணிகள் போதுமான அளவுக்கு பிரமைகளை உருவாக்குகின்றன.

டி20 கிரிக்கெட் அணிக்கு என்று தனி அணித் தலைவர், தனி திறமையான வீரர்கள், தனி பயிற்சியாளர் மற்றும் பணியாளர்கள் என ஏற்படுத்த வேண்டிய நேரம் வந்துள்ளது. 

டி20 அணிக்கான பயிற்சியாளர்கள் அந்த வடிவத்தில் சிந்திக்கும் தலைமுறையிலிருந்து வர வேண்டும். உங்கள் கவர் டிரைவை சரிசெய்யும் பயிற்சியாளர்களை விட தரவு ஆய்வாளர்கள் முக்கியமானவர்கள்.

ஒருநாள் கிரிக்கெட்டில் இந்தியாவுக்கு என்று பூர்த்தியடைந்த அணி இல்லை. ஆனால் அதிர்ஷ்டவசமாக உலகக் கோப்பைக்கு முன்பாக தவறுகளைச் செய்து கற்றுக்கொள்ள அவர்களுக்குப் போதுமான நேரம் உள்ளது. டி20 போட்டியில் சூர்யகுமார் யாதவ் செய்ததைப் போல் யாராவது செயல்பட வேண்டும். அது சூர்ய குமார் யாதவாகவேகூட இருக்கலாம். 

வீரர்களுக்கு தொடக்க நிலையிலேயே ஆதரவளிக்க வேண்டும், அவர்களும் அணியின் அங்கம் என்ற நம்பிக்கையை வழங்க வேண்டும். இடது கை சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் பங்களாதேஷ் அணிக்கு எதிரான முதல் ஆட்டத்தில் ஆட்ட நாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில், இரண்டாவது டெஸ்டில் அவர் அணியில் இடம்பெறாதது போன்றவற்றைச் செய்யக்கூடாது. 

விரல் சுழற்பந்து வீச்சாளரைக் காட்டிலும் மணிக்கட்டு சுழற்பந்து வீச்சாளர் மிகவும் கடினமான முன்மொழிவாகும். அத்தகைய பந்துவீச்சாளர்கள் சமீபத்தில் வெற்றியடைந்துள்ளனர்.

எந்த வகையான ஆட்டமாக இருந்தாலும் அணியில் எத்தகைய வீரர்களுக்கு இடமளிப்பது என்பது தொடர்பாக பயிற்சியாளரும் அணித் தலைவரும் அவ்வப்போது பேசி முடிவு செய்ய வேண்டும். 

துரதிர்ஷ்டவசமாக, கிரிக்கெட், வாழ்க்கையைப் போலவே, முன்னோக்கி நகர்கிறது, ஆனால் பின்னோக்கிப் பார்த்தால் மட்டுமே புரிந்து கொள்ள முடியும். இந்தியாவின் இறுதிப் போட்டிக்குப் பிறகுதான் சிறந்த அணி தெரியும்!

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: