ஒரு புகைப்படம் இல்லாததால் பெற்ற மகளை 9 ஆண்டுகள் பிரிந்த பெற்றோர் - நடந்தது என்ன?

- எழுதியவர், சுஜாதா
- பதவி, பிபிசி தமிழுக்காக
தமிழ் நாட்டில் ஒன்பது ஆண்டுகளுக்கு முன் திருவிழாவில் காணாமல் போன பெண் குழந்தையை மரபணு பரிசோதனை மூலம் கண்டுபிடித்து அவரது பெற்றோருடன் இணைத்துள்ள நெகிழ்ச்சி சம்பவம் திருவண்ணாமலை மாவட்டத்தில் நடந்துள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியை அடுத்த நல்லனூர் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் ஏழுமலை, அவரது மனைவி சின்ன பாப்பா. இவர்களின் மகள் பிரியா, கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு. ஒன்பது வயதாக இருக்கும்போது திருவண்ணாமலை மாவட்டத்தில் நடந்த திருவிழாவுக்கு சென்றிருந்தபோது, காணாமல் போயுள்ளார்.
திருவிழாவில் தனியாக சுற்றிக்கொண்டிருந்த பிரியாவை மீட்ட பெண் ஒருவர், தற்போதைய ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கரில் உள்ள தனியார் காப்பகத்தில் சேர்த்துள்ளார்.
அப்போது, அந்த காப்பகத்தின் நிர்வாகிகள் பிரியாவை விசாரித்த போது, தனது பெயர் பிரியா என்றும் பெற்றோர் மற்றும் ஊர் பெயர் தெரியவில்லை எனக் கூறியுள்ளார்.
அதற்கு மேல் அவரிடம் விசாரிக்க முடியாததால், காப்பக நிர்வாகிகள் பிரியாவை அங்கு தங்க வைத்து படிக்க வைத்து வந்தனர். சில வருடங்களுக்குப் பிறகு, அந்த காப்பகத்தை அதிகாரிகள் ஆய்வு செய்தபோது, அரசு அங்கீகாரம் பெறாமல் அது இயங்கி வந்தது தெரியவந்துள்ளது.
காப்பகத்தில் இருந்த குழந்தைகளை குழந்தைகள் நல அதிகாரிகள் மீட்டு வேலூர் அல்லாபுரத்தில் உள்ள ஒரு காப்பகத்தில் தங்க வைத்தனர். அங்கு வளர்ந்த பிரியா, அங்கேயே தங்கி 10 ஆம் வகுப்பு வரை படித்துள்ளார்.
பிரியாவின் பெற்றோரை எப்படி கண்டுபிடித்தனர்?

இந்நிலையில், கடந்த ஆண்டு தான் பிரியா தனது பெற்றோர் ஏழுமலை மற்றும் சின்ன பாப்பா என்றும் சொந்த ஊர் வந்தவாசி அருகே உள்ள நல்லூர் என்றும் வேலூர் காப்பகத்தில் இருந்தவர்களிடம் தெரிவித்துள்ளார்.
இதனை அடுத்து அந்த காப்பக அதிகாரிகள், நல்லூருக்கு சென்று விசாரித்த போது, சிறுமி பிரியா கூறிய தகவல்கள் உண்மை என தெரியவந்துள்ளது. பிரியாவின் தந்தை ஏழுமலை மற்றும் அவரது தாய் சின்ன பாப்பாவிடமும் இதுகுறித்து விசாரித்து உறுதி செய்துள்ளனர் காப்பக அதிகாரிகள்.
ஆனால், மரபணு பரிசோதனை மூலம் தான் பெற்றோரை உறுதி செய்ய முடியும் என்பதை நம்பிய அதிகாரிகள், இதுகுறித்து காவல்துறை அதிகாரிகளுக்கும், வருவாய்த்துறை அதிகாரிகளுக்கும் தகவல் கொடுத்தனர்.
வருவாய்த்துறை மற்றும் காவல்துறை அதிகாரிகளின் உதவியோடு, ஏழுமலை, சின்ன பாப்பா மற்றும் பிரியாவிற்கு மரபணு பரிசோதனை நடத்தப்பட்டது. அதன் முடிவில் பிரியாவின் தாய், தந்தை இவர்கள்தான் என உறுதி செய்யப்பட்டது.
பின், வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பிரியாவின் பெற்றோர் ஏழுமலை மற்றும் சின்ன பாப்பா இருவரையும் அழைத்த வந்து, அங்கு மாவட்ட ஆட்சியர் குமரவேல் பாண்டியன் முன்னிலையில் பிரியாவை ஒப்படைத்தனர்.
காப்பகத்தில் வளர்ந்த பிரியா

இதுகுறித்து பிபிசியிடம் பேசிய பிரியா, காப்பகத்தில் வளர்ந்தாலும், தன்னை அங்கு நன்றாக பார்த்துக்கொண்டதாகத் தெரிவித்தார்.
“காட்பாடியில் உள்ள அரசு காப்பகத்தில் நான் வளர்ந்து படித்து வந்தேன் அங்கு 28க்கும் மேற்பட்டோர் தங்கி பயின்று வருகின்றனர். அங்கு அனைவரும் என்னை நன்றாக கவனித்துக் கொண்டனர்,” என பகிர்ந்துகொண்டார்.
நீண்ட நாட்களுக்குப் பிறக தன்னுடைய தாய் தந்தையை பார்த்த மகிழ்ச்சியை பகிர்ந்துகொண்ட அவர், "இறுதியாக என்னுடைய தாய் தந்தையை பார்த்தது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. என்னுடன், 10 பேர் பிறந்துள்ளனர். எனக்கு ஐந்து அக்காவும். ஐந்து அண்ணன்களும் உள்ளனர்," என்றார்.
பத்தாம் வகுப்பு வரை படித்துள்ள பிரியா, வீட்டிலேயே தொழில் தொடங்க உள்ளதாகவும் தெரிவித்தார். "நான் காப்பகத்தில் 10 வகுப்பு வரை படித்துவிட்டு, தையல் பயிற்சியும் முடித்துள்ளேன். அந்த அனுபவத்தை வைத்துக்கொண்டு, தையல் இயந்திரங்களைக் கொண்டு, துணிகளை தைக்கும் தொழிலை வீட்டிலேயே செய்யப் போகிறேன்," என்றார்.
மேலும் பேசிய அவர், தனக்கு பாட்டு பாடுவதிலும் அதிக ஆர்வம் இருப்பதாகத் தெரிவித்தார். "விருப்பத்தை நிறைவேற்ற ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது. இனி வரும் காலங்களில், அதிலும் நான் கவனம் செலுத்தப்போகிறேன்," என்றார் பிரியா.
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்திருந்த தனது உறவினர்களில், தனது அக்காவைத்தான் முதலில் அடையாளம் தெரிந்ததாகக் கூறினார் பிரியா.
"எனக்கு என் அப்பா அம்மாவை அடையாளம் கண்டுகொள்வதற்கு முன்னதாகவே, எனது அக்காவைத்தான் எனக்கு அடையாளம் தெரிந்தது. அதற்குப் பிறகு தான் நான் என்னுடைய அம்மா, அப்பாவை பார்த்து பேசினேன். என் குடும்பத்தினரை விட்டு இத்தனை ஆண்டுகள் நான் பிரிந்திருந்ததாகவே உணர முடியாத அளவுக்கு என்னை நன்றாகப் பார்த்துக் கொள்கின்றனர்," என்றார் பிரியா.
ஒன்பது ஆண்டுகள் மகளை பிரிந்த பெற்றோர்
நீண்ட காலத்திற்குப் பிறகு காணாமல் போன குழந்தையை கண்டறிந்த பிரியாவின் பெற்றோர் மகிழ்ச்சியில் உள்ளனர்.
தங்களது மகிழ்ச்சியை பிபிசியிடம் பகிர்ந்துகொண்ட பிரியாவின் பெற்றோர், பிரியாவின் ஒரு புகைப்படம் இல்லாததால் ஒன்பது ஆண்டுகள் கண்டுபிடிக்க முடியாமல் தவித்ததாகக் கூறினர்.
"வெளியூருக்கு திருவிழாவுக்கு செல்லும்போது தான் பிரியா காணாமல் போனார். அப்போதே போலீசில் புகார் கொடுத்தோம். ஆனால், அவர்கள் குழந்தையின் புகைப்படம் கேட்டனர்.
அவள் குழந்தையாக இருந்தபோது நாங்கள் எந்த புகைப்படமும் எடுத்து வைக்கவில்லை. அதனால், எங்களால் எதுவும் செய்ய முடியாமல் போனது," என்றார் பிரியாவின் தந்தை ஏழுமலை.
அதன் பிறகு பல இடங்களில் தங்களது குழந்தையை தேடியும் கிடைக்கவில்லை என்கின்றனர் ஏழுமலை சின்ன பாப்பா தம்பதி.
"பிரியா கிடைக்காமல் என்ன செய்வது என்று தெரியாமல் வாழ்ந்து வந்த எங்களுக்கு, எங்களுடைய பெண் கிடைத்தது மிகவும் சந்தோஷமாக உள்ளது," என்றார் சின்ன பாப்பா.
மரம் வெட்டும் கூலித் தொழில் செய்து வரும் ஏழுமலை மற்றும் சின்ன பாப்பா தம்பதிக்கு பிரியாவைத் தவிர்த்து, ஐந்து ஆண் குழந்தைகள், ஐந்து பெண் குழந்தைகள் உள்ளனர்.

மரபணு பரிசோதனையில் பெற்றோரை உறுதி செய்த மாவட்ட நிர்வாகம்
இதுகுறித்து பிபிசியிடம் பேசிய மாவட்ட குழந்தைகள் நலக்குழு தலைவர் வேதநாயகம், மரபணு பரிசோதனையில் பிரியாவின் பெற்றோரை உறுதி செய்ததை விவரித்தார்.
"பிரியாவை விசாரித்த அதிகாரிகள் பிரியாவிடம் ஒரு சில ஆதாரங்களை திரட்டியுள்ளனர். அதன் பிறகு நன்னடத்தை அலுவலர்கள் மூலமாக பிரியா சொன்ன அடையாளங்களை வைத்து அவருடைய பெற்றோர்கள் இருக்கும் இடத்திற்கு சென்று அங்கு விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
முதலில் அதுகுறித்து விரிவாக பேசத் தயாராக இல்லாத ஏழுமலை சின்ன பாப்பா தம்பதி, பின்னர் தங்களது கடைசி மகள் சில வருடங்களுக்கு முன் திருவிழாவில் காணமல் போனதை உறுதிப்படுத்தினர். ஆனால், அவர்களுக்கு எந்த ஆண்டு என்றும், எந்த இடம் என்றும் நினைவில் இல்லை. ஆனால், அவர்கள் கூறியதும், பிரியா கூறியதும் ஒன்றாக இருந்தது," என்றார் வேதநாயகம்.
தொடர்ந்து பேசிய அவர், "இருப்பினும், ஒன்பது வருடங்கள் ஆனதால், பெற்றோருக்கும் அவரது மகளை அடையாளம் காணுவதில் சிக்கல் ஏற்படலாம் என்பதால், மரபணு பரிசோதனை செய்து, அதில் உறுதி செய்யப்பட்ட பின்னர்தான் மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் பிரியாவை அவரத பெற்றோரிடம் ஒப்படைத்தோம்," என்றார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












