கருத்தடை: பெண்கள் 'இந்த பிரச்னை' இருந்தால் அந்த மாத்திரைகளை எடுத்துக் கொள்ளக் கூடாதா?

கருத்தடை மாத்திரை

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், சுசீலா சிங்
    • பதவி, பிபிசி இந்தி

அமெரிக்காவில், இனி பெண்கள் மருத்துவரின் பரிந்துரைச் சீட்டு இல்லாமலே மருந்துக் கடைகளில் கருத்தடை மாத்திரைகளைப் பெறலாம்.

சமீபத்தில், அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து நிர்வாகத்துறை, கருத்தடை மருந்தான ‘ஓபில்’லை (OPill) அனைத்து வயதுப் பெண்களும் உட்கொள்ளலாம் என அறிவித்தது.

2024-ம் ஆண்டின் துவக்கத்தில், ஓபில் மருந்துக் கடைகளில் கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

அமெரிக்கா உட்பட 100 நாடுகளில் நாடுகளில் கருத்தடை மாத்திரைகள் மருந்துக் கடைகளில் கிடைக்கும்.

இந்தியா, சீனா, மற்றும் பிரிட்டன் ஆகிய நாடுகளும் இப்பட்டியலில் சேர்ந்துள்ளன.

கருத்தடை

பட மூலாதாரம், Getty Images

கருத்தடை மாத்திரைகள் கொடுத்த சுதந்திரம்

முன்னர், கருத்தடை மாத்திரைகள் குறித்து பெண்கள், குறிப்பாக பதின்பருவப் பெண்களிடையே கூச்சம், தயக்கம், பயம் போன்ற உணர்வுகள் இருந்தன என்றும், இந்த அறிவிப்புக்குப்பின் அவை விலகிவிடும் என்றும் அமெரிக்காவின் பெண்கள் ஆரோக்கியம் சார்ந்த நிபுணர்கள் கூறுகிறார்கள். இத்துடன், மகப்பேறு தொடர்பான சுகாதார சேவைகளைப் பெறுவதில் அவர்கள் எதிர்கொள்ளும் சிக்கல்களைக் களையவும் இந்த அறிவிப்பு உதவும் என்கின்றனர்.

அமெரிக்காவின் தேசிய மருத்துவ நூலகத்தில் வெளியிடப்பட்ட தகவல்களின்படி, மருத்துவ வரலாற்றில் ஆயிரக்கணக்கான மருந்துகள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. ஆனால், 1950-ல் கருத்தடை மருந்துகளின் வளர்ச்சிக்குப் பிறகு, ஒரு பெரிய மாற்றம் ஏற்பட்டது. கருத்தடை மருந்துகள் பெண்களுக்குச் சுதந்திரம் அளித்தது மட்டுமின்றி, அவர்களுக்கு மகப்பேறு சார்ந்த சுதந்திரத்தையும் அளித்தது.

இந்தியாவில் கருத்தடை மற்றும் குடும்பக் கட்டுப்பாட்டு முறைகள்

கருத்தடை, குடும்பக் கட்டுப்பாடு, பாலியல், ஆணுறை, பெண்கள்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, 1952-ம் ஆண்டில் தேசிய குடும்பக் கட்டுப்பாடு திட்டத்தைத் தொடங்கிய உலகின் முதல் நாடு இந்தியா

மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகத்தால் வெளியிடப்பட்ட தகவல்களின்படி, 1952-ம் ஆண்டில் தேசிய குடும்பக் கட்டுப்பாடு திட்டத்தைத் தொடங்கிய உலகின் முதல் நாடு இந்தியா.

இத்திட்டம் துவங்கப்பட்டப் பிறகு, அது பெரிய அளவில் விரிவடைந்தது. இதன் கீழ், கருத்தடை மாத்திரைகள் மற்றும் ஆணுறைகள் அரசாங்கத்தால் சுகாதார மையங்களில் இலவசமாக வழங்கப்படுகின்றன. அதேபோல் ஆஷா ஊழியர்களும் அவற்றை மக்களுக்கு வழங்குகிறார்கள்.

மகப்பேறு மருத்துவர் டாக்டர் எஸ்.என்.பாசு கூறுகையில், “இந்தியாவில் குடும்பக் கட்டுப்பாட்டுக்கு கருத்தடை மருந்துகள் ஒரு சிறந்த முறையாகும். இம்மருந்துகளைச் சரியான முறையில் எடுத்துக் கொண்டால், அவை 100% பலனளிக்கின்றன. இம்மருந்துகள், ஒரு குழந்தைக்குப் பிறகு இன்னொரு குழந்தை எப்போது பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற சுதந்திரத்தையும் தேர்வையும் பெண்களுக்குக் கொடுத்தது,” என்கிறார்.

கருத்தடை மாத்திரைகளின் வகைகள் என்ன?

கருத்தடை, குடும்பக் கட்டுப்பாடு, பாலியல், ஆணுறை, பெண்கள்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, என்ன ஹார்மோன்கள் பயன்படுத்தப்படுகின்றன என்பதைப் பொறுத்து கருத்தடை மாத்திரைகளில் இரண்டு வகைகள் உள்ளன.

கருத்தடை மாத்திரைகளில் இரண்டு வகைகள் உள்ளன.

ஈஸ்ட்ரோஜன் மற்றும் புரோஜெஸ்ட்டிரோன் ஆகிய இரண்டு ஹார்மோன்களையும் கொண்டிருக்கும் பிறப்பு கட்டுப்பாட்டு மாத்திரைகள் ‘COC’ (Combined oral contraceptive) என்று அழைக்கப்படுகின்றன.

ப்ரோஜெஸ்ட்டிரோனை மட்டுமே கொண்டிருக்கும் மாத்திரைகள் ‘POP’ (Progestogen-only pill) என்று அழைக்கப்படுகின்றன.

தில்லியில் உள்ள அமிர்தா மருத்துவமனையின் மகப்பேறு மருத்துவர் பிரதிமா மிட்டல், முன்பு வாய்வழி கருத்தடைகளில் அதிக அளவு ஈஸ்ட்ரோஜன் இருந்தது, என்கிறார். அது பக்கவிளைவுகளை ஏற்படுத்தியது. ஆனால் இப்போது கருத்தடை மாத்திரைகளில் ஈஸ்ட்ரோஜென் குறைந்த அளவிலேயே உள்ளது, என்கிறார்.

மும்பையில் உள்ள மகப்பேறு மருத்துவரான சுசித்ரா டெல்வி, பெண்களின் உடலில் இயற்கயிலேயே ஈஸ்ட்ரோஜன் மற்றும் புரோஜெஸ்ட்ரோன் ஹார்மோன்கள் இருப்பதாகவும், இவை பிறப்புக் கட்டுப்பாட்டில் பயன்படுத்தப்படுவதாகவும், இவை உடலில் பல்வேறு விளைவுகளை ஏற்படுத்துவதாகவும் கூறுகிறார்.

கருத்தடை மாத்திரைகள் உடலில் என்ன விளைவுகளை ஏற்படுத்துகின்றன?

கருத்தடை, குடும்பக் கட்டுப்பாடு, பாலியல், ஆணுறை, பெண்கள்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, புரோஜெஸ்ட்ரோன் ஹார்மோன் உள்ள கருத்தடை மாத்திரைகளை உட்கொண்டால் குமட்டல், தலைசுற்றல், தலைவலி, மற்றும் நாள்தவறிய மாதவிடாய் ஆகிய பிரச்னைகள் ஏற்படும் வாய்ப்புகள் உள்ளன

இந்த மூன்று மருத்துவர்களின் கருத்துப்படியும், கருத்தடை மாத்திரைகளை உட்கொள்வதால் பெரிய அளவில் பக்க விளைவுகள் ஏற்படாது. ஆனாலும், உடலில் சில விளைவுகள் இருக்கவே செய்யும்.

ஈஸ்ட்ரோஜென் ஹார்மோன் உள்ள கருத்தடை மாத்திரைகள் ரத்தம் உறைந்துபோகும் சிக்கல்கள், இருதய நோய், உயர் ரத்த அழுத்தம் ஆகிய நோய்களை கட்டுப்படுத்த உதவும் என்று இந்த மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

புரோஜெஸ்ட்ரோன் ஹார்மோன் உள்ள கருத்தடை மாத்திரைகளை உட்கொண்டால் குமட்டல், தலைசுற்றல், தலைவலி, மற்றும் நாள்தவறிய மாதவிடாய் ஆகிய பிரச்னைகள் ஏற்படும் வாய்ப்புகள் உள்ளன, என்றும் கூறுகிறார்கள்.

இந்த மருந்துகளைப் பரிந்துரைக்கும் முன் ஒரு பெண்ணுக்கு சிறுநீரகம் மற்றும் கல்லீரல் சார்ந்த பிரச்னைகள், புற்றுநோய் போன்ற எந்த நோய்களும் இல்லை என்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும் என்கின்றனர் மருத்துவர்கள்.

இந்தக் கருத்தடை மருந்துகளை உட்கொள்வது பெண்களுக்கு வெவ்வேறு விளைவுகளை ஏற்படுத்தும் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

அவற்றில் முக்கியமானவை:

  • உடலில் நீர் கோர்த்தல்
  • உடல் கனப்பது போன்ற உணர்வு
  • முகப்பரு
  • மார்பகப் பகுதியில் பாரம்
  • மனநிலை மாற்றங்கள் (Mood swings)

நீண்ட நாட்கள் கருத்தடை மாத்திரைகள் உட்கொண்டால் என்னவாகும்?

கருத்தடை மாத்திரைகளை நீண்ட காலம் எடுத்துக்கொள்ளலாம் என்றும், அதனால் பெரிய பக்கவிளைவுகள் இல்லை என்றும் மருத்துவர் பிரதிமா மிட்டல் கூறுகிறார்.

பெண்களின் உரிமைகள் தொடர்பான பிரச்சினைகளை வெளிப்படையாக எழுப்புகிறார் மருத்துவர் சுசித்ரா டெல்வி. “ஒரு பெண் புகைபிடிக்கவும் செய்து, ஈஸ்ட்ரோஜன் இருக்கும் கருத்தடை மாத்திரைகளையும் உட்கொண்டால், அது இரத்தம் உறைவதற்கு வழிவகுக்கும். அதே சமயம் மருந்தில் புரோஜெஸ்ட்ரோன் இருந்தால், அது பாதிப்பை ஏற்படுத்தாது, என்கிறார்.

அதேபோல், ஒவ்வொரு பெண்ணின் உடல்நிலைக்கும் ஏற்ப, இந்த மாத்திரைகளை உட்கொள்வதன் பயன்கள் அமைவதாக மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

கருத்தடை மாத்திரைகளின் பயன்கள் என்ன?

  • எளிமையான கருத்தடை முறை
  • குடும்ப திட்டமிடலுக்கு உதவுகிறது
  • மாதவிடாயை சீராக்க உதவும்
  • மாதவிடாயின் போது அதிக இரத்தப்போக்கைக் குறைக்க உதவுகிறது
  • கருப்பை புற்றுநோயின் ஆபத்து குறைகிறது

கருத்தடை மாத்திரைகள் தொடர்பான தவறான நம்பிக்கைகள்

கருத்தடை, குடும்பக் கட்டுப்பாடு, பாலியல், ஆணுறை, பெண்கள்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கருத்தடை சாதனங்கள் தொடர்பான தவறான நம்பிக்கைகளைக் களைய அரசு சார்பில் பல விழிப்புணர்வு பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்படுகின்றன

மருத்துவர் பிரதிமா மிட்டல், இந்தக் கருத்தடை மாத்திரைகளை உட்கொள்வது புற்றுநோய் அபாயத்தை அதிகரிக்கிறது என்ற தவறான கருத்து உள்ளது, எனவும், ஆனால் அது தவறான கருத்து எனவும் கூறுகிறார்.

மருத்துவர் சுசித்ரா டெல்வி, இந்த மருந்துகளை தினமும் எடுத்துக் கொண்டால், இந்த ஹார்மோன்கள் உடலில் தேங்கும் என்ற கருத்து உள்ளது, ஆனால் அப்படியில்லை, மாறாக அவை கல்லீரல் வழியாக உடலில் இருந்து வெளியேறுகின்றன, என்கிறார்.

பாதுகாப்பு இல்லாத உடலுறவில் ஈடுபட்டால் 120 மணி நேரத்திற்குள் ஐபில் ‘i-Pill’ மாத்திரையை உட்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது. இது கர்ப்பம் தரிப்பதற்கான வாய்ப்புகளை குறைக்கிறது என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். மறுபுறம், ஐபில்லில் புரோஜெஸ்ட்ரோன் ஹார்மோன் பயன்படுத்தப்படுகிறது, அதன் அளவும் அதிகமாக உள்ளது.

கருத்தடை என்பது பெண்களுக்கு மட்டுமானதா?

கருத்தடை மாத்திரைகள் பெண்களுக்கு குழந்தை பெற்றுக்கொள்வதில் சுதந்திரம் அளித்தன என்று நிபுணர்கள் கூறுகிறார்கள். ஆனால், அதன் பொறுப்பும் பெண்களில் மீது விழ ஆரம்பித்தது. அது இன்னும் அதிகமாகிக் கொண்டுதான் இருக்கிறது.

ஆண்களுக்குக் கருத்தடை முறைகளே இல்லை என்பதல்ல.

அரசின் குடும்பக் கட்டுப்பாட்டுத் திட்டத்தின் கீழ், பெண்களுக்கான கருத்தடை மாத்திரைகளுடன், ஆண்களுக்கு ஆணுறைகளும் வழங்கப்படுகின்றன.

ஆனால், தரவுகளின்படி, ஆணுறைப் பயன்பாடு குறைவாகவே உள்ளது.

மருத்துவர்களின் கூற்றுப்படி, ஆண்களுக்கு ஆணுறை மற்றும் ‘வாஸெக்டமி’ எனப்படும் விதை நாள அறுவை ஆகிய கருத்தடை முறைகள் உள்ளன. ஆனால் இவை தொடர்பாக சில கடுக்கதைகள் உள்ளன.

ஆணுறை பயன்படுத்துவது பாலியல் இன்பத்தைக் குறைக்கிறது என்ற நம்பிக்கை உள்ளது. அதேபோல் வாஸெக்டமி செய்துகொண்டால் உடலில் பலவீனம் ஏற்படும் என்ற பயமும் உள்ளது.

இது பெண்களுக்கு எதிரான விளைவை ஏற்படுத்துகிறது.

இந்தக் கட்டுக்கதைகளை களைய அரசு சார்பில் பல விழிப்புணர்வு பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. இவற்றின்மூலம் ஆண்களின் சிந்தனையில் மாற்றம் இருந்தாலும், அதன் சதவீதம் மிகவும் குறைவு என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: