மோதி குறித்த பிபிசி ஆவணப்படம் தமிழ்நாடு, கேரளாவில் திரையிட்ட மாணவர்கள் - பல இடங்களில் வலுத்த எதிர்ப்பு

கோத்ரா கலவரத்தில் அப்போதைய குஜராத் முதல்வர் நரேந்திர மோதியின் பங்கு குறித்து பிபிசி - 2 சேனல் தயாரித்த India: The Modi Question ஆவணப் படத்தை, தமிழ்நாடு, கேரளாவில் பல பகுதிகளில் மாணவர் அமைப்புகள் திரையிட்டனர்.
பிபிசி - 2 சேனல் தயாரித்த India: The Modi Question ஆவணப் படத்தை இந்தியாவில் உள்ள பல்வேறு அமைப்புகளும் மாணவர் இயக்கங்களும் பொது இடங்களில் திரையிட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், சென்னைப் பல்கலைக்கழகத்தின் நூற்றாண்டு விழா அரங்கத்தில் இந்த ஆவணப் படத்தைத் திரையிடப்போவதாக இந்திய மாணவர் சங்கத்தைச் சேர்ந்த மாணவர்கள் அறிவித்திருந்தனர்.
ஆனால், சென்னைப் பல்கலைக்கழக நிர்வாகம் அதற்கு அனுமதி அளிக்காத நிலையில், அந்தக் கட்டடத்திற்கு முன்பாக அமர்ந்த மாணவர்கள் தங்களது மடிக்கணினியில் அந்தப் படத்தைத் திரையிட முடிவுசெய்தனர்.
இதையடுத்து, பல்கலைக்கழகத்தின் கதவுகள் மூடப்பட்டன. பெரும் எண்ணிக்கையிலான காவல் துறையினர் பல்கலைக்கழகத்திற்கு வெளியில் குவிக்கப்பட்டிருந்தனர். பல்கலைக்கழகத்திற்குள் நுழைவோர் விசாரணைக்குப் பிறகே உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.
நூற்றாண்டு விழா அரங்கத்திற்கு முன்பாக சுமார் 30 மாணவர்கள் கூடியிருந்த நிலையில், அங்கு வந்த பல்கலைக்கழக பாதுகாவலர்கள், அங்கு கூட்டமாக அமர்ந்து எந்தப் படத்தையும் திரையிட அனுமதி கிடையாது என்று மாணவர்களிடம் தெரிவித்தனர். ஆனால், மாணவர்கள் அதனை ஏற்காமல் பாதுகாவலர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
பிறகு, தங்களது மடிக்கணினி ஒன்றில் அந்த ஆவணப் படத்தை திரையிட்டு ஒன்றாக அமர்ந்து பார்த்தனர். பல்கலைக்கழக பாதுகாவலர்கள் மாணவர்களைக் கலைந்து செல்லும்படி கூறியபோதிலும் அவர்கள் தொடர்ந்து படம் பார்த்தனர்.
படத்தை பார்த்து முடித்த பிறகு, மாணவர்கள் சேர்ந்து அமர்ந்து ஒர் ஆவணப் படத்தைப் பார்ப்பதை பல்கலைக்கழக நிர்வாகம் ஏன் தடுக்கிறது எனக் கேள்வி எழுப்பினர்.
மாணவர்கள் ஒன்றாக அமர்ந்து இந்தப் படத்தைப் பார்க்க பல்கலைக்கழகம் தடை விதித்ததற்கு இந்திய மாணவர் சங்கத்தின் தமிழ்நாடு மாநிலக் குழு கண்டனம் தெரிவித்திருக்கிறது.
இதேபோல மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய சென்னை கட்சி அலுவலகத்திலும் இன்று பிற்பகலில் பிபிசியின் ஆவணப் படம் திரையிடப்பட்டது. ஜனவரி 26ஆம் தேதி சென்னை மாநிலக் கல்லூரியில் விக்டோரியா விடுதியில் மாணவர்கள் ஆவணப் படத்தை ஒன்றாக அமர்ந்து பார்த்தனர்.
ஜனவரி 25ஆம் தேதியன்று திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்தில் இந்திய மாணவர் சங்கத்தினர் இந்தப் படத்தைத் திரையிட முயன்றனர். ஆனால், பல்கலைக்கழக நிர்வாகத்தின் எதிர்ப்பை அடுத்து திரையிடல் நடக்கவில்லை.

பட மூலாதாரம், Getty Images
மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் தங்கள் கட்சிக் கிளைகளில் இந்தப் படத்தைத் திரையிட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முடிவுசெய்துள்ளது.
"பிபிசியின் ஆவணப் படத்தைக் கண்டு பா.ஜ.க. அரசு பதறுவது ஏன்" என்ற ஒரு கலந்துரையாடல் சென்னையில் உள்ள பெரியார் திடலில் நடைபெற்றது. பேராசிரியர் அ. மார்க்ஸ், ஓவியர் மருது, சுபகுணராஜன், பத்திரிகையாளர் ஜெயராணி உள்ளிட்டோர் இந்த உரையாடலில் கலந்து கொண்டனர்.
கேரள மாநிலத்தின் பல பகுதிகளிலும் பிபிசியின் இந்த ஆவணப் படம் திரையிடப்பட்டு வருகிறது. திருவனந்தபுரத்தின் சங்குமுகம் கடற்கரையில் இந்தப் படத்தை கேரள மாநில காங்கிரஸ் கமிட்டி திரையிட்டது. இன்னும் சில நாட்களில் மாநிலம் முழுவதும் இந்தப் படத்தைத் திரையிடப் போவதாக அம்மாநில காங்கிரஸ் அறிவித்துள்ளது.
சங்குமுகம் கடற்கரையில் இந்தப் படம் திரையிடப்பட்டபோது சாதாரணமாக கடற்கரைக்கு வந்தவர்களும் அமர்ந்து அந்தப் படத்தைப் பார்வையிட்டனர். காவல்துறையினரும் பெரும் எண்ணிக்கையில் குவிக்கப்பட்டிருந்தனர்.

பட மூலாதாரம், Getty Images
"பெரும் எண்ணிக்கையிலான சுற்றுலா பயணிகள் அப்போது கடற்கரையில் இருந்தனர். சங்க பரிவார அமைப்புகளைச் சேர்ந்த சிலரும் அப்போது அங்கு இருந்தனர். ஆனால், கூட்டத்தைப் பார்த்ததும் அவர்கள் ஏதும் செய்யவில்லை" என கேரள காங்கிரஸ் கமிட்டியின் பொதுச் செயலாளரான ஜி.எஸ்.பாபு பிபிசியிடம் தெரிவித்தார்.
பொத்தன்கோடு, நெடுமன்காடு போன்ற சில இடங்களில் இந்த ஆவணப் படத்தைத் திரையிடுவதை சிலர் தடுக்க முயன்றதைத் தவிர, விரும்பத்தகாத சம்பவங்கள் ஏதும் கேரளாவில் நடக்கவில்லை. படத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்தவர்கள் அங்கிருந்து அகற்றப்பட்டனர்.
செவ்வாய்க்கிழமையன்று இடதுசாரிக் கட்சிகள் மற்றும் காங்கிரஸ் கட்சியின் மாணவர் அமைப்புகள் இந்த ஆவணப் படத்தை திரையிட பல இடங்களில் ஏற்பாடுகளைச் செய்திருந்தனர். யுவ மோர்ச்சா அமைப்பைச் சேர்ந்தவர்கள் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து போராட்டத்தில் இறங்கியபோது, இரு தரப்பினரும் மோதிக்கொள்ளும் சூழல் ஏற்பட்டது. காவல்துறை தடியடி நடத்தி கூட்டத்தைக் கலைத்தது. சிலர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் டிவிட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்








