கொலீஜியம்: நீதிபதிகளை நியமிப்பதில் மோதி அரசு - உச்ச நீதிமன்றம் இடையே என்ன பிரச்னை?

பட மூலாதாரம், Getty Images
பிரதமர் நரேந்திர மோதியின் அரசுக்கும் நீதித்துறைக்கும் இடையிலான மோதல் ஏற்கெனவே உள்ளதுதான் என்றாலும், நீதிமன்றங்களுக்கு நீதிபதிகளை நியமிப்பது தொடர்பான விவகாரத்தில் மோதல்கள் குறைவதாகத் தெரியவில்லை.
தற்போதைய நியமன முறைகளை ‘மறைவானது’ என்றும் சமூக பன்முகத்தன்மை இல்லாதது என்றும் அரசு தரப்பு கூறுகிறது. கொலீஜியம் என்று அறியப்படும் தற்போதைய நியமன முறையே நாட்டின் சட்டம் என்றும் அதை அரசு பின்பற்ற வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் வலியுறுத்தி வருகிறது.
பரிந்துரைத்த பெயர்களை சட்ட அமைச்சகம் நிலுவையில் வைத்தது, அல்லது ஒரு சிலரை மட்டும் தேர்ந்தெடுத்து மீதி பெயர்களை திருப்பி அனுப்பியதால் நீதிமன்றம் தனது கவலையை வெளிப்படுத்தியது.
ஏறக்குறைய ஒரு வருடத்திற்கு மேலாக அனுப்பப்பட்ட பெயர்களுக்கு அரசு இன்னும் ஒப்புதல் வழங்கவில்லை. ஒரு மாதத்திற்கு முன்பு நீதிமன்றம், பணி நியமன நடைமுறையை காலக்கெடுவுக்குள் முடிக்க வேண்டும் என்று தீர்ப்பளித்தது.
தாமதம் காரணமாக உயர் நீதிமன்றங்களுக்கான 150க்கும் மேற்பட்ட நியமனங்கள் முடங்கியுள்ளதாகத் தெரிகிறது. இவை பல்வேறு கட்ட நடவடிக்கைகளில் இருப்பதாக சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜு நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
இந்தச் சிக்கல் பற்றி கருத்துத் தெரிவித்த சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜு, "நீதிபதிகள் தேர்தலைச் சந்திப்பதில்லை. நீதிபதிகளான பிறகு மக்களின் விமர்சனத்துக்கும் உள்ளாவதில்லை" என்று கூறியதாக தி ஹிந்து நாளிதழ் தெரிவித்துள்ளது.
இருப்பினும் அரசுக்கும் நீதித்துறைக்கும் இடையே மோதல் போக்கு இருப்பதாக கூறப்படுவதை மத்திய சட்ட அமைச்சர் திட்டவட்டமாக மறுத்துள்ளதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் கூறியுள்ளது..
தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் உடன் தொடர்ந்து தொடர்பில் இருப்பதாகவும், பெரிய அல்லது சிறிய அனைத்து பிரச்னைகளையும் அவருடன் விவாதிப்பதாகவும் கிரண் ரிஜிஜு கூறியிருக்கிறார். மோடி அரசுக்கும் நீதித்துறைக்கும் இடையே 'மகாபாரத யுத்தம்' ஏதும் இல்லை என்று அவர் கூறியிருக்கிறார்.
இதனிடையே உச்ச நீதிமன்றத்தால் அனுப்பப்பட்ட பரிந்துரைகளை தாமதப்படுத்தும் அரசின் நடவடிக்கை தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இது நீதிமன்ற அவமதிப்பு என மனுதாரர்கள் தரப்பு தெரிவிக்கிறது.
ஏறக்குறைய மூன்று தசாப்தங்களாக, தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு குழுவால் உச்ச நீதிமன்ற மற்றும் உயர் நீதிமன்ற நீதிபதிகள் நியமிக்கப்பட்டு வருகிறார்கள். கொலீஜியம் எனப்படும் இந்த அமைப்பில் இந்தியாவின் தலைமை நீதிபதி மற்றும் இந்திய உச்ச நீதிமன்றத்தின் நான்கு மூத்த நீதிபதிகள் அங்கம் வகிப்பார்கள்.

பட மூலாதாரம், Getty Images
அவர்கள் தங்களுக்குள் ஆலோசித்து உச்ச மற்றும் உயர் நீதிமன்ற நீதிபதிகளாக நியமனம் செய்ய சில பெயர்களைத் தேர்ந்தெடுத்ததும அந்த பட்டியல் சட்ட அமைச்சகத்திற்கு அனுப்பப்படும்.
காலங்காலமாக அரசு பொதுவாக இவற்றை ஏற்றுக்கொண்டே வந்திருக்கிறது. ஆனால் 2014 இல் முதல் முறையாக பதவியேற்றதும் மோதியின் அரசு சில சட்ட திருத்தங்களை அறிமுகப்படுத்தியது. நீதித்துறை நியமனங்களுக்கான ஒரு சட்டத்தையும் நிறைவேற்றியது.
இந்தியாவில் உள்ள கீழ் நீதிமன்றங்களில் போட்டித் தேர்வுகள் மூலம் நியமனம் செய்யப்படும் முறை ஏற்கெனவே உள்ளது.
தேசிய நீதிபதிகள் நியமன ஆணையம் எனப்படும் புதிய தேர்வு முறை, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி, உச்ச நீதிமன்றத்தின் இரண்டு மூத்த நீதிபதிகளை உள்ளடக்கியது. ஆனால் அதில் சட்ட அமைச்சர், இரண்டு நிபுணர்கள் உறுப்பினர்களாக இருப்பார்கள். இவர்கள் இருவரையும் அரசு நியமிக்கும்.
இது சுதந்திரமான நீதித்துறையைப் பற்றிக் கூறும் அரசியலமைப்பின் அடிப்படைக்கு எதிரானது என்று உச்சநீதிமன்றம் கூறியது.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












