ஈரோடு நீதிமன்றத்தில் தனக்குத் தானே ஆஜராகி வாதாடிய நபர்: எந்தெந்த வழக்குகளில் சாத்தியம்?

நீதித்துறை

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், மோகன்
    • பதவி, பிபிசி தமிழுக்காக

“சட்டம் ஓர் இருட்டறை. அதில் வக்கீலின் வாதம் ஒரு விளக்கு. ஏழைக்கு எட்டாத விளக்கு” என்ற அண்ணாவின் வாசகம் புகழ் பெற்றது. அந்த விளக்கு ஏழைகளுக்கும் எட்டவேண்டும் என்பதற்காக இலவச சட்ட உதவியைப் பிற்காலத்தில் அரசே வழங்கத் தொடங்கியது. இதன்படி, வழக்குரைஞரை வைத்துக்கொள்ள வசதி இல்லாத ஒருவர் வேண்டுகோள் வைத்தால் அவருக்கான வழக்குரைஞரை நீதிமன்றமே இலவசமாக ஏற்பாடு செய்யும்.

ஆனால், உங்கள் வழக்கை வழக்குரைஞர் வைத்துக்கொள்ளாமல் நீங்களே வாதாட விரும்பினால், அப்படிச் செய்வதற்கும் சட்டத்தில் இடம் உண்டு. அதற்கு நீங்கள் சட்டம் படித்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. மற்றவர்கள் வழக்கில் ஆஜராகி அவர்களுக்காக வாதாடுவதற்குத்தான் ஒருவர் முறைப்படி சட்டம் படித்து, பதிவு செய்து வழக்குரைஞராக இருக்க வேண்டும். சொந்த வழக்குக்கு இது எதுவும் இல்லை.

ஆனால், தமது சொந்த வழக்குக்குத் தாமே ஆஜராகி வாதாடும் நிகழ்வுகளைப் பெரும்பாலும் நாம் பார்ப்பதில்லை.

நாம் பார்க்க முடியாத காட்சிகளை கண் முன் கொண்டு வந்து நிறுத்துவதில் திரைப்படங்களின் பங்கு முக்கியமானது.

தமது சொந்த வழக்கில் தாமே வாதாடுவது போன்ற காட்சிகளையும் மக்களிடம் கொண்டுவந்து சேர்த்தவை திரைப்படங்களே.

தமிழ்நாட்டில் நீதிமன்ற காட்சிகளைப் பிரபலமாக்கியதில் முக்கியப் பங்காற்றிய பராசக்தி திரைப்படமே இதையும் செய்தது.

1952இல் கருணாநிதி கதை வசனத்தில் வெளியான பராசக்தி படத்தில் குணசேகரன் கதாபாத்திரத்தில் நடித்த சிவாஜி கணேசன் தனக்கு எதிரான வழக்கில் தானே வாதாடுவதாக காட்சி அமைந்திருக்கும். 

நடைமுறையில் அரிதான இத்தகைய நிகழ்வு ஒன்று சமீபத்தில் ஈரோடு மாவட்டத்தில் நடந்தது. கனகவேல் என்பவர் தன்னுடைய வழக்கில் தானே வாதாடி எதிர் தரப்பு சாட்சிகளை குறுக்கு விசாரணை செய்தார். 

என்ன வழக்கு இது?

கொடுமுடி நீதிமன்றம்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கொடுமுடி வட்டச் செயலாளராக உள்ளார் கனகவேல். ஈரோடு மாவட்டம், கொடுமுடி வட்டத்தில் நஞ்சை கொளநல்லி என்ற ஊர் உள்ளது.

இந்த ஊர் கிராம நிர்வாக அலுவலகம் மூடப்பட்டு செயல்படாமல் இருந்ததால் அதனை திறக்க வலியுறுத்தியும் அங்கு கிராம நிர்வாக அலுவலரை நியமிக்க வலியுறுத்தியும் கனகவேல் பல போராட்டங்களை நடத்தியுள்ளார். இதற்கு அனுமதியில்லாமல் பிளக்ஸ் பேனர் வைத்ததாக காவல்துறை அவர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளது. 

எவ்வாறு நடந்தது? 

கனகவேல்

கனகவேலிடம் பிபிசி தமிழ் பேசியபோது, “நஞ்சை கொளநல்லி கிராம மக்கள் 3 கி.மீ தொலைவில் உள்ள குட்டப்பாளையத்தில் உள்ள கிராம நிர்வாக அலுவலகத்திற்குதான் சென்று வந்தனர். இதனால் இந்த கிராம நிர்வாக அலுவலகத்தை திறக்க வேண்டும் எனப் போராட்டம் நடத்தினோம். அதன் பிறகு அலுவலகத்தை திறந்தனர். ஆனால் பணியாளர்கள் யாரும் வரவில்லை.

இதனால் பூட்டியிருக்கும் கிராம நிர்வாக அலுவலகத்திற்கு மலர் வளையம் வைக்கும் போராட்டத்தை நடத்த முடிவு செய்தோம். அதன் பின்னர் கிராம நிர்வாக அலுவலர் மற்றும் உதவியாளர் நியமிக்கப்பட்டனர். காவல்துறை என் மீது அதே மாதம் வழக்குப் பதிவு செய்தது. இந்த வழக்கு கொடுமுடி குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது.

அந்த வழக்கில் இதுநாள் வரை வாய்தா வாங்கப்பட்டு வந்தது. இந்த வழக்கில் நானே குறுக்கு விசாரணை செய்ய வேண்டும் என நீதிபதியிடம் கோரிக்கை வைத்திருந்தேன். அதை ஏற்றுக் கொண்ட நீதிபதி கடந்த ஜனவரி 5 ஆம் தேதி விசாரணையின்போது சாட்சிகளை குறுக்கு விசாரணை செய்ய அனுமதித்தார்.

வழக்கின் அடுத்தகட்ட விசாரணை பிப்ரவரி 2 ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. நான் 10ஆம் வகுப்பு வரைதான் படித்துள்ளேன். வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ளவரே வாதிடுவதற்கு சட்டத்தில் இடம் உள்ளது. ஆனால் பலருக்கும் இதைப்பற்றி தெரிவதில்லை” என்றார். 

எந்த சட்டம் அனுமதிக்கிறது?

அந்த விஏஓ அலுவலகம்

ஒரு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட யார் வேண்டுமானாலும், தன்னுடைய வழக்கை தானே வாதாட முடியும் என்கிறார் ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி அரிபரந்தாமன். பிபிசி தமிழ் அவரிடம் பேசியபோது, “ஒரு வழக்கை வாதாடுவதற்கு மூன்று வழிகள் உள்ளன. சட்டத்தின் அடிப்படையே வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர் தானாகவோ அல்லது ஒரு வழக்குரைஞர் மூலமாகவோ ஆஜராகுமாறுதான் கூறுகிறது. தாமாக வாதாடுவதற்கு சட்டம் படித்திருக்க வேண்டும் என்கிற கட்டாயம் எதுவுமில்லை. 

ஒரு வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர் தானே வாதாடுகிறேன் எனக் கூறி வழக்கில் வாதாடலாம் அல்லது ஒரு வழக்குரைஞரை நியமித்து அவர் மூலம் வாதாடலாம். ஒரு வேளை யாருக்காவது வழக்குரைஞர் வைத்துக் கொள்ள வசதியில்லையென்றால் சட்டப் பணிகள் ஆணையம் குழு மூலம் வழக்குரைஞரைப் பெற்றுக் கொள்ளும் வசதி உண்டு. அந்த வழக்குரைஞருக்கான செலவை அரசே ஏற்றுக் கொள்ளும். சட்ட உதவி பெறுவது அனைவரின் அடிப்படை உரிமையாக உள்ளது,” என்றார்.

எந்தெந்த வழக்குகளில் தாமாக வாதாடலாம்?

judiciary

பட மூலாதாரம், Getty Images

மேலும் இது பற்றிப் பேசிய அரிபரந்தாமன், “சிவில், கிரிமினல் என எந்த வழக்கிலும் ஒருவர் தன்னுடைய சொந்த வழக்கில் வாதாட முடியும். ஆனால் இது அரிதிலும் அரிதாகவே நிகழும். நான் நீதிபதியாக இருந்தபோதும் அரிதாக இது போன்று நடந்துள்ளது. மாவட்ட நீதிமன்றத்தில் மட்டும் தான் வாதாட முடியும் என இல்லை. எல்லா நீதிமன்றங்களிலும் ஒருவர் தமது சொந்த வழக்கில் வாதாட முடியும்.

நிபுணத்துவம் தேவைப்படும் சிக்கலான வழக்குகளில் வழக்குரைஞர் இல்லாமல் ஆஜராவது நடைமுறை சாத்தியமில்லை. சிறிய வழக்குகளில் வழக்காடிகள் தாங்களே வாதாடலாம். ஆனால் தொழிலாளர் நீதிமன்றங்கள், குடும்ப நீதிமன்றங்கள் போன்றவற்றில் சம்மந்தப்பட்டவர்களே நேரில் ஆஜராகி வாதாடுவதே வழக்கம். அத்தகைய இடங்களில் தங்களுக்கு வழக்குரைஞரின் உதவி தேவை என நினைப்பவர்கள் வழக்குரைஞர்களை வைத்துக்கொள்வார்கள்” என்றார்.

வழக்குரைஞர் வைத்து வாதிடுவதே நல்லது

நீதிபதி ஹரிபரந்தாமன்
படக்குறிப்பு, நீதிபதி அரிபரந்தாமன்

ஆனால் வழக்குரைஞராகவும் நீதிபதியாகவும் தன்னுடைய அனுபவத்தில், வழக்குரைஞரை வைத்து வாதிடுவதே சிறந்தது என்கிறார் நீதிபதி அரிபரந்தாமன். “சட்டத்தில் குற்றம்சாட்டப்பட்டவரே வாதாட வழி இருந்தாலும் வழக்குரைஞரை வைத்து வாதிடுவதே நடைமுறையாக உள்ளது. ஒருவர் தாமாகவே வாதாடுவதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கும். ஒரு வழக்குரைஞர் ஆஜராகிறார் என்றால் சட்ட நுணுக்கங்கள் தெரிந்து வாதாடுவார். 

பொதுமக்களில் ஒருவர் தன் வழக்கைப் பற்றிய புரிதலின் அடிப்படையில் வாதிடுவார். சட்ட அனுபவம் இல்லாதது வழக்கின் போக்கை பாதிக்கலாம், சில நேரங்களில் பாதகமாகவும் அமையலாம். சாதகமாக அமைவதும் ஒரு சில சந்தர்ப்பங்களில் நிகழும். எனவே தாமதமானாலும் வழக்குரைஞரை வைத்து வாதாடுவதையே நான் அறிவுறுத்துவேன்” என்றார். 

கருணாநிதி
படக்குறிப்பு, ஓய்வுபெற்ற காவல்துறை கண்காணிப்பாளர் கருணாநிதி

சட்ட உதவி வந்ததன் பின்னணி

ஓய்வுபெற்ற காவல்துறை கண்காணிப்பாளர் கருணாநிதி பிபிசி தமிழிடம் பேசியபோது, “முன்பு இது போன்ற சம்பவங்கள் நிகழ்வது உண்டு. ஆனால் வாதிடுபவர் சரியாக வாதிடாமல் தீர்ப்பு பாதகமாக வந்தால் தனக்கு வாய்ப்பு தராமல் இவ்வாறு நடந்துவிட்டது என குற்றச்சாட்டுகள் எழுவது வாடிக்கையாக இருந்தது. இதனால் சட்ட உதவி (Legal Aid) என்பது கொண்டு வரப்பட்டு வழக்குரைஞர் வைத்துக் கொள்ள வசதியில்லையென்றாலும் இலவசமாக வழக்குரைஞர்கள் கிடைப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. 

சில சந்தர்ப்பங்களில் வழக்குரைஞர் எதிர்தரப்பிலும் பணத்தைப் பெற்றுக் கொண்டு வழக்கை சரியாக நடத்தவில்லை என்கிற குற்றச்சாட்டுகள் எழுவது உண்டு. அதனாலும் சிலர் தாமே வாதாடவேண்டும் என்று கோருவார்கள்.

நீதிமன்றங்களும் வழக்குரைஞர் இல்லாமல் வழக்கு நடப்பதை பெரும்பாலும் ஊக்குவிக்காது. அதையும் மீறி ஒருவர் தான் வாதாடுவதாக கூறினால் நீதிமன்றம் அனுமதித்துதான் ஆக வேண்டும். ஒரு வழக்கறிஞர் செய்யக்கூடிய குறுக்கு விசாரணை உள்ளிட்ட அனைத்தையும் தங்கள் சொந்த வழக்கில் சட்டம் படிக்காத வழக்காடிகள் செய்ய முடியும்.” என்றார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: