நரேந்திர மோதி முன்னிலையில் 'லட்சுமண ரேகை' பற்றி சுட்டிக்காட்டிய தலைமை நீதிபதி ரமணா

பிரதமர் நீதித்துறை முதல்வர்கள் மாநாடு

பட மூலாதாரம், PIB INDIA

பிரதமர் நரேந்திர மோதி, மாநில முதல்வர்கள் முன்னிலையில் டெல்லியில் சனிக்கிழமை நடந்த ஒரு கூட்டத்தில் பேசிய இந்திய உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி என்.வி.ரமணா, அரசாங்கம், நீதித்துறை, சட்டமன்றம் என்ற அரசின் மூன்று அலகுகளுக்கிடையில் உள்ள 'லட்சுமண ரேகை' தாண்டப்படக்கூடாது என்ற கருத்தை வலியுறுத்திப் பேசினார்.

"நாட்டில் உள்ள இந்தி மற்றும் மொழியியல் பன்முகத்தன்மை குறித்த விவாதம் பல தளங்களில் தீவிரமாகி வரும் வேளையில், நீதிமன்றங்களில் மாநில மொழிகளை அறிமுகப்படுத்துவதற்கான நேரம் வந்துவிட்டது," என்று தெரிவித்திருக்கிறார் இந்திய உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி என்வி ரமணா.

டெல்லி விஞ்ஞான் பவனில் மாநில முதலமைச்சர்கள் மற்றும் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிகளின் கூட்டு மாநாடு சனிக்கிழமை நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு பேசிய தலைமை நீதிபதி ரமணா, அரசியலமைப்பு நீதிமன்றங்களில் சட்டத்தை நடைமுறைப்படுத்துவது ஒருவரின் நுண்ணறிவு மற்றும் சட்டப்புரிதலின் அடிப்படையில் இருக்க வேண்டுமேயொழிய வெறும் மொழிப் புலமை அடிப்படையில் அது இருக்கக் கூடாது என்றார்.

"நீதித்துறையும், நமது ஜனநாயகத்தின் பிற எல்லா அமைப்புகளும் நாட்டின் சமூக மற்றும் புவியியல் பன்முகத்தன்மையை கண்ணாடி போல பிரதிபலிக்க வேண்டும். உயர் நீதிமன்றங்களில் நடைபெறும் சட்ட நடவடிக்கைகளை உள்ளூர் மொழிகளில் அறிமுகப்படுத்தக் கோரி பல மனுக்கள் எனக்கு வருகின்றன. அந்தக் கோரிக்கையை மறுபரிசீலனை செய்து அதில் ஒரு தர்க்கரீதியான முடிவுக்கு வரும் நேரம் வந்துவிட்டது என்று நான் நினைக்கிறேன்," என்று தலைமை நீதிபதி கூறினார்.

இந்தியாவில் 'நீதிக்கான அணுகல்' என்ற கருத்துரு, நீதிமன்றங்களில் வழக்கறிஞர்களை வெறுமனே பிரதிநிதித்துவப்படுத்துவதை விட மிகவும் விரிவானது என்று அவர் கூறினார்.

"ஒட்டுமொத்த உலகிலேயே சிறந்த இலவச சட்ட உதவி சேவைகள் இந்தியாவில் வழங்கப்படுகிறது என்பதை நான் பெருமையுடன் தெரிவித்துக் கொள்கிறேன்" என்றும் தலைமை நீதிபதி ரமணா குறிப்பிட்டார்.

"நீதி வழங்கல் முறையை இந்தியமயமாக்க வேண்டும்" என்ற முன்மொழிவை வலுவாக ஆதரிப்பவன் தான் என்றும் என்.வி ரமணா தெரிவித்தார்.

பிரதமர் மோதி முதல்வர்கள் நீதித்துறை மாநாடு

பட மூலாதாரம், PIB INDIA

இது குறித்து விரிவாக விளக்கிய அவர், "இந்திய மக்களின் தேவைகள் மற்றும் உணர்வுகளுக்கு ஏற்ப, நமது சட்ட அமைப்பை வடிவமைப்பதன் மூலம் அதனை அணுகுவதை எளிதாக்க முடியும் என்பதே நான் குறிப்பிடும் இந்தியமயமாக்கல். இது பல பரிமாணங்களைக் கொண்ட கருத்துருவாகும். உள்ளடக்கம், நீதிக்கான அணுகல் வாய்ப்பை வழங்குதல், மொழி ரீதியிலான தடைகளை நீக்குதல், நடைமுறைகளில் சீர்திருத்தம், உள்கட்டமைப்பு மேம்பாடு, நீதித்துறையில் நிலவும் காலி இடங்களை நிரப்புதல், நீதித்துறையின் பலத்தை அதிகரிப்பது என பலவற்றை இது உள்ளடக்கியது," என்று அவர் கூறினார்.

எல்லாம் சட்டப்படி நடந்தால் நீதித்துறை குறுக்கிடாது

பிரதமர் மோதி முதல்வர்கள் நீதித்துறை மாநாடு

பட மூலாதாரம், PIB INDIA

"இந்திய சூழலில் வழக்காடத் தூண்டும் சில காரணிகளை அடையாளம் காட்ட விரும்புகிறேன். நில அளவை அல்லது ரேஷன் கார்டு தொடர்பாக தன்னிடம் வரும் விவசாயிகளின் குறையைத் தீர்க்க ஒரு தாசில்தார் நடவடிக்கை எடுப்பாரேயானால் அந்த விவசாயி நீதிமன்றத்தை அணுக நினைக்க மாட்டார். ஒரு நகராட்சி அல்லது ஒரு கிராம பஞ்சாயத்து தனது கடமைகளை சரியாக நிறைவேற்றினால் அங்கு வாழும் குடிமக்கள் நீதிமன்றத்தை அணுக வேண்டிய அவசியம் இருக்காது."

"வருவாய்த்துறை அதிகாரிகள் சட்டப்படி நிலத்தை கையகப்படுத்தினால், நிலத் தகராறு வழக்குகள் நீதிமன்றத்தில் குவிந்திருக்காது. இந்த வழக்குகள் நீதிமன்றத்துக்கு வந்தாலும், அவை எண்ணிக்கை அளவில் 66 சதவீதம் நிலுவையிலேயே உள்ளன."

"நமது அரசமைப்புச் சட்டம் மூன்று அமைப்புகளுக்கு இடையே அதிகாரத்தைப் பிரித்து வழங்கியிருக்கிறது. அந்த மூன்று அமைப்புகளுக்கு இடையிலான இணக்கமான செயல்பாடுகள் ஜனநாயகத்தை வலுப்படுத்துகின்றன. இந்த விஷயத்தில் நமது கடமையைச் செய்யும்போது, தாண்டக்கூடாத ​லட்சுமண ரேகையை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். சட்டப்படி இருந்தால் நீதித்துறை ஒருபோதும் அரசின் நடவடிக்கைகளுக்கு குறுக்கே வராது. நகராட்சிகள், கிராம பஞ்சாயத்துகள் சரியாக கடமையாற்றினால், காவல்துறை முறையாக விசாரணை செய்தால், சட்ட விரோதமாக காவலில் வைக்கப்பட்ட சித்ரவதைகள் முடிவுக்கு வந்தால், மக்கள் நீதிமன்றத்தை நாட வேண்டியிருக்காது."

மாநில முதல்வர்கள் நீதித்துறை மாநாடு

பட மூலாதாரம், PIB INDIA

"அரசாங்கத்தின் உள்ளேயே இருக்கும் துறைகளுக்கு இடையிலான தகராறுகள் அல்லது பொதுத்துறை நிறுவனங்களுக்கும் அரசாங்கத்திற்கும் இடையிலான சில சண்டைகள் நீதிமன்றங்கள்வரை ஏன் வருகின்றன என்பது என் புரிதலுக்கு அப்பாற்பட்டு உள்ளது.

பணி மூப்பு, ஓய்வூதியம் மற்றும் பல விஷயங்களில் சேவைச் சட்டங்கள் நியாயமாகப் பயன்படுத்தப்பட்டிருக்குமானால் எந்த ஊழியரும் நீதிமன்றத்தை நாட வேண்டிய அவசியம் இருக்காது. நீதிமன்றத்தில் தேங்கும் வழக்குகளில் கிட்டத்தட்ட 50% அரசாங்கங்கள் தொடுத்தவை.

சட்டம் மற்றும் அரசியலமைப்பிற்கு கட்டுப்பட்டு நடப்பதே நல்லாட்சிக்கான திறவுகோலாகும். இருப்பினும், இது பெரும்பாலும் புறக்கணிக்கப்படுகிறது, மேலும் நிர்வாக முடிவுகளை செயல்படுத்துவதற்கான அவசரத்தில் சட்டத் துறைகளின் கருத்துக்கள் கேட்கப்படுவதில்லை.

சிறப்பு வழக்குரைஞர்கள் மற்றும் அரசாங்கங்களுக்கு நிலையான ஆலோசகர்கள் இல்லாதது கவனிக்கப்பட வேண்டிய மற்றொரு முக்கிய பிரச்னையாகும்," என்று தலைமை நீதிபதி கூறினார்.

அவமதிப்பு வழக்குகளில் அரசுகளின் செயல்பாடு

நீதிமன்ற உத்தரவுகளுக்கு அரசு இணங்காமல் இருக்கும்போது அந்த செயல்பாடு நீதிமன்ற அவமதிப்பாக வழிவகுக்கிறது. இந்தப் போக்குக்கு தமது கவலையை தலைமை நீதிபதி ரமணா வெளிப்படுத்தினார்.

"நீதிமன்றத்தின் முடிவுகளை அரசாங்கங்கள் பல ஆண்டுகளாக செயல்படுத்தாத நிலை உள்ளது. இதன் விளைவாக தாக்கல் செய்யப்படும் அவமதிப்பு மனுக்கள் நீதிமன்றங்களுக்கு ஒரு புதிய வகை சுமையாகும், இது அரசாங்கங்கள் நீதிமன்ற முடிவுகளுக்கு இணங்காததால் ஏற்படும் நேரடி விளைவாகும். நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்த பிறகும் அரசாங்கங்கள் வேண்டுமென்றே அவற்றை செயல்படுத்தாமல் இருப்பது ஜனநாயகத்தின் ஆரோக்கியத்துக்கு நல்லதல்ல," என்று அவர் கூறினார்.

"சில வழக்குகளில் அரசு நிர்வாகம் தாமாக முடிவெடுக்கும் சுமையை தவிர்க்க பிரச்னையை நீதித்துறை பக்கம் தள்ளிவிடுகிறது. கொள்கை உருவாக்கம் நீதித்துறையின் வரம்பில் இல்லை என்றாலும், ஒரு குடிமகன் தனது குறைகளைத் தீர்க்கும் வேண்டுகோளுடன் நீதிமன்றத்திற்கு வரும்போது அவரிடம் நீதிமன்றம் "முடியாது" என்று சொல்ல இயலாது" என்றார் தலைமை நீதிபதி.

ஆழமாக விவாதிக்கப்படாத சட்டங்கள்

X பதிவை கடந்து செல்ல, 1
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு, 1

"ஒரு சட்டம் நிறைவேற்றப்படும்போது அது தெளிவற்று இருந்தால் அதை எதிர்த்து வழக்கு தொடர வழி ஏற்படுகிறது. இதே போல, சில சட்டங்கள் மீது போதிய விவாதங்கள் நடத்தாமல் மாநில சட்டப்பேரவைகளில் நிறைவேற்றும் போக்கு காணப்படுகிறது. சட்டத்தில் உள்ள தெளிவில்லாத நிலைமை, தற்போதுள்ள சட்டச் சிக்கல்களுக்கு கூடுதல் சுமையாகிறது. சட்டமன்றம் ஒரு சட்டத்தை நிறைவேற்றினால், அது பற்றிய சிந்தனைத் தெளிவு, தொலைநோக்கு மற்றும் மக்கள் நலனைக் கருத்தில் கொள்ளுதல் ஆகியவை இருக்க வேண்டும். அப்படி செய்தால் அந்த சட்டத்துக்கு எதிராக வழக்கு தொடரும் சாத்தியம் குறையும்.

எனவே ஒரு சட்டத்தை இயற்றுவதற்கு முன், சட்டமன்றமானது பொதுமக்களின் கருத்துக்களைக் கேட்பது, சட்டப் பிரிவுகளின் அம்சங்கள், உட்பிரிவுகள், ஷரத்துகள் குறித்து விவாதம் செய்வது போன்ற நடவடிக்கையை எடுக்க வேண்டும்.

வழக்குகள் நிலுவைக்கு நீதிமன்றம் மட்டுமா காரணம்?

வழக்குகள் தாமதம் ஆவதற்கு நீதித்துறை மீதே பெரும்பாலும் குற்றம்சாட்டப்படுகிறது; ஆனால் காலி பணியிடங்களை நிரப்பினாலேயே இந்த பிரச்னைக்கு தீர்வு காண முடியும். ஒவ்வொரு நீதிமன்றத்திலும் அனுமதிக்கப்பட்ட நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பது குறித்து விவாதிக்க வேண்டும்," என்றார் என்.வி. ரமணா.

இந்தியாவில் அனுமதிக்கப்பட்ட நீதிபதி பணியிடங்களை கணக்கில் கொண்டு பார்த்தால், 10 லட்சம் மக்களுக்கு 20 நீதிபதிகள் மட்டுமே உள்ளனர், இது மிகவும் குறைவானது," என்றும் ரமணா சுட்டிக்காட்டினார்.

2016 ஆம் ஆண்டில், நாட்டில் அனுமதிக்கப்பட்ட நீதித்துறை அலுவலர் பணியிடங்கள் எண்ணிக்கை 20,811 ஆக இருந்தது. இப்போது, ​​24,112 ஆக உள்ளது. கடந்த 6 ஆண்டுகளில் இது 16% அதிகரித்துள்ளது. மறுபுறம், இதே காலகட்டத்தில், மாவட்ட நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கை 2.65 கோடியில் இருந்து 4.11 கோடி ஆக உயர்ந்துள்ளது.

இது குறித்துப் பேசிய தலைமை நீதிபதி ரமணா, "மாநில முதலமைச்சர்கள், மாவட்ட நீதித்துறையை வலுப்படுத்தும் முயற்சியில், தலைமை நீதிபதிகளுக்கு முழு மனதுடன் ஒத்துழைக்க வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன். அதிக பதவிகளை உருவாக்கி, அவற்றில் தகுதிவாய்ந்தவர்களை நிரப்ப நடவடிக்கை எடுங்கள். இது நடந்தால் இந்தியாவில் நீதிபதிகள் - மக்கள் விகிதத்தை, மேம்பட்ட ஜனநாயக நாடுகளுக்கு இணையானதாக ஒப்பிட முடியும்" என்று தலைமை நீதிபதி ரமணா கூறினார்.

தலைமை நீதிபதி கருத்துக்கு ஆதரவு தெரிவித்த மோதி

நரேந்திர மோதி

பட மூலாதாரம், PM INDIA

படக்குறிப்பு, நரேந்திர மோதி

இந்த மாநாட்டில் பேசிய பிரதமர் நரேந்திர மோதி, நீதிமன்றங்களில் உள்ளூர் மொழிகளைப் பயன்படுத்துவதற்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரமணா வெளிப்படுத்திய கருத்துகளுக்கு தமது வலுவான ஆதரவைத் தெரிவித்தார்.

"நம் நாட்டில், நீதித்துறை அரசியலமைப்பின் பாதுகாவலராக உள்ளது. மேலும் சட்டமியற்றும் மன்றங்கள் குடிமக்களின் அபிலாஷைகளை பிரதிபலிக்கிறது.. இதை கருத்தில் கொண்டு, சட்ட முன்வடிவை தயாரிக்க இரண்டு வடிவங்களை பயன்படுத்தும் வாய்ப்புகளை ஒரு குழு ஆராய்ந்து வருகிறது. ஒரு வடிவம், வழக்கமான சட்ட மொழியிலும் மற்றொன்று சாதாரண மக்களுக்குப் புரியும் எளிய மொழியிலும் இயற்றுவதற்கான வாய்ப்பை அந்தக் குழு ஆராய்ந்து வருகிறது. இத்தகைய இரண்டு வகைகள் பல நாடுகளில் நடைமுறையில் உள்ளன. அவை சட்டபூர்வமாக ஏற்றுக் கொள்ளப்படுகின்றன. நீதிமன்றங்களில் உள்ளூர் மொழிகளை ஊக்குவிக்க வேண்டும். இது நீதி அமைப்பில் சாதாரண குடிமக்களின் நம்பிக்கையை அதிகரிப்பதுடன் அவர்கள் நீதித்துறையுடன் இணைந்திருப்பதை உணரவும் செய்யும்" என்றார் பிரதமர் மோதி.

X பதிவை கடந்து செல்ல, 2
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு, 2

சிறைகளில் வாடும் விசாரணைக் கைதிகள் தொடர்பான வழக்குகளுக்கு மாநில அரசுகள் முன்னுரிமை தர வேண்டும். சட்டப்படியும் மனித உணர்வுகள் அடிப்படையிலும் கைதிகளை விடுதலை செய்ய வேண்டும். நீதித்துறை சீர்திருத்தம் என்பது வெறும் கொள்கை விவகாரம் அல்ல என்றும் பிரதமர் மோதி கூறினார்.

மனித உணர்வுகள் சம்பந்தப்பட்ட இந்த விவகாரம் அனைத்து விவாதங்களின் மையமாக இருக்க வேண்டும். கைதிகள் விடுதலை தொடர்பாக முடிவெடிக்க ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட நீதிபதி தலைமையில் ஒரு குழு உள்ளது, அதனால் அவர்கள் தொடர்புடைய வழக்குகள் மறுபரிசீலனை செய்யப்படலாம் மற்றும் சாத்தியமான இடங்களில், அத்தகைய கைதிகள் ஜாமீனில் விடுவிக்கப்படலாம். எனவே, இதில் மாநில முதல்வர்களும் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிகளும் முன்னுரிமை தர வேண்டும் என்று பிரதமர் மோதி வலியுறுத்தினார்.

YouTube பதிவை கடந்து செல்ல
Google YouTube பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

YouTube பதிவின் முடிவு

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :