துருக்கி அரசுக்கு அஞ்சி எலிகளைப் போல் ஒளிந்து வாழ்வதாகக் கூறும் சிரியா அகதிகள்

சிரிய அகதிகள்
    • எழுதியவர், பண்டனூர் ஓஸ்டுர்க்
    • பதவி, பிபிசி துருக்கி சேவை

கடந்த ஆறு மாதங்களில் ஆறு லட்சம் புலம்பெயர்ந்தோர் தாமாக முன்வந்து தங்கள் நாட்டுக்குத் திரும்பியுள்ளதாக துருக்கியின் உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். அதேநேரம், தங்களின் விருப்பத்திற்கு மாறாக பலர் நாடு கடத்தப்படுவதாக சிரிய குடியேற்றவாசிகள் தெரிவிக்கின்றனர்.

யாசர் தனது ஆவணங்களைச் சரிபார்க்க மூன்று மாதங்களுக்கு முன்பு அவர் பணிபுரிந்த தொழிற்சாலைக்குச் சென்றார். சிரிய குடியேற்றவாசியான யாசர், தனது குடும்பத்துடன் ஐந்து ஆண்டுகளாக இஸ்தான்புல்லில் வசித்து வந்தார். ஆனால், அவர் இஸ்தான்புல்லுக்கு பதிலாக அங்காராவில் தங்குவதாக, பதிவு செய்யப்பட்டுள்ளது.

இவர் தனது ஆவணங்களைச் சரிபார்ப்பதற்காக மூன்று மாதங்களுக்கு முன், அவர் பணிபுரிந்த தொழிற்சாலைக்குச் சென்றுள்ளார். அப்போது, அவரை போலீசார் அழைத்துச் சென்றனர்.

யாசர் முதலில் நகரின் புறநகரில் உள்ள துஸ்லாவுக்கு நாடு கடத்தப்படுபவர்களுக்காக அமைக்கப்பட்ட மையத்திற்கு அனுப்பப்பட்டார். அங்கிருந்து அவர்கள் சிரிய எல்லையில் உள்ள மெர்சினுக்கு அனுப்பப்பட்டார். அவரது மனைவி ஜானா அவரை மூன்று நாட்களாகச் சந்திக்க முடியவில்லை.

"போலீசார் அவரை அழைத்துச் சென்றார்கள் என்று எனக்குத் தெரியும், ஆனால் அவர் எங்கே என்று எனக்குத் தெரியவில்லை," என்றார் யாசரின் மனைவி.

இறுதியில், அங்காராவுக்கு செல்ல வேண்டும் என்ற நிபந்தனையின் பேரில், யாசர் விடுவிக்கப்பட்டார். அவர், அங்காராவில் பாழடைந்த குடிசையில் மனைவி மற்றும் எட்டு மாத குழந்தையுடன் வசித்து வருகிறார்.

அரசு புள்ளிவிவரங்கள் என்ன சொல்கின்றன?

சிரிய அகதிகள்

இதுகுறித்து யாசர் கூறும்போது, ​​‘‘கடந்த சில மாதங்களாக அடையாள அட்டைகளை போலீசார் எங்கு பார்த்தாலும் சரிபார்த்து வருகின்றனர்," என்றார்.

கடந்த ஆறு மாதங்களில் 173,000 புலம்பெயர்ந்தோர் கைது செய்யப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சக புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன. அதே, 2022ஆம் ஆண்டில், 2,85,000 புலம்பெயர்ந்தோர் பிடிபட்டனர்.

அதே ஆறு மாதங்களில், 30 நகரங்களில் ஆவண சரிபார்ப்புக்குப் பிறகு சுமார் 44,572 புலம்பெயர்ந்தோர் நாடு கடத்தப்பட்டுள்ளனர். இதற்கிடையில், 6,04,277 புலம்பெயர்ந்தோர் தாமாக முன்வந்து தங்கள் நாட்டுக்குத் திரும்பியுள்ளதாக துருக்கி உள்துறை அமைச்சர் அலி யெர்லிகாயா தெரிவித்துள்ளார்.

துருக்கி 3 மில்லியனுக்கும் அதிகமான சிரிய அகதிகளுக்கு அடைக்கலம் கொடுத்துள்ளது. இது மற்ற நாடுகளை ஒப்பிடும்போது அதிகம் என்கிறார் துருக்கி உள்துறை அமைச்சர். துருக்கி இனி புலம்பெயர்ந்தோரின் இலக்காகவோ அல்லது போக்குவரத்து நாடாகவோ மாறாது என்றும் அவர் கூறுகிறார்.

சமீபத்தில் துருக்கிக்கு வந்த சிரியர்கள் 'தற்காலிக பாதுகாப்பு' அந்தஸ்தை பெறுவது கிட்டத்தட்ட சாத்தியமற்றதாக ஆகிவிட்டதாகக் கூறுகிறார்கள்.

ஆறு மாதங்களுக்கு முன்பு 23 வயதான மாஹிர் சிரியாவில் இருந்து துருக்கிக்கு வந்துள்ளார். வெடிவிபத்தில் தீக்காயம் அடைந்த அவர், சிகிச்சை பெறுவதற்காக வந்திருந்தார். இப்போது அங்காராவில் புலம்பெயர்ந்தோர் குறித்துப் பதிவு செய்வது நிறுத்தப்பட்டுள்ளதாகவும், பல பெரிய நகரங்களிலும் அதே நிலைதான் என்றும் அவர் கூறுகிறார்.

இதனால், அவர்கள் தங்கள் குடியிருப்பை விட்டு வெளியேறுவது பாதுகாப்பானது அல்ல. "ஒரு முறை நான் என் சுற்றுப்புறத்தில் நடக்க விரும்பினேன். ஆனால் ஒரு போலீஸ் அதிகாரி என்னை மூலையில் நிறுத்தி எனது அடையாள அட்டையைக் கேட்டார். என் எரிந்த முகத்தைப் பார்த்து அவர் பரிதாபப்பட்டார். அவர் இங்கே சுற்றித் திரிய வேண்டாம் என்றார்."

"சந்தைக்குக்கூட செல்ல முடியாது. எல்லா இடங்களிலும் போலீசார் ரோந்து வருவதால், வெளியே சென்றால், விரைவாக வீடு திரும்புகிறேன்," என்கிறார். மற்றவர்களும் இதே நிலையில்தான் வாழ்கின்றனர்.

நகரின் அல்டிண்டாக் பகுதியில் சுதந்திரமாக சுற்றித் திரிந்தார் 16 வயதான நாசர். ஆனால் இப்போது அவர் எப்போதும் எச்சரிக்கையாக இருப்பதாகக் கூறுகிறார்.

"ஒரு வருடத்திற்கு முன்பு, நான் காவல்துறையினரைக் கடந்து சென்றபோது, ​​​​என் அடையாள அட்டையை யாரும் கேட்கவில்லை. ஆனால் இப்போது நான் ஒரு காவலரை தூரத்திலிருந்து பார்த்தாலே, ஓடிவிடுவேன்," என்கிறார் அவர். இது பள்ளிக்குச் சென்று துருக்கி மொழியைக் கற்கும் அவரது திட்டத்தை முறியடித்துள்ளது.

"எனக்கு எதிர்காலம் குறித்த நம்பிக்கையோ, திட்டங்களோ இல்லை. முக்கியமான வேலை எதுவும் இல்லை என்றால் வெளியே போவதில்லை. சிறையில் இருப்பது போலத்தான் இருக்கிறது," என்கிறார் அவர்.

திரும்பிய பிறகு எங்கே போவோம்?

சிரிய அகதிகள்

சிரிய அரசின் பாதுகாப்புப் படையினரால் தனது வீடு குண்டுவீசித் தாக்கப்பட்டதாக நாசர் கூறுகிறார். ஏழு ஆண்டுகளாக அகதிகள் முகாமில் வாழ்கிறார். இப்போது அவரது பெற்றோர் இறந்துவிட்டதால் திரும்பி வர விரும்பவில்லை. இப்போது அவருக்கு சிரியாவில் உறவினர்கள் யாரும் இல்லை.

ராஷா ஒற்றைத் தாய். அவர் ஐந்து மற்றும் ஏழு வயதுடைய இரண்டு குழந்தைகளுடன் அங்காராவின் கெசியோரன் மாவட்டத்தில் வசித்து வருகிறார். மூன்று மாதங்களாக அவர்கள் நகர மையத்திற்கு பொருட்கள் வாங்கச் சென்று வந்ததாகவும், அதன்பிறகு அவர்கள் யாரும் வீட்டைவிட்டு வெளியே வரவில்லை என்றும் ராஷா கூறுகிறார்.

"ஒரு போலீஸ்காரர் எங்களை நோக்கி வருவதை நாங்கள் பார்த்தோம், நாங்கள் குற்றவாளிகளைப் போல கூட்டத்திலிருந்து ஓட ஆரம்பித்தோம்," என்கிறார் அவர்.

"பின்னர் அவர்கள் எங்கள் அக்கம்பக்கத்தில் இருந்து இரண்டு இளைஞர்களைப் பிடித்து சிரியாவுக்கு அனுப்பினர். அன்று முதல், என்னால் சந்தைக்குக்கூட செல்ல முடியவில்லை. என்னால் சிரியாவுக்கும் திரும்ப முடியாது, இங்கேயும் இருக்க முடியாது," என்றார் ராஷா.

தமீம் கடந்த 10 ஆண்டுகளாக துருக்கியில் வசித்து வருகிறார். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அல்டிண்டாகில் துருக்கிய மற்றும் சிரிய இளைஞர்களுக்கு இடையே நடந்த சண்டையே புலம்பெயர்ந்தோர் மீதான அதிகாரப்பூர்வ அணுகுமுறையில் ஏற்பட்டுள்ள மாற்றத்திற்கான காரணம் என்று அவர் குறிப்பிடுகிறார். இந்தச் சண்டையில் ஒரு இளம் துருக்கியர் கத்தியால் குத்தப்பட்டார். இதையடுத்து மற்ற நகரங்களுக்கும் பதற்றம் பரவியது.

சிரிய அகதிகள் மற்றும் துருக்கிய பொருளாதாரம்

சிரிய அகதிகள்

பட மூலாதாரம், Getty Images

இந்தச் சம்பவத்திற்குப் பிறகு, பாதுகாக்கப்பட்ட அந்தஸ்துக்கு பதிவு செய்வது கடினமாகிவிட்டது. தமீம் பதிவு செய்யப்பட்டுள்ளார், ஆனால் இப்போது அவரால் புதிய முகவரிக்குச் செல்ல முடியவில்லை.

அவரது உறவினர் பாதுகாக்கப்பட்ட அந்தஸ்தை பெற முடியவில்லை. நாடு கடத்தப்பட்டவர்களில் அவரது உறவினரும் ஒருவர்.

"இரண்டு வாரங்களுக்கு முன்பு அவர்கள் அவரை சிரியாவுக்கு திருப்பி அனுப்பினார்கள்," என்று தமீம் கூறுகிறார். அவருடைய மனைவியும் இரண்டு குழந்தைகளும் இங்கேயே தங்கியிருந்தனர். இதன் காரணமாக, கடத்தல்காரர்கள் மூலம் இரண்டு வாரங்களுக்குள் அவர் துருக்கிக்கு திரும்ப முடிந்தது.

சில துருக்கியர்களின் பொருளாதாரம் மோசமடைந்து வருவதற்கு சிரிய அகதிகளே காரணம் என்று ஆய்வுகள் காட்டுகின்றன. சிரிய அகதிகள் துருக்கிய வேலைகளைப் பெறுவதாக அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர். சில மாதங்களுக்கு முன்பு நடந்த பொதுத் தேர்தலில் புலம்பெயர்ந்தோர் எதிர்ப்பு உணர்வு அரசியல் விவாதத்தை ஏற்படுத்தியது.

சில சிரிய அகதிகள் துருக்கி மொழியைக் கற்று தங்கள் படிப்பைத் தொடர்ந்தனர், வேலைகளைப் பெற்றனர். ஆனால், பெரும்பாலும் அவர்கள் ஒற்றுமை இல்லாதவர்களாக, ஓரங்கட்டப்பட்டவர்களாகவே இருந்தனர்.

சுகாதார சேவைகளுக்கான அணுகல்

சிரிய அகதிகள்

இஸ்தான்புல்லில் இருந்து அங்காராவுக்கு செல்ல வேண்டிய கட்டாயத்தில் இருந்த யாசர் மற்றும் அவரது மனைவி, இரண்டாவது குழந்தையைப் பெற்றெடுக்க உள்ளனர்.

அவரது கணவரைப் போல, யாசரின் மனைவியிடம் எந்த ஆவணங்களும் இல்லை. இதனால், அரசாங்க சுகாதார சேவைகளின் பலன்களை அவரால் பெற முடியவில்லை. இதனால், அவர்கள் பிரசவத்திற்கு தனியார் மருத்துவமனைக்குச் செல்ல வேண்டியுள்ளது.

அவரது முதல் சிசேரியன் அறுவை சிகிச்சைக்கு 5,000 லிரா ($171) செலவானது. ஆனால், அடுத்த அறுவை சிகிச்சைக்கு மூன்று மடங்கு அதிகமாக செலவாகும் என்று கூறப்பட்டது. இந்தச் செலவை எப்படித் தாங்குவார்கள் என்று தெரியவில்லை.

"சில நேரங்களில் நான் பிரசவ வலியை அனுபவிக்கிறேன், ஆனால் நான் எந்த மருத்துவரையும் பார்க்கச் செல்வதில்லை," என்கிறார் அவர். சிரியாவோடு ஒப்பிடும்போது துருக்கியில் வாழ்வது சொர்க்கம் போல இருந்தது. ஆனால் இப்போது அது தாங்க முடியாததாகி வருகிறது என்கிறார் யாசர்.

"எங்களுக்கு மூன்று வழிகள் உள்ளன - ஐரோப்பாவுக்கு செல்வது, சிரியாவுக்கு திரும்புவது அல்லது துருக்கியில் எலிகளைப் போல ஒளிந்து கொள்வது."

"என்னிடம் போதிய பணம் இல்லாததால் நான் ஐரோப்பாவுக்கு செல்ல முடியாது. போரின் காரணமாக என்னால் சிரியாவுக்கு திரும்ப முடியாது. ஆனால், சிரியாவில் நிலைமை சீரானால், நான் இங்கு இருக்க மாட்டேன்," என்கிறார் அவர்.

(இந்தக் கட்டுரையில் உள்ள அனைவரின் பெயர்களும் அவர்களின் அடையாளத்தைப் பாதுகாக்க மாற்றப்பட்டுள்ளன.)

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)