கேரளா ஸ்டோரி சர்ச்சை வலையில் சிக்கிய ஃபர்ஹானா திரைப்படம் கற்றுத்தரும் பாடம் என்ன?

- எழுதியவர், ச. பொன்மனச்செல்வன்
- பதவி, பிபிசி தமிழுக்காக
ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் கடந்த மே 12-ல் திரைக்கு வந்த படம் ‘ஃபர்ஹானா’. இந்தப் படம் வெளி வருவதற்கு முன், படம் இஸ்லாம் சமூகத்திற்கு எதிராக எடுக்கப்பட்டு இருக்கிறது எனும் ஐயம் இருப்பதாக கருத்து தெரிவித்தவர்கள் தற்போது ஆதரவாக பேசி வருகின்றனர்.
சமீபத்தில் இந்தியில் உருவாகி திரைக்கு வந்த ‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்தப் படத்தில் கேரளாவின் சகோதரத்துவம் தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளதாக அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து, அந்தப் படத்தை தடை செய்ய வேண்டும் என பல்வேறு அமைப்புகளும் கோரிக்கை வைத்தன. அதேபோல், தமிழ்நாட்டிலும் திரையரங்க உரிமையாளர்கள், 'போராட்டங்கள் ஏற்படும்' என அந்தப் படத்தை வெளியிடவில்லை. மேற்கு வங்க அரசு ‘தி கேரளா ஸ்டோரி’ படத்திற்கு தடைவிதித்தது. இது ஒருபுறமிருக்க, இந்தப் படம், கேரளாவின் உண்மையான பிரச்னைகளை பேசுவதாகக்கூறி, மத்திய பிரதேசம், உத்திர பிரதேசம் ஆகிய மாநில அரசுகள் வரிவிலக்கு அளித்தன.
மேலும், கர்நாடக மாநில தேர்தல் பரப்புரையில் பிரதமர் நரேந்திர மோடி, ’தி கேரள ஸ்டோரி’ திரைப்படம் இஸ்லாம் பயங்கரவாதத்தை காட்சிப்படுத்தியிருப்பதாகவும், இந்தப் படத்திற்கு எதிராக இருப்பதன் மூலம் காங்கிரஸ் பயங்கரவாதத்திற்கு துணை போகிறது என்றும் தெரிவித்தார்.
’தி கேரளா ஸ்டோரி’ படத்தைப் போலவே, சார்ஜூன் இயக்கத்தில் வெளியான ‘புர்கா’ திரைப்படமும் சர்ச்சையை சந்தித்தது. இந்தப் படத்தில் இஸ்லாம் மார்க்கத்தின் நம்பிக்கைகள் அவமதிக்கப்பட்டிருப்பதாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார். அதேபோல், இஸ்லாமிய அமைப்புகளும் படத்தை தடை செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்தன.

பட மூலாதாரம், DREAM WARRIOR PICTURES
’தி கேரளா ஸ்டோரி’, ‘புர்கா’ ஆகிய படங்கள் குறித்த சர்ச்சைகள் தமிழ்நாட்டில் ஏற்பட்டிருந்த நிலையில்தான் ஏப்ரல் 22-ம் தேதி ‘ஃபர்ஹானா’ படத்தின் டீசர் வெளியானது. வெளியான சில தினங்களில் இந்த டீசர் இஸ்லாம் மதத்தின் நம்பிக்கைகளுக்கு அவதூறு ஏற்படுத்தும் வகையில் இருப்பதாகவும் அதனால் படம் திரைக்கு வராமல் தடுக்க வேண்டும் எனவும் இந்திய லீக் கட்சி, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஆகிய அமைப்புகள் காவல்துறையில் புகார் அளித்தன.
அவர்கள் அளித்த புகாரில், "சமீபத்தில் ஓடிடி மூலம் வெளியிடப்பட்ட ‘புர்கா’ திரைப்படம் இஸ்லாமியக் கோட்பாடுகளைக் கடுமையாகத் தாக்கி எடுக்கப்பட்டிருந்தது. முஸ்லீம்கள் பெரிதும் மதிக்கக்கூடிய திருக்குர்ஆன் வசனங்களைத் திரையிட்டு, உண்மைக்கு மாறான கருத்துகளை இஸ்லாம் சொல்வதுபோல் அப்படத்தில் காட்சிகள் இடம்பெற்றிருந்தன. இத்திரைப்படத்தை தொடர்ந்து எரிகிற நெருப்பில் எண்ணெய் ஊற்றுவதுபோல், தற்போது ‘ஃபர்ஹானா’ என்கிற படத்தின் டீசர் வெளியாகி உள்ளது.
ஃபர்ஹானா திரைப்படத்தின் டீசரில் ஒரு இஸ்லாமிய பெண் புர்கா அணிந்து உலகம் முழுவதும் சுற்றி வியாபாரம் செய்வது போன்ற காட்சிகள் இடம் பெற்றுள்ளன. இது இஸ்லாமிய பண்பாடு கலாசாரத்திற்கு எதிரானது. தவிர, இஸ்லாமியப் பெண்களை அவமதிக்கும் விதமாக வசனங்கள் வருகின்றன. மேலும், இந்த 2 படங்களிலும் முஸ்லிம் பெண்கள் அணியும் ஹிஜாப் என்ற ஆடையும் கொச்சைப்படுத்தப்படுகிறது. ஆகவே, ஃபர்ஹானா திரைப்படத்தை திரைக்கு வராமல் தடை செய்ய வேண்டும்," எனவும் வலியுறுத்தியிருந்தனர்.

பட மூலாதாரம், DREAM WARRIOR PICTURES
தயாரிப்பாளர் வெளியிட்டிருந்த அறிக்கை
‘ஃபர்ஹானா’ திரைப்படம் இஸ்லாமியர்களுக்கு எதிரானது என சொல்லப்பட்டு வந்த நிலையில், ஃபர்ஹானா திரைப்படம் அனைத்து ரசிகர்களுக்குமானது. மத உணர்வுகளுக்கு எதிரானது அல்ல. தவறான பார்வைக் கொண்டவர்கள் சரியாக புரிந்து கொள்ள வேண்டும் என வெளியீட்டிற்கு முன்பாக படத்தின் தயாரிப்பாளர் எஸ்.ஆர். பிரபு அறிக்கை வெளியிட்டார்.
மேலும், ஃபர்ஹானா திரைப்படம் எந்த மதத்திற்கும், உணர்வுகளுக்கும் எதிரானது அல்ல. நல்ல திரைப்படங்களை வழங்கவேண்டும் என்பது மட்டுமே எங்கள் நோக்கமே தவிர, ஒருநாளும் எந்த மத உணர்வுகளுக்கும் , நம்பிக்கைகளுக்கும் எதிராகவோ, புண்படுத்தும் விதமாகவோ செயல்படுவது அல்ல. மேலும் மனித குலத்திற்கு எதிரான ஓரு செயலை என்றும் எங்கள் கதைகளில் நாங்கள் அனுமதிப்பதில்லை, விரும்புவதுமில்லை. இதை எங்களின் ஃபர்ஹானா திரைப்படம் குறித்து அறியாமல் சர்ச்சைகளை உருவாக்கி வரும் சகோதர, சகோதரிகள் புரிந்து கொள்ள வேண்டும் என்று நினைக்கிறோம்.
இந்தியா போலவே, குறிப்பிட்ட சில வெளிநாடுகளிலும், மத உணர்வுகள் புண்படுவது போன்ற காட்சிகள் ஒரு திரைப்படத்தில் இருந்தால், அந்தப் படம் தணிக்கையைத் தாண்டுவது மிகக் கடினம். குறிப்பாக மலேசியா, சிங்கப்பூர், ஓமன், பக்ரைன், ஐக்கிய அரபு நாடுகள் ஆகிய நாடுகளின் தணிக்கை விதிகள் கடுமையானதாக இருக்கும். ஆனால் மேற்குறிப்பிடப்பட்டுள்ள அந்த நாடுகளிலேயே ஃபர்ஹானா திரைப்படம், எந்தவித சிக்கலும் இன்றி தணிக்கை செய்யப்பட்டு வெளியீடுக்குத் தயாராகிவிட்டது. இதுவே ஃபர்ஹானா எந்த விதமான சர்ச்சையையும் உள்ளடக்காத படம் என்பதை தெளிவுபடுத்துவதாகவும் அந்த அறிக்கையில் ‘ஃபர்ஹானா’ படத்தின் தயாரிப்பாளர் எஸ்.ஆர். பிரபு தெரிவித்திருந்தார்.

இதனையடுத்து, கடந்த 12-ம் தேதி ‘ஃபர்ஹானா’ திரைப்படம் வெளியானது. இதனையடுத்து, படத்தின் நாயகி ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் இயக்குநர் நெல்சன் வெங்கடேசன் ஆகியோரின் வீடுகளுக்கு காவல்துறை பாதுகாப்பு அளிக்கப்பட்டது. ஆனால், ‘ஃபர்ஹானா’ படத்திற்கு இதுமாதிரியான சர்ச்சைகள் தேவையற்றது எனவும், இது படத்தின் நோக்கத்தை சிதைப்பதாகவும் இயக்குநர் நெல்சன் வெங்கடேசன் தெரிவிக்கிறார்.
ஃபர்ஹானா படத்தின் சர்ச்சைகள் தொடர்ச்சியாக ஏற்பட்ட நிலையில், எதிர்ப்பு தெரிவித்த இஸ்லாம் அமைப்புகளுக்கு படத்தின் சிறப்புக் காட்சி திரையிடப்பட்டது. திரையிடலுக்குப் பிறகு, சர்ச்சைக்குரிய காட்சிகள் எதுவும் இல்லை எனவும், படிப்பினைகளே இருப்பதாகவும் எஸ்டிபிஐ கட்சியின் மாநில பொதுச் செயலாளர் உமர் பாரூக் தெரிவித்து இருக்கிறார்.
மேலும், ஒரு ஏழை முஸ்லிம் குடும்பத்தின் கதைக்களத்தை மையமாக கொண்டு, இயக்குநர் கதையை நகர்த்தி உள்ளார். அதில் சில படிப்பினைகளும் உள்ளன. மற்றபடி தவறான சித்தரிப்புகள் இப்படத்தில் இல்லை என்பதால் ‘ஃபர்ஹானா' பட சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைப்போம் எனவும் உமர் பாரூக் கூறியிருக்கிறார்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு
இதனால், ஃபர்ஹானா திரைப்பட சர்ச்சைகள் முடிவுக்கு வந்திருக்கிறது. ஆனால், அனுமானத்தின் அடிப்படையில் ஒரு படைப்பிற்கு தடை கோருவது, அந்தப் படம் குறித்து தவறாக சித்தரிப்பது உண்மையில் ஆபத்தானது என்கிறார் திரை விமர்சகர் ரமேஷ் பாலா. மேலும், தணிக்கை வாரியம் ஒரு படத்தின் வெளியீட்டிற்கு முன்பாகவே படத்தை பார்த்து, அதில் சர்ச்சைக்குரிய மற்றும் இந்திய இறையாண்மைக்கு எதிரான காட்சிகளோ, வசனங்களோ இருக்கும்பட்சத்தில் அதனை நீக்கி விடுகிறது. அதன்பிறகு, ஒரு படைப்பை தடை செய்யக் கோருவது ஜனநாயகத்திற்கு எதிரானது எனவும் அவர் தெரிவிக்கிறார்.
இயக்குநர் நெல்சன் வெங்கடேசன், "கருத்து சுதந்திரம் என்பது அனைவருக்கும் பொதுவானது. அது எந்தவகை சித்தாந்தம் கொண்டதாக இருந்தாலும் அதை தடை செய்ய வேண்டும் என்பது சரியல்ல. ஒரு திரைப்படம் தவறான கருத்தை போதிக்கிறது என்றால், சரியான கருத்தை போதிக்கும் இன்னொரு படத்தை உருவாக்க வேண்டுமே தவிர, அதை விட்டுவிட்டு அதை மக்கள் முன் காட்சிப்படுத்தவே கூடாது என்பது கருத்து சுதந்திரத்திற்கு முரணானது" என்றார்.

பட மூலாதாரம், Twitter
140 கோடி மக்கள் தொகை கொண்ட ஒரு நாட்டில் அனைவரும் ஏற்கும் வகையிலான கருத்தை எவர் ஒருவராலும் சொல்ல முடியாது. அதனால், எதிர்ப்பு தெரிவிப்பது என்றாலும் கூட, ஜனநாயகத்திற்கு உட்பட்டு நம் எதிர்ப்பை பதிவு செய்ய வேண்டும் எனக் குறிப்பிடும் திரை விமர்சகர் ரமேஷ் பாலா, தற்போதைய பிரச்னைகள் வரையறைக்குட்பட்ட கருத்து சுதந்திரத்தை நம் நாடு கொண்டிருப்பதாலேயே ஏற்படுவதாகவும், அதை சரிசெய்யும் பட்சத்தில் இதுமாதிரியான பிரச்னைகளை களைந்துவிடலாம் எனவும் தெரிவிக்கிறார்.
’ஃபர்ஹானா’ திரைப்படம் தமிழ் மட்டுமின்றி, தெலுகு, இந்தி மொழிகளிலும் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றிருக்கிறது.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












