விரத உணவு முறையால் இதய நோய் மற்றும் பக்கவாதம் வரும் ஆபத்து அதிகமா?

    • எழுதியவர், சௌதிக் பிஸ்வாஸ்
    • பதவி, பிபிசி செய்தியாளர்

இந்த தசாப்தத்தில் இன்டர்மிட்டன்ட் ஃபாஸ்டிங் எனப்படும் விரத உணவுமுறை டிரெண்டாக உள்ளது.

இந்த உணவுமுறை மூலம் கலோரிகளை கணக்கிட்டு சாப்பிடுவது அல்லது கார்போஹைட்ரேட் உணவுகளை தவிர்ப்பது உள்ளிட்ட கடினமான எதையும் கடைபிடிக்காமல் ஒருவரின் உடல் எடையை குறைக்க முடியும் என நம்பப்படுகிறது. இந்த உணவுமுறையில் நீங்கள் எப்போது சாப்பிட வேண்டும் என்பதை மட்டுமே மாற்ற வேண்டும், என்ன சாப்பிட வேண்டும் என்பதை அல்ல.

தொழில்துறையில் செல்வாக்கு மிக்கவர்கள் இதை உறுதியாக நம்புகின்றனர், ஹாலிவுட் நட்சத்திரங்கள், இந்த உணவுமுறை தங்களுக்கு ஒழுங்கான உடலமைப்பை தருவதாக கூறுகின்றனர். பிரிட்டன் முன்னாள் பிரதமர் ரிஷி சூனக் 36 மணிநேர விரதத்துடன் தன் வாரத்தை தொடங்குவது குறித்து ஒருமுறை பேசியிருந்தார்.

இந்த உணவுமுறைக்கு ஆதரவாகவே அறிவியல் இதுவரையிலும் இருந்துள்ளது. காலையில் முதல் உணவை தள்ளிப்போடுவது வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்தும், செல்களை சரிசெய்யும்,நீண்ட ஆயுளை கூட வழங்கும் என ஆய்வுகள் பரிந்துரைக்கின்றன. எனினும், உணவை தவிர்ப்பது சிறந்த தீர்வு அல்ல என்றும் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் அபாயம் கொண்டது என்றும் ஊட்டச்சத்து நிபுணர்கள் கூறுகின்றனர்.

இன்டர்மிட்டன்ட் ஃபாஸ்டிங் என்பது குறுகிய நேர இடைவெளியில் மட்டும் உணவை உண்பது, பெரும்பாலும் இது எட்டு மணிநேரமாக உள்ளது, மீதமுள்ள 16 மணிநேரத்தில் எந்த உணவையும் உட்கொள்ளக் கூடாது. நேரத்தைக் கட்டுப்படுத்தி கடைபிடிக்கப்படும் 5:2 போன்ற மற்ற உணவுமுறைகளில் குறிப்பிட்ட சில நாட்களில் கலோரிகளை கட்டுப்படுத்த வேண்டும்.

தற்போது சமீபத்தில் வெளியான முதல் பெரியளவிலான ஆய்வு முடிவுகள், இந்த உணவு முறை குறித்து பல மோசமான ஆபத்துகள் குறித்த கவலையை எழுப்புகின்றன. வயது வந்த 19,000க்கும் மேற்பட்டோரிடம் மேற்கொண்ட இந்த ஆய்வில், அவர்களுள் எட்டு மணிநேர இடைவெளிக்கும் குறைவான நேரத்தில் மட்டுமே உணவுகளை உண்பவர்கள், 12-14 மணிநேர இடைவெளியில் உண்பவர்களைவிட இதய நோய்களால், குறிப்பாக இதய மற்றும் ரத்த நாள நோய்களால் இறக்கும் ஆபத்து 135% அதிகம் உள்ளதாக கூறுகிறது.

இந்த இதய நோய்கள் ஆபத்து ஒருவரின் உடல்நலன், வாழ்வியல் முறை மற்றும் முந்தைய மருத்துவ தகவல்களின் அடிப்படையிலேயே, ஆய்வில் பங்கேற்ற மற்றவர்களைவிட மாரடைப்பு அல்லது பக்கவாதம் போன்ற இதயம் தொடர்பான பிரச்னைகள் ஏற்படுவதற்கான அதிக ஆபத்து உள்ளது.

பிற காரணங்களால் இறப்பதற்கும் இந்த உணவுமுறைக்குமான தொடர்பு வலுவானதாக இல்லை. நிலையற்றதாக உள்ளது. ஆனால், அதிக பரிசோதனைகளுக்கு பின்னரும் வயது, பாலினம், வாழ்வியல் முறையைக் கடந்தும் இதய நோய்களுக்கான ஆபத்து நீடிக்கிறது.

மற்ற வார்த்தைகளில் சொல்வதானால், இத்தகைய நேர கட்டுப்பாட்டு முறைக்கும் மற்ற காரணங்களால் ஏற்படும் உயிரிழப்புகளுக்கும் இடையேயான தொடர்பு வலுவற்றதாகவும் நிலையற்றதாகவும் இருப்பதாக இந்த ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. ஆனால், இதயநோய்களால் இறப்பதற்கான ஆபத்து அதிகமாக உள்ளது.

இந்த ஆய்வு இறப்புக்கான காரணம் மற்றும் அதன் விளைவுக்கும் இடையேயான தொடர்பை நிரூபிக்கவில்லை. ஆனால், விரத முறையை கடைபிடிப்பது என்பது சிறந்த உடல்நலனுக்கான ஆபத்துகள் இல்லாத வழிமுறை என்ற கருத்துக்கு இந்த ஆய்வு முடிவுகள் சவால் விடுக்கின்றன.

ஆய்வாளர்கள் இதற்கென அமெரிக்காவை சேர்ந்த வயதுவந்தவர்கள் மத்தியில் எட்டு ஆண்டுகளாக ஆய்வு செய்துள்ளனர். அவர்களின் உணவுமுறையை புரிந்துகொள்ள இரண்டு வாரங்களில் ஏதேனும் இரு நாட்களுக்கு அவர்கள் உண்ட, அருந்திய எல்லாவற்றையும் நினைவுபடுத்தும்படி அறிவுறுத்தினர். இதன்மூலம், ஒருவரின் சராசரி உணவு நேரம் என்ன என்பதை கணக்கிட்டு, அதை அவர்களின் நீண்ட கால வழக்கமாக எடுத்துக்கொள்கின்றனர்.

எட்டு மணிநேரத்துக்குள் உணவுகளை உண்பவர்களுக்கு 12-14 மணிநேரத்துக்கு தங்கள் உணவுகளை பிரித்து உண்பவர்களைவிட இதய நோய்களால் இறக்கும் ஆபத்து அதிகம் இருப்பதாக, ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

இதயநோய் ஆபத்து ஏன்?

பலவித சமூக பொருளாதார குழுக்களிடையே இந்த இதயநோய் ஆபத்து நிலையானதாக அவர்கள் கண்டறிந்துள்ளனர், மேலும், புகைபிடிப்பவர்கள், நீரிழிவு நோயாளிகள் அல்லது ஏற்கெனவே இதய நோய் உள்ளவர்களிடையே இந்த ஆபத்து அதிகமாக உள்ளது, எனவே அவர்கள் குறுகிய நேர இடைவெளியில் உண்பதை நீண்ட காலத்துக்குக் கடைபிடிப்பது குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என இந்த ஆய்வு பரிந்துரைக்கிறது.

உணவுமுறையின் தரம், உணவுகள் மற்றும் எவ்வளவு தின்பண்டங்கள் உண்கிறோம், மற்ற வாழ்வியல் காரணங்களை மாற்றியும் இந்த தொடர்பு இருப்பதாக, ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

இதயநோய்களால் இறப்பு அதிகரிப்பது மற்றும் ஒட்டுமொத்த இறப்புகள் அதிகரிக்காததை எப்படி புரிந்துகொள்வது என ஆய்வாளர்களிடம் எழுப்பினோம், இது உயிரியல் ரீதியிலானதா அல்லது இந்த தரவுகளில் பக்கச்சார்பு ஏதேனும் உள்ளதா என கேட்டோம்.

உணவுமுறை தான் நீரிழிவு மற்றும் இதயநோய் சம்பந்தமான நோய்களுக்கு முக்கியமான காரணியாக உள்ளது. எனவே, இதயநோய்களால் இறப்பு அதிகரிப்பதுடன் உள்ள தொடர்பு எதிர்பாராதது அல்ல என, திறன் வாய்ந்தவர்களால் மதிப்பீடு செய்யப்பட்ட (peer-reviewed) ஆய்வின் ஆய்வாசிரியர் விக்டர் வென்ஸ் ஸோங் கூறுகிறார். இந்த ஆய்வு, டயாபட்டீஸ் & மெட்டபாலிக் சிண்ட்ரோம்: க்ளீனிக்கல் ரிசர்ச் அண்ட் ரிவ்யூஸ் எனும் ஆய்விதழில் வெளியாகியுள்ளது.

"எட்டு மணிநேரத்துக்கும் குறைவான நேரத்தில் உண்பது இதய நோயால் ஏற்படும் இறப்புகள் அதிகரிப்பதுடன் தொடர்புடையது என்பதுதான் இதில், எதிர்பாராத முடிவாக உள்ளது," என கூறுகிறார் பேராசிரியர் ஸோங். இவர், சீனாவில் உள்ள ஷாங்காய் ஜியாவ் டோங் பல்கலைக்கழகத்தின் மருத்துவப் பள்ளியில் தொற்றுநோயியல் நிபுணராக உள்ளார்.

ஓரிரு மாதங்கள் முதல் ஓராண்டு வரையிலான குறுகிய காலத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் முடிவுகள், இத்தகைய விரத உணவுமுறைகள் இதயம் மற்றும் வளர்சிதை மாற்ற நலனை மேம்படுத்துகிறது என்ற நம்பிக்கைகளுக்கு சவால் விடுக்கிறது.

பலன்களும் குறைகளும்

அதே இதழில் முன்னணி உட்சுரப்பியல் நிபுணர் அனூப் மிஸ்ரா எழுதிய தலையங்கத்தில் இந்த உணவுமுறை தரும் நம்பிக்கைகள் மற்றும் ஆபத்துகளை சீர்துக்கி பார்க்கிறார்.

பல்வேறு சோதனைகள் மற்றும் ஆய்வுகள் இந்த உணவுமுறை உடல் எடை குறைதல், இன்சுலின் ஹார்மோனுக்கு உடல் எதிர்வினையாற்றும் விதம், ரத்த அழுத்தம் குறைதல் மற்றும் அழற்சிக்கு எதிரான பலன்கள் குறித்த சில ஆதாரங்களுடன் ரத்தத்தில் உள்ள கொழுப்பு (கொலஸ்ட்ரால்) மற்றும் ட்ரைகிளிசரைடுகளை (lipid profiles) மேம்படுத்தும் என பரிந்துரைப்பதாக அவர் கூறுகிறார்.

மேலும், கலோரிகள் எண்ணிக்கையை கணக்கில் கொள்ளாமல், கலாசார அல்லது மத ரீதியிலான விரத நடைமுறைகளுடன் எளிதாக பின்பற்றக்கூடிய இந்த உணவுமுறை ரத்த சர்க்கரையை கட்டுப்படுத்துவதிலும் உதவலாம்.

"எனினும், ஊட்டச்சத்துக் குறைபாடு, கொலஸ்ட்ரால் அதிகரிப்பது, பசி அதிகரிப்பது, எரிச்சலூட்டும் தன்மை, தலைவலி மற்றும் நீண்ட காலத்துக்குப் பின் உணவுமுறையை கடைபிடிப்பது குறைந்துபோதல் போன்றவை அதன் குறைகளாக இருக்கின்றன," என பேராசிரியர் அனூப் மிஸ்ரா கூறுகிறார்.

"நீரிழிவு நோய் உள்ளவர்கள், சரியான கண்காணிப்பு இல்லாமல் விரதத்தைக் கடைபிடித்தால் ரத்த சர்க்கரை அளவு குறையும் ஆபத்து உள்ளது; மேலும் சாப்பிடக்கூடிய நேரத்தில் நொறுக்குத் தின்பண்டங்களை உண்பதையும் ஊக்குவிக்கிறது. அதிக வயதானவர்கள் அல்லது நாள்பட்ட நோய்களை உடையவர்கள், நீண்ட காலத்துக்கு இந்த உணவுமுறையை கடைபிடிக்கும்போது பலவீனத்தையோ அல்லது தசையிழப்பையோ ஏற்படுத்தும்."

இப்படி, இத்தகைய உணவு முறை ஆய்வுக்கு உட்படுவது இது முதன்முறையல்ல.

ஜாமா இண்டர்னல் மெடிசின் இதழில் 2020ல் பிரசுரமான மூன்று மாத கால ஆய்வில் பங்கேற்றவர்களுக்கு இந்த உணவுமுறையின் மூலம் சிறிதளவு எடையே குறைந்துள்ளது, அதில் அதிகமான அளவு தசையிழப்பின் மூலம் நிகழ்ந்திருக்கலாம்.

மற்றொரு ஆய்வில், இந்த உணவு முறையால் பலவீனம், பசி, நீரிழப்பு, தலைவலி மற்றும் கவனச்சிதறல் போன்றவை ஏற்படும் என குறிப்பிடுகிறது.

புதிய ஆய்வில், பேராசிரியர் அனூப் மிஸ்ரா கூறுகையில், மற்றொரு புதிய எச்சரிக்கையையும் சேர்க்கிறார், சில குழுக்களிடையே இதய நோய்கள் அதிகரிப்பதற்கான சாத்தியக்கூறு அதிகரிப்பதாக அவர் கூறுகிறார்.

சமீபத்திய ஆய்வு முடிவுகளில் இருந்து அதன் விளைவுகளை எடுத்துக்கொள்ளுமாறு மருத்துவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு தான் அறிவுறுத்துவதாக பேராசிரியர் ஸோங் கூறுகிறார்.

இதய நோய் அல்லது நீரிழிவு நோய் உள்ளவர்கள் இத்தகைய எட்டு மணிநேரம் மட்டும் உணவு உண்ணுவது குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என அவர் கூறுகிறார். தனிநபர்கள் தங்களின் ஆரோக்கியத்தின் அடிப்படையில் தங்களுக்கான உணவுமுறை குறித்த அறிவுரை பெற வேண்டிய தேவை குறித்து இந்த ஆய்வு முடிவுகள் குறிக்கின்றன.

"தற்போது உள்ள ஆதாரங்களின் அடிப்படையில், மக்கள் எந்த நேரத்தில் சாப்பிடுகின்றனர் என்பதைவிட, என்ன சாப்பிடுகின்றனர் என்பதில் கவனம் செலுத்துவதே முக்கியமானதாக தெரிகிறது. குறைந்தபட்சம், இதய நலனை மேம்படுத்துதல் அல்லது ஆயுட்காலத்தை நீட்டிக்கும் நோக்கத்துடன் நீண்ட காலத்துக்கு எட்டு மணிநேர உணவுமுறையை கடைபிடிப்பதை யோசிக்க வேண்டாம்."

இப்போதைக்கு, முக்கியமான செய்தி என்னவென்றால் விரதத்தை ஒட்டுமொத்தமாக தவிர்ப்பது அல்ல, அது தனிப்பட்ட ஒருவரின் ஆபத்துகளுடன் இணைப்பது தொடர்பானது. ஆபத்துகளுக்கான ஆதாரங்கள் தெளிவாகும் வரை, நேரத்தைவிட, என்ன உண்கிறோம் என்பதில் கவனம் செலுத்துவது நல்லது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு