இலங்கைக்கு எதிராக சூப்பர் ஓவரில் வெற்றி: பாகிஸ்தானுக்கு எதிரான இறுதிப்போட்டி பற்றி சூர்யகுமார் கூறியது என்ன?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், தினேஷ் குமார்
- பதவி, பிபிசி தமிழுக்காக
ஆசிய கோப்பையில் துபையில் நடைபெற்ற சூப்பர் 4 சுற்றின் பரபரப்பான கடைசி ஆட்டத்தில், இந்திய அணி சூப்பர் ஓவரில் வெற்றிபெற்றது.
இந்தியா, பாகிஸ்தான் அணிகள் இறுதிச் சுற்றுக்கு முன்னேறிய நிலையில், ஒரு சம்பிரதாய ஆட்டமாகவே இது நடைபெற்றது. டாஸ் வென்ற இலங்கை கேப்டன் அசலங்கா, இந்தியாவை பேட் செய்ய பணித்தார். இலங்கை அணியில் கருணாரத்னே நீக்கப்பட்டு லியாநாகே சேர்க்கப்பட்டிருந்தார். இந்திய அணியில் பும்ரா, ஷிவம் துபே ஆகியோருக்கு ஓய்வளிக்கப்பட்டு, அர்ஷ்தீப் சிங், ஹர்ஷித் ராணா சேர்க்கப்பட்டனர்.
பேட்டிங்கிற்கு சாதகமான பிட்ச்சில், இன்னிங்ஸின் முதல் ஓவரை நுவான் துஷாரா நன்றாக ஸ்விங் செய்து வீசினார். முதல் ஓவரில் 8 ரன்கள் மட்டுமே கிடைத்த நிலையில், தீக்ஷனா வீசிய இரண்டாவது ஓவரில் அபிஷேக் சர்மா தனது அதிரடியை ஆரம்பித்தார். கில் 4 ரன்களில் தீக்ஷனா பந்தில் அவரிடமே கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்த நிலையில், ஃபார்மில் இல்லாத கேப்டன் சூர்யகுமார் யாதவ் மூன்றாவது விக்கெட்டுக்கு களமிறங்கினார்.
தீக்ஷனா ஓவரில் சிக்சர், பவுண்டரியை விளாசிய அபிஷேக், துஷாராவின் அடுத்த ஓவரில் தொடர்ச்சியாக இரு பவுண்டரிகள் அடித்து, ரசிகர்களை குதூகலப்படுத்தினார். சமீராவின் ஓவரில் இந்திய அணி 15 ரன்களை எடுக்க, பவர்பிளே முடிவில் இந்திய அணி, ஒரு விக்கெட் இழப்புக்கு 71 ரன்களை விளாசியது. 22 பந்துகளில் அரைசதம் கடந்த அபிஷேக் சர்மா, சர்வதேச டி20 கிரிக்கெட்டில் தொடர்ச்சியாக 7 முறை 30+ ரன்களை எடுத்து ரோஹித் சர்மாவின் சாதனையை சமன்செய்தார்.

பட மூலாதாரம், Getty Images
திலக் வர்மா அதிரடி
பவர்பிளேவுக்கு அடுத்த ஓவரிலேயே ஹசரங்கா பந்துவீச்சில் சூர்யகுமார் யாதவ் எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழந்தார். நான்காவது விக்கெட்டுக்கு களமிறங்கிய திலக் வர்மா, தொடக்கம் முதலே அடித்து விளையாடினார். அபாரமாக விளையாடிக் கொண்டிருந்த அபிஷேக் சர்மா (61), இலங்கை கேப்டன் அசலங்கா பந்துவீச்சில் டீப் மிட் விக்கெட்டில் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். பேட்டிங் வரிசையில் பரீட்சார்த்த முயற்சிகள் எதையும் முயற்சிக்காமல், கடந்த ஆட்டத்தில் பேட்டிங் வாய்ப்பு கிடைக்காத சாம்சன் களமிறக்கப்பட்டார்.
10 ஓவர்கள் முடிவில் இந்தியா 3 விக்கெட்டுகள் இழப்புக்கு சரியாக 100 ரன்கள் குவித்தது. ஹசரங்கா பந்துவீச்சில் 2 பிரமாண்ட சிக்சர்கள் அடித்த சாம்சன், 16–வது ஓவரில் ஷானகா வீசிய நோ பாலில் மேலும் ஒரு சிக்சரை எக்ஸ்ட்ரா கவர் திசையில் பறக்கவிட்டார். அதே திசையிலேயே, மீண்டும் ஒரு பெரிய ஷாட்டுக்கு முயன்று அசலாங்காவிடம் கேட்ச் ஆகி சாம்சன் (39) வெளியேறினார்.
அடுத்து களமிறங்கிய பாண்ட்யா விரைவில் வெளியேறினாலும், கடைசி ஓவர்களில் திலக் வர்மா–அக்சர் படேல் ஜோடி, இந்திய அணி 202 ரன்கள் குவிக்க உதவியது. நடப்பு ஆசிய தொடரில் ஒரு அணி 200 ரன்களுக்கு மேல் குவிப்பது இதுவே முதல்முறை. திலக் வர்மா 34 பந்துகளில் 49 ரன்களும் அக்சர் படேல் 15 பந்துகளில் 21 ரன்களும் எடுத்தனர். இலங்கை தரப்பில் பந்துவீசிய அனைவரும் 9 ரன்களுக்கு மேல் வாரி இறைத்தனர்.

பட மூலாதாரம், Getty Images
பாகிஸ்தானுக்கு பாடம் எடுத்த இலங்கை
203 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணிக்கு மோசமான தொடக்கமே கிடைத்தது. பாண்ட்யா வீசிய முதல் ஓவரிலேயே குசால் மெண்டிஸ் ரன் ஏதுமின்றி கில்லிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். இது தொடர்ச்சியாக அவருடைய இரண்டாவது 'கோல்டன் டக்' ஆகும்.
அர்ஷ்தீப் சிங் வீசிய இரண்டாவது ஓவரில் 11 ரன்கள் கிடைக்க, ராணாவின் ஓவரில் நிசாங்கா, பெரேரா இருவரும் தலா ஒரு பவுண்டரி அடித்தனர். அர்ஷ்தீப், ராணா ஓவர்களில் நிசாங்கா தொடர்ச்சியாக சிக்சர்களும் பவுண்டரிகளுமாக விளாச, ரன் ரேட் புயல் வேகத்தில் பறந்தது.
அக்சர் படேல் பந்துவீச்சில் பெரேரா, இரு பவுண்டரிகள் அடிக்க, இலங்கை அணி பவர்பிளே முடிவில் 72 ரன்களைக் குவித்தது. பைனல் வாய்ப்பை இழந்த இலங்கை அணி, எவ்வித நெருக்கடியும் இன்றி ஆட்டத்தை ரசித்து விளையாடியது. இந்திய பந்துவீச்சை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என பாகிஸ்தானுக்கு பாடம் எடுப்பது போல இருந்தது அவர்களுடைய பேட்டிங் அணுகுமுறை. வருண்–குல்தீப் பந்துவீச வந்த பிறகும் இலங்கை பேட்டர்களின் ருத்ரதாண்டவம் நின்றபாடில்லை.
குறிப்பாக குல்தீப் பந்துவீச்சை பெரேரா குறிவைத்து தாக்கினார். குல்தீப் வீசிய 9–வது ஓவரில் சிக்சரும் பவுண்டரியும் பறக்க, அந்த ஓவரில் மட்டும் 14 ரன்கள் கிடைத்தது. பவர்பிளேவுக்கு பிறகு கொஞ்சம் விவேகமாக விளையாடிய நிசாங்கா, வருண் பந்துவீச்சில் ஒரு அட்டகாசமான சிக்சர் அடிக்க, 10 ஓவர்கள் முடிவில் இலங்கை அணி, 114 ரன்கள் குவித்தது.

பட மூலாதாரம், Getty Images
நிசாங்கா 52 பந்துகளில் சதம்
ஹர்ஷித் ராணாவின் மூன்றாவது ஓவரில், இரு பவுண்டரிகள், சிக்சருடன் 16 ரன்களை நிசாங்கா–பெரேரா ஜோடி அடித்தது. 11–வது ஓவரை சிக்கனமாக வீசிய குல்தீப் யாதவ் 4 ரன்கள் மட்டுமே கொடுக்க, அந்த நெருக்கடியைப் பயன்படுத்தி அடுத்த ஓவரில் வருண் விக்கெட் எடுத்தார். அவுட்சைட் ஆஃப் ஸ்டம்ப் லைனில் வருண் வீசிய பந்தை இறங்கிவந்து பெரேரா அடிக்கப் பார்த்த நிலையில், பந்து பேட்டில் சிக்காமல் நேராக சாம்சன் கையில் சென்றதால், ஸ்டம்பிங் ஆகி 58 ரன்களில் வெளியேறினார்.
ஒருபுறம் விக்கெட் விழுந்த போதும் நிசாங்கா தனது அதிரடி பேட்டிங்கை மறுமுனையில் தொடர்ந்து கொண்டிருந்தார். அவருடைய பேட்டிங், இலங்கையின் கடந்தகால ஜாம்பவான் தொடக்க ஆட்டக்காரர்களை ஞாபகப்படுத்தியது. கடைசி 5 ஓவர்களில் 46 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், தனது கடைசி ஓவரை வீச வந்த குல்தீப் மாயாஜாலத்தை நிகழ்த்திக் காட்டினார்.
வேகத்தைக் குறைத்து பிளைட் செய்து வீசப்பட்ட பந்தில் சிக்சர் அடிக்க முயன்று, இலங்கை கேப்டன் அசலங்கா, லாங் ஆனில் கில்லிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். ஐந்தாவது விக்கெட்டுக்கு களமிறங்கிய கமிந்து மெண்டிஸ், அர்ஷ்தீப் சிங்கின் குறைவேக பந்தில் விக்கெட்டை பறிகொடுக்க, ஆட்டம் இந்தியாவின் பக்கம் திரும்புவது போல தெரிந்தது. அர்ஷ்தீப் பந்தில் ஒரு அபாரமான சிக்சரை விளாசிய நிசாங்கா, 52 பந்துகளில் சதத்தை எட்டினார்.

பட மூலாதாரம், Getty Images
பரபரப்பான கடைசி 3 ஓவர்கள்
கடைசி 3 ஓவர்களில் 33 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், அக்சர் படேலின் ஓவரில் ஷானகா அடித்த சிக்சர் உள்பட 10 ரன்கள் கிடைக்க, ஆட்டத்தில் விறுவிறுப்பு கூடியது. 12 பந்துகளில் 23 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், கடினமான 19–வது ஓவரை வீச வேண்டிய பொறுப்பு அர்ஷ்தீப் சிங்கிடம் ஒப்படைக்கப்பட்டது. தனது முழு டி20 அனுபவத்தையும் பயன்படுத்தி ஆஃப் சைடில் பெரும்பாலான பீல்டர்களை நிறுத்தி அர்ஷ்தீப் வீசிய அந்த ஓவரில் இலங்கைக்கு 11 ரன்கள் மட்டுமே கிடைத்தது.
கடைசி ஓவரில் 12 ரன்கள் தேவைப்பட, அனுபவம் குறைவான ராணா வீசினார். யாரும் எதிர்பார்க்காத வகையில் முதல் பந்திலேயே நிசங்காவின் விக்கெட்டை அவர் கைப்பற்ற, ஆட்டத்தில் பரபரப்பை தொற்றிக்கொண்டது.
அடுத்த இரு பந்துகளில் லியாநாகே ஸ்ட்ரைக்கில் இருக்க, 3 ரன்கள் மட்டுமே கிடைத்தது. நான்காவது பந்தில் ஷானகா 2 ரன்கள் ஓட, கடைசி 2 பந்துகளில் 7 ரன்கள் தேவைப்பட்டது. தவறான லைன் அண்ட் லெங்க்தில் ராணா வீசிய பந்தை ஷானகா தேர்ட் மேன் திசையில் பவுண்டரியாக மாற்ற, கடைசி பந்தில் 3 ரன்கள் தேவை என்ற பரபரப்பான கட்டத்துக்கு ஆட்டம் நகர்ந்தது. அனுபவ வீரரான ஷானகா ராணா வீசிய கடைசி பந்தை பதற்றமின்றி லாங் ஆன் திசையில் அடித்து இரு ரன்கள் ஓட ஆட்டம் டையில் முடிந்தது. இதனால், ஆட்டம் சூப்பர் ஓவருக்குச் சென்றது.
சூப்பர் ஓவரில் என்ன நடந்தது?

பட மூலாதாரம், Getty Images
சூப்பர் ஓவரில் பேட் பிடிக்க இலங்கை தரப்பில் பெரேரா, ஷானகா களமிறங்க அர்ஷ்தீப் சிங்கிடம் பந்தை ஒப்படைத்தார் சூர்யகுமார் யாதவ். அர்ஷ்தீப் முழு நீளத்தில் வீசிய முதல் பந்திலேயே பாயிண்ட் திசையில் கேட்ச் கொடுத்து பெரேரா ஆட்டமிழக்க, அடுத்த விக்கெட்டுக்கு கமிந்து மெண்டிஸ் களமிறங்கினார். டி20 அனுபவம் பெரிதாக இல்லாத அவர், சிங்கிள் அடித்து எதிர்முனைக்கு சென்றுவிட்டார். அடுத்த நான்கு பந்துகளையும் பிரமாதமான யார்க்கர் பந்துகளாக வீசி, தனது முழுத் திறமையையும் அர்ஷ்தீப் வெளிப்படுத்தினார்.
ஐந்தாவது பந்தில் விக்கெட் கீப்பர் கேட்ச்சுக்கு சாம்சன் முறையிட, அம்பயர் அவுட் கொடுத்தார். இடைப்பட்ட நேரத்தில் ஷானகா ரன் ஓட முயற்சிக்க, சாம்சன் ஸ்டம்புகளை தகர்த்தார். இதையடுத்து ஷானகா எடுத்த ரிவ்யூவில் பந்து பேட்டில் உரசாதது தெரியவர, அவுட் இல்லை என்பது தெரியவந்தது. அதேநேரம், விதி 20.1.1.3 இன் படி விக்கெட் விழுந்த அடுத்த நொடி பந்து dead பந்தாக மாறுவதால், அதற்கு பின் நடந்த ரன் அவுட்டை கணக்கில் எடுக்க முடியாது என அம்பயர் தீர்ப்பளித்தார்.
கடைசி பந்தில் ஷானகா ஆட்டமிழக்க, இந்திய அணிக்கு 3 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. தொடக்க வீரராக கில்லுடன் களமிறங்கிய சூர்யகுமார் யாதவ், முதல் பந்திலேயே 3 ரன்கள் ஓடி ஆட்டத்தை முடித்துவைத்தார். ஆட்ட நாயகனாக சதமடித்த நிசாங்கா தேர்வு செய்யப்பட்டார்.
4 மணி நேரத்துக்கு மேலாக நடைபெற்ற இந்த பரபரப்பான ஆட்டம் பைனலுக்கு முன்பாக இந்திய அணிக்கு ஒரு பயனுள்ள பயிற்சியாக மாறியது. ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் இறுதிப்போட்டியில் இந்தியா பாகிஸ்தான் அணியை எதிர்கொள்ள உள்ளது. நடப்பு தொடரில் ஏற்கனவே இருமுறை பாகிஸ்தான் அணியை தோற்கடித்துள்ளதால் இறுதிப்போட்டியிலும் அந்த வெற்றிநடையை தொடர்ந்து இந்தியா ஹாட்ரிக் வெற்றியுடன் கோப்பையை வெல்லும் என்று அதன் ரசிகர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.
பாகிஸ்தானுக்கு எதிரான இறுதிப்போட்டி பற்றி சூர்யகுமார் கூறியது என்ன?

பட மூலாதாரம், Getty Images
இலங்கைக்கு எதிரான போட்டியில் வென்ற பின்னர் பேசிய சூர்யகுமார், அந்த போட்டியை "இறுதிப் போட்டி போன்ற ஆட்டம்" என்று குறிப்பிட்டதாக ஏஎன்ஐ செய்தி கூறுகிறது.
இந்தப் போட்டி அணியில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக அவர் கூறினார்.
பாகிஸ்தானுக்கு எதிரான இறுதிப் போட்டி குறித்து கேட்கப்பட்ட போது, "இப்போது இறுதிப் போட்டியைப் பற்றி யோசிக்க வேண்டாம். எங்கள் வீரர்களில் பலருக்கு இன்று தசைப்பிடிப்பு ஏற்பட்டது. சனிக்கிழமை அதில் இருந்து மீண்டு வருவதற்கான நாளாக இருக்கும், இன்று போலவே இறுதிப்போட்டியிலும் நாங்கள் களமிறங்குவோம்" என்றார்.
"முதல் இன்னிங்சுக்குப் பிறகு, இரண்டாவது இன்னிங்சிலும் இளம் வீரர்கள் மிகுந்த தைரியத்தைக் காட்டினர். கடைசி பந்து வரை நாங்கள் நம்பிக்கையை கைவிடவில்லை. அணியிடம் தங்கள் ஆற்றலைத் தக்க வைத்துக் கொள்ளவும், இறுதியில் நாம் எந்த சூழ்நிலையில் இருக்கிறோம் என்பதைப் பார்க்கவும் சொன்னேன்" என்றார் சூர்யகுமார்.
"எனது வீரர்களிடமிருந்து நான் விரும்பியதெல்லாம் அவர்களின் திட்டங்களைச் செயல்படுத்துவதுதான். தெளிவாக இருங்கள், பயப்பட வேண்டாம். இது மிகவும் முக்கியமானது, எல்லோருக்கும் எதிர்பார்த்தது கிடைத்தது என்று நான் நம்புகிறேன். இறுதிப் போட்டியில் இருப்பதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்." என்று அவர் மேலும் கூறினார்.
துபையின் ஈரப்பதத்தால் பல வீரர்கள் பிரச்னைகளை எதிர்கொண்டுள்ளனர் என்றும் இந்திய கேப்டன் கூறினார்.
இலங்கைக்கு எதிராக அபிஷேக் சர்மாவும் சஞ்சுவும் அற்புதமாக பேட்டிங் செய்ததாக சூர்யகுமார் பாராட்டினார்.
அர்ஷ்தீப் சிங்கின் பந்துவீச்சு குறித்து சூர்யகுமார் கூறுகையில், "கடந்த 2-3 ஆண்டுகளில் அர்ஷ்தீப் எங்களுக்கு சிறப்பாக செயல்பட்டார். அவரது திட்டமிடலை நம்பி அதை செயல்படுத்த முயற்சிக்குமாறு நான் அவரிடம் சொன்னேன்." என்றார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு












