You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
தனிநபர் நிதி: திடீரென வேலை போய்விட்டால் எப்படி சமாளிப்பது? - 10 நிதி ஆலோசனைகள்
- எழுதியவர், நாகேந்திர சாய் குந்தவரம்
- பதவி, பிபிசிக்காக வணிக ஆய்வாளர்
ஹைதராபாத்தை சேர்ந்த கணேஷ், முன்னணி ஐடி நிறுவனத்தில் ஊழியராகப் பணிபுரிந்தார். அவர் சுமார் 15 ஆண்டுகள் ஒரே நிறுவனத்தில் பணியாற்றி மேலாளர் நிலைக்கு உயர்ந்தார். சம்பளம் உயர்ந்து, ஆண்டுக்கு ரூ.30 லட்சம் என்ற நிலையை எட்டினார்.
திருமணம், குழந்தைகள், படிப்பு, வாழ்க்கை முறை போன்றவற்றில் மாற்றங்கள் ஏற்பட்டன. நகரின் புறநகர் பகுதியில் ஒரு வில்லா (பங்களா), ஒரு கார், ஒரு வீட்டு மனை என வாங்கிக் குவித்தார். இவை அனைத்திற்கும் ஆகும் செலவுகள், இஎம்ஐகள் மாதத்திற்கு ரூ.2 லட்சம் வரை ஆனது.
எல்லாம் சுமூகமாகச் செல்வதாக நினைத்த கணேஷுக்கு, அவர் வேலை பார்க்கும் ஐடி நிறுவனத்திடம் இருந்து சமீபத்தில் அதிர்ச்சிகரமான செய்தி ஒன்று வந்தது.
அலுவலகத்தில் பணியாட்களின் எண்ணிக்கையைக் குறைக்க விரும்புவதால், அவர் தனது வேலையை ராஜினாமா செய்ய வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டார். இந்த திடீர் அதிர்ச்சியில் இருந்து அவர் மீள்வதற்கும் இதைத் தனது குடும்பத்தாரிடம் கூறுவதற்கும் வெகுகாலம் ஆனது.
கணேஷ் மட்டுமல்ல, தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் பலர் சமீப காலமாக இதுபோன்ற பிரச்னைகளைச் சந்தித்து வருகின்றனர்.
வேலையை இழந்த விஷயத்தை வெளியே சொல்லும் தைரியம் இல்லாமல் சிலர் புதிய வேலைகளைத் தேடுகிறார்கள்.
ஊழியர்கள் இடையே நிலவும் `பிங்க் ஸ்லிப்’ பயம்
கோவிட் பேரிடருக்குப் பிறகு ஐடி துறை ஏற்ற இறக்கங்களைச் சந்தித்தது.
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் வளர்ச்சி, பொருளாதார மந்தநிலை ஆகிய காரணங்கள் ஐடி நிறுவனங்கள் செலவைக் குறைக்கத் தொடங்கின.
ஐபிஎம், சிஸ்கோ, மைக்ரோசாஃப்ட், கூகுள், ஆப்பிள் போன்ற முக்கிய நிறுவனங்கள்கூட ஏராளமான ஊழியர்களுக்கு `பிங்க் ஸ்லிப்’ (pink slip) வழங்கியுள்ளன. இது வேலையிலிருந்து பணிநீக்கம் செய்யப்பட்டதற்கான அறிவிப்பைக் குறிக்கும் வார்த்தை.
இந்த ஆண்டின் இரண்டாம் பாதியில் சுமார் ஒரு லட்சம் பேர் வேலை இழப்பார்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது. 2023ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், இந்த முறை ஐடி நிறுவனங்கள் சுமார் 15 சதவீதம் கூடுதல் பணிநீக்கங்களைச் செய்துள்ளன.
`layoffs.fyi’ தரவுகளின்படி, உலகெங்கிலும் உள்ள சுமார் 1,150 தொழில்நுட்ப நிறுவனங்கள் இந்த ஆண்டு இதுவரை 2.6 லட்சம் ஊழியர்களைப் பணிநீக்கம் செய்துள்ளன. அதிகாரப்பூர்வமாக, இந்த எண்ணிக்கை இன்னும் அதிகமாக இருக்கலாம்.
குறைந்த சம்பளத்தில் புதிய ஊழியர்கள்
முன்னணி நிறுவனங்கள் தங்கள் பணியாளர்களின் எண்ணிக்கையை குறைப்பதால், தகவல் தொழில்நுட்பத் துறை வீழ்ச்சி அடைந்துள்ளது என்று அர்த்தமல்ல.
`சர்வைவல் ஆஃப் தி ஃபிட்டஸ்ட்’ (வலியது தான் பிழைக்கும்) கொள்கையின்படி, திறன் பெற்ற, ஒரே நேரத்தில் பல வேலைகளை செய்யும் ஊழியர்கள் மட்டுமே இத்துறையில் நிலைத்திருக்க முடியும்.
மூத்த ஊழியர்களை பணிநீக்கம் செய்து அவர்களின் சம்பளத்தில் 5-10 சதவீதத்தை மட்டுமே ஊதியமாகப் பெறும் ஜூனியர்களிடம் நிறுவனங்கள் அதிக ஆர்வம் காட்டுகின்றன.
தொழில்துறை கணக்கீடுகள்படி, இந்த ஆண்டு சுமார் ஒன்றரை லட்சம் புதிய ஊழியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். தொழில்துறையின் போக்கு நிச்சயமற்றது. எனவே, எல்லா நேரங்களிலும் நம்மை நிதிரீதியாகத் தயாராக வைத்திருப்பது அவசியம்.
இதற்கு நிதித் திட்டமிடல் மிகவும் முக்கியம். உங்கள் நிதித் திட்டமிடலில் 10 அம்சங்கள் முக்கியமாக இடம்பெற வேண்டும். அவை குறித்து இனி பார்ப்போம்.
1. அவசர நிதி
இதுவே தனிநபர் நிதியின் முதல் கொள்கை. எதிர்பாராமல் ஏதேனும் அசம்பாவிதம் ஏற்பட்டால் நம்மையும் நம் குடும்பத்தையும் கவனித்துக் கொள்ள இந்த நிதி மிகவும் உதவியாக இருக்கும்.
நம் குடும்பத்திற்கான நிதியானது சம்பளத்தை மட்டுமே அடிப்படையாகக் கொண்டிருந்தால், குறைந்தபட்சம் 6 மாத சம்பளத்திற்குப் போதுமான பணம் கையிருப்பாக இருக்க வேண்டும்.
அதாவது உங்கள் சம்பளம் ரூ.50 ஆயிரம் என்றால், குறைந்தபட்சம் ரூ.3 லட்சத்தை அவசர நிதியாக வைத்திருக்க வேண்டும்.
திடீர் வேலை இழப்பு, ஏதேனும் விபத்தில் கடுமையான காயங்கள், தீவிர நோய் போன்ற நேரங்களில் இது பயனுள்ளதாக இருக்கும்.
இது முடியாவிட்டால் குறைந்தபட்சம் மாதாந்திர இஎம்ஐகள், வீட்டுச் செலவுகள், வாடகை மற்றும் பள்ளிக் கட்டணம் ஆகியவற்றைக் கையிருப்பாக வைத்துக் கொள்ளாவிட்டால் நீங்கள் சிக்கலான சூழலுக்குத் தள்ளப்படுவீர்கள்.
ஆனால் இந்த அவசரகால நிதியை பங்குகள் மற்றும் ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்யாமல், வங்கியில் ஃபிக்ஸட் டெபாசிட் (fixed deposits), லிக்விட் ஃபண்ட் (liquid funds), கோல்டு ETF-கள் (gold ETF) போன்றவற்றில் முதலீடு செய்யத் திட்டமிடுங்கள். உங்களுக்குத் தேவைப்படும்போது உடனடியாக அதைத் திரும்பப் பெறலாம்.
2. முதலில் சேமிக்க வேண்டும்
நம்மிடம் ஓய்வூதிய நிதி, பணப்புழக்கம், சேமிப்பு ஆகியவை இருக்க வேண்டும். அதற்கேற்றவாறு நாம் நிதித் திட்டமிடல் செய்வது முக்கியம்.
வாரன் பஃபெட் போன்ற பிரபலங்களும் தங்கள் ஊழியர்களுக்குச் சொல்லும் கொள்கை, முதலில் சேமிப்பைத் தொடங்குங்கள் என்பதுதான்.
பொதுவாகக் கிடைக்கும் சம்பளத்தில் இருந்து செலவுகள் எல்லாம் போன பிறகு மீதித் தொகையைச் சேமிக்க நினைப்போம். ஆனால் இது சாத்தியமில்லை. ஒருவேளை, சம்பளத்தில் குறைந்தபட்சம் 20 சதவீத பகுதியையாவது எதிர்காலத்திற்கு எனச் சேமிக்க முடியாவிட்டால் அவசரக் காலத்தில் நிலைமை சிக்கலாகிவிடும்.
உங்கள் சம்பளம் மாதம் ரூ.50 ஆயிரம் என்றால், மாதம் ரூ.10 ஆயிரமாவது சேமிக்க முயற்சி செய்யுங்கள். இது உங்கள் திருமணம், குழந்தைகளின் கல்வி, வீட்டிற்கான முன்பணம், ஓய்வூதிய நிதி போன்ற நிதித் தேவைக்குக் கைகொடுக்கும்.
நமது சம்பளத்தில் 50 சதவீதம் அத்தியாவசிய தேவைகளுக்கும் (வீட்டு இ.எம்.ஐ, வீட்டுச் செலவுகள், குழந்தைகளின் கல்வி போன்றவை), 30 சதவீதம் ஆடம்பரங்களுக்கும் (திரைப்படங்கள், பயணம், விடுமுறைகள், புதிய பொருட்களை வாங்குதல் போன்றவை) மற்றும் மீதமுள்ள 20 சதவீதம் எதிர்காலத்திற்காகவும் சேமிக்கப்பட வேண்டும்.
3. கடனை குறைக்க வேண்டும்
கிரெடிட் கார்டு கடன்கள், தனிநபர் கடன்கள், செயலிகள் அடிப்படையிலான எளிதான கடன்கள் ஆகியவற்றில் இருந்து விலகி இருங்கள். உண்மையிலேயே கடனுக்கான தேவை உள்ளதா என்பதைத் தெளிவுபடுத்திக் கொள்ளுங்கள்.
மிகவும் அவசியமான தேவை இருந்தால் மட்டுமே வங்கிக் கடன் பற்றி யோசிக்க வேண்டும். மற்றபடி அதிக வட்டிக்கு கடன் வாங்க வேண்டாம். வெளி சந்தையில் இரண்டு அல்லது மூன்று ரூபாய் வட்டி விகிதத்தில் கடன் வாங்க வேண்டாம்.
தனியார் வங்கிகளில் வட்டி அதிகம் என நீங்கள் நினைத்தால், அரசு வங்கிகளிலோ அல்லது கூட்டுறவு வங்கிகளிலோ நகைக் கடன் வாங்குங்கள். இதற்கு, மாதாந்திர இஎம்ஐ செலுத்தாமல், வட்டி மட்டும் செலுத்தினால் போதும்.
உங்கள் நிதி நெருக்கடிச் சூழல் சரி ஆனதும், கடனைத் திருப்பிச் செலுத்தி நகையைப் பெறுங்கள். கிரெடிட் கார்டு பணப் பரிமாற்றத்தைப் பொறுத்தவரை, குறைந்தபட்ச கட்டணம் மற்றும் இ.எம்.ஐ. மூலம் கட்டும் வசதிகளை மிகக் கவனமாகக் கையாள வேண்டும். இயன்றவரை அவற்றைத் தவிர்ப்பதே நல்லது.
4. இ.எம்.ஐ தொகை 30 சதவீதத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும்
உங்களுக்கு வீடு அல்லது கார் கடன் வழங்கும்போது வங்கிகள் கவனிக்கும் முதன்மையான விஷயம் இதுதான். ரூ.50 ஆயிரம் சம்பளமாக வாங்கும்போது, அதில் இ.எம்.ஐ. தொகை ரூ.15 ஆயிரத்திற்கு மிகாமல் பார்த்துக்கொள்வது நல்லது.
வீட்டுக்கடன், வாகனக் கடன், தனிநபர் கடன் என எத்தனை கடன் இருந்தாலும், இ.எம்.ஐ கட்டுவது மாதச் சம்பளத்தில் 30 சதவீதத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும் என்பது அடிப்படைக் கொள்கை.
உங்கள் வழக்கமான வீட்டுத் தேவைகள், சேமிப்புகள் மற்றும் எதிர்பாரா செலவுகளுக்காக மீதமுள்ள பணத்தைத் திட்டமிடுங்கள்.
5. பணவீக்க சேமிப்பு
இந்தியாவின் தற்போதைய பணவீக்க விகிதம் நான்கு சதவீதம் வரை உள்ளது. ஆனால் உணவுப் பணவீக்கம், கல்விப் பணவீக்கம், சுகாதாரப் பணவீக்கம் 10 சதவீதத்திற்கும் அதிகமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
அதனால்தான் நாம் சேமிக்கும் பணம், இந்தப் பண வீக்கத்தை வெல்லும் வருமானத்தைக் கொடுக்க வேண்டும். அதுதான் உண்மையான வட்டி விகிதம்.
தற்போது வங்கிகள் 8 சதவீத வட்டி தருகின்றன என்று வைத்துக் கொள்வோம். 4 சதவீத பணவீக்கத்தைக் கழித்தால், நமக்குக் கிடைக்கும் உண்மையான வட்டி 4 சதவீதம் மட்டுமே.
அதனால்தான் பங்குச் சந்தைகளை போர்ட்ஃபோலியோவில் (தனிநபரின் நிதி சொத்துகள் அல்லது முதலீடுகளின் தொகுப்பு) சேர்க்க வேண்டும்.
6. பங்குகள், பரஸ்பர நிதிகள், தங்கம் ஆகியவற்றில் கவனம் செலுத்துங்கள்
நிலையான வைப்புத் தொகைளில் அதிகபட்ச வருமானம் குறைவாக இருக்கும். அதனால்தான் நீண்ட காலத்திற்கு நமது நிதித் திட்டமிடலில் பங்கு நிதிகளை (equities) கண்டிப்பாகச் சேர்க்க வேண்டும்.
உங்களுக்கு 40 வயது என்று வைத்துக்கொள்வோம். 100 மைனஸ் 40 என்பது 60. நீங்கள் முதலீடு செய்யும் ரூ.100ல், ரூ.60ஐ பங்குகளில் முதலீடு செய்யலாம்.
ஈக்விட்டியில், முதலீட்டிற்காக மட்டுமே பரஸ்பர நிதிகள் மற்றும் பங்குகள் வாங்கப்பட வேண்டும். டிரேடிங் பற்றித் தெரியாமல் அதில் இறங்க வேண்டாம். அதேபோல், தங்கத்தில் முதலீடு செய்யலாம். உங்கள் முதலீட்டில் குறைந்தது 5 முதல் 10 சதவீதத்தை தங்கத்தில் முதலீடு செய்ய ஒதுக்குங்கள்.
7. வரி திட்டமிடல்
வருமான வரியைக் குறைக்கும் நோக்கில் தேவையில்லாமல் முதலீடு செய்யாதீர்கள். வரி திட்டமிடல் என்பது ஒட்டுமொத்த நிதித் திட்டத்தின் ஒரு பகுதி மட்டுமே.
வரி குறைப்புக்காக, 5 முதல் 10 வருட காலத்தை உள்ளடக்கிய (ELSS, Tax Saving Bonds, NPS, Ulips) திட்டங்களில் முதலீடு செய்யாதீர்கள். அதிகபட்ச வரி அடுக்குகளுக்கு (Tax slabs) அருகில் இருக்கும்போது இன்னும் சரியான திட்டமிடல் தேவை.
8. உங்களில் முதலீடு செய்யுங்கள்
தொழில் தரநிலைகளுக்கு ஏற்ப நம்மை மேம்படுத்த நாம் எப்போதும் தயாராக இருக்க வேண்டும். இதற்காக, புதிய படிப்புகளில் சேரவும், புதிய பாடங்களைக் கற்றுக்கொள்ளவும், தேவைப்பட்டால் மொழியை வளர்க்கவும் தயங்க வேண்டாம்.
இதற்கிடையில், பல்வேறு பல்கலைக்கழகங்கள் ஆன்லைன் படிப்புகளை வழங்குகின்றன. வேறு தொழில், வேலை அல்லது வணிகத்தில் நுழையத் திட்டம் இருந்தால், தேவையான பாடத்தைக் கற்றுக்கொள்ளுங்கள். தொழிலில் வரும் மாற்றங்களை முன்கூட்டியே அறிந்து கவனமாக இருக்க வேண்டும்.
9. ஆயுள் காப்பீடு, மருத்துவக் காப்பீடு அவசியம்
சேமிப்பு, முதலீடு என எவ்வளவு திட்டமிட்டாலும், முதலில் ஆயுள் காப்பீடு மற்றும் மருத்துவக் காப்பீடு எடுக்க வேண்டியது அவசியம்.
நீங்கள் பணிபுரியும் நிறுவனம் சுகாதாரக் காப்பீட்டை வழங்கும். இது பொருந்துகிறதா எனச் சரிபார்த்து, தேவைப்பட்டால் அதை மேம்படுத்திக் கொள்ளலாம்.
மேலும் ஆயுள் காப்பீடு மிகவும் முக்கியமானது. எனவே குறைந்த செலவில் கிடைக்கும் ஆயுள் காப்பீட்டு திட்டத்தைத் தேர்வு செய்யவும். உங்கள் ஆண்டு சம்பளத்தில் பத்து மடங்குக்கு குறையாமல் காப்பீடு செய்யுங்கள். அதாவது உங்களின் ஆண்டு சம்பளம் ரூ.6 லட்சமாக இருந்தால், குறைந்தபட்சம் ரூ.60 லட்சம் மதிப்பில் ஆயுள் காப்பீடு எடுத்துக் கொள்ளுங்கள்.
10. சலுகைகளைப் பார்த்து மயங்க வேண்டாம்
தசரா, தீபாவளி, கிறிஸ்மஸ், புத்தாண்டு... இவை சலுகைகளின் காலம்.
உங்களுக்குத் தேவைப்பட்டாலும் இல்லாவிட்டாலும், உங்கள் மொபைலை திறந்தவுடனேயே ஆஃபர்கள் உங்களை வாங்கத் தூண்டும். அவற்றை வாங்க அவசரப்பட வேண்டாம். நீங்கள் ஏதாவது வாங்க விரும்பினால், அதை தேவைதானா என்பதைச் சிந்திக்க 24 மணிநேரம் எடுத்துக் கொள்ளுங்கள். அப்படியிருந்தும், இது முற்றிலும் தேவை என்று நீங்கள் உணர்ந்தால் மட்டுமே அதை வாங்க வேண்டும்.
பெரும்பாலான நிறுவனங்களில் போனஸ் கொடுக்கும் நேரம் இது. அந்தப் பணத்தில் குறைந்தது 60 சதவீதத்தை முதலீடுகளுக்குப் பயன்படுத்தத் திட்டமிடுங்கள். மீதமுள்ள தொகையை உங்கள் பொழுதுபோக்கு மற்றும் தேவைகளுக்குப் பயன்படுத்தப்படலாம்.
இப்படித் திட்டமிடுவதன் மூலம் எந்த நிச்சயமற்ற நிலையில் இருந்தும் விடுபட்டு விரைவாக மீண்டுவர வாய்ப்புள்ளது. நீங்கள் கடனில் சிக்கி, எதிர்காலம் என்னவென்று தெரியாமல் வேலையும் சிக்கலில் இருந்தால், பிரச்னை இன்னும் மோசமாகிவிடும்.
கடினமான காலங்களில் உங்களைத் தாங்குவது உங்கள் நிதித் திட்டமிடல்தான். உங்கள் சம்பளத்திற்கு ஏற்ப உங்கள் செலவுகளைக் கச்சிதமாகத் திட்டமிட்டால், `பிங்க் ஸ்லிப்’ போன்ற பயம் உங்களை ஆட்டிப் படைத்தாலும் கொஞ்சம் தைரியமாக இருக்கலாம்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)