You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
'கூகுள் டீப் மைண்ட்' இணை நிறுவனருக்கு வேதியியல் நோபல் பரிசு - எதற்காக?
- எழுதியவர், ஜார்ஜீனா ரன்னார்டு
- பதவி, அறிவியல் நிருபர்
இந்த வருடம் வேதியியலுக்கான நோபல் பரிசு, அமெரிக்காவைச் சேர்ந்த டேவிட் பேக்கர், ஜான் ஜம்பர், மற்றும் பிரிட்டனை சேர்ந்த டெமிஸ் ஹசாபிஸ் ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டிருக்கிறது.
புரதங்கள் பற்றிய ஆராய்ச்சிக்காக இந்தப் பரிசு அவர்களுக்கு அறிவிக்கப்பட்டிருக்கிறது.
டெமிஸ் ஹசாபிஸ், செயற்கை நுண்ணறிவு ஆராய்ச்சி நிறுவனவனமான ‘கூகுள் டீப் மைண்ட்’-இன் இணை நிறுவனராவார்.
புரதங்கள் என்பன மனித உடல் வளர்ச்சிக்கு மிகவும் முக்கியமானவையாகும். அவை உடலில் உள்ள ஒவ்வொரு உயிரணுக்களிலும் காணப்படுகின்றன.
புரதங்களை நன்கு புரிந்துகொள்வது மருத்துவத்தில் பெரும் முன்னேற்றங்களை உருவாக்கியுள்ளது.
அமெரிக்காவைச் சேர்ந்த பேராசிரியரான டேவிட் பேக்கர் அமினோ அமிலங்களைப் பயன்படுத்தி புதிய வகை புரதத்தை வடிவமைத்துள்ளார். இந்த முறை மருந்துகள், தடுப்பூசிகள் மற்றும் பல அறிவியல் தயாரிப்புகளில் பயன்படுத்தப்படும் புதிய புரதங்களை உருவாக்க வழிவகுத்துள்ளது.
வேதியியல் துறையில் 'முழுமையான புரட்சி'
"இந்த பரிசு பெற்றது மிகவும் மகிழ்ச்சியாகவும், மிகவும் கௌரவமாகவும்" இருப்பதாக வாஷிங்டன் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணிபுரியும் டேவிட் பேக்கர் கூறினார்.
லண்டன் பல்கலைகழகத்தில் பேராசிரியராக உள்ள ஜான் ஜம்பர் மற்றும் டெமிஸ் ஹசாபிஸ் ஆகியோர் இணைந்து செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி, ஏற்கனவே அறிந்த புரதங்களின் வடிவமைப்புகளை கணித்து, 'ஆல்பாஃபோல்ட்2' என்ற கருவியை உருவாக்கினர்.
இந்த கருவி வேதியியல் துறையில் 'முழுமையான புரட்சி' செய்ததாகத் தேர்வு குழு குறிப்பிட்டது. இது தற்போது உலகம் முழுவதும் 20 கோடி புரதங்களை ஆராய பயன்படுத்தப்படுகிறது.
ஸ்வீடனின் ஸ்டாக்ஹோமில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் ராயல் ஸ்வீடிஷ் அகாடமி ஆஃப் சயின்சஸ் புதன்கிழமை (அக்டோபர் 9) அன்று இந்த அறிவிப்பை வெளியிட்டது.
வெற்றியாளர்கள் 1.1 கோடி ஸ்வீடிஷ் க்ரோனர், இந்திய மதிப்பில் சுமார் 9 கோடி ரூபாய் பரிசுத் தொகையை சமமாகப் பகிர்ந்து கொள்வார்கள்.
யார் இந்த டெமிஸ் ஹசாபிஸ்?
பேராசிரியர் ஹசாபிஸ், லண்டனில், கிரேக்கஂ மற்றும் சிங்கப்பூரைச் சேர்ந்த தனது பெற்றோருடன் வளர்ந்தார்.
சிறுவயதிலேயே அவர் சதுரங்கத்தில் நட்சத்திர ஆட்டக்காரராக இருந்தார். 13 வயதில் ‘மாஸ்டர்’ தரநிலையை அடைந்தார்.
கணினி அறிவியலில் பட்டம் பெறுவதற்கு முன்னும் பின்னும், அவர் கணினி வீடியோ கேம் வடிவமைப்பில் பணியாற்றினார், அதற்காகப் பல விருதுகளை வென்றார்.
பின்னர், லண்டன் பல்கலைக்கழக கல்லூரியில் முனைவர் பட்டத்தை முடித்து, பல அமெரிக்கப் பல்கலைக்கழகங்களில் பணிபுரிந்தார்.
2010-இல் அவர் இணைந்து நிறுவிய இயந்திர கற்றல் நிறுவனமான ‘DeepMind’-ஐ 2014-இல் கூகுள் வாங்கப்பட்டது.
இது, பல்வேறு சிக்கல்களைத் தீர்க்கப் பயன்படுத்தக்கூடிய சக்திவாய்ந்த வழிமுறைகளை உருவாக்க, இயந்திரக் கற்றல் தொழில்நுட்பத்துடன் நரம்பியல் அறிவியலைப் பயன்படுத்துகிறது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)