சுபாஷ் சந்திர போஸை சிறையில் தாக்கிய பிரிட்டிஷ் ஐஜியை சுட்டுக்கொன்ற மூன்று இந்தியர்களின் தியாக வரலாறு

பட மூலாதாரம், RUPA
- எழுதியவர், ரெஹான் ஃபசல்
- பதவி, பிபிசி செய்தியாளர்
லெப்டினன்ட் கர்னல் நார்மன் சிம்சன் 1940களில் வங்காளத்தின் ஐஜியாக (சிறை) இருந்தார். சிறையில் அடைக்கப்பட்ட சுதந்திரப் போராட்ட வீரர்களை சித்திரவதை செய்வதில் அவர் பெயர் பெற்றவர்.
நார்மனின் மேற்பார்வையில் கொடிய குற்றவாளிகள் சுதந்திரப் போராட்ட வீரர்களைத் தாக்குவது வழக்கம். ஒருமுறை நார்மனின் உத்தரவின் பேரில் சிறையில் இருந்த சுபாஷ் சந்திரபோஸை கைதிகள் குழு ஒன்று தாக்கியது. அன்று சுபாஷ் சந்திர போஸின் தோழர்கள் தேசப்பிரிய ஜதீந்திர மோகன், கிரண் சங்கர் ராய், சத்ய குப்தா போன்றோரும் தாக்கப்பட்டனர்.
இதற்குப் பிறகு பெங்கால் தன்னார்வலர்கள் குழு தனது இரு தொண்டர்களான தினேஷ் சந்திர குப்தா மற்றும் சுதீர் பாதல் குப்தா ஆகியோரை கல்கத்தாவுக்கு அழைத்தது. பினோய் கிருஷ்ண பாசு ஏற்கனவே கல்கத்தாவில் இருந்தார்.
பிரிட்டிஷ் அரசு நினைத்துக்கூடப் பார்க்காத ஒரு துணிச்சலான பணியைச் செய்யும் பொறுப்பு இந்த மூவருக்கும் வழங்கப்பட்டது.
ஐஜி சிம்சனுக்கு இனி உயிர்வாழத்தகுதி இல்லை, அவர் இந்த உலகத்தை விட்டுச்செல்லவேண்டிய நேரம் வந்துவிட்டது என்று மூவரிடமும் கூறப்பட்டது.
இதற்குப் பிறகு அவரை எங்கே, எப்படிக் கொல்வது என்ற கேள்வி எழுந்தது. பிரிட்டிஷ் நிர்வாகத்தின் அடித்தளத்தை ஆட்டம்காண வைக்கும் வகையில் அவரைக் கொல்ல வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது. வங்காளத்தில் பிரிட்டிஷ் நிர்வாகத்தின் கோட்டையான ரைட்டர்ஸ் பில்டிங்கில் உள்ள அவரது அலுவலகத்தில் சிம்சன் பகிரங்கமாக சுட்டுக்கொல்லப்பட வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது.

பட மூலாதாரம், Getty Images
சுபாஷ் சந்திரபோஸ் உருவாக்கிய ’பெங்கால் தன்னார்வலர்கள் குழு’
1928 காங்கிரஸ் அமர்வின் போது சுபாஷ் சந்திர போஸால் பெங்கால் தன்னார்வலர்கள் குழு நிறுவப்பட்டது. தியாக உணர்வும் தேசபக்தியும் நிரம்பியவர்களின் ஒரு அமைப்பை அவர் உருவாக்கினார்.
பெங்கால் தன்னார்வலர் குழு உறுப்பினர்கள் சீருடையில் பார்க் சர்க்கஸில் தினமும் அணிவகுத்துச் செல்வார்கள். மேஜர் சத்ய குப்தா இதில் ஈடுபட்டவர்களுக்கு சண்டைப் பயிற்சி அளித்து வந்தார்.
வங்காளத்தின் பல்வேறு சிறைகளில் காவல் துறையின் அட்டூழியத்திற்கு எதிராக கிளர்ச்சி செய்ய 1930இல் 'ஆபரேஷன் ஃப்ரீடம்' என்ற இயக்கத்தை அவர் தொடங்கினார்.
சிம்சனைக் கொல்லும் திட்டம் வெற்றியடைந்தாலும் அல்லது தோல்வியடைந்தாலும், அங்கிருந்து அவர்கள் உயிருடன் தப்பிச்செல்வதற்கான வாய்ப்பு மிகவும் குறைவு என்பதும் ஒரு தெளிவான விஷயமாக இருந்தது. இருந்த போதிலும், இந்த பெரிய பணிக்கு தாங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டதில் இந்த மூன்று இளைஞர்களும் மகிழ்ச்சி அடைந்தனர். இந்த பணி பற்றி ஒரு சிலருக்கு மட்டுமே தெரியும்.
முன்னதாக டாக்காவின் பிரபல ஐஜி லாசனை டாக்காவில் உள்ள மருத்துவக் கல்லூரியில் வைத்து பினோய் கிருஷ்ண பாசு ஏற்கனவே சுட்டுக் கொன்றிருந்தார். எல்லா இடங்களிலும் போலீஸ் கண்காணிப்பு இருந்த போதிலும் அவர் வெற்றிகரமாக டாக்காவில் இருந்து கொல்கத்தா சென்றடைந்தார்.

பட மூலாதாரம், WB GOVT
பினாய்-பாதல்-தினேஷ் யார்?
பினாய் கிருஷ்ண பாசு 1908 ஆம் ஆண்டு செப்டம்பர் 11 ஆம் தேதி வங்கதேசத்தில் உள்ள முன்ஷிகஞ்ச் மாவட்டத்தில் பிறந்தார். 22 வயதிலேயே நாட்டிற்காக வாழ வேண்டும் என்று அவர் முடிவு செய்தார்.
தினேஷ் குப்தாவும் முன்ஷிகஞ்ச் மாவட்டத்தில் பிறந்தவர். பாதல் குப்தாவுடன், அவர்கள் இருவரும் பெங்கால் தன்னார்வலர்கள் குழுவின் உறுப்பினர்களாகவும் இருந்தனர். தனது சித்தப்பாக்கள் தர்னிநாத் குப்தா மற்றும் நாகேந்திரநாத் குப்தா ஆகியோரின் வாழ்க்கையின் தாக்கத்தால் புரட்சிகர நடவடிக்கைகளில் பங்கேற்க இவர்கள் முடிவு செய்தனர்.
இவர்கள் இருவரும் அலிப்பூர் சதி வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு அரவிந்த கோஷுடன் பல நாட்கள் சிறையில் இருந்தனர். சிம்சனைக் கொல்லும் பணிக்காக இந்த மூன்று இளைஞர்களுக்கும் மேற்கத்திய பாணியிலான சூட் தைக்கப்பட்டது. அவர்களுக்காக ரிவால்வர்கள் மற்றும் தோட்டாக்களும் ஏற்பாடு செய்யப்பட்டன.
பினாய், வலியுல்லா லேனில் இருந்து மத்தியபூர்ஸில் உள்ள ராஜேந்திரநாத் குஹாவின் வீட்டிற்கு அழைத்துச் செல்லப்பட்டார். பாதலும், தினேஷும் நியூ பார்க் தெருவில் உள்ள ரகசிய மறைவிடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
டிசம்பர் 8 ஆம் தேதி சிம்சனைக் கொல்லத் தேதி நிர்ணயிக்கப்பட்டது. மேலும் மூவரும் கிதிர்பூரில் உள்ள பைப் ரோடில் சந்திக்கும் திட்டம் உருவாக்கப்பட்டது.

பட மூலாதாரம், RUPA
கோட் அணிந்து ரைட்டர்ஸ் கட்டிடத்தை அடைந்தனர்
1930 டிசம்பர் 8 ஆம் தேதி இந்த மூவரும் கடைசி முறையாக தங்கள் கோட் பாக்கெட்டுகளில் தங்கள் கைகளை செலுத்தி பாக்கெட்டுகளை சரிபார்த்தனர். அங்கு ரிவால்வர்களும் தோட்டாக்களும் இருந்தன. பாதல் தனது பாக்கெட்டில் பொட்டாசியம் சயனைடு காப்ஸ்யூலையும் வைத்திருந்தார்.
கடிகாரம் 12 மணியை காட்டியபோது இந்த மூவரின் பயணம் தொடங்கியது. ரைட்டர்ஸ் பில்டிங்கிற்கு அழைத்துச் செல்லும்படி ஒரு டாக்ஸி டிரைவரிடம் சொன்னார்கள்.
சுப்ரதீம் சர்க்கார் தனது 'இண்டியா க்ரைட் தட் நைட்' என்ற புத்தகத்தில், "டாக்ஸி ரைட்டர்ஸ் பில்டிங்கின் பிரதான வாயிலில் நின்றவுடன், அங்கிருந்த போலீஸ் அதிகாரி, சூட்-பூட் அணிந்த மூன்று பேர் கீழே இறங்குவதைக் கண்டார். டாக்ஸி கட்டணத்தை செலுத்திய பிறகு அந்த மூவரும் முழு தன்னம்பிக்கையுடன் முன்னேறினர்,” என்று குறிப்பிட்டுள்ளார்.
”போலீஸ் அதிகாரி மற்றும் அவரது குழுவினருக்கு இந்த மூவர் மீது எந்த சந்தேகமும் எழவில்லை. அவர்கள் மாடிப்படிகளில் ஏறி முதல் மாடியை அடைந்தனர். லெப்டினன்ட் கர்னல் சிம்சன் தனது அறையில் அமர்ந்து கடிதம் எழுதிக் கொண்டிருந்தார். அவரது தனிப்பட்ட உதவியாளர் ஜே.சி.குஹா மற்றும் பியூன் பாகல் கான் அருகில் நின்று கொண்டிருந்தனர். உதவி பியூன் ஃபாகு சிங், கதவுக்கு வெளியே இருந்தார்."
பியூனை தள்ளிவிட்டு சிம்சனின் அறைக்குள் நுழைந்தனர்
சிம்சனின் அலுவலகம் நீண்ட தாழ்வாரத்தின் மேற்கு முனையில் இருந்தது. பல பிரிட்டிஷ் அதிகாரிகளின் அலுவலகங்களும் அங்கு இருந்தன. சாஹிப்களின் அறைகளுக்கு வெளியே அவருடைய ஆர்டர்லிகள் நின்று கொண்டிருந்தனர். பல எழுத்தர்கள் கோப்புகள் மற்றும் காகிதங்களுடன் தாழ்வாரத்தில் அவர்களை கடந்து சென்றனர்.
மூன்று இளைஞர்களும் வேகமாக நடந்து சிம்சனின் அறையின் வாயிலை அடைந்தனர்.
அறைக்கு வெளியே இருந்த ஃபாகு சிங் அவர்களிடம், 'சஹாப்பைச் சந்திக்க வந்திருக்கிறீர்களா?' என்று கேட்டார். பினாய் பதிலுக்கு, 'அவர் உள்ளே இருக்கிறாரா?' என்று வினவினார். 'அவர் உள்ளே இருக்கிறார். ஆனால் பிஸியாக இருக்கிறார். நீங்கள் அவரை சந்திக்க நேரம் பெற்றுக்கொண்டுள்ளீர்களா? உங்களிடம் விசிட்டிங் கார்டு இருந்தால் அதை என்னிடம் கொடுங்கள் அல்லது இந்த பதிவேட்டில் உங்கள் பெயரை எழுதுங்கள். உங்களைப் பற்றி ஐயாவிடம் சொல்கிறேன். ஆனால் உள்ளிருந்து பதில் வரும் வரை நீங்கள் காத்திருக்க வேண்டும்,” என்று ஃபாகு கூறினார்.
மூவரும் எதையும் காதில் போட்டுக்கொள்ளாமல் ஃபாகு சிங்கை தள்ளிவிட்டு கதவைத் திறந்தனர். இதையடுத்து கண் இமைக்கும் நேரத்தில் அவர்கள் கைகளில் ரிவால்வர் வந்தது.
சிம்சனின் உடல் குண்டுகளால் துளைக்கப்பட்டது
சுப்ரதீம் சர்க்கார் எழுதுகிறார், "சிம்சன் தலையை உயர்த்தி, மூன்று இளைஞர்கள் ரிவால்வர்களுடன் தனக்கு முன்னால் நிற்பதைக் கண்டார். அவரது உதவியாளர் குஹா பின்வாங்கியவுடன் இந்த மூவரின் ரிவால்வர்களில் இருந்து தோட்டாக்கள் சிம்சனின் உடலைத்துளைத்தன. நகரும் வாய்ப்பு கூடக்கிடைக்காமல் நாற்காலியில் அமர்ந்தபடியே சிம்சனின் உயிர் உடலைவிட்டுப்பிரிந்தது.
இந்தக் காட்சியைப் பார்த்த குஹா கத்தியபடி , அறையை விட்டு வெளியே ஓடினார். ஃபாகு சிங் ஓடிப்போய் மற்றொரு பிரிட்டிஷ் அதிகாரி தஃப்னல் பாரெட்டின் அறையில் தஞ்சம் புகுந்தார்.
பாரெட் உடனடியாக அருகில் உள்ள லால் பஜாருக்கு போன் செய்து பாதுகாப்பு படையினரை எச்சரித்தார். "ரைட்டர்ஸ் பில்டிங்கில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. சிம்சன் இறந்துவிட்டார். ஆயுதமேந்திய பாதுகாப்பு ஆட்களை உடனடியாக அனுப்புங்கள்" என்று அவர் சொன்னார்.
'தாழ்வாரத்தில் நடந்த சண்டை'
போலீஸ் கமிஷனர் சார்லஸ் டெகார்ட் வாகனத்தை அழைப்பதை விட ரைட்டர்ஸ் கட்டிடத்திற்கு ஓடிச்செல்வது பொருத்தமானதாக இருக்கும் என்று நினைத்தார். அவருடன் சில ரிசர்வ் படை வீரர்களும் வந்தனர். இரண்டு மூன்று நிமிடங்களில் அவர்கள் ரைட்டர்ஸ் கட்டிடத்தை அடைந்தனர்.

பட மூலாதாரம், RUPA
இதற்கிடையில், பெங்கால் ஐஜி கிரெய்க் இரண்டாவது மாடியில் உள்ள தனது அறையில் இருந்து கையில் ரிவால்வருடன் முதல் தளத்திற்கு வந்தார்.
சிம்சனை சுட்டுக் கொன்ற பிறகு, தினேஷ் சந்திர குப்தா, சுதிர் பாதல் குப்தா மற்றும் பினாய் கிருஷ்ண பாசு ஆகியோர் கைகளில் ரிவால்வர்களுடன் தாழ்வாரத்தில் மேற்கிலிருந்து கிழக்கு நோக்கி நடக்கத் தொடங்கினர்.
இதற்கிடையில் துப்பாக்கிச் சூடு நடந்த செய்தி எங்கும் பரவியது. தாழ்வாரத்தில் நடந்துகொண்டிருந்த மற்றவர்கள் கிடைத்த இடத்தில் ஒளிந்துகொண்டனர்.
தாழ்வாரத்தில் அமைதி நிலவியது. அப்போது இந்த மூவரும் சத்தமாக 'வந்தே மாதரம்' என்று முழக்கங்களை எழுப்பினர்.
பின்னர் இந்த முழு நிகழ்வுக்கும் ' பேட்டில் ஆஃப் வராண்டாஸ்' என்று பெயர் வழங்கப்பட்டது. அந்த நேரத்தில் ஃபோர்டு என்ற சார்ஜென்ட் சில தனிப்பட்ட வேலைக்காக ரைட்டர்ஸ் பிடிங்கிற்கு வந்திருந்தார். அவரிடம் ஆயுதம் ஏதும் இருக்கவில்லை. மாடிப்படிக்கு அருகே நின்றுகொண்டு அவர் இந்த முழு நிகழ்வையும் பார்த்துக்கொண்டிருந்தார்.
மூன்று இளைஞர்களும் பாஸ்போர்ட் அலுவலகத்திற்குள் நுழைந்தனர்
"ஐஜி கிரெய்க் இந்த மூன்று இளைஞர்களைப் பார்த்ததும் அவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினார். ஆனால் அந்த தோட்டா அவர்கள் யாரையும் தாக்கவில்லை. ஃபோர்டு, கிரேக்கிடமிருந்து ரிவால்வரை வாங்கிக்கொண்டு மீண்டும் இந்த இளைஞர்களை நோக்கி சுட்டார்,"என்று சுப்ரதீம் சர்க்கார் எழுதியுள்ளார்.
"பினாய்-பாதல்-தினேஷ் ஆகிய மூவரும் ஓடியபடி பதிலடி கொடுக்க ஆரம்பித்தனர். சிறிது நேரத்தில் ரிவால்வரில் தோட்டாக்கள் தீரத்தொடங்கின. ரிவால்வர்களில் மீண்டும் தோட்டாக்களை லோட் செய்யவேண்டி இருந்தது. அந்த நேரத்தில் அவர்கள் மூத்த அதிகாரி ஜே.டபிள்யூ. நெல்சனின் அறைக்கு வெளியே தாங்கள் நிற்பதைக் கண்டார்கள்."
பாஸ்போர்ட் அலுவலகம் பக்கத்திலேயே இருந்தது. பினாயும் பாதலும் தங்கள் ரிவால்வர்களை லோட் செய்ய உள்ளே நுழைந்தனர். வெளியில் நின்று கொண்டே தினேஷ் ரிவால்வரை லோட் செய்ய முயன்றார்.
நெல்சன் தனது அறையின் கதவைத் திறந்தவுடன், தினேஷ் அவரை நோக்கி துப்பாக்கியால் சுட்டார். தோட்டா நெல்சனின் தொடையை தாக்கியது, அவர் சுடப்பட்ட போதிலும் அவர் தினேஷை எதிர்கொண்டு அவரது கையிலிருந்து ரிவால்வரைப் பறிக்க முயன்றார்.
துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்டு பினாயும் பாதலும் கையில் ரிவால்வருடன் பாஸ்போர்ட் அலுவலகத்திலிருந்து வெளியே வந்தனர். பினாய் நெல்சனின் தலையில் ரிவால்வரின் பின்புறத்தால் அடித்தார். நெல்சன் தரையில் விழுந்தார். ஆனால் தரையில் ஊர்ந்தபடி அறைக்கு வெளியே சென்றுவிட்டார். அவரது உடல் முழுவதிலும் இருந்து ரத்தம் வழிந்து கொண்டிருந்தது. இதற்கிடையில் மூன்று வாலிபர்களும் மீண்டும் பாஸ்போர்ட் அலுவலகத்திற்குள் நுழைந்தனர்.
பினாய்-பாதல்-தினேஷ் நாலாபுறமும் சூழப்பட்டனர்
லால் பஜாரில் இருந்து ரிசர்வ் படை அங்கு வரும் வரை கிரேக் மற்றும் ஃபோர்டைத் தவிர யாருக்கும் தங்கள் அறையை விட்டு வெளியே வர தைரியம் இருக்கவில்லை.
இரண்டாவது மாடியில் உயர் போலீஸ் அதிகாரிகளின் அறைகள் இருந்தன ஆனால் யாரும் வெளியே வரவில்லை. பாதுகாப்பு படையினர் அங்கு சென்றடைந்தவுடன் நிலைமை மாறத் தொடங்கியது. பினாய்-பாதல்-தினேஷ் இருந்த பாஸ்போர்ட் அலுவலகம் எல்லா பக்கங்களிலும் இருந்து சுற்றி வளைக்கப்பட்டது.
கதவு இடுக்கில் இருந்து தினேஷ் சுட்டார். ஆனால் தோட்டா இலக்கை தாக்கவில்லை. போலீஸ் அதிகாரி ஜோன்ஸ் திருப்பிச் சுட்டார். இந்த தோட்டா தினேஷின் தோளில் பட்டு அவர் காயம் அடைந்தார்.

பட மூலாதாரம், RUPA
"அவர்கள் நாலாபுறமும் சுற்றி வளைக்கப்பட்டனர். துப்பாக்கி ஏந்திய வீரர்கள் கதவின் இருபுறமும் நிறுத்தப்பட்டனர். மூவரும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர். ஒரு அதிசயம் நடந்தால் மட்டுமே தாங்கள் பாதுகாப்பாக அங்கிருந்து வெளியேற்ற முடியும் என்று அவர்கள் உணர்ந்தனர்." என்று சுப்ரதீம் சர்க்கார் எழுதுகிறார்.
தாங்கள் பிடிபடப்போகிறோம் , தோட்டாக்கள் தீரப்போகின்றன என்று உணர்ந்தும் அந்த மூவரும் மரணத்திற்கு தயாரானார்கள். பாதல் தனது பாக்கெட்டிலிருந்து பொட்டாசியம் சயனைடு காப்ஸ்யூலை எடுத்து அதை விழுங்கினார்.
அவரது உடல் தரையில் சரிந்தது. அப்போது வெளியே நின்றிருந்த காவலர்களுக்கு அறைக்குள் இருந்து இரண்டு துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்டது.
பினாயும், தினேஷூம் தங்களைத்தாங்களே தலையில் சுட்டுக்கொண்டனர்.
பினாய் மற்றும் தினேஷ் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்
துணை கமிஷனர் பார்ட்லி கதவுக்கு அடியில் இருந்து எட்டிப்பார்த்தார். தரையில் ரத்த வெள்ளத்தில் இரண்டு பேர் கிடப்பதை அவர் கண்டார். போலீசார் கதவை திறந்து பார்த்தபோது, தினேஷ் அருகில் .455 வெப்லி ரிவால்வர் கிடந்தது.
பினாய் தனது கால்சட்டையின் பின் பாக்கெட்டில் .32 போர் ஐவர் ஜான்சன் ரிவால்வர் வைத்திருந்தார். பாதலின் உடல் அருகே .32 போர் அமெரிக்க ரிவால்வர் ஒன்றும் கிடந்தது. தோட்டாக்கள் தரையில் சிதறிக்கிடந்தன. மூவரின் தொப்பிகளும் விழுந்திருந்தன.
இது தவிர, இந்திய தேசிய காங்கிரசின் இரண்டு கொடிகள் தரையில் கிடந்தன. பினாயின் கால்சட்டையிலும் ஒரு கொடி காணப்பட்டது.
பாதலின் உடல் பிணவறைக்கு கொண்டு செல்லப்பட்டது, பினாய் மற்றும் தினேஷ் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
எப்படியாவது இந்த இருவரையும் காப்பாற்ற தங்களால் இயன்றவரை ஆங்கிலேயர்கள் முயன்றனர். இதன்மூலம் சதித்திட்டத்தைப் பற்றி தெரிந்துகொள்ள வாய்ப்பு கிடைக்கும் என்று அவர்கள் கருதினர். அடுத்த நாள் ஆனந்தபஜார் பத்ரிகாவின் தலைப்புச் செய்தி, 'வங்காளத்தின் சிறைக் கண்காணிப்பாளர் சுட்டுக் கொல்லப்பட்டார்.'என்று இருந்தது.
தினேஷுக்கு மரண தண்டனை
இருவரையும் காப்பாற்ற டாக்டர்கள் எவ்வளவோ முயன்றும் பினாயை காப்பாற்ற முடியவில்லை. அவர் 1930 டிசம்பர் 13 ஆம் தேதி காலமானார்.
அவர் இறப்பதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு அவரது தந்தை தனது மகனை கடைசியாகப் பார்க்க அனுமதிக்குமாறு பிரிட்டிஷ் அரசிடம் முறையிட்டார். அவரது கோரிக்கையை அரசு ஏற்றுக்கொண்டது.
பலத்த காயம் அடைந்த தினேஷ் உயிர் பிழைத்தது ஒரு ஆச்சரியமான விஷயம்.
இந்த விவகாரம் நீதிமன்றத்தை அடைந்தது. விசாரணை நடத்திய நீதிபதி ரால்ப் ரெனால்ட்ஸ் கார்லிக் தனது தீர்ப்பை வழங்கினார், "கொலைக்கான தண்டனை மரணம். கர்னல் சிம்சனைக் கொன்ற மூன்று பேரில் தினேஷ் சந்திர குப்தாவும் ஒருவர் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை. எனவே இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 302 இன் கீழ் நான் அவருக்கு மரண தண்டனை விதிக்கிறேன்."

பட மூலாதாரம், RUPA
தண்டனை வழங்கிய நீதிபதியும் சுடப்பட்டார்
1931 ஜூலை 7 ஆம் தேதி அதிகாலை 4.45 மணிக்கு தினேஷ் தூக்கிலிடப்பட்டார். அப்போது அவரது வயது 19 மட்டுமே.
தினேஷின் மரணத்தை தடுத்து நிறுத்தக் கோரி கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டது. இறுதியாக அவரது மரணத்தைத் தடுக்கக் கோரி ஆளுநருக்கு மனு அனுப்பப்பட்டது. அதை அவர் நிராகரித்தார்.
சட்டம்-ஒழுங்கு சீர்குலைவு ஏற்பட வாய்ப்புள்ளதால் அவர் தூக்கிலிடப்படும் தேதி மற்றும் நேரம் ரகசியமாக வைக்கப்பட்டது.
ஆனாலும் அந்த செய்தியை மறைக்க முடியவில்லை. 'Dauntless Dinesh Dies at Dawn’ (அச்சமற்ற தினேஷ் அதிகாலையில் மரணம்) என்ற தலைப்புச்செய்தியுடன் அடுத்த நாள் 'அட்வான்ஸ்' நாளேடு வெளியானது.
மறுநாள் கொல்கத்தாவின் ஒவ்வொரு தெருவிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பை மக்கள் கண்டனர். தினேஷ் சந்திர குப்தா தூக்கிலிடப்பட்டதற்கான அறிகுறியாக இது இருந்தது.
தினேஷ் தூக்கிலிடப்பட்ட 20 நாட்களுக்குப் பிறகு, அவருக்கு மரண தண்டனை விதித்த நீதிபதி ரால்ப் ரெனால்ட்ஸ் கார்லிக், கன்னையாலால் பட்டாச்சார்யாவால் அவரது நீதிமன்றத்தில் சுட்டுக் கொல்லப்பட்டார்.
சுதந்திரத்திற்குப் பிறகு, கல்கத்தாவில் உள்ள டல்ஹவுசி சதுக்கம் இந்த மூவரின் நினைவாக 'பிபிடி பாக்' என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. BBD என்றால் பினாய், பாதல் மற்றும் தினேஷ்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












