You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
வாரிசு: நடிகர் விஜய் குறித்த ஜேம்ஸ் வசந்தனின் கருத்தால் சர்ச்சை
வாரிசு திரைப்பட இசை வெளியீட்டு விழாவில் படத்தின் கதாநாயகன் விஜய் அலங்கார ஒப்பனைகளின்றி தோன்றிய காட்சி தொடர்பான இசை அமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தனின் விமர்சனம் சமூக ஊடகங்களில் பரவலான கவனத்தை ஈர்த்திருக்கிறது.
தமிழ்நாட்டில் மக்களுக்கும் திரைத்துறைக்கும் எப்போதுமே நெருங்கிய தொடர்பு உண்டு. அந்த அளவுக்கு திரைத்துறையை மிக நெருக்கமாக பின்தொடரும் மக்கள் தமிழ்நாட்டில் அதிகம்.
தியாகராஜ பாகவதர் தொடங்கி எம்.ஜி.ஆர்., சிவாஜி, ரஜினி, கமல் போன்ற நடிகர்களின் நடை, உடை, பாவனைகளை அந்தந்த காலத்து இளைஞர்கள் அப்படியே பின்பற்றினர்.
அந்த வரிசையில், இன்றைய முன்னணி நடிகர்களில் ஒருவரான விஜய்க்கு பெரும் ரசிகர் பட்டாளம் தமிழ்நாட்டில் மட்டுமின்றி,உலக அளவில் உள்ளது.
அந்த வகையில் நடிகர் விஜய்யின் சிகை அலங்காரம், உடைகள், மற்ற அணிகலன்கள் போன்றவை இளைஞர்கள் மத்தியில் மிகவும் பிரபலம். கடந்த 25 ஆண்டுகளாக தமிழ்நாட்டு இளைஞர்களின் ஃபேஷனை தீர்மானிப்பதில் இவருக்கு முக்கிய பங்கு உண்டு.
திரைப்படங்களில் நடிகர் விஜய் அணிந்து வரும் உடைகளும், மற்ற அணிகலன்களும், சிகை அலங்காரமும் இளைஞர்கள் மத்தியில் உடனே சென்சேஷனாகி விடுவது வாடிக்கை. அவரது ரசிகர்கள் மட்டுமின்றி, மற்ற இளைஞர்களும் கூட திரைப்படங்களில் வரும் விஜய்யின் தோற்றத்தை பிரதிபலிப்பதை காணலாம்.
நடிகர் விஜய் திரைப்படங்களைப் போலவே, பொதுவெளியில் தோன்றும் போதும் தனது புறத்தோற்றத்திற்கு முக்கியத்துவம் கொடுத்தே வந்திருக்கிறார்.
இசை வெளியீட்டு விழாக்களிலும், செய்தியாளர் சந்திப்புகளிலும் டிப்-டாப் உடையணிந்து சிறப்பாக தோற்றம் தரும் வகையிலேயே அவர் இருந்திருக்கிறார்.
இந்த நிலையில், வழக்கத்திற்கு மாறாக, பொங்கல் வெளியீடாக திரைக்கு வரும் வாரிசு திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் அதிகப்படியான ஒப்பனை இல்லாமல் சாதாரண உடையில் எளிமையாக நடிகர் விஜய் வந்திருந்தார்.
விழாவில் அவர் எடுத்த செல்பி வீடியோவும், சொன்ன குட்டிக்கதையும், எனக்கு நானே போட்டி என்று குறிப்பிட்டதும் பரவலாக கவனம் பெற்றது போலவே அவரது தோற்றமும் அனைவராலும் உற்று நோக்கப்பட்டது.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு விஜய் - அஜித் படங்கள் ஒன்றாக வெளியாக தயாராகி வருகின்றன.
அஜித் நடித்துள்ள துணிவு திரைப்படத்தின் டிரெய்லர் வெளியாகி சமூக வலைதளங்களில் 2 நாட்களாக ஆதிக்கம் செலுத்தி வருகிறது.
இந்த நிலையில்தான், வாரிசு இசை வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய்யின் தோற்றம் குறித்து இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் முன்வைத்துள்ள விமர்சனப் பார்வை அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. இது குறித்து அவர் தனது முகநூல் பக்கத்தில் விரிவாக பதிவு செய்துள்ளார்.
வாரிசு இசை வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய்யின் தோற்றம், முதல் பார்வையிலேயே மனதைச் சற்று நெருடியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
"முறையான அரங்க நிகழ்வுகளில் நன்கு அலங்கரித்து வாருங்கள். விடுமுறைகளில் மனம்போல் அணிந்து மகிழுங்கள். இந்த நடைமுறை வரைமுறைகளை உங்களைக் கண்மூடித்தனமாகப் பின்பற்றும் இளைஞருக்குக் கற்றுக்கொடுங்கள்," என்று அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தனின் பதிவுக்கு ஆதரவாகவும் எதிராகவும் சமூக வலைதளங்களில் பலரும் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.
ஜேம்ஸ் வசந்தன் கருத்து சரிதான் என்று ஒரு தரப்பினரும், விரும்பியடி உடையணியும் உரிமை ஒவ்வொருவருக்கும் உண்டு, நடிகர்கள் விதிவிலக்கு அல்ல என்று மற்றொரு தரப்பினரும் வாதிடுகின்றனர்.
தன்னைப் பின்பற்ற கோடிக்கணக்கான இளைஞர்கள் தயாராக இருக்கிறார்கள் என்பதை புரிந்து கொண்டு, அனைவருக்கும் முன்மாதிரியாக நடிகர் விஜய் நடந்து கொள்ள வேண்டும் என்று விமர்சிப்பவர்கள் கூறுகின்றனர்.
கடந்த 2 நாட்களாக துணிவு பட டிரெய்லர் சமூக வலைதளங்களை ஆக்கிரமித்திருந்த நிலை மாறி, தற்போது வாரிசு இசை வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய்யின் தோற்றம் குறித்த வாதப் பிரதிவாதங்களே சமூக வலைதளில் அதிகமாக காணப்படுகிறது.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்