You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
நடிகர் விஜய்யின் செல்ஃபி: ட்விட்டரில் ட்ரெண்டாகும் ‘வாரிசு’ இசை வெளியீட்டு விழா பதிவு
வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய் எடுத்த செல்பி வீடியோ சமூக வலைதளங்களை ஆக்ரமித்துக் கொண்டுள்ளது. சில மணி நேரத்திலேயே 50 லட்சத்திற்கும் அதிகமானோரால் இந்த ட்வீட் பார்வையிடப்பட்டுள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக திகழும் விஜய், அஜித் ஆகியோரின் திரைப்படங்கள் நீண்ட இடைவேளைக்குப் பிறகு ஒரே நேரத்தில், வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகின்றன. வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய்க்கு வாரிசு படமும், எச்.வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித்திற்கு துணிவு திரைப்படமும் வெளியாக தயாராக உள்ளன. இதையடுத்து, இரு நடிகர்களின் ரசிகர்களும் சமூக வலைதளங்களில் வழக்கம் போல் இப்போதே வார்த்தைப் போரை தொடங்கிவிட்டனர்.
பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் தில்ராஜூவின் ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள வாரிசு திரைப்படம் ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் வெளியாகிறது. இந்தியிலும் படம் வெளியாகும் என்று தயாரிப்பாளர் தில்ராஜூ ஏற்கனவே தெரிவித்துள்ளார். இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். தவிர சரத்குமார், பிரபு, பிரகாஷ்ராஜ், ஷாம், சங்கீதா, ஜெயசுதா ஆகியோரும் படத்தில் நடித்துள்ளனர்.
வாரிசு படத்தில் தமன் இசையில் உருவாகியுள்ள ரஞ்சிதமே, தீ தளபதி, ஆராரிராரோ ஆகிய 3 பாடல்கள் ஏற்கனவே வெளியாகியுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது. இதில் ரஞ்சிதமே பாடல் பலவிதமான விமர்சனங்களை பெற்றாலும் இதுவரை 10 கோடிக்கும் மேலானோர் அதனை பார்வையிட்டுள்ளனர்.
நடிகர் அஜித்தின் துணிவு திரைப்படத்துடன் ஒரே வேளையில் ரிலீஸ், தியேட்டர் ஒதுக்கீடு, தயாரிப்பாளர் தில்ராஜூவின் 'நம்பர் ஒன்' குறித்த பேச்சு என அடுத்தடுத்து எழுந்த சர்ச்சைகளின் பின்னணியில் வாரிசு திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா பிரமாண்டமாக நடந்து முடிந்துள்ளது. சென்னை நேரு உள் விளையாட்டரங்கில் நடைபெற்ற வாரிசு பட இசை வெளியீட்டு விழாவில் படத்தின் நாயகி ராஷ்மிகா மந்தனா, படத்தில் நடித்துள்ள நடிகர்கள் சரத்குமார், ஷாம், பின்னணிப் பாடகர் சங்கர் மகாதேவன், பாடல் ஆசிரியர் விவேக் உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்து கொண்டனர்.
இந்த இசை வெளியிட்டு விழா நேற்று நேரடி ஒளிபரப்பு செய்யப்படவில்லை எனினும் விழாவில் பேசியது குறித்து பலர் சமூக வலைதளங்களில் பகிர்ந்திருந்தனர்.
அதில் வழக்கம் போல் விஜய் குட்டி கதை ஒன்றை கூறினார் என்று பலர் பகிர்ந்துள்ளனர். அத்துடன், விழா மேடையில் இருந்தவாறே அரங்கில் நிறைந்திருந்த ரசிகர்களுடன் செல்ஃபி விடியோ ஒன்றை எடுத்து தனது டிவிட்டரில் ' என் நெஞ்சில் குடியிருக்கும்' என்ற ஹேஷ்டேக்குடன் பதிவிட்டுள்ளார் விஜய்.
இதற்கு முன்னர் நெய்வேலியில், 2 ஆண்டுகளுக்கு முன்பு தனது ரசிகர்கள் சூழ நடிகர் விஜய் வெளியிட்ட செல்பி புகைப்படம் வைரலானது நினைவுகூரத்தக்கது. 2020ஆம் ஆண்டு அதிகமாக ரீட்வீட் செய்யப்பட்ட பதிவாகவும் அது சொல்லப்பட்டது.
மாஸ்டர் படப்படிப்பு நெய்வேலியில் நடைபெற்ற சமயத்தில் எடுக்கப்பட்ட செல்ஃபி அந்த செல்ஃபி பிகில் பட வர்த்தகம் குறித்து விஜய் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனையிட்டதற்கு பதிலடியாக எடுக்கப்பட்டது என்று அந்த சமயத்தில் கருத்துக்கள் வெளியானது. ஆனால் நடிகர் விஜய் இதுகுறித்து எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை.
அதேநேரம் அந்த சமயத்தில் பாஜவினரும் நடிகர் விஜய்க்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
விஜய்யின் நெய்வேலி செல்பி ட்வீட் சில மணி நேரத்திலேயே லட்சக்கணக்கான பார்வைகளையும், லைக்குகளையும் பெற்றது. நெய்வேலி செல்பி ட்வீட்டிற்கு ஏறக்குறைய 2 ஆண்டுகளுக்குப் பிறகு வாரிசு பட இசை வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய் எடுத்த செல்பி வீடியோவும், வெளியான 12 மணி நேரத்திற்குள்ளாக ஒரு கோடி பார்வைகளை நெருங்கியுள்ளது. காலை 10 மணி நிலவரப்படி, இந்த வீடியோவை 93 லட்சத்திற்கும அதிகமானோர் பார்வையிட்டுள்ளனர்; சுமார் இரண்டேகால் லட்சம் போர் விருப்பம் தெரிவித்துளளனர்; 85.3 ஆயிரம் பேர் ரீட்வீட் செய்துள்ளனர். நடிகர் விஜய் பதிவிட்டது முதலே இந்த செல்பி வீடியோ தேசிய அளவிலும், தமிழ்நாட்டு அளவிலும் தொடர்ந்து முன்னணியில் டிரெண்டிங்கில் இருக்கிறது.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்