டைட்டானிக் சுற்றுலா எப்போது தொடங்கியது? சாத்தியமாக்கிய நீர்மூழ்கியின் சிறப்பு என்ன?

பட மூலாதாரம், Reuters
அட்லாண்டிக் பெருங்கடலில் மூழ்கிய ’டைட்டானிக் கப்பலை’ காண்பதற்காக, ஆழ்கடலில் சுற்றுலா பயணம் மேற்கொண்ட பயணிகள் காணாமல் போயிருக்கும் சம்பவம் உலகளவில் பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது.
3 சுற்றுலாப் பயணிகள், ஒரு பைலட் மற்றும் ஒரு சுற்றுலா வழிகாட்டி உட்பட 5 பேருடன் கிளம்பிய ’டைட்டன்’ என்ற நீர்மூழ்கிக் கப்பல், ஜூன் 19ஆம் தேதி ஆழ்கடலுக்குள் காணாமல் போயிருக்கிறது.
இந்த சம்பவம் உலகளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதில் குறிப்பாக 110 ஆண்டுகளுக்கு முன்னால் கடலில் மூழ்கிய ‘டைட்டானிக்’ கப்பலை காண்பதற்காக, சுற்றுலா பயணம் மேற்கொள்ள முடியும் என்ற செய்தி பலரது கவனத்தையும் ஈர்த்திருக்கிறது.
இந்த நிலையில் ‘டைட்டன் நீர்மூழ்கிக் கப்பல்’ குறித்தும், இத்தகைய ஆழ்கடல் சுற்றுலாவுக்கு ஏற்பாடு செய்த அதன் சுற்றுலா நிறுவனம் குறித்தும், இணையத்தில் அதிகமாகத் தேடப்பட்டு வருகிறது.
இந்த கட்டுரை உங்களுக்கு அதுகுறித்து மேலும் சில தகவல்களை அளிக்கலாம்.
ஆழ்கடல் சுற்றுலா பயணம்

பட மூலாதாரம், Getty Images
அமெரிக்காவின் வாஷிங்டன் மாகாணத்தில் இயங்கி வரும் ‘ஓஷன் கேட்’ (Ocean gate) என்ற நிறுவனம், ஆழ்கடல் சுற்றுலா பயணங்களை மக்களுக்கு வழங்கி வருகிறது.
கடந்த 2009ஆம் ஆண்டு, ஸ்டாக்டன் ரஷ் (Stockton Rush) என்னும் தொழிலதிபரால் துவங்கப்பட்ட இந்த நிறுவனம், மூன்று நீர்மூழ்கிக் கப்பல்களைச் சொந்தமாக வைத்திருக்கிறது.
இந்த நிறுவனத்தைச் சேர்ந்த நீர்மூழ்கிக் கப்பல்கள், 'பசிபிக் பெருங்கடல், அட்லாண்டிக் பெருங்கடல் மற்றும் மெக்சிகோ வளைகுடா பகுதிகளில் இதுவரை 200க்கும் மேற்பட்ட ஆழ்கடல் பயணங்களை மேற்கொண்டுள்ளதாக' ஓஷன்கேட் நிறுவனத்தின் இணையதள பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஓஷன்கேட்டிற்கு சொந்தமான மூன்று நீர்மூழ்கிக் கப்பல்களில், ‘டைட்டன்’ என்ற நீர்மூழ்கிக் கப்பல் மட்டுமே, கடலுக்குக் கீழே 4000மீட்டர் வரை செல்லக்கூடியது. இந்த நீர்மூழ்கிக் கப்பல் மிகவும் அதிநவீன முறையில், பாதுகாப்பானதாகத் தயாரிக்கப்பட்டுள்ளது என்று ஓஷன்கேட் நிறுவனம் அதன் அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தில் குறிப்பிட்டுள்ளது.
"நீருக்கு அடியில் உள்ள உள்கட்டமைப்பு, சிதைவுகள், உணர்திறன் மிக்க சுற்றுச்சூழல் வாழ்விடங்கள் ஆகிய இடங்கள் குறித்து தொடர்ச்சியான மற்றும் விரிவான ஆய்வுகளை நடத்துவதற்கு இந்த டைட்டன் நீர்மூழ்கிக் கப்பல் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
அந்த வகையில் கடந்த 2021 மற்றும் 2022 ஆகிய ஆண்டுகளில் ‘டைட்டானிக் கப்பல்’ மூழ்கியுள்ள பகுதியில் ஆய்வுகளை மேற்கொள்ள ‘டைட்டன்’ நீர்மூழ்கிக் கப்பல் மூலம் ஏற்கனவே இரண்டுமுறை பயணங்கள் மேற்கொள்ளப்பட்டன. அந்த பயணங்கள் வெற்றியடைந்ததை தொடர்ந்து, தற்போது 2023ஆம் ஆண்டு ‘டைட்டானிக் கப்பலை’ பார்வையிடுவதற்கான அடுத்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.” என ஓஷன்கேட் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளன.
2023 ஆம் ஆண்டு ‘டைட்டானிக் கப்பலை’ பார்வையிடுவதற்கான பயணத்திற்கு, ஆழ்கடல் சுற்றுலா பயணம் மேற்கொள்வதில் ஆர்வம் உள்ள மற்றும் தகுதிவாய்ந்த நபர்கள் இணையலாம் என ஓஷன்கேட் நிறுவனம் அறிவித்திருந்தது.
ஆழ்கடல் பயணம் மேற்கொள்வது குறித்து NOAA - இன் (National Oceanic and Atmospheric Administration) வழிகாட்டுதல்படியும் மற்றும் நீருக்கடியில் உள்ள பாரம்பரிய இடங்களை பாதுகாப்பது குறித்து UNESCO கூறியுள்ள வழிகாட்டுதல்களின்படியும், இந்த பயணம் மேற்கொள்ளப்படுவதாக ஓஷன்கேட் நிறுவனம் தெரிவித்துள்ளது.
பிரமிப்பை ஏற்படுத்தும் ‘டைட்டன் நீர்மூழ்கி கப்பல்’

பட மூலாதாரம், OCEAN GATE
10,432 கிலோ கிராம் எடை கொண்ட டைட்டன் நீர்மூழ்கி கப்பலால் 13,100 அடி ஆழம் வரை செல்ல முடியும் எனக் கூறப்படுகிறது. இதில் கப்பலின் கேப்டன் உட்பட மொத்தம் 5 பேரால் பயணம் மேற்கொள்ள முடியும்.
இந்த நீர்மூழ்கி கப்பலில் 5 பேருக்கு 96 மணி நேரத்திற்குத் தேவையான ஆக்சிஜன் இருப்பு வைக்கப்பட்டிருக்கும் என்று அதன் இணையதளத்தில் கூறப்பட்டுள்ளது.
டைட்டன் நீர்மூழ்கிக் கப்பல் 6.2 மீட்டர் (22அடி) நீளத்தை கொண்டது.
கடலின் மேற்பரப்பிலிருந்து, 4000 மீட்டர் கீழே மக்களை அழைத்துச் செல்லும் திறன் கொண்ட சில நீர்மூழ்கிக் கப்பல்கள் உள்ளன.
இத்தகைய கப்பல்கள் மூலம் உலகம் முழுவதும் ஆழ்கடலில் பல ஆராய்ச்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
ஆனால் உலகளவில் இத்தகைய ஆழமான பயணத்திற்கு ஏற்பாடு செய்யும் ஒரே தனியார் நிறுவனமாக ஓஷன்கேட் உள்ளது.
ஆழ்கடலில் 8 நாள் பயணத்திட்டம்

ஆழ்கடலில் 12,500 அடி ஆழத்தில் மூழ்கியுள்ள டைட்டானிக் கப்பலை நேரில் பார்க்கும் இந்த சுற்றுலா 8 நாட்கள் கொண்டது. அதற்கு கட்டணமாக ஒருவருக்கு இந்திய மதிப்பில் 2 கோடி ரூபாய் வரை வசூலிக்கப்படுகிறது.
தற்போது ஓஷன்கேட் நிறுவனம் ஏற்பாடு செய்திருந்த இந்த ஆழ்கடல் பயணத்திற்கு, டைட்டன் நீர்மூழ்கி கப்பலுடன் தொடர்பில் இருப்பதற்கு போலார் பிரின்ஸ் என்ற ஆராய்ச்சி கப்பல் பயன்படுத்தப்பட்டிருந்தது.
ஹாமிஷ் ஹார்டிங் என்ற 58 வயது பிரிட்டிஷ் தொழிலதிபரும், ஷாசத தாவூத் என்ற தொழிலதிபரும் மற்றும் அவரது மகன் சால்மன் தாவூத் ஆகியோரும் தற்போது இந்த பயணத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இவர்களை தவிர பால் ஹென்ரி நர்கோலெட் என்ற பிரஞ்சு ஆய்வாளரும் நீர்மூழ்கி கப்பலில் இருந்தார்.
இவர் பிரஞ்சு கடற்படையின் முன்னாள் வீரர். இவர் 1987ஆம் ஆண்டு ‘டைட்டானிக் கப்பலை’ பார்வையிடுவதற்கு முதன்முறையாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பயணத்தில் பங்கெடுத்திருந்தார். இதனால் இவருக்கு மிஸ்டர் டைட்டானிக் என்ற பட்டப்பெயரும் உள்ளது.
ஆழ்கடலில் மூழ்கியுள்ள டைட்டானிக் இருக்கும் இடத்திற்குச் சென்று திரும்புவதற்கு 8 மணி நேரம் வரை ஆகும் என்று கூறப்படுகிறது.
காணாமல் டைட்டன் நீர்மூழ்கி கப்பலின் நிலைமை என்ன?
தற்போது விபரீதத்தில் முடிந்துள்ள இந்த பயணம், நியூபவுண்ட்லாந்து (Newfoundland) கடற்கரையில் செயின்ட் ஜான்ஸ் நகரில் தொடங்கியது.
பயணத்தை தொடங்கிய ஒரு மணி நேரம் 45 நிமிடங்களில் அந்த நீர்மூழ்கியுடனான தொடர்பு துண்டிக்கப்பட்டுவிட்டதாக அமெரிக்க கடலோர காவல்படை தெரிவித்துள்ளது.
நீர்மூழ்கியில் உள்ள 5 பேரையும் பத்திரமாக மீட்பதற்கு, தங்களிடம் இருக்கும் அனைத்து வாய்ப்புகளையும் பயன்படுத்தி வருவதாக சுற்றுலாவுக்கு ஏற்பாடு செய்த ஓஷன்கேட் நிறுவனம் கூறியுள்ளது.
அமெரிக்கா, கனடா ஆகிய நாடுகளின் கடற்படைகளுடன், ஆழ்கடல் ஆய்வு நிறுவனங்கள் பலவும் இந்த மீட்புப் பணியில் கைகோர்த்துள்ளன.
காணாமல் போன நீர்மூழ்கி தனது பயணத்தை நியூபவுண்ட்லாந்தில் செயின்ட் ஜான்ஸ் நகரில் தொடங்கியிருந்த நிலையில், தற்போது இதற்கான மீட்புப் பணிகள் மசாசூசெட்ஸ் மாகாணம் பாஸ்டன் நகரில் இருநது ஒருங்கிணைக்கப்படுகின்றன.
"நீர்மூழ்கியில் 70 முதல் 96 மணி நேரத்திற்குத் தேவையான ஆக்சிஜன் இருப்பு இருக்கலாம்" என்று அமெரிக்க கடலோர காவல்படையின் ரியர் அட்மிரல் ஜான் மாவ்கர் தெரிவித்தார்.
2 விமானங்கள், ஒரு நீர்மூழ்கி மற்றும் சோனார் மிதவைகளைக் கொண்டு, நீர்மூழ்கியைத் தேடும் பணிகள் நடைபெறுவதாகவும், நீர்மூழ்கி காணாமல் போன இடம் தொலைதூர பகுதி என்பதால் தேடுதல் பணி கடினமாக இருப்பதாகவும் அவர் கூறினார்.
நீர்மூழ்கிக்குள் இருந்த 5 பேர் மற்றும் அவர்களது குடும்பத்தினர் மீது மட்டுமே தங்களது முழு கவனமும் இருப்பதாக ஓஷன்கேட் நிறுவனம் கூறியுள்ளது.
"காணாமல் போன நீர்மூழ்கியுடன் தொடர்பை மீண்டும் ஏற்படுத்த தாங்கள் மேற்கொண்டு வரும் முயற்சிகளில் பல அரசு அமைப்புகளும், தனியார் நிறுவனங்களும் செய்து வரும் உதவிகளுக்கு பெரிய அளவில் நன்றிக்கடன் பட்டிருக்கிறோம்" என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
டைட்டானிக் கப்பல் விபத்து
டைட்டானிக் கப்பல் அது கட்டப்பட்ட காலத்தில் இருந்த உலகின் மிகப்பெரிய கப்பல் என்ற பெருமையைப் பெற்றது.
1912-ம் ஆண்டு பிரிட்டனின் சவுதாம்ப்டன் நகரில் இருந்து அமெரிக்காவின் நியூயார்க் நகருக்கு மேற்கொண்ட கன்னிப் பயணத்தின் போதே, அட்லாண்டிக் பெருங்கடலில் பனிப்பாறையில் மோதி மூழ்கியது.
பயணிகள், பணியாளர்கள் என அதில் இருந்த 2,200 பேரில் 1,500-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துவிட்டனர்.
1985-ம் ஆண்டு அதன் சிதைவுகள் கண்டுபிடிக்கப்பட்ட பிறகு டைட்டானிக் மீதான ஆர்வம் உலகெங்கும் அதிகரித்தது.
ஆழ்கடலில் டைட்டானிக் கப்பலின் சிதைவுகள் இரு பாகங்களாக 2,600 அடி இடைவெளியில் கிடக்கின்றன.
கடந்த மாதத்தில் ஆழ்கடல் வரைபடக் கலை மூலம் டைட்டானிக் சிதைவுகளின் முழுமையான டிஜிட்டல் வடிவம் உருவாக்கப்பட்டது. கப்பலின் பிரமாண்டம், அதன் ஒரு புரொபல்லரில் குறிப்பிடப்பட்டிருந்த வரிசை எண் போன்றவை அதன் மூலம் தெரியவந்தன.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












