மஹிந்த ராஜபக்ஸ பாதுகாப்பு குறைப்பு, அவரது மகன் கைது - இலங்கையில் என்ன நடக்கிறது? முழு விவரம்

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், ரஞ்சன் அருண் பிரசாத்
- பதவி, பிபிசி தமிழ்
இலங்கையில் கடந்த சனிக்கிழமையன்று கைது செய்யப்பட்ட முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் இரண்டாவது மகன் யோஷித்த ராஜபக்ஸவுக்கு கொழும்பு நீதிமன்றம் இன்று பிணை வழங்கியுள்ளது.
முன்னதாக, பெலிஅத்த பகுதியில் வைத்து குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட யோஷித்த ராஜபக்ஸவை ஜனவரி 27 வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் உத்தரவு பிறப்பித்திருந்தார்.
முறைகேடான விதத்தில் சேர்த்ததாகக் கூறப்படும் பணத்தின் ஊடாக கொழும்பு புறநகர் பகுதியான இரத்மலானை பகுதியில் 34 மில்லியன் ரூபாவிற்கு காணி மற்றும் வீடொன்றை கொள்வனவு செய்ததாக யோஷித்த ராஜபக்ஸ மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டிருந்தது.
இதன்படி, நிதி சலவை தவிர்ப்பு சட்டத்தின் கீழ் யோஷித்த ராஜபக்ஸவிற்கு எதிராக குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் விசாரணைகள் நடத்தப்பட்டு வந்த பின்னணியிலேயே அவர் கைது செய்யப்பட்டார்.
நிதி சலவை தவிர்ப்பு சட்டத்தின் கீழ் தவறிழைத்துள்ளமைக்கான போதியளவு சாட்சியங்கள் உள்ளமை குறித்து சட்ட மாஅதிபரால் அறிவிக்கப்பட்டதை அடுத்து, குற்றவியல் சட்டத்தின் பிரகாரம் மேலதிக விசாரணைகளுக்காக அவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் போலீஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட போலீஸ் அத்தியட்சகர் புத்திக்க மனதுங்க கூறுகின்றார்.

சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட யோஷித்த ராஜபக்ஸவிடம் சுமார் 4 மணிநேரங்களுக்கும் மேலாக விசாரணைகள் நடத்தப்பட்டதை அடுத்து, கொழும்பு மேலதிக நீதவான் பவித்ரா சஞ்ஜிவனி முன்னிலையில் அவர் முன்னிலைப்படுத்தப்பட்டார்.
இந்த வழக்கின் பிரதான சந்தேக நபராக யோஷித்த ராஜபக்ஸவின் பாட்டியான டேசி பெஃரஸ்ட் பெயரிடப்பட்டுள்ளார்.

பட மூலாதாரம், Getty Images
யோஷித்த ராஜபக்ஸவுக்கு இன்று பிணை கிடைத்தது
கொழும்பு மேலதிக நீதவான் பவித்ரா சஞ்ஜிவணியின் அதிகாரபூர்வ இல்லத்திற்கு, யோஷித்த ராஜபக்ஸ குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் அழைத்துச் செல்லப்பட்டார்.
நிதி சலவை தவிர்ப்பு சட்டத்தின் கீழ் யோஷித்த ராஜபக்ஸ கைது செய்யப்பட்டமைக்கான ஆவணங்களை மேலதிக நீதவானிடம், குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் கையளித்துள்ளனர்.
இந்த நிலையில், சந்தேக நபர் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி சம்பத் மென்டீஸ், சந்தேக நபரை பிணையில் விடுவிக்குமாறு நீதவானிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்த வழக்கின் பிரதான சந்தேக நபரான டேசி பெஃரஸ்ட்டிற்கு நீதிமன்றம் 8 வருடங்களுக்கு முன்னதாகவே பிணை வழங்கியுள்ளமையால், இரண்டாவது சந்தேக நபரைக் கைது செய்து விளக்கமறியலில் வைப்பது சாதாரணமானதல்ல என யோஷித்த ராஜபக்ஸ சார்பில் முன்னிலையான சட்டத்தரணி கூறியுள்ளார்.
இதன் பிரகாரம், யோஷித்த ராஜபக்ஸவை பிணையில் விடுவிப்பதற்கான கோரிக்கையை, அவர் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி முன்வைத்த போதிலும், அதை நீதவான் ஏற்றுக் கொள்ளாது, சந்தேக நபரை விளக்கமறியலில் வைக்க உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இதையடுத்து, சந்தேக நபர் கொழும்பு வெலிகடை சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
இந்த நிலையில், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் மகன் யோஷித்த ராஜபக்ஸவிற்கு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று பிணை வழங்கியுள்ளது.

பட மூலாதாரம், Getty Images
யோஷித்த ராஜபக்ஸவின் சகோதரர் நாமல் ராஜபக்ஸ கூறியது என்ன?
நாடாளுமன்றத்தில் தனது பேச்சுக்காக, தம்பியைக் கைது செய்து சிறை வைத்துள்ளதாக யோஷித்த ராஜபக்ஸவின் சகோதரரும், நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஸ தெரிவிக்கின்றார்.
யோஷித்த ராஜபக்ஸவின் கைதை அடுத்து, ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட போது அவர் இதைக் குறிப்பிட்டார்.
''தம்பியைக் கைது செய்துள்ளனர். மிகவும் சிறப்பான விடயம். சனிக்கிழமையான விடுமுறை தினத்தில் அதிகாலையிலேயே போலீசார் எழுந்து, சட்ட மாஅதிபரின் ஆலோசனையை நிறைவேற்றுவதற்காக கொழும்பிற்கு வருகை தந்து, கொழும்பில் அவர் இல்லை என்ற நிலையில், அதிவேக வீதியூடாக தங்காலை சென்று பெலிஅத்த அதிவேக வீதியின் வெளியேறும் பகுதியில் வைத்து தம்பியைக் கைது செய்து, அவரிடம் வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர்.
மக்களின் வரிப் பணத்தில் போலீஸ் வாகனங்களில் கடும் பாதுகாப்புக்கு மத்தியில் கொழும்பு குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு அழைத்து வந்து வாக்குமூலம் எடுத்துள்ளனர். போலீசார் இவ்வாறே வேலை செய்ய வேண்டும். இவ்வாறே நிழல் உலகக் குழுவைக் கட்டுப்படுத்தவும் போலீசார் செயல்பட வேண்டும்," என்று தெரிவித்துள்ளார்.
மேலும், "அப்படிச் செயல்பட்டிருந்தால், அதே பெலிஅத்த பகுதியில் 5 பேரை நிழலுலகக் குழு கொலை செய்து சென்றிருக்காது. போலீசார் அரசியல் தேவைகளுக்காக எடுக்கும் முயற்சியை, நிழலுலகக் குழுவைக் கட்டுப்படுத்த எடுத்தால் சிறப்பாக இருக்கும் என நினைக்கின்றேன். எங்களை அழைத்தால் விடுமுறை தினம் என்று கூடப் பார்க்காமல் நாங்கள் விசாரணைகளுக்காக வருவோம்." என்று கூறியுள்ளார்.
"தவறுகளுடனான விசாரணைகளை நடத்தவேண்டும். நாங்கள் அச்சப்பட மாட்டோம். உகாண்டாவில் இருந்து பணத்தைக் கொண்டு வருவதாகக் கூறியவர்கள், இன்று காணி வழக்கில் மட்டுப்படுத்தப்பட்டுள்ளனர். எங்களின் கைகளில் குப்பை கிடையாது. எங்களின் கைகளில் ரத்தக்கறை கிடையாது. நாங்கள் தவறிழைக்கவில்லை'' என்று நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ கூறுகின்றார்.
கதிர்காமம் காணி தொடர்பிலும் விசாரணை

பட மூலாதாரம், BIMAL RATHNAYAKE/FB
கதிர்காமம் பகுதியிலுள்ள காணி ஒன்று தொடர்பில் யோஷித்த ராஜபக்ஸவிடம் ஜனவரி 3ஆம் தேதி குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர்.
குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு வருகை தந்த யோஷித்த ராஜபக்ஸவிடம் பல மணிநேரம் விசாரணை நடத்தப்பட்டிருந்தது.
அத்துடன், இந்த காணி விவகாரம் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவிடமும் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் விசாரணைகளை நடத்தி, வாக்குமூலம் பதிவு செய்திருந்தனர்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் பிரத்யேக பாதுகாவலரான மேஜர் நெவின் வன்னியாராட்ச்சியிடமும், குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர்.
அரசாங்கத்தின் பதில்
சட்டத்திற்கு அமைய விசாரணைகளை நடத்தியே நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக பாதுகாப்பு பிரதி அமைச்சரான ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர தெரிவிக்கின்றார்.
இதேவேளையில், போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்கவும் இந்த விடயம் தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ளார்.
அப்போது, ''தெரிந்தே அரச சொத்துகளை இல்லாது செய்த யுகத்தின் முக்கியமான நபரே ராஜபக்ஸ. இலங்கை பாதாளத்திற்கு வீழ்ந்தது, நாடு சீர்கெட்டது. அதற்கு பூக்களை வைத்து விளக்கேற்றி வரவேற்க வேண்டுமா? மாதாந்தம் நான்கரை மில்லியன் ரூபா வீதம் செலவிட்டு, நூற்றுக்கணக்கான ராணுவம், போலீசாரை வழங்கி அவர்களைப் பாதுகாக்க வேண்டுமா? அரச சொத்துகளை வீணடித்த அரசியல்வாதிகளுக்கு தண்டனை வழங்கப்பட வேண்டும். அதுவே மக்களின் விருப்பம்'' என்று பிமல் ரத்நாயக்க குறிப்பிட்டார்.
மஹிந்த ராஜபக்ஸவின் பாதுகாப்பு குறைப்பு

பட மூலாதாரம், MAHINDA RAJAPAKSH/FB
முன்னாள் ஜனாதிபதிகளான சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, மஹிந்த ராஜபக்ஸ, மைத்திரிபால சிறிசேன, கோட்டாபய ராஜபக்ஸ, ரணில் விக்ரமசிங்க ஆகியோருக்கு வழங்கப்பட்டிருந்த பாதுகாப்பு அதிகாரிகளின் எண்ணிக்கை 60 பேர் வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ள பின்னணியில், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ உயர்நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனுத் தாக்கல் செய்துள்ளார்.
மஹிந்த ராஜபக்ஸவிற்கு வழங்கப்பட்டிருந்த பாதுகாப்பு அதிகாரிகளில் 116 பிரமுகர் பாதுகாப்பு அதிகாரிகள், கடந்த டிசம்பர் மாதம் 13ஆம் தேதி, மஹிந்த ராஜபக்ஸவின் பாதுகாப்பு கடமைகளில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.
இந்த நிலையில், குறைக்கப்பட்ட தனது பாதுகாப்பை மீள வழங்குமாறு உத்தரவிடக் கோரி, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவினால் உயர்நீதிமன்றத்தில் இந்த அடிப்படை உரிமை மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த மனுவின் பிரதிவாதிகளாக பிரதமர் ஹரினி அமரசூரிய உள்ளிட்ட அமைச்சரவையின் உறுப்பினர்கள் பெயரிடப்பட்டுள்ளனர்.
பாதுகாப்பு தொடர்பான உரிய மதிப்பீடு இன்றி, தனக்கு வழங்கப்பட்டிருந்த பாதுகாப்பு அதிகாரிகளின் எண்ணிக்கையை 60 பேர் வரை மட்டுப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக மஹிந்த ராஜபக்ஸ தனது சட்டத்தரணி ஊடாக தாக்கல் செய்த மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், ஆயுதம் ஏந்திய பாதுகாப்பு அதிகாரிகள் தனது பாதுகாப்புக்காக ஈடுபடுத்தப்படவில்லை எனக் கூறியுள்ள மஹிந்த ராஜபக்ஸ, போலீஸ் அதிகாரிகள் மாத்திரமே தனது பாதுகாப்புக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.

பட மூலாதாரம், Getty Images
முப்பது ஆண்டுக் காலம் நீடித்த உள்நாட்டு யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வர தலைமைத்துவம் வழங்கிய தான், பயங்கரவாத அச்சுறுத்தலுக்கு முகம் கொடுத்துள்ள ஒருவர் எனவும், தனது உயிருக்கு அச்சுறுத்தல் காணப்படுவதாகவும் மஹிந்த ராஜபக்ஸ தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
பாதுகாப்பு அதிகாரிகளைக் குறைப்பதற்கு தன்னிச்சையாக எடுக்கப்பட்ட தீர்மானத்தால், அடிப்படை மனித உரிமை மீறப்பட்டுள்ளதாக தீர்ப்பொன்றை வழங்கக் கோரி மஹிந்த ராஜபக்ஸ மனுவை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார்.
இந்த மனுத் தாக்கல் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் ஊடகப் பேச்சாளர் சட்டத்தரணி ரவிந்தர மனோஜ் கமகே ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தார்.
அப்போது அவர், ''அரசியல்வாதிகள் அரசியல் தீர்மானங்களை எடுக்கின்றனர். அந்த அரசியல் தீர்மானத்தின் ஊடாக அல்லது அரசியல் வைராக்கியங்களின் ஊடாக மஹிந்த ராஜபக்ஸ போன்றோரின் பாதுகாப்பு மற்றும் அவரது குடும்பத்தாரின் பாதுகாப்பு, அவர்களுக்கான உயிர் அச்சுறுத்தலை மதிப்பீடு செய்ய முடியாது," என்று கூறினார்.
அதோடு, இந்த அரசாங்கம் எந்தவொரு பாதுகாப்பு மதிப்பீடும் செய்யாமல் இந்த நடவடிக்கையை முன்னெடுத்தார்கள் என்பது எதிர்காலத்தில் வெளிப்படும் எனக் கருதுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
"எமது மனுவின் ஊடாக நாம் பல்வேறு விடயங்களை முன்னிலைப்படுத்தியுள்ளோம். குறிப்பாக மஹிந்த ராஜபக்ஸவின் உயிருக்குக் காணப்படுகின்ற அச்சுறுத்தல் குறித்து மனுவில் குறிப்பிட்டுள்ளோம். அவருக்கு ஏன் பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என்பது தொடர்பிலும் மனுவில் கூறியுள்ளோம்,'' என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் ஊடகப் பேச்சாளர் சட்டத்தரணி ரவிந்திர மனோஜ் கமகே தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வீடு வழங்காதிருக்க தீர்மானம்

பட மூலாதாரம், PMD SRI LANKA
முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வீடு வழங்காதிருக்க தான் உறுதி வழங்கியதாக ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
''நான் ஓய்வுபெற்ற பின்னர் எனக்கு வீடு வேண்டாம் என நான் கடிதமொன்றை வழங்க எதிர்பார்த்துள்ளேன். அதேபோன்று, ஏனையோருக்கும் வீடுகளை வழங்க மாட்டேன். ஜனாதிபதி சிறப்புரிமை சட்டத்தின் பிரகாரம், வீடு அல்லது சம்பளத்தில் மூன்றில் ஒரு பகுதியை வழங்க வேண்டும்.
மூன்றில் ஒரு பகுதி என்றால் 30,000 ரூபா. மஹிந்த ராஜபக்ஸவிற்கு 30,000 ரூபாவை வழங்க நான் எதிர்பார்த்துள்ளேன். மஹிந்த ராஜபக்ஸ தற்போதுள்ள வீட்டிற்கு மாதாந்தம் 46 லட்சம் ரூபா வாடகை செலுத்தப்படுகிறது. இன்னும் பௌத்தாலோக்க மாவத்தையிலுள்ள காணி மதிப்பீடு செய்யப்படவில்லை," என்று ஜனாதிபதி அநுர குமார் திஸாநாயக்க கூறியுள்ளார்.
அதோடு, "நாங்கள் வீட்டை எடுக்க போகின்றோம். சம்பளத்தில் மூன்றில் ஒரு பகுதியை அவருக்கு வழங்கப் போகின்றோம். அவ்வாறு இல்லையென்றால், எஞ்சிய பணத்தை வழங்கி அவர் அதே வீட்டில் இருக்க முடியும்'' எனவும் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க கூறினார்.
ராஜபக்ஸவின் பாதுகாப்பு குறைக்கப்பட்டது குறித்துப் பேசிய அவர், ''முன்னாள் ஜனாதிபதி ஒருவரின் பாதுகாப்புக்காக மாத்திரம் 70 கோடி ரூபா செலவிடப்படுகிறது. நாங்கள் அனைத்தையும் அப்புறப்படுத்தியுள்ளோம். கூச்சலிட்டால், எஞ்சியுள்ள 60 பாதுகாப்பு அதிகாரிகளையும் அப்புறப்படுத்துவோம்.'' என அவர் மேலும் குறிப்பிட்டார்.

பட மூலாதாரம், PMD SRI LANKA
ஓய்வு பெற்ற ஜனாதிபதிகள், அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான சிறப்புரிமைகளை தாம் அதிகாரத்திற்கு வந்தவுடன் இல்லாது செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என தேசிய மக்கள் சக்தி, ஜனாதிபதி தேர்தல் மற்றும் நாடாளுமன்றத் தேர்தல் காலப் பகுதியில் மக்களுக்கு வாக்குறுதி வழங்கியிருந்தது.
இந்த நிலையில், தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திஸாநாயக்க, ஜனாதிபதியாக பதவியேற்றத்தைத் தொடர்ந்து, அரசியல்வாதிகளின் சிறப்புரிமையை ரத்து செய்வது தொடர்பான யோசனை அமைச்சரவையில் தாக்கல் செய்யப்பட்டது.
இதன்படி, இந்த சிறப்புரிமையை ரத்து செய்வதற்கு எடுக்க வேண்டிய நடவடிக்கைகளை தீர்மானிப்பதற்காக ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவின் தலைமையிலான அமைச்சரவை குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












