யாழ்ப்பாணத்தில் 'திருவள்ளுவர் கலாசார மையம்' என்ற பெயருக்கு எதிர்ப்பு ஏன்? புதிய பெயர் என்ன?

பட மூலாதாரம், INDIAN HIGH COMMISSION IN COLOMBO
- எழுதியவர், ரஞ்சன் அருண் பிரசாத்
- பதவி, பிபிசி தமிழுக்காக
இந்திய அரசின் நிதியுதவித் திட்டத்தின் கீழ் யாழ்ப்பாணத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள கலாசார மண்டபத்திற்கான பெயர் சூட்டு நிகழ்வினால் எழுந்த சர்ச்சை தற்போது முடிவுக்கு வந்துள்ளது.
யாழ்ப்பாணத்தில் நிர்மாணிக்கப்பட்ட கலாசார மண்டபத்திற்கு ''திருவள்ளுவர் கலாசார மையம்'' எனப் பெயர் சூட்டப்பட்டமைக்கே இவ்வாறு எதிர்ப்பு எழுந்திருந்தது.
தமிழ் மக்களின் அடையாளங்களுள் ஒன்றான 'யாழ்ப்பாணம்' என்ற பெயர் நீக்கப்பட்டிருப்பதானது, தமிழ் மக்களின் அடையாளங்களை அழிக்கும் முயற்சி என அரசியல்வாதிகள் மற்றும் புத்திஜீவிகள் குறிப்பிட்டிருந்தனர்.
இதையடுத்து, யாழ்ப்பாணம் திருவள்ளுவர் கலாசார மையம் எனத் தற்போது பெயர் மாற்றப்பட்டு, சர்ச்சைக்குத் தீர்வு வழங்க இந்திய அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
- இலங்கையில் செல்போன் வாங்க புதிய கட்டுப்பாடு - ஜன.28 முதல் புதிய விதிகள் அமல்
- சீனா தொடர்பான பார்வையை இலங்கை ஜனாதிபதி மாற்றிக் கொண்டுள்ளாரா? என்ன நடக்கிறது?
- இலங்கை: இஸ்லாம் மதம் குறித்து சர்ச்சையாகப் பேசிய பௌத்த துறவிக்கு சிறைத் தண்டனை
- இந்தியாவுடன் 'எட்கா' உடன்படிக்கையில் கைச்சாத்திட இலங்கையில் எதிர்ப்பு ஏன்?

யாழ்ப்பாணம் திருவள்ளுவர் கலாசார மையத்தின் நிர்மாணம்
இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோரினால் யாழ்ப்பாணம் கலாசார மண்டபத்திற்கான அடிக்கல் 2015ஆம் ஆண்டு நடப்பட்டது.
இந்திய அரசாங்கத்தின் முழுமையான நிதியுதவித் திட்டத்தின் கீழ், 12 மில்லியன் அமெரிக்க டாலர் செலவில் இந்த கலாசார மண்டபம் நிர்மாணிக்கப்பட்டது.
இந்த கட்டட நிர்மாணப் பணிகள் 2020ஆம் ஆண்டு நிறைவு பெற்ற போதிலும், சில காரணங்களால் கலாசார மண்டபத்தின் திறப்பு நிகழ்வு பிற்போடப்பட்டது.
இதன்படி, இலங்கையில் அப்போதயை பிரதமரான மஹிந்த ராஜபக்ஸ மற்றும் இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் ஆகியோரால் 2022ஆம் ஆண்டு மெய்நிகர் தொழில்நுட்பத்தின் ஊடாக இந்தக் கட்டடம் திறந்து வைக்கப்பட்டது.
எனினும், நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி உள்ளிட்ட காரணங்களால் இந்தக் கட்டடத்தின் செயற்பாடுகள் முறையாக முன்னெடுக்கப்படவில்லை.

பட மூலாதாரம், MOD SRI LANKA
இதையடுத்து, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் இந்திய அமைச்சர் எல்.முருகன் ஆகியோரால் 2023ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் கலாசார மண்டபம் மீண்டும் திறந்து வைக்கப்பட்டு செயற்பாடுகள் ஆரம்பித்து வைக்கப்பட்டன.
இந்த நிலையில், யாழ்ப்பாணம் கலாசார மையம் எனப் பெயர் சூட்டப்பட்டிருந்த மண்டபத்திற்கு, திருவள்ளுவர் கலாசார மையம் எனக் கடந்த 18ஆம் தேதி இந்திய அரசாங்கத்தால் பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
''சிறந்த தமிழ் கவிஞரும், தத்துவஞானியுமான திருவள்ளுவரை கௌரவிக்கும் வகையில், யாழ்ப்பாணத்திலுள்ள கலாசார மண்டபத்திற்கு திருவள்ளுவர் கலாசார மையம் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது" என்று கொழும்பிலுள்ள இந்திய தூதரகம் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருந்தது.
இந்த நிலையில், பெயர் மாற்றம் செய்யப்பட்டமைக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோதி தனது வாழ்த்துகளைத் தெரிவித்திருந்தார்.
''இந்தியாவின் நிதியுதவித் திட்டத்தின்கீழ் யாழ்ப்பாணத்தில் நிர்மாணிக்கப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க கலாசார மையத்திற்கு, திருவள்ளுவர் கலாசார மையம் எனப் பெயரிடப்பட்டதை வரவேற்கிறேன். இதன்மூலம் திருவள்ளுவருக்கு மரியாதை செலுத்துவது மட்டுமல்லாமல், இந்திய - இலங்கை மக்களுக்கு இடையில் ஆழமான கலாசார, மொழி வரலாற்று மற்றும் நாகரீக பிணைப்புகளுக்கு இதுவொரு சான்று'' என இந்திய பிரதமர் நரேந்திர மோதி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
திருவள்ளுவர் கலாசார மையம் எனப் பெயரிடப்பட்டமைக்கு எதிர்ப்பு

யாழ்ப்பாணத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள கலாசார மையத்தின் பெயர் மாற்றம் செய்யப்பட்டமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
''ஈழத் தமிழர்களின் கலாசார பாரம்பரியங்களைப் பேணிப் பாதுகாத்து வளர்ப்பதை நோக்கமாகக் கொண்டு இந்திய அரசால் வழங்கப்பட்ட இந்தக் கலாசார மையம் தமிழ் மக்களின் அடையாளமாக தற்போது காணப்படுகின்றது.''
''உலகப் பொதுமறையான திருக்குறளை எமக்களித்த திருவள்ளுவர் எமது மதிப்பிற்குரியவர். அவரையும் அவருடைய ஆளுமையையும் போற்றிப் புகழ்வதில் தமிழர்கள் யாருமே பின்நிற்கப் போவதில்லை. கடந்த காலங்களில் இந்திய அரசால் வழங்கப்பட்ட திருவள்ளுவர் சிலைகளை எமது மக்கள் ஆர்வத்துடனும் பெருமிதத்துடனும் பிதிஷ்டை செய்து பராமரித்து வருகின்றனர்'' என்று டக்ளஸ் தேவானந்தா கூறியுள்ளார்.
''எனினும் இலங்கையின் வடக்கு, கிழக்கு பகுதிகளில் வாழ்ந்து வருகின்ற தமிழ் மக்களின் அடையாளங்களுள் ஒன்றான 'யாழ்ப்பாணம்' என்ற பெயர் நீக்கப்பட்டிருப்பதானது, தமிழ் மக்களின் அடையாளங்களை அழிக்க முனைகின்ற தீய சக்திகளின் மறைகரம் இந்தப் பெயர் மாற்றத்தின் பின்னணியில் இருக்குமோ என்ற நியாயமான சந்தேகத்தை எமது மக்களுக்கு ஏற்படுத்தி இருப்பதை அவதானிக்க முடிகின்றது'' என்று முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா குறிப்பிட்டுள்ளார்.
யாழில் தமிழ் மொழிக்கு மூன்றாவது இடமா?

யாழ்ப்பாணம் திருவள்ளுவர் கலாசார மையத்தின் பெயர்ப் பலகையில் தமிழ் மொழிக்கு மூன்றாவது இடம் வழங்கப்பட்டுள்ளதைப் பார்த்து தான் அதிர்ச்சி அடைந்ததாக கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவிக்கின்றார்.
யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இதைக் குறிப்பிட்டிருந்தார்.
''இந்திய அரசின் நிதிப் பங்களிப்புடன் திறந்து வைக்கப்பட்ட யாழ்ப்பாணம் கலாசார மையமானது திருவள்ளுவர் கலாசார மையம் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இந்த நிகழ்வில் நானும் அதிதியாகக் கலந்து கொண்டவன் என்ற வகையில் பெயர் மாற்றம் தொடர்பில் திரை நீக்கத்தின்போதுதான் அவதானித்தேன்.
திருவள்ளுவர் கலாசார மையம் எனப் பெயர் மாற்றியது குற்றம் அல்ல. யாழ்ப்பாணத்திற்கே உரித்தான பெயர்களான 'யாழ் கலாசார மையம்' அல்லது 'யாழ் பண்பாட்டு மையம்' என்று பெயர் சூட்டியிருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும் என்பது எனது தனிப்பட்ட கருத்து" என்று தெரிவித்தார்.
அதோடு, "பெயர் சூட்டும் நிகழ்வில் திருவள்ளுவர் கலாசார மையம் எனக் காட்சிப்படுத்தப்பட்ட இலத்திரனியல் திரையில் தமிழுக்கு மூன்றாவது இடம் வழங்கப்பட்டமை கவலை தரும் விடயமாக இருந்தது. அதைப் பார்த்து நான் அதிர்ச்சியடைந்தேன்'' என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் கூறியுள்ளார்.
சர்ச்சைக்கு முற்றுபுள்ளி வைத்தது இந்தியா

பட மூலாதாரம், MOD SRI LANKA
யாழ்ப்பாணம் கலாசார மையம் எனப் பெயரிடப்பட்ட கலாசார மண்டபத்தின் பெயர் திருவள்ளுவர் கலாசார மையம் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டமை தொடர்பில் பிபிசி தமிழ், கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்திடம் மின்னஞ்சல் மூலம் வினவிய போதிலும், இந்திய உயர்ஸ்தானிகராலயம் அதற்கு இதுவரை பதில் வழங்கவில்லை.
திருவள்ளுவர் கலாசார மையம் எனப் பெயர் சூட்டமைப்பட்டதை அடுத்து எழுந்த சர்ச்சைக்கு இந்திய அரசாங்கம் தற்போது முற்றுபுள்ளி வைத்துள்ளது.
இதன்படி, கலாசார மையத்திற்கு யாழ்ப்பாணம் திருவள்ளுவர் கலாசார மையம் எனத் தற்போது பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த நிலையில், பெயர் மாற்றம் தொடர்பில் எழுந்த சர்ச்சை முடிவடைந்துள்ளதாக யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த புத்திஜீவிகள் தெரிவிக்கின்றனர்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












